எமது தொழில்நுட்ப அறிவை உலகிற்கு எடுத்துக்காட்டும் INNOTECH 2020 | தினகரன் வாரமஞ்சரி

எமது தொழில்நுட்ப அறிவை உலகிற்கு எடுத்துக்காட்டும் INNOTECH 2020

எமது மாணவ, மாணவிகள் நாட்டை மாத்திரம் அல்ல முழு உலகத்தையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில் 1500புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் வர்த்தக சந்தையொன்றை பெறுவதற்கு இன்னும் மேம்படுத்தல் அவசியமாகும். அதற்காக நிபுணர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது குறைவாகவேயுள்ளது. இந்நிலைமையை மாற்றி இந்நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கும் அந்த உற்பத்திகளின் எதிர்கால

பயணத்துக்கும் கைகொடுப்பதை நோக்காகக் கொண்டு INNOTECH 2020கண்காட்சி மார்ச் 11தொடக்கம் 14வரை ஹோமாகம பிட்டிபனவில் நடைபெறவுள்ளது. அது இந்நாட்டு தொழில்நுட்பத்தின் சிறந்த அனுபவமாகும்.

ஆதிகால இலங்கையின் சிகிரியா, ரீதிகல, லோவாமஹாபாய, சொரபொரகுளம் போன்ற அதிசயமான கற்சிற்பங்கள் பொறியியல் துறைக்கு அப்பால் சென்ற தொழில்நுட்பங்களே.  

இந்த தொழில்நுட்ப கல்வியை நாட்டில் உயர் தரத்துக்கு கொண்டுவர கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பந்துல குணவர்தன 2010 – 15காலப் பகுதியில் இந்நாட்டின் கல்வியமைச்சராக இருந்தவேளையில் தொழில்நுட்ப பாடவிதானத்தை  செயல்படுத்த புதிய திட்டமொன்றை அமுல்செய்தார்.  

ஆனால் அது நினைத்ததைப்போல் இலகுவாக அமையவில்லை. 1000தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நாடு பூராவுமுள்ள பாடசாலைகளில் நிறுவியதோடு தொழில்நுட்பம் கற்பிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2015க்குப் பின்னர் இந்த தொழில்நுட்ப கல்வியை பிரபலப்படுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டாலும், மீண்டும் 2019நவம்பர் 20ஆம் திகதி அமைக்கப்பட்ட புதிய அரசின் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்ற பந்துல குணவர்தன, மீண்டும் இந்நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை பிரபல்யப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  

அம்முயற்சியின் பலனாக  பல்கலைக்கழகமொன்றில் முதன்மையான தொழில்நுட்பப் பாடத்துறை எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படுகின்றது.  

அதனைக் கொண்டாடும் முகமாக இந்நாட்டின் முதலாவது தொழில்நுட்பக் கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி INNOTECH 2020ஹோமாகம பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நெனோ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்பப் பீடம், NSBM என்பனவற்றின் அனுசரணையுடன்  மார்ச் 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை நடைபெறும்.  

INNOTECH 2020என பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்ப கண்காட்சி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் நவீன உற்பத்திக்கான அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவுக்கு அமைய கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் உயர் கல்வி தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த உயர் கல்வி தொழில்நுட்ப அமைச்சின் இராஜாங்க செயலாளர் சிந்தக்க லொக்குஹெட்டி, எமது பாடசாலைகள் எமது ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக ங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாக மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக நாட்டுக்கு மாத்திரமல்ல முழு உலகிற்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியின் அடிப்படை நோக்கமாகும். அத்துடன் பாடசாலை மட்டத்தில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்கும் மற்றும் பாடசாலை மாணவர் சமுதாயத்துக்கும் அறியத் தருவது இங்கு இன்னுமொரு நோக்கமாகவுள்ளது. எமது நாட்டின் மாணவ மாணவிகள் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதை அதிகரிப்பதற்காகவும் மாணவ சமூகம் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் இன்னுமொரு நோக்கமாகும். உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் நோக்கம் 2015ம் ஆண்டளவில் தொழில்நுட்ப பாட திட்டங்களுக்கு இணையும் மாணவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கு எழுபத்தைந்து வீதம் வரை அதிகரிப்பதாகும்.  

