சாதிக்க உதவுவது | தினகரன் வாரமஞ்சரி

சாதிக்க உதவுவது

அது இது என்று ஆயிர மாயிரம்
குவிந்து கிடக்குது மனதில்
அலைகளைச் சொன்னால் பைத்திய மென்பார்
ஆசைதான் வாழ்க்கையை உயர்த்தும்
இதுதானே பலரின் உயர்வுக்கு ஏது
எதற்குமோர் இணைதுணை வேண்டும்
என்று நீ வந்து இனிப்புகள் தந்து
என்னை மகிழ்விக்க உள்ளாய்!
அல்லும் பகலும் உன்நினை வோடே
அகலுது... கழியுதென் பொழுது
அப்படி எதுவும் இல்லாத பேர்தான்
அழிகிறார் தினந்தினம் விழுந்து
எல்லை கடக்க முயல்பவ னேதான்
எட்டுவான் உச்சியை என்றும்
என்றுநீ வந்தென் கைபற்றித் தொடர்வாய்
எனக்குள்ளே இருப்பது நீயே!
ஆசைகளின்றி வாழ்பவர் வாழ்க்கை
‘அட்றஸ்’ இல்லாத கடிதம்
அசையாத வண்டி நகராமல் எந்த
அனுபவ மும்கொய்ய முடியா!
ஆசைதான் எதையும் சாதிக்க உதவும்
அதனாற்றான் மொய்க்கிறேன் உன்னை
அடியே நீ வந்து எப்போது என்னை
அடைவது நான் உயர்ந்தோங்க
என்றும் நீ என்னோ டிருப்பதால் வெற்றி 
எதுஎது வாயினும் எனக்கே!
எவர் அதைத் தடுத்து நிறுத்தினும், அதுவாய்
என்னையே தேடிவந் தடையும்!
புன்னகை யோடு நீ எனைத்தேடி வந்தால்...
பொழுதெலாம் சந்தோசம் நிறையும்
அந்நாளைத் தொடர்ந்து எதிர்பார்ப்போடுள்ளேன்
ஆசையே வந்திடு விரைந்து!

கவிமணி நீலாபாலன்

Comments