இயல்பாகிப் போயிருக்கும் ஊழல் | தினகரன் வாரமஞ்சரி

இயல்பாகிப் போயிருக்கும் ஊழல்

கொழும்பிலிருந்து தொலைவிலுள்ள ஓரிடத்திலிருந்து ஒருவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் தனிப்பட்ட அலுவலை முடிப்பதற்காக வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த அலுவலகத்தில் கையூட்டு நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். வருகிற நபர் வழமையான நடைமுறைகளைப் பின்பற்றி தனது அலுவலை ஒரே நாளில் முடித்துக் கொள்ள முடியுமான விதத்தில் வெளிப்படைத்தன்மையான நடைமுறைகள் இருந்தால் அவருடைய சோலி இலகுவாக முடியும்.  ஆனால் நடைமுறையில் ஒரே நாளில் முடியும் அரச கருமங்கள் வெகுசிலவே. இந்நிலையில் அந்த அலுவலகத்தில் உள்ள ஆள்பிடிக்கும் காக்காய்கள் ஆளை இனங்கண்டு அணுகுவார்கள். ஒரே நாளில் எடுக்கலாம் ஆனால் செலவாகும் என்பார்கள். வந்தவரைப் பொறுத்தவரை மீண்டும் ஊருக்குப்போய் வேறொருநாள் திரும்ப வருவதென்பது இருவகையான செலவுகளை ஏற்படுத்தும். ஒன்று,  வந்துபோவதற்கான பயணச் செலவு மற்றும் உணவுக்கான செலவு. மற்றையது அந்த ஒரே நாளில் அவர் இழக்கும் வருமானம். நிரந்தர தொழில் பார்ப்பவரென்றால் விடுப்பு எடுத்துவரலாம். அன்றாடங்காய்ச்சி என்றால் ஒரு நாள் வருமானத்தை தியாகம் செய்தே மீண்டும் வரவேண்டியிருக்கும். அத்துடன் உடல் அசதி, ஓய்வு நேர இழப்பு என்பன ஏற்படும் மேலதிக செலவுகளாகும்.

இவற்றையெல்லாம் கருத்திற் கொள்ளும்போது கையிலே ‘கேட்பதை’ வைத்துவிட்டு காரியத்தை ஒரே நாளில் முடித்துக் கொண்டு வீடு திரும்புவது சேவை பெறச் சென்றவரைப் பொறுத்த மட்டில் பொருளாதார ரீதியில் செலவு குறைந்த சாதகமான ஒன்றாகும்.

