இளைய தலைமுறையின் இணையவழி தொழில்முயற்சியும் தமிழ் சமூகமும் | தினகரன் வாரமஞ்சரி

இளைய தலைமுறையின் இணையவழி தொழில்முயற்சியும் தமிழ் சமூகமும்

நாட்டின் இளம் சமுதாயம் காலத்துக்குக் காலம் தமக்கு மிகவும் வசதியாக அமைகின்ற வழிகளில் பொருளாதார வெற்றியை அடைவதற்கு முயற்சித்து வருவது வழக்கம். அந்தவகையில் தற்கால இளம் சமுதாயம் இணையவழி தொழில் முயற்சியாளர்களாக வருவதில் பேரார்வம் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே ஆங்காங்கே தமது சொந்த முயற்சியால் இணையவழி தொழில் முயற்சியாளர்களாக தம்மை தொழில் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரியளவில் வளர்த்துக்கொண்டிருக்கும் பல இளைஞர்களை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமையை புரிந்துகொண்டிருக்கும் தற்போதைய அரச தலைமை இளைஞர்களின் இந்த ஆர்வத்திற்கு வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இத்துறையில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புவோருக்கு கைகொடுக்க கொள்கை ரீதியாக முன்வந்திருக்கின்றது.  

அதற்கமைய நாட்டின் பூரண அரச அனுசரணையான முதலாவது இணையவழி தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நிலையம் களுத்துறை மாவட்டத்தில் ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்தவாரம் முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் தலைமையிலும் வழிகாட்டலிலும் களுத்துறை பனோராமா ஹோட்டலின் கேட்போர் கூடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.  

'Ro Smart Hub Startup' என ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்புதிய திட்டத்தின் கீழ் இணையவழி தொழில்முயற்சியாளர்களாக தம்மை உருவாக்கிக்கொள்ள விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கு தேவையான கட்டட வசதி, இணையத்தள வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இலவசமாக பெற்றுக்கொடுப்பதற்கும் இத்துறை சார் நிபுணர்களைக்கொண்டு தேவையான அறிவு மற்றும் பயிற்சி ஆகியவற்றை இலவசமாகப் பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. பயிற்சியின் முடிவில் சுயமாக இணையவழி தொழில் முயற்சியாளர்களாக செயற்பட விரும்பும் தகுதி பெற்றவர்களுக்கு அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கப்படவிருக்கின்றது.  

நமது அயல்நாடான இந்தியாவிலும் சில மாநிலங்கள் கணனி தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு பாரிய வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. அதற்கு அம்மாநில அரசுகள் கணனி மற்றும் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியடைய முயற்சிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான அறிவு மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்தமையே முக்கிய காரணமாகும். நம் நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் இத்துறை சார்ந்த தன்னார்வ முயற்சியாளர்களுக்கு அரச அனுசரணை குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கப்பெறவில்லை.  

இந்தப் பின்னணியிலும் கணனி மற்றும் தொழிநுட்ப அறிவு ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்துவரும் பதுளை மாவட்டத்தில் நான்கு தன்னார்வ முயற்சியாளர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாக அம்மாவட்டத்தில் Insfra Techonologies Software Company ஸ்தாபிக்கப்பட்டு இன்று குறிப்பிடத்தக்க வெளிநாட்டு செலாவனியை நாட்டுக்குள் கொண்டுவருவதுடன் அத்துறையில் முன்னேற விரும்பும் பலருக்கும் உதவிக்கரம் நீட்டுவதுடன் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழக்கூடிய நிலையை எட்டியிருக்கின்றது.  

பதுளையை வசிப்பிடமாகக் கொண்ட கோசல சந்தருவன், ஜப்பானில் வசிக்கும் ஒரு நண்பரையும் கொழும்பில் வசிக்கும் மதுசங்க பிரேமரத்ன உள்ளிட்ட இன்னொரு நண்பரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு நான்கு அங்கத்தவர்களைக் கொண்டு சில வருடங்களுக்கு முன்னாள் Insfra Techonologies Software Company பதுளையில் ஆரம்பிகப்பபட்டபோது அது முன்னேற வேண்டுமாயின் நாட்டின் தலைநகராகிய கொழும்புக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சாத்தியமற்றதொரு செயற்பாடாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது.  

