ஜெனிவாவால் எந்த நன்மையும் இல்லையென உணராதவரை தமிழருக்கு விமோசனமில்லை | தினகரன் வாரமஞ்சரி

ஜெனிவாவால் எந்த நன்மையும் இல்லையென உணராதவரை தமிழருக்கு விமோசனமில்லை

ஒருகாலத்தில் தனிநாடு என்ற கோசத்தோடு சண்டைபோட்ட பொழுது இருந்த நிலைமைவேறு. இன்றைய நிலைமை வேறு. இன்று ஒரு நாட்டுக்குள் வாழவேண்டுமென்றால் அனைத்து இன மக்களுடனும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அத்தகைய புரிந்துணர்வு தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் வரலாம் என்கிறார் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஐப் பெருமாள். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.....  

கேள்வி – பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நிலையில் அதனூடாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று கருதுகின்றீர்கள்?  

பதில்:: - பெரிய மாற்றத்தைக் கொடுக்குமென்று நான் கருதவில்லை. அரசியல் கட்சிகள் புதிதாக உருவாகியிருக்கலாம். புதிய கூட்டுக்கள் வந்திருக்கலாம். ஆனால் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு காணப்படவில்லை.  

ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த ஐந்து வருடங்களும் பெரும் பாக்கியமாக கிடைத்தவை. அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு விளங்கியிருக்கும் அல்லது எத்தனை பேர் அதனைப் புரிந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை முழுவதுமாக தவறவிட்டனர். அதை எப்படி தவறவிட்டனர் என்றே சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் திட்டமிட்டு தெரிந்தே தவறவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியுள்ளளது. ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றும் இனி அண்மைக்காலத்தில் கிடைக்கப் போவதில்லை.  

இப்ப இதற்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு வருகின்ற விக்னேஸ்வரன் அணியைப் பொறுத்தவரையிலும் வெறும் கற்பனை சுலோகங்களை வைத்திருக்கிறதே ஒழிய அது எப்படி தமிழருடைய அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? அவர்களிடமும் எந்தவிதமான திட்டமும் இல்லை. அதற்கான யதார்த்த அணுகுமுறையும் அவர்களிடம் கிடையாது. ஆகவே பெரியளவில் மாற்றமேதும் ஏற்படுமென்று கருதவில்லை.  

அந்த அடிப்படையில் தேர்தல் என்பது இன்னுமொருமுறை தமிழர்கள் தங்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரில் ஒரு பகுதியினரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்ற வேலையாக இது அமையும்.  

கேள்வி – தமிழ் தரப்பு ஒற்றுமை குறித்து பேசப்படுகின்ற நிலையில் அந்த ஒற்றுமைக்கான அழைப்பு ஏதும் கூட்டமைப்பு அல்லது கூட்டணியில் இருந்து உங்களுக்கு வந்திருக்கிறதா?  

பதில்: - இல்லை. கூட்டமைப்பு தமது வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானத்து ஆசனங்களுக்கான பங்கீடுகளையும் செய்து கொண்டுள்ளார்கள். அதேபோல விக்னேஸ்வரனின் கூட்டணியைப் பொறுத்தவரையில் அவர்கள் எங்களுடன் பேசுவதற்குத் தயாரில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்தும் விட்டார்கள்.  

ஆனபடியால் கட்சிகள் ஒன்றுபட வேண்டும், ஓரணியாக வர வேண்டும் என்று ஒரு பகுதியினர் மத்தியில் பொதுவான விருப்பங்கள் இருந்தாலும் சரியான அரசியல் புரிதலில் இருந்து அது குறித்து சிந்திக்கப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக இந்த ஐனநாயகத்தில் பல கட்சிகள் இருக்கும்.  

மக்கள் தான் இதிலே தங்களுடைய பிரதிநிதிகள் யார் தங்களுடைய வாழ்க்கையிலே தங்களுடைய அரசியல் நிலைமைகளில் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சிகள் யார்? நபர்கள் யார்? எனத் தீர்மானித்து வாக்களிக்க வேண்டுமே தவிர இதிலே கட்சிகள் ஓரணியில் வரும் அல்லது வர வேண்டுமென்று எந்தவொரு கட்சிக்காரரும் சொல்வது அர்த்தமுடையதொன்றாக இல்லை.  

கேள்வி – இனிமேலும் அழைப்புக்கள் வந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?  

பதில்: - கூடுதலான கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணியாக செயற்பட வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. ஆனால் இதில் அவர் துரோகி இவர் தியாகி நான் தூய்மையானவன் மற்றையவர் தூய்மையற்றவர் என்ற வார்த்தைப் பிரயோகங்களே முதலில் ஒற்றுமைக்கு விரோதமான விசயங்கள். ஆகையால் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள்தான் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.  

தான் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக வரலாம் என்பது தான் அவர்களிடம் காணப்படுகின்ற பிரச்சினையாக இருக்கிறது. ஆனபடியால் யாரும் அப்படிப் பேச வந்ததால் நாம் பேசத் தயார். தமிழர்களுடைய விடயம் குறித்து தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்குப் பின்னும் ஒரு அரங்கில் இருந்து பேசுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் மட்டும் அனைத்து அணிகளும் ஓரணியாக ஈடுபட காரணமாக இருக்க வேண்டுமென்றில்லை. தேர்தல் காலத்தில் இனி அது சாத்தியமாகுமென்றும் நான் நினைக்கவில்லை.  

கேள்வி – தேர்தலில் உங்கள் கட்சி எவ்வாறு போட்டியிடவுள்ளது. தனித்து களமிறங்குமா அல்லது தேசியக் கட்சிகள் யாருடனும் கூட்டுச் சேருமா?  

பதில்: - தேசியக் கட்சிகள் என்கின்ற போது, சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அவர்களது வாக்குகளை நம்பியிருக்கின்ற கட்சிகளைத் தான் தேசிய கட்சிகள் என்று சொல்லாம். இன்றைக்கு இலங்கை முழுவதும் தழுவிய கட்சியாகவே அவர்கள் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.  

எனவே தேசிய கட்சிகள் என்று சொல்வதன் அர்த்தம் இன்றைக்கு குறைந்து வந்தவிட்டது. அவ்வாறு தென்னிலங்கையை மையமாக வைத்து சிங்கள மக்களின் வாக்குகளை அதிகளவில் கொண்டுள்ள கட்சிகளோடு ஒரு அணியாகப் போவதற்கான எந்த எண்ணமும் எங்களுக்கு கிடையாது.  

அது மட்டுமல்ல, தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பிரதானமான கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அலையை கிளப்பி, அல்லது தமிழருக்கு விரோதமான எண்ணங்களை கிளப்பி வாக்குத் தேடுகின்ற போட்டிகள் தான் அங்கே முனைப்படைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தென்னிலங்கை கட்சிகளுடன் அணி சேருவதற்கான வாய்ப்பு எங்களுக்கு எந்தவகையிலும் இல்லை.  

கேள்வி – அவ்வாறாயின் தேர்தலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?  

பதில்: - தமிழர்களுக்கிடையிலான ஐக்கிய முன்னணி தொடர்பில் விரக்தியடைந்த நிலைக்கு நாங்கள் இன்னமும் வரவில்லை. அந்த முயற்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.    அந்த முயற்சிகள் சாத்தியமாகாத பொழுது நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்பதையும் அறிவித்திருக்கிறோம். அந்த முயற்சிகள் சாத்தியமாகுமா இல்லையா என்பதற்கப்பால் சாத்தியமாக வேண்டுமென்ற விருப்பம் எங்களிடம் இருக்கிறது.  

கேள்வி – ஜெனிவா விவகாரம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?  

பதில்: - இலங்கை கட்டமைப்பில் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில் சர்வதேசத்தை பாதிக்கப்பட்டவர்கள் நாடியிருக்கின்றார்கள். அதனை தவறு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஜெனிவா போன்ற சர்வதேச மனித உரிமை பேரவையோ அல்லது ஐநா சபையோ தமிழர்களுக்கு எந்தவகையிலும் ஆக்கபூர்வமாக உதவப் போவதில்லை.

இன்னும் சொல்லப் போனால் இந்த ஐெனிவா மாநாடு என்பது இலங்கையில் தமிழர், சிங்களவர் பகைமையை, இனக்குரோதத்தை ஒரு இனம், மற்ற இனத்தின் மீதான நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருக்கிறது.  

ஒரு காலத்தில் தனிநாடு என்ற கோசத்தோடு சண்டைபோடுகிற பொழுது இருந்த நிலைமை வேறு. ஆனால் நிலைமை இன்றைக்கு அப்படியில்லை. இன்றைக்கு இலங்கை என்ற ஒரு நாட்டுக்குள் தான் வாழ வேண்டும். அப்படி ஒரு நாட்டிற்குள் வாழ வேண்டுமென்றால் சிங்கள மக்களோடும் வாழ வேண்டும். அவ்வாறு சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன மக்களுடனும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அத்தகைய புரிந்துணர்வு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வர வில்லை என்பதற்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரக்கூடாதென்றில்லை.  

தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால் இங்கு மிகவும் பலவீனப்பட்டிருப்பது தமிழ் மக்கள் தான். இன்றைக்கிருக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் தொடர்ந்து உறுதியான சமூகமாக எங்களை நிலைப்படுத்திக் கொண்டு முன்னேறுவதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றித் தான் சந்திக்க வேண்டியிருக்கிறது.  

சிங்கள முற்போக்கு சக்திகள் போன்ற சிலர் எங்களுக்காக குரல் கொடுக்கிற நிலைமையையும் ஜெனிவா போன்ற சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளால் அவர்களையும் நாங்கள் எங்களில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் அந்நிய நாடுகள் எங்களுக்கு உதவாது. ஆனால் இந்தியா இதில் தலையிட்டாலும் அவர்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு உதவப்போவதில்லை.  

ஜெனிவா சம்பந்தப்பட்ட விடயத்தில் இந்தியா கூட தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை. அமெரிக்கா போன்ற சில நாடுகள் தான் இதனை பேசுகின்றன. இவர்கள் எல்லாம் கடந்த அரசாங்கம் இருந்த போது அமைதியாகத் தானே இருந்தனர். இப்ப ஆட்சி மாற்றம் வந்த பின்னர் தீவிரம் கொள்கின்றனர். ஏனென்றால் மாறிய ஆட்சியோடு தங்களுடைய வியாபாரத்திற்கான உடன்பாடுகளை ஆக்குவதற்கு அவர்கள் ஜெனீவாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றார்கள்.    அப்படிப்பட்ட சூழலில் வல்லரசு நாடுகளின் நலன்களுக்கு ஒரு இரையாகவே தமிழ் மக்கள் இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனாலும் தமிழ் மக்கள் கூறுகின்ற விடயங்களில் சரி பிழை என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க வரவில்லை.

ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அதற்கேற்பவே செயற்பட வேண்டும். ஆனாலும் சர்வதேசத்தை மேலும் மேலும் நம்புவது இலங்கையில் தமிழர்களை மேலும் மேலும் பலவீனப்படுத்துமே தவிர வேறொன்றும் இல்லை.  

கேள்வி – தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக உள்ளதெனக் கருதுகின்றீர்கள்?  

பதில்: - 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்பது இந்தியாவின் நிலைப்பாடு. அது தான் இலங்கையில் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கான தீர்வு என்று இந்தியா நம்புகின்றது. அதற்கு மேலாக இந்தியா எதனையும் செய்யுமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.  

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததுடன் நடைமுறையில் அது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டு தவறாகப் பிரயோகிக்கப்படுகிறது. 13ஆவது திருத்தம் இருக்கையில் மத்திய அரசாங்கம் மாகாண சபைகளை நடாத்துகின்ற நிலைமை தான் காணப்படுகிறது. மாகாண சபைகள் மீது தமிழகத் தலைவர்கள் என்று சொல்கின்றவர்களும் பெரிய அக்கறை காட்டி செயற்படுகிறார்கள் இல்லை.  

எனவே இந்த நிலையில் அரசாங்கமும் சரி, தமிழ்க் கட்சிகளாக இருந்தாலும் சரி 13ஆவதுதிருத்தத்தில் அக்கறை செலுத்தவில்லை. ஆனபடியால் இங்கு 13 ஆவது திருத்தம் போதுமானதா இல்லையா என்ற கேள்வியை இப்போதைக்கு எழுப்ப முடியாது. ஆகவே 13 ஆவதை முழுமையாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்துகின்ற பொழுது அதனூடாக ஏற்படுகின்ற முன்னேற்றங்கள் வேறு கோரிக்கையை இல்லாமல் பண்ணலாம்.  

குறிப்பாக 13ஆவதை முழுமையாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்தினால் சமஷஸ்டிக் கோரிக்கை தேவைப்படாமல் போகலாம். ஏனென்றால் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை விட 13 ஆவது திருத்தத்தின் மூலமான மாகாண சபை கட்டமைப்பு உயர்ந்தது. இதேவேளை தமிழர்கள் எப்போதும் சமஷ்டியைத் தான் கோரி வந்தார்கள் என்றில்லை. தமிழர்கள் ஒருமித்து வாழவே முனைந்தார்கள். ஆனால் அதில் பல தவறுகள் நடந்ததால் தான் வேறு கோரிக்கைகள் வந்தன.  

13 ஆவது திருத்தம் முழுமையாக முறையாக நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அடையக் கூடியதாக இருக்கும்.  