இதுபோக சில சந்தர்ப்பங்களில் உரிய சேவையை பெற்றுக் கொள்ள கையூட்டு வைத்தால் தான் கையெழுத்துப் பெற முடியும் இல்லாவிட்டால் நாட் கணக்கில் அல்லது வாரக் கணக்கில் இழுத்தடிப்பார்கள் என்பது தெரிந்தால் எவ்வளத்தையாவது கையிலே வைத்துவிட்டு வேலையை செய்து முடித்துக் கொள்வது பொருளாதார ரீதியாக ஒரு நபருக்கு இலாபகரமானது. எனவேதான் ‘இலஞ்சம் அல்லது கையூட்டு என்பது நிருவாக இயந்திரத்தின் சக்கரங்களை சுழலவைப்பதற்காக அதில் இடப்படும் வழுக்கெண்ணெய் போன்றது’ என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் ஒரு உதாரணம், கொழும்பில் உள்ள ஒருவர் வெளிமாவட்டத்திற்கு பயணிப்பதாகக் கொள்வோம். எவ்வளவுதான் ஒழுக்கமுள்ள ஒருவராகவும் போக்குவரத்து சட்ட திட்டங்களை பேணி நடப்பவராக அவர் இருந்தாலும் மனித தவறுகள் இடம் பெற இடமுண்டு. போக்குவரத்து பொலிஸார் அவரைப் பிடித்து தண்டம் விதிக்கவோ வழக்குப்போடவோ முனைந்தால் அவர் என்ன செய்வார்? ஒன்று, செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டு கருணை காட்டுமாறு கோரலாம். குற்றம் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அல்லது அதிகாரியிடம் பேசிப் பாரக்கலாம்- அதிகாரி ‘கையூட்டு அரச’ராக இருந்தால் அவரை விடமாட்டார். தொலைதூர இடத்தில் அதுவும் மாலை அல்லது இரவுவேளை உங்களுக்கு தண்டனை சீட்டு வழங்கப்பட்டால் அடுத்த சில நாட்களுக்குள் தபாலகத்தில் அதைச் செலுத்தி அந்த ரசீதை அவரைப் பிடித்த அதிகாரி வேலை செய்யும் பொலிஸ் நிலையத்தில் கொடுத்து அவரது ஆவணங்களை மீளப்பெறவேண்டும். வழக்கென்றால் உரிய நீதிமன்றத்தில் தோன்றி தண்டனை ஏற்க வேண்டும். இரண்டுமே அவருக்கு அதிக செலவை ஏற்படுத்துபவையாகும். இந்நிலையில் அதிகாரிக்கு நியமமாக வழங்கும் கையூட்டை வழங்கிவிட்டு அப்போதைக்கு அவ்விடத்தை விட்டுச் செல்வதே பகுத்தறிவான நடத்தையாக இருக்கும். இது உங்களைத் தண்டிக்காமல் இருப்பதற்காக வழங்கும் பணம். குற்றத்திற்கான தண்டப் பணத்தின் அளவுக்கு ஏற்ப அதிகாரிக்கு வழங்க வேண்டிய கையூட்டின் அளவும் அதிகரிக்கும். போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணம் எந்தளவுக்கு உயர்வாக உள்ளதோ அதற்கேற்ப அதிகாரிக்கு வழங்க வேண்டிய கையூட்டின் அளவும் அதிகமாக இருக்கும்.

சிலவேளைகளில் குற்றமேதும் செய்யாவிட்டாலும் கூட, அதிகாரிக்கு ‘மாமூல்’ வழங்க வேண்டியிருக்கும். மாமூல் வழங்காமல் எந்த வண்டியும் நகரமுடியாத அளவுக்கு பகிரங்கமாக வசூல் வேட்டை  நடத்தும் மன்னர்களின் ராஜ்ஜியம் சில குறைவிருத்தி நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிறது. இலங்கையிலும் கூட ‘நாளாந்த கலெக்ஷன்’ பார்க்கும் நோக்கில் எதிரே வரும் வாகனத்தின் முன்னே கையைப் போட்டு நிறுத்தும் கனவான்களையும் நாம் அவ்வப்போது கண்டுள்ளோம்.

இவர்கள் மத்தியிலும் கடமையைச் செய்யும் கண்ணியம் மிக்க அதிகாரிகளையும் குற்றத்தை மறுபடி செய்யாமலிருக்க ஆலோசனை கூறி திருத்த முயலும் நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகளையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். இங்கே கையூட்டு என்பது செலவைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் வழங்கப்படுவதைக் காணலாம்.

ஒழுக்கவியல் ரீதியில் இவை பிழையாகும். இவை தவிர கிராம உத்திகேத்தர்கள், பாடசாலை அதிபர்கள், அலுவலக ஊழியர்கள் என மக்கள் அன்றாடம் தமது தேவைகளுக்காக அணுகுபவர்கள் தமது கடமைகளை செய்ய தனிப்பட்ட கையூட்டை பெற எத்தனிக்கின்றனர். இவற்றுள் சில அவ்வப்போது பிடிபட்டு வெளிச்சத்திற்கு வருவதும் உண்டு.