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களிடையே தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தல், நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய ஆய்வு முடிவுகளை வர்த்தக மட்டத்தில் மேம்படுத்துவதும் இக்கண்காட்சியை நடத்துவதற்கான நோக்கமாகும்.  400பாடசாலைகள் 15பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுநிறுவனங்கள் என்பனவற்றின் 1500புதிய உற்பத்திகள் தொடர்பான  அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்படுவதோடு வர்த்தக நிறுவனங்களுக்கு அப்புதிய உற்பத்திகளை வர்த்தக ரீதியாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

எமது நாட்டிலுள்ள அனைத்து விஞ்ஞான ஆய்வு நிறுவனங்கள், அனைத்து பல்கலைக்கழகங்களிலுமுள்ள பொறியியல் தொழில்நுட்ப பீடங்கள், சமுத்திர பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்குகொள்கின்றன. அதைதவிர முப்படைகளினதும் பொலிஸாரினதும் கூடங்கள் 8000கன அடி விஸ்தீரணத்தில் அமைந்துள்ளதோடு அங்கு அவர்கள் நவீன கண்டுபிடிப்புகள், நவீன உற்பத்திகள், நவீன ஆயுதங்கள், நவீன ஹெலிகொப்டர்கள் என்பவற்றையும் பொதுமக்கள் பார்வையிட காட்சிப்படுத்துகின்றார்கள். ஒவ்வொரு நாள் இரவும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு 14ம் திகதி மாலை கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

எமக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சபையின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தொழில்நுட்பம் என்னும் பாடம் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்துக்கு அமையவே உருவானது என்று கூறினார்.  

முன்னர் இருந்த உயிரியல், கணிதம் என்ற இரண்டு பல்கலைக்கழக பாடப் பிரிவுகளும் சுதந்திரம் பெற்று 65ஆண்டுகள் கடந்தும் மாறவில்லை. ஆனால் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தொழில்நுட்ப பாடவிதானத்தை உயர் தரத்தில் இணைத்தார். தற்போது அது பல்கலைக்கழகத்திற்கும் வந்துள்ளது. அதற்காக பாரிய கட்டடங்களை அமைத்து அதனை இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப விஞ்ஞானபீடமாக 16ம் திகதி திறந்து வைக்கவுள்ளனர். இதனால் நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என பேராசிரியர் தெரிவித்தார்.  

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த கண்காட்சியில் இந்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலுமுள்ள மாணவ மாணவிகள் தமது நவீன உற்பத்திகளை தங்கள் கரங்களாலேயே சமூகத்துக்கு காட்சிப்படுத்தவுள்ளார்கள்.  

இவ்வாறு எமது நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து நவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எம்மைவிட மிகவும் ஆர்வம் காட்டுவது இந்நாட்டிலுள்ள தூதுவராலயங்களாகும். அதன்படி அவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.  

எமது பிள்ளைகள் ஆசிரியர்களுடன் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களை செலவிட்டு உருவாக்கியுள்ள நவீன கண்டுபிடிப்புகள் உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளாக இருக்கலாம். அதனால் அவற்றைப் பற்றி உலகம் பூராவும் பரப்புவதற்கு நமது தூதுவராலயங்களின் உதவிகளை பெறவேண்டும்.  

மஹாபொல நிதியத்தை பலமாக்க இந்த கண்காட்சியால் முடியுமென்றால் அது நல்ல விடயமாகும். இந்நாட்டின் அனேகர் மஹாபொலவினால் நன்மையடைந்தவர்கள். மஹாபொல நிதியம் பலப்படுத்தப்பட்டால் எதிர்கால பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் தைரியத்தை வழங்கும் என தெரிவித்தார்.  

விசேடமாக லிப்டன் சுற்றுவட்டப் பாதையில் மாணவர்களின் போராட்டங்களால் மறைக்கப்படும் பல்கலைக்கழகங்களின் சரியான பக்கத்தை சர்வதேசத்துக்கும் காட்ட இச் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.  

இது தொடர்பாக எமக்கு கருத்து தெரிவித்த நவீன உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளைப் பார்க்கும் போது நாட்டில்  தொழில்நுட்ப துறையின் அபிவிருத்தி தொடர்பாக மகிழ்ச்சியடையலாம்.  

இப்பிரதேசம் தொழில்நுட்ப வலயமாக நாட்டின் அனைத்து நிறுவனங்களினதும் புதியவற்றை விரிவுரையாக வழங்க நாம் தனியான இடமொன்றை அமைத்துள்ளோம். இதன் மூலம் எமது நாட்டை தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடாகவும் சுபீட்சமான நாடாகவும் மாற்றுவதே எமது நோக்கம்” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  

கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தற்போது 160பாடசாலைகளிலிருந்து நவீன கண்டுபிடிப்புகளை முன்வைப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதன்படி  சுமார் 1400மாணவர்கள்  நவீன கண்டுபிடிப்புகளை முன்வைப்பார்கள் எனத் தெரிவித்தார்.  

INNOTECH 2020கண்காட்சிக்கு பிரதான ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஆலோசனைகள் வழங்கியுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன இந்த கண்காட்சி நடைபெறும் கிராமசேவையாளர் பிரிவுபோன்று தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ள பிரிவு எதுவும் நாட்டில் இல்லையென கூறினார். இங்கு மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம், நெனோ தொழில்நுட்ப நிறுவனம், நிறுத்தல் அளத்தல் திணைக்களம், NSBM நிறுவனம் என்பன ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன எனத் தெரிவித்தார்.  

எமது நாட்டில் முன்னர் மூன்று பாடவிதானங்களே காணப்பட்டன. வர்த்தகம், விஞ்ஞானம், கலை என்பனவே அவையாகும். முதலாவது தொழில்நுட்பத் துறைக்கான கட்டடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் நாடு பூராவும் 1000தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை ஆரம்பித்து வைத்தோம். அதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.  

தற்போது தொழில்நுட்ப பாடவிதானத்தின் கீழ் 400பாடசாலைகள் உள்ளன. இதன் கீழ் பிள்ளைகள் ரொக்கட் தயாரிக்கின்றார்கள். மோட்டார் வாகனங்களை தயாரிக்கின்றார்கள். நவீன உற்பத்திகள் புதிய கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்து பார்க்கின்றார்கள். இன்று எமது நாட்டில் 15பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு மாணவராவது தொழில்நுட்ப துறையில் பட்டம் பெறவில்லை. அடுத்த வருடம் தான் பட்டம் பெறுவார்கள். அவர்கள் அனைவரும் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  

இத்திட்டத்தின் கீழ் இந்நாட்டில் அமைக்கப்படவுள்ள முதலாவது பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞான பீட கட்டடத் தொகுதி ஹோமாகம பிட்டிபனவில் 35ஏக்கர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 16ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும். அவர் இந்நாட்டின் பல்கலைத்துறையின் திருப்புமுனையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.  

இக்கண்காட்சி அமைந்துள்ள இடத்தில் இந்நாட்டின் முதலாவது விஞ்ஞான பூங்கா 17ஏக்கரில் திறக்கப்படவுள்ளது. அதைத் தவிர கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடமும் இங்கு அமைக்கப்படுகின்றது. அதைத் தவிர பாடவிதான அபிவிருத்தி மத்திய நிலையமும் அமைக்கப்படவுள்ளது. அதன்படி இந்த பிட்டிபன என்னும் இடம் தற்போது அறுவு சார் நகரமாக மாறியுள்ளது என்வும் கூறினார்.  