அத்தோடு அந்த முயற்சியானது, கைகூடுமா என்ற சந்தேகம் பலராலும் வெளியிடப்பட்டது. ஆயினும் தொழிலுக்காக கொழும்பு நகரை நாடி வருபவர்கள் வாகன நெரிசல், மனத்தாக்கம், விரக்தி மற்றும் கால விரயம் ஆகியவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. இதனால் ஏற்படுகின்ற சமூக மற்றும் தனிமனித பாதிப்புகளுக்கு பரிகாரம் காணும் வகையிலேயே இக்குழுவினரால் மேற்குறிப்பிட்ட தொழில் முயற்சி பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது.  

சில வருடங்களுக்குள் இந்த ஆரம்ப அங்கத்தவர்கள் நால்வருக்கும் i 8 ரக பென்ஸ் கார்களை பெற்றுக்கொடுக்கக்கூடிய அளவிற்கு இவர்களின் இந்த தொழில்முயற்சி இன்று முன்னேற்றம் கண்டிருக்கிறது. அத்தோடு அவர்களுக்கு இணையான அளவில் இத்துறையில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் மாத்தளையைச் சேர்ந்த மதுஷ்க திசாநாயக்க மற்றும் லசந்த விக்கிரமசிங்க ஆகியோரே களுத்துறை நிகழ்ச்சியில் விசேட அதிதிகளாக கலந்துகொண்டுள்ளதுடன் அவர்களே எதிர்கால வளவாளர்களாகவும் செயற்படவிருக்கின்றனர்.  

படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்காக அரசியல்வாதிகளின் அங்கீகாரத்தை அவர்களைப் பின்தொடர்வதற்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு தம்மை வளர்த்துக்கொள்ளக்கூடிய இணையவழி தொழில்முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் கொள்வார்களாயின் அது அவர்களது எதிர்காலத்துக்கு மாத்திரமன்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்ததோர் வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.  

தமது இளம் சமூகத்தினரை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு சாதாரண அரசியல்வாதியாகிய ரோஹித்த அபே குணவர்தனவால் இத்தகையதோர் திட்டத்துக்கு தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுக்க முடியுமாயின் வசதிகளும் வளமும் தொழிலநுட்ப அறிவும் படைத்த இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால் மிகக் காத்திரமான பலமான கட்டமைப்பை உருவாக்கி ஒப்பீட்டு ரீதியில் கணனி மற்றும் தொழில்நுட்ப அறிவில் சாமர்த்தியத்தைக் கொண்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு மிக இலகுவாக இத்தகைய வாய்ய்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியும்.  

தனிப்பட்ட ரீதியில் ஒரு அரசியல்வாதி அல்லது பாராமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கு கிடைக்க வேண்டிய சகலவிதமான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் எதுவித அச்சமுமின்றி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள், அரச தலைமைத்துவத்தின் பூரண அனுசரணையில் முன்னெடுக்கக்கூடிய இத்தகைய சமூக அபிவிருத்தி செயற்பாடுகளை கண்டுகொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். ஆகையால் அரசதுறை ஊழியர்கள் சகல பணிகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தற்போதைய அரச தலைமையின் அனுசரணையை பெற்று,தான் சார்ந்த சமூகத்தின் எதிர்கால நலனுக்காக இத்தகைய முன்னுதாரணமான செயற்பாடுகளை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள தமிழ் தமிழ்த் தலைமைகள் அரச துறையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே இளம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.  

அவர்களது வாக்குகளைப் பெற்று இன்று அரசியல் ஏணியில் உச்சத்தை எட்டியிருக்கும் தமிழ் அரச தலைமைகள் தமக்கு வாக்களித்த மக்களுக்கும் நல்லதைச் செய்ய விரும்பின் இத்தகைய செயற்பாடுகளுடன் இணைந்துகொண்டு தமது சமூகத்திற்கான அர்ப்பணிப்பை செயற்பாட்டு ரீதியாக காட்ட வேண்டும்.  

தென்னிலங்கையுடன் ஒப்பிடுகையில் சமூக மற்றும் கொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டினதும் தமிழ் சமூகத்தைச் சார்ந்த இளம் சமுதாயத்திற்கு இன்று அத்தகைய வழிகாட்டல்களே தேவைப்படுகின்றன. தேர்தல் காலத்தில் மாத்திரம் அவர்களை நாடுவதற்குப் பதிலாக தமிழ்த் தலைமைகள் தம்மை வறுமை எனும் இருளிலிருந்து மீட்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தமிழ்த் தலைமைகள் தமது மக்களின் இந்த உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றதா என்பதிலேயே எமது சமூகத்தின் எதிர்காலமும் தங்கியிருக்கின்றது.  

ரவி ரத்னவேல்    

Comments