அரசாங்க நிருவாக இயந்திரத்துக்கு உள்ளேயே முறையற்ற நடைமுறைகளூடாக பணம் அல்லது வேறு வசதிகளை சம்பாதித்துக் கொள்ளும் ஓட்டைகள் ஏராளமாக உண்டு. உதாரணமாக ஒரு அமைச்சர் ஒரு அமைச்சைப் பொறுப்பேற்றார் என்று வைத்துக் கொள்வோம். தனது தொகுதி ஆதரவாளர்களை அந்த அமைச்சின் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதிலே கொண்டு போய் கொட்டுவதைப் பார்க்கிறோம். அங்கே அந்த வேலை வாய்ப்புகள் உள்ளனவா அல்லது அவற்றுக்கு மிகப் பொருத்தமானவர்கள் தான் தெரிவு செய்யப்படுகிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி “எனது  அமைச்சில் என் ஆதரவாளர்களுக்கு வேலை வழங்க முடியாவிட்டால் நான் அமைச்சராக இருந்து என்ன பயன்? என்பது அவர் கேட்கும் கேள்வியாக இருக்கும்.

அரச இயந்திரத்துக்குள்ளே ஒப்பந்தங்களை வழங்கும் நடைமுறை ஊழல் மிக்க ஒன்றாக பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிர்வாக தேவைப்பாட்டின் படி மிகவும் வெளிப்படையான ஒரு செயற்பாட்டின் மூலம் பல்வேறு படிமுறைகளில் அது நிகழ்ந்த போதிலும் உள்ளக தகவல்கள் மூலமும் (insider information) ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் கூட்டு ஒத்துழைப்பு மூலமும் (Collusion among contractors)  இவற்றைப் பெற்றுக் கொள்வதில் முறைகேடுகள் நிகழலாம்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அவசியமான சேவைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறைகளில் நிறுவனமயப்பட்ட ஊழல் நிகழலாம் (Institutionalized corruption). எளிமையான உதாரணம் என்றால், அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனமொன்றை அதன் பராமரிப்புக்காக பதிவு செய்யப்பட்ட நிலையத்திற்கு கொண்டு செல்லும் சாரதிக்கு 10 சதவீத கமிஷன் வழங்கப்படுவது ஒரு  நடைமுறையாக உள்ளது. இந்த 10 சதவீதம் சேவைக்கட்டணத்தில் உள்ளடக்கப்பட்டே அதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

அத்துடன் சாதாரணமாக சந்தையில் ஒரு கணினி விற்கப்படும் விலையைவிட அரசாங்க நிறுவனங்களுக்கான கொள்வனவு விலைகள் உயர்வாகவே (சிலவேளையில் 40- _ 50 சதவீதம் வரையில்) இருப்பதைக்காண முடியும். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படும்.

ஒன்று அரசாங்கத்துறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட பின் அதற்கான கொடுப்பனவுகள் வந்து சேர தாமதங்கள் ஏற்படல் மற்றும் பொருட்கள் மீள அனுப்பக்கூடிய சாத்தியம்.

அத்தோடு இரண்டாவது மிகமுக்கிய காரணம், அக்கொள்வனவின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு வழங்க வேண்டியுள்ள கமிஷன் பணம். பொருள் மற்றும் சேவை வழங்கும் எல்லா நிறுவனங்களும் இதே நடைமுறையைப் பின்பற்றினால் கமிஷன் பெறுவது ஒரு சாதாரண நடைமுறையாக நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறிவிடும்.

அவ்வாறு வழங்கப்பட்டமைக்கான எவ்வித பதிவுகளும் இருக்காது. முறையற்ற விதத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டமைக்கான எந்தப் பதிவும் நிர்வாக நடைமுறைசார்ந்த எந்தப் பதிவேட்டிலும் இருக்காது. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொண்டவர் உழைத்த சொத்துக்களின் பெறுமதியில் அது உள்ளடக்கப்பட்டிருக்கும்.

எனவே,  அரசியல்வாதிகள், அதிகாரிகள் உழைத்த சொத்துக்கள் பற்றிய விபரங்களை ஒப்பிடுவதன் மூலம் நிறுவனமயப்பட்ட ஊழல் பற்றிய பருமட்டான தகவல்களை பெறமுடியும். பல நாடுகளில் இதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்த போதிலும் குறைவிருத்தி நாடுகளில் அவை அமுல்படுத்தப்படுவதில்லை.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments