பெருந்தோட்ட சமூகம் சொந்தக்காணி சமூகமாக மாறுவது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட சமூகம் சொந்தக்காணி சமூகமாக மாறுவது எப்போது?

சிறு வயதில் படித்த நரியின் கதை ஞாபகத்துக்கு வருகிறது. இரண்டு பூனைகள். ஒருநாள் அவ்விரண்டு பூனைகளின் கைகளில் பெரிய இறைச்சித்துண்டு ஒன்று சிக்குகின்றது. ஆனால் அதைப் பங்குபோட்டுக் கொள்வதில் இரண்டுக்குமிடையில் முரண்பாடு எழுகின்றது. இறைச்சித் துண்டை உண்ணாது இரண்டும் வாதப் பிரதிவாதங்களில் இறங்குகின்றது. அந்த நேரம் பார்த்து அந்த வழியே ஒரு நரி வருகின்றது. இறைச்சித் துண்டைப் பார்த்ததும் அதன் நாவிலும் நீர் சுரக்கின்றது. அதேநேரம் இறைச்சித் துண்டை பங்குப் போட்டுக் கொள்வதில் இரு பூனைகளுக்கும் இடையில் பிரச்சினை என்பதையும் கேட்டு அறிகின்றது.  

கவலைப்படாதீர்கள், ஒரு தராசு கொண்டு வாருங்கள். ஆளுக்குச் சரிபாதியாக பங்கு பிரித்துத் தருகிறேன் என்றது நரி. பூனைகள் திருப்தியுடன் உடன்படுகின்றன. தராசு கொண்டு வரப்படுகின்றது. நரி இறைச்சித் துண்டைக் கையில் எடுக்கின்றது. இரு பாதியாக பிரித்து இரண்டு பக்க தராசு தட்டுகளிலும் ஒவ்வொரு துண்டை வைக்கின்றது. முதலில் ஒரு பக்க தராசு தட்டு உயர்ந்து நிற்க மறுபக்கத் தாரசு தட்டு தாழ்கிறது. இரண்டு பக்கமும் சரிசமமாக நின்றால் தான் அது நியாயமான பங்கீடு என்கிறது நரி. பின் தாழ்ந்த பக்க இறைச்சித் துண்டைக் கையிலெடுத்து வாயில் கடித்து அளவைக் குறைக்கின்றது. இப்பொழுது அதை தட்டில் வைத்தால் மறுபக்க தராசு தட்டு உயர்ந்து மற்றையது தாழ்கிறது. நரி அந்த உயர்ந்திருக்கும் தராசு தட்டிலுள்ள இறைச்சித்துண்டை எடுத்துக் கடிக்கிறது. பின்னர் தட்டில் இடுகிறது.  

நரி இப்படியே செய்யப்போய் தாரசு தட்டுக்கள் சமநிலைக்கு வரவே இல்லை. ஆனால் அது கொஞ்சமாக இறைச்சித்துண்டத்தின் அளவைக் குறைக்கப்போய் முடிவில் எந்தத் துண்டும் எஞ்சாது அவ்வளவையும் நரியே தின்று ஏப்பம் இடுகின்றது. நரியின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத பூனைகள் எதுவுமே கிட்டாமல் ஏக்கமாக நரியைப் பார்க்கின்றன.  

இதுதான் கதை. இப்பொழுது எதற்காக இந்தக் கதை? காரணத்தோடுதான். பெருந்தோட்டக் காணிகளுக்கு நாளை என்ன நடக்கும் என்பதை யோசிக்கும்போது இக்கதைதான் ஞாபகத்துக்கு வரமுடியும்.  

இன்று பெருந்தோட்டக் காணிகள் காடுகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் அழிவு அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதை பெருந்தோட்டதுறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரவே வெளிப்படுத்தியுள்ளார். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, விலை கோரலில் சரிவு என்று தமது நிலையை தாழ்மையோடு ஒப்புவித்துக் கொண்டிருக்கிறது தோட்ட முதலாளிமார் சம்மேளனம்.   

இதற்கிடையில் பெருந்தோட்டங்களை அரசு சுவீகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டும் இதன் மூலம் அரசியல் சுயலாபம் அடைய நினைக்கும் சக்திகளும் கூட தோட்ட சுவீகரிப்பை வலியுறுத்துகின்றன.  

பொதுவாக பெருந்தோட்டங்களை மீண்டும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மலையக அரசியல் கட்சிகளிடம் ஒருமித்தக் கருத்தே நிலவுகின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணி இ.தொ.கா போன்றவை பெருந்தோட்டங்களை அரசு சுவீகாரம் செய்து அவற்றை தோட்ட மக்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதை அடிக்கடி வற்புறுத்தி வருபவராக காணப்படுகின்றார்.  

இதேநேரம் அரசாங்கம் தோட்டங்களைக் கையகப்படுத்த வெண்டும் என்று வலியுறுத்துவதன் பின்னணியில் எதாவது உள்நோக்கம் இருக்குமோ என யோசிக்கும்படி சில அரசியல் பிரமுகர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இவர்களில் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரவும் ஒருவர். பெருந்தோட்டங்களை அரசாங்கமே கையேற்க வேண்டும். அதனை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார்.  

அமைச்சர் சிறிபால டி சில்வா, பதுளை மாவட்டத்தில் மட்டும் 2178 ஏக்கர் தேயிலைக் காணிகள் கைவிடப்பட்டுள்ளன. இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்று மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழும் சிங்கள கிராமவாசிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார்.  

ஆக, இங்கு வாழும் தோட்ட மக்களுக்குக் காணிகளில் பாத்தியதையோ உரிமமோ இல்லை என்பது போலவே பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இம்மக்களுக்கு வீடமைப்புக்கென 7 பேர்ச் காணி வழங்க முன்னைய ஆட்சி நடவடிக்கை எடுத்திருந்தது. அதைக்கூட சொந்தமாக்கிவிடக் கூடாது என்று எண்ணும் கடும்போக்காளர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.  

எப்படியோ பெருந்தோட்டக் காணிகளை இலக்கு வைத்து சூட்சுமமான ஒரு வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இக்காணிகள் யாவும் அரசுக்குச் சொந்தமானவை. இவற்றை 99 வருடகால குத்தகைக்கே பெருந்தோட்டக் கம்பனிகள் கையேற்றுள்ளன. இக்காணிகளை கம்பனிகள் தமது எண்ணம்போல கைமாற்றவோ விற்றுப் பணமாக்கவோ நியாயப்படி முடியாது.  

ஆனால் அப்படியா நடகின்றது? தோட்டக்காணிகளை தமது தேவைப்படி கையாள்கின்றன கம்பனி தரப்பு. இங்குள்ள வளங்களைச் சுரண்டுகின்றன, சூறையாடுகின்றன என்று குற்றச்சாட்டுக்கள் ஏராளம். இதேவேளை அரசாங்கம் தாராளமாகவே பெருந்தோட்டக் காணிகளை கையேற்பது கடந்தபல வருடங்களாக நீட்சியாகவே இடம் பெற்றுவரும் நிகழ்வு. அரச தேவைக்காகவும் தனிப்பட்ட அரசியல் பிரமுகர்களின் அவசியத்துக்காவும் இக்காணிகள் மீதே முதற்பார்வை விழுகின்றமை வழமையாகிவிட்ட சங்கதி.  

இவ்வாறான கபளீகரங்கள் இத்துறையை வங்குரோத்து நிலைமைக்கு வலிந்து தள்ளிவிடவே செய்கின்றது. அழிவிலிருந்து இதனை மீட்கக்கூடிய அடையாளங்கள் எதுவுமே தென்படவில்லை. குறைந்த பட்சம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் கூட வருவதாக காணோம். கம்பனி தரப்பும் இதுபற்றிக் கவலைப்படுவதாக இல்லை. இங்கு தேயிலைத் தொழிலையே தஞ்சமென நம்பியிருக்கும் ஒன்றைரை இலட்சம் மக்களும் அதனை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.  

இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டக் காணிகளின் நிலைமை நரியின் கைகளில் சிக்கிய இறைச்சித் துண்டுக்கு நேர்ந்த கதை போலாகிவிடும். இதனால் பெருந்தோட்டக் காணிகளை அராசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கும்போது எல்லாம் அவநம்பிக்கையுடனேயே அதனை அவதானிக்க வேண்டி நேரிடுகின்றது. கம்பனி தரப்பும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மலையக தொழிற்சங்கங்களும் கலந்து பேசி தீர்வுகாணக்கூடிய விடயம் இது. ஆனால் அப்படி நடப்பதுதான் இல்லை. கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் கூட விட்டுக் கொடுத்து இயங்கத் தயாாில்லை இவ்விரு அமைப்புகளும். பின் எப்படி இந்த புூதாகரமான நிலையைச் சரிப்படுத்திக் கொள்ள முன்வருமாம்.  

அண்மைக்காலமாக நகர்ப்புறங்களை அண்மித்த தோட்டக் காணிகள் அரசியல்வாதிகளின் அவசியம் கருதி அபகரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.  

இதே நேரம் தரிசு நிலங்களிலும் கைவிடப்பட்டக் காணிகளிலும் காடு வளர்ப்பை மேற்கொள்ள கடந்த அரசாங்கம் ஆலோசித்திருந்தது. அத்துடன் பெருந்தோட்டத்துறையை உள்வாங்கிக் கொண்டுள்ள மலையகத்தை சுற்றுலாப் பிரதேசங்களாக மாற்றம் எண்ணங்களும் கொண்டிருந்தது ரணில் - மைத்திரி ஆட்சி. இதனையே இன்றைய அரசும் முன்னெடுக்கத் திட்டமிடுள்ளதாக அவதானிகள் பதிவிடுகின்றனர்.  

சுற்றலாத் துறையை விரிவுபடுத்துவற்காக பெருந்தோட்டக் காணிகள் கையேற்கப்படுவது நடக்கவே செய்யும் இதற்காக கைவிடப்பட்ட காணிகளோ, தரிசு நிலங்களோ பயன்படுத்தப்படும் என்று சொல்வதற்கில்லை. போக்குவரத்து வசதி, நகரை அண்மித்ததான அமைவிடம் கொண்ட நல்ல விளைச்சல் நிலங்களும் பறிபோகும் அபாயமே காணப்படுகின்றது.  

இன்று பெருந்தோட்டத் துறையில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனைக் தக்கவைத்துக் கொள்ள தகுதியான வேலைத் திட்டங்கள் எதுவுமே தோட்டக் கம்பனிகளிடம் இல்லை. இதனால் வேறு வேலை வாய்ப்புக்களைத் தேடிய இடப்பெயர்வு இங்கு இடம்பெறுவது தவிர்க்க இயலாததாகின்றது. அறிவுஜீவிகள் கருத்துப்படி இவ்வாறான இடம் பெயர்வுக்கான தூண்டுகை என்பது ஒருமறைமுக நிகழ்ச்சி நிரலின் ஏற்பாடாகக்கூட இருக்கலாம். இதில் அரசியல் சுய நலமும் சார்ந்திருக்கலாம்.  

மலையகம் என்னும் தேசிய நிர்ணய வாய்ப்பினை வலுவிழக்க இவ்வாறான திட்டமிடப்பட்ட புறக்கணிப்புகள் திணிக்கப்படக்கூடும். இதனால் நிலம் நமது அடையாளம் என்னும் அந்தஸ்து அற்றுப்போகலாம் எனும் ஆதங்கம் மலையக புத்திஜீவிகளுக்கு ஏற்படவே செய்கின்றது. பெருந்தோட்ட சமூகமானது நிலவுடைமைச் சமூகமாக மாறுவது என்பது வெறும் கனவாகவே ஆகிவிடும் என்னும் அச்சம் எழுகின்றது. சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நரியின் நயவஞ்சகத் தனத்தை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வது பொருத்தமானதல்லவா?     

Comments