இக் கண்காட்சியில்  எமது நாட்டின் அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் காட்சிப்படுத்தும் கண்காட்சி பசுமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதைத் தவிர பாடசாலை மாணவர்கள் காட்சிப்படுத்தம் நவீன உற்பத்திகள் கண்காட்சி பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக 126வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 400பாடசாலைகளின் 1400நவீன உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.  

அத்துடன் 58ஏக்கரில் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தினுள்ளே எமது நாட்டிலுள்ள அனைத்து விஞ்ஞான கைத்தொழில் ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் கண்காட்சி நடைபெறவுள்ளது. அதைத்தவிர இந்நாட்டின் 15பல்கலைக்கழக மாணவர்களின் நவீன உற்பத்திகள், விவசாய பிரிவுகளில் பொதுமக்களுக்கு தேவையானவைகளை இந்நாட்டின் முதலாவது பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞானபீடம் காட்சிப்படுத்தவுள்ளது.  

இக்கண்காட்சியை தேசிய கண்காட்சியாக நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  

இங்கு விசேடமாக கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப பாடவிதானம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனக் கூறினார். “2015ம் ஆண்டு தொழில்நுட்ப பாடத்திற்கு 13000மாணவர்கள் இணைந்துகொண்டார்கள். இவ்வருடம் 238000மாணவர்கள் இங்கு உள்ளார்கள். அபிவிருத்தியடைந்துவரும் எம்போன்ற நாட்டுக்கு டொக்டர்கள், பொறியியலாளர்களைவிட தொழில்நுட்பவியலாளர்களே முக்கியமானவர்கள். ஆனால் நாம் இதுவரை தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கவில்லை. தற்போதுதான் ஆரம்பித்துள்ளோம். இக்கண்காட்சி மூலம் நாடு பூராவும் தொழில்நுட்ப பாடவிதானத்தை பிரபலப்படுத்துவதே எமது நோக்கமாகும். அதன்படி குறைந்த பட்சம் 50000மாணவர்களையாவது எதிர்காலத்தில் உயர்தரத்தில் இந்த தொழில்நுட்பத்தை பாடமாக கற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உபவேந்தர் தெரிவித்தார்.  

இக்கண்காட்சியில் கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் என்பவற்றை பெற்றுக்கொடுக்க இலங்கை பொலிஸார், ஹோமாகம பிரதேச சபை, இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை மின்சார சபை என்பன திட்டங்களை வகுத்துள்ளன.  

இக்கண்காட்சியிலுள்ள லேக்ஹவுஸ் கூடத்தின் மூலம் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய ஊடகவியலாளர்களை இணைத்துக்கொள்ள முதற்கட்ட நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதைத் தவிர அச்சு தொழில்நுட்பம் அறிவு மற்றும் பத்திரிகை தயாரிப்பு தொடர்பாக புதிய தொழில்நுட்பத்தை புதிய தலைமுறையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்க லேக்ஹவுஸ் நிறுவனம் தயாராகவுள்ளது. அத்துடன் இக்கண்காட்சியில் இலத்திரனியல் ஊடகம் பற்றி தனது தொழில்நுட்பத்தையும் பொதுமக்களுக்கு அறியத்தர நடவடிக்கை எடுத்து வருகின்றது.  

அதன்பிரகாரம் பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் இதுவரை வெளிக்கொண்டுவரப்பட்ட நவீன உற்பத்தி ஆய்வுகளின் நன்மைகளை 300ஏக்கர் விஸ்தீரமான இடத்தில் கண்டுகளிக்க இந்நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோல் அவற்றிற்கு வர்த்தக பெறுமதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.  

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, உயர் கல்வி தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இந்நாட்டிற்கு அறிமுகம் செய்த தொழில்நுட்பவியல் மூலமாக நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்த புதிய சக்தியின் மூலம் காட்சிப்பத்தும் ஆக்கங்கள் பலவுடன் கூடிய இக்கண்காட்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது நாட்டை நேசிக்கும் எமது மாணவ சமுதாயத்தை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.

நிஹால் பீ.அபேசிங்க

தமிழில்: வீ.ஆர். வயலட்

Comments