எல்லாம் பெண்கள், எதிலும் பெண்கள்! | தினகரன் வாரமஞ்சரி

எல்லாம் பெண்கள், எதிலும் பெண்கள்!

இன்று சர்வதேச மகளிர் தினம்! அனைத்து மகளிருக்கும் இனிய வாழ்த்துகள்! இற்றைக்கு 110ஆண்டுகளுக்கு முன்பிருந்து அனுட்டிக்கப்படும் இந்த மகளிர் தினத்தின் மூலம், சமூகத்தில் பெண்கள் பற்றிய புரிதல் மேம்பட்டிருக்கிறதா? என்று கேட்டால், இன்னமும் போராட்ட நிலையில்தான் இருந்துகொண்டிருக்கிறது! என்ற பதிலே எஞ்சி நிற்கிறது.  

பெண்கள் சார்ந்த அனைத்து விடயங்களுமே ஒரு போராட்டத்தின் பின்னரே சாத்தியமாகி வந்திருப்பதை வரலாறுகள் கூறுகின்றன. ஒரு பெண் தன் உடையைத் தீர்மானிப்பதற்குக்கூடப் போராட வேண்டிய சூழல், மேற்கு நாடுகளிலேயே ஏற்பட்டிருக்கிறதென்றால், நாம் வாழும் ஆசிய கலாசாரச் சூழலைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை!  

பொதுவாக தமிழர் கலாசாரம் என்பது பெண்களின் உடைகளில் தங்கியிருக்கின்றது என்ற ஒரு கருத்தியல் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஒரு பெண் தன் அங்கங்கள் தெரிய உடையணிந்து சென்றால், அஃது அவள் சார்ந்த சமூகத்தின் கௌரவத்தையே தீர்மானிக்கிறது என்கின்ற விடயத்தில், ஆண்களில் அரசியலே குடிகொண்டிருக்கின்றது என்பது சற்றுப் புத்திக்கூர்மை மேம்பட்டவர்களின் கருத்தாக இருக்கிறது!  

என்றாலும், ஆரம்பக் காலத்தைவிட இன்று எல்லாத்துறைகளிலும் எல்லா நிலைகளிலும் பெண்கள் கோலோச்சுகிறார்கள். நாம் சம்பந்தப்பட்ட ஊடகத்துறையை எடுத்துக்ெகாண்டாலும், இன்று பெண்கள் கூடுதலாகப் பங்களிப்புச் செய்கிறார்கள் என்கிறார் நண்பர்! ஆனால், நிர்வாகக் கட்டமைப்புகளில் அவர்களால் ஆளுமையைத் தக்கவைத்துக்ெகாள்ள முடிவதில்லை என்பது மேற்கத்தேய நாடுகளில் அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதுபற்றிப் பேசுவதென்றால், இந்தப் பத்தி போதுமானதாக இருக்காது!  

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் , 1910ஆம் ஆண்டு உலக சோசலிச பெண்கள் மாநாடு நடைபெற்றபோது கிளாரா ஜெட்கின், அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், பெண்கள் சந்திக்கும் அனைத்துச் சவால்களையும் இணைத்து, வாக்குரிமை கோரிக்கையும் சேர்த்து விவாதிக்க வேண்டும், சம உரிமை கேட்டு போராட வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தினார்.  

இதுவே மகளிர் தினம் உருவாவதற்கான அடிப்படை. எனினும், அத்தீர்மானத்தில் எந்த நாள் என்று குறிப்பிடவில்லை. அதன் பின் பல நாடுகளிலும், பல வேறுபட்ட திகதிகளில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ரஷ்யப் பெண்கள், முதல் உலகப் போர் நேரத்தில், அமைதியையும், ரொட்டியையும் வலியுறுத்தி போராட்டம் தொடங்கிய மார்ச் 8ஆம் திகதிக்குப் பிறகு சீராக சர்வதேசப் பெண்கள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.  

எவ்வாறாயினும், 1911ஆம் ஆண்டிலிருந்தே பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டுப் பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும், இன்றும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள், ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள், பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள், ஓர் ஆண் இன்னோர் ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டுக் கொண்டுதானிருக்கிறாள்!  

ஊடகத்துறையில்கூடப் பால்நிலை சமத்துவம் பற்றிச் சிலாகித்துப் பேசப்பட்டாலும், இன்றுவரை அதில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டால், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என்று எழுதும் ஊடகத்துறையினர், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பெண்கள் அல்லது ஒரு பெண் உட்பட மூவர் கைது என்று பாகுபாட்டுடன் செய்தியை அறிக்கையிடுவதையே இன்னமும் கைக்ெகாண்டு வருகிறார்கள்!  

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட நேர்ந்தால், சந்தேக நபராகப் பார்க்காமல், அவளைப் பெண் என்று அடையாளப்படுத்துவது ஏன் என்ற கேள்விக்கு இன்னமும் பதில் கண்டறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்! பெண்ணியம் பேசும் பெண்களிடமும் இதற்குப் பதில் இல்லை. அவ்வாறு விடை காணப்படாத விடயங்கள் தேங்கிக் கிடப்பது அடுத்தடுத்து வரும் மகளிர் தினங்களுக்குத் தொனிப்பொருளாகக் கைகொடுக்கும் என்கிறார் நண்பர்.  

சில சந்தர்ப்பங்களில் பெண்களே தங்களைத் தியாகிகளாகக் கட்டமைத்துக்ெகாண்டு ஆண்கள் மீது பழிபோடுகிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு! பெண்கள் தம்மைத் தியாகிகளாகக் கட்டமைக்காமல், தன் சுயத்திற்காக நேரத்தைச்செலவிட வேண்டும். தன்னால் செய்ய இயலாதவற்றை எந்தத் தயக்கமும் இன்றி முடியாது என்று சொல்லிப் பழக வேண்டும். இதை எல்லாம் சரி செய்து கொண்டாலே சராசரி வாழ்க்கையில் வரும் மன அழுத்தங்களில் இருந்து பெண்கள் விடுபட்டுவிட முடியும் என்கிறார்கள் உளவியல் மருத்துவ நிபுணர்கள்.  

அவர்கள் போகட்டும், மகளிர் தினத்திற்குக் கட்டுரை எழுதும் பெண் ஊடகவியலாளர்கள், தங்களது கட்டுரையில் முன்வைத்த விடயங்களுக்கு, அடுத்த மகளிர் தினத்தில் தீர்வு கிடைத்திருக்கிறதா என்று சிந்தித்து அடுத்த கட்டுரையில் கைவைக்கட்டும்! வாழ்க மகளிர்!  

Comments