கேள்வி - கடந்த ஐனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஐபக்சவிற்கு ஆதரவை வழங்கியிருந்த நிலையில் இன்றைக்கு ஐனாதிபதியின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில்: - கோட்டாபயவின் வெற்றியை நாங்கள் தேடித் தர வேண்டிய அவசியம் இல்லை என்றே தேர்தல் கால பிரச்சார மேடைகளில் சொல்லி வந்தேன். ஏனெனில் அவர் வெல்லப் போகின்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த விடயம். ஆனால் கூட்டமைப்பு மக்களுக்கு பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் கோட்டா வெல்வது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தமிழர்களாலும் வென்றவர் என்ற நிலையை ஏற்படுத்துகிற பொழுது தான் நாங்கள் தமிழர்கள் சம்பந்தமாக பேச முடியுமென்று தான் நாங்கள் சொன்னோம்.  

ஆனால் அந்த நிலைமை ஏற்படவில்லை. தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஐனாதிபதியாகவே இருந்தார். ஆகையினால் அவர் தான், யாரால் வெல்லப்பட்டாரோ அவர்களின் நலன் மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதே நேரம் அவர் சத்தியப்பிரமானம் செய்தபோது தான் சகலருக்கும் ஐனாதிபதி என்று கூறியிருந்தார். அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்கிறோம். அதற்கு மேலாக தமிழர்களுக்காக அவரிடம் சென்று உரிமையோடு பேசுகின்ற தார்மீக உரிமை எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.  

அதே நேரத்தில் தமிழ் மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு சஜித் பிரேமதாசவுற்கு வாக்களித்தார்கள். அந்த சஜித் பிரேமதாச தமிழர்களுக்காக இன்றைக்கு ஒரு வார்த்தை கூட பேசுகின்றார் இல்லை. ஜெனீவா சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழர்களுக்கு எதிராகத் தான் உள்ளார். அதற்கு மேலாக இன்றைக்கு சிங்கள கடும் போக்களானாக தன்னைக் காட்டிக் கொள்ளவே முயல்கிறார். அவரும் தமிழ் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை.  

உண்மையில் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்னவர்களுக்கு கடமை உள்ளது. அதாவது சஜித் பிரேமதாச நன்றி கெட்டவர். தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்பதை அவரை ஆதரித்த கூட்டமைப்பின் உறுப்பினவர்கள் சொல்ல வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி மிக மோசமான கட்சி. அந்தக் கட்சி தான் தமிழர்களின் நிலை இந்தளவுக்கு மோசமாவதற்கான அடித்தளத்தை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இட்டது.  

மேலும் சிங்களவர்களால் ஐனாதிபதியாகாமல் தமிழர்களாலும் ஐனாதிபதியாக வேண்டுமென்று நினைத்தோம். ஆனால் அதற்கான ஆதரவு எங்களுக்கு தமிழ் மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆனாலும் அனைவருக்கும் ஐனாதிபதியாக செயற்பட வேண்டுமென்று தான் நாம் மீண்டும் மீண்டும் கோருகின்றோம்.  

கேள்வி – ஐ.நா மனித உரிமைத் தீர்மானத்தில் இருந்து அரசு விலகியுள்ள நிலையில் தமிழர் தரப்புக்கள் அதனை எதிர்த்து வருவதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில்: - அனுசரணையாக இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஆகையினால் அரசாங்கம் விலகியதை வைத்து அரசியல் செய்ய முனைகின்றனர். மேலும் கடந்த ஐந்து வருட காலத்தில் சர்வதேச ஈடுபாட்டை ஐக்கிய தேசயக் கட்சியே இல்லாமல் செய்தது. இப்போது மீண்டும் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே இலங்கையின் விலகல் சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வருமென்றில்லை.  

ஆனால் ஜெனீவாவில் நடக்கின்ற அந்தக் காட்சி சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்ற நிலைமையை தான் தோற்றுவிக்கிறது. ஜெனீவா சென்று நாடகமாடுகின்ற தமிழர் தரப்பினர் சில வேளை தேர்தல்களில் வெல்லக் கூடும். ஆனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காது.  

ஆகவே சர்வதேசமோ, ஜெனீவாவோ தமிழர்களுக்கு எதனையும் தரப்பொவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக அதனைப் பயன்படுத்திக் கொள்கின்ற போது தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றில் எல்லாம் மக்களை ஏமாற்றி வாக்கைப் பெறுவது தான் நோக்கமாக இருக்குமே தவிர தமிழர்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.      

எஸ்.நிதர்ஷன்-   பருத்தித்துறை விசேட நிரூபர் 

Comments