தமிழர்களின் அரசியலிலும் அமைப்புகளிலும் ஜனநாயகம் செத்துவிட்டது! | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களின் அரசியலிலும் அமைப்புகளிலும் ஜனநாயகம் செத்துவிட்டது!

தமிழர் மகா சபையின் தலைவர் எஸ்.இராஜேந்திரன்

கொழும்பு வாழ் தமிழர் அரசியல் பரப்பில் புதிய அணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் அவரின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றிய மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன், கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார். எனினும், இந்த அமைப்பு கொழும்புக்கானது மட்டுமல்ல என்கிறார் அவர்.

தமிழர்களின் அரசியலிலும் அமைப்புகளிலும் ஜனநாயகம் மரணித்துப்போய்விட்டமையே  புதிய அமைப்புகள் தோன்றுவதற்குக் காரணமாகுவதாகவும் அவர் கூறுகிறார். என்றாலும், தமது இந்த அமைப்பு கொழும்பு, மேல் மாகாணம் என்றில்லாமல், தேசிய ரீதியிலும் தமது சிறகை விரிக்கும் என்று விளக்கம் தருகிறார் இராஜேந்திரன்.

"ஒரு கட்சியைவிட்டு விலகுபவர்கள் ஏதாவது கட்சியில் இணைந்துகொள்வதே வழக்கம். ஆனால், நீங்கள் திடீரென ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறீர்கள்! இஃது எவ்வாறு சாத்தியமானது?"

"இஃது ஏற்கனவே என் மனத்திலும் என்னைச் சார்ந்தவர்களின் மனத்திலும் வேரூன்றியிருந்த விடயம். இன்றைய கொழும்பு மாவட்ட அரசியல் களத்தில் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிப்பது சுயநலப்போக்கு அரசியலாக இருக்கிறது. இதனை உணர்ந்துகொண்ட நாள் முதலிருந்தே தனித்துவமான ஓர் தூய அமைப்பு அவசியம் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டோம். அதன் விளைவுதான் கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபை"

"சுயநல அரசியல் என்று நீங்கள் விமர்சிக்கும் தலைமைத்துவத்துடன்தானே பல வருடங்கள் இருந்து வந்துள்ளீர்கள்! அதனை மாற்றியமைத்து நெறிப்படுத்த இயலாமல்போய்விட்டதா?"

"பல வருடங்களாக ஒரே தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றியதாகச் சொல்கிறீர்கள், உண்மைதான்! அந்தத் தலைமைத்துவம் தமிழ் தேசிய உணர்வுடன் குறிப்பாக, மேல் மாகாணத் தமிழ் மக்களின் தலைமைத்துவமாக 2000ஆம் ஆண்டளவில் மேல் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இதற்குப் பெருவாரியான தமிழ் மக்கள் தமது ஆதரவை நல்கினர். அதனடிப்படையில் நாம், மாநகர, மாகாண, பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டோம். அந்த வரிசையில் தலைவர், 2015தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினரானதோடு மட்டுமல்லாமல், அமைச்சராகவும் பதவியேற்றார். பதவியேற்றுக்ெகாண்டதிலிருந்து வாக்களித்த மக்களை மறந்துவிட்ட செயற்பாடே முன்னெடுக்கப்பட்டது. இதுபற்றிப் பல முறை எடுத்துரைத்தும் பலன் ஏற்படவில்லை. அதனால், கட்சியைவிட்டு விலகியும் சென்றிருக்கிறேன். இதுதான் உண்மை"

"கொழும்பு மாவட்டத்தில் அறிமுகமாகும் அரசியல்வாதிகளைத் தமிழ் மக்கள் தமது தலைவராக ஏற்றுக்ெகாள்வதும் பின்னர் அவர்களை உதாசீனப்படுத்துவதும் வழக்கமாகி வருவதாக ஒரு விமர்சனம் இருக்கிறதே?"

"நிச்சயமாக, உங்களின் கேள்வி நியாயமானது. காலத்திற்குக் காலம் வந்தவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்துள்ளார்கள். அவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக மட்டும் இருந்துவிட்டுத் தங்களை மேம்படுத்திக்ெகாண்டுள்ளார்கள். மக்களுக்கான தலைமைத்துவத்தைத் தரத் தவறியமையால், சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். இந்த நிலையை மாற்றியமைக்கவே மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில், சமகாலத்தில் மேலும் முனைப்புடன் செயற்படத் தீர்மானித்திருக்கின்றோம். அவ்வப்போது தோன்றிய தலைமைத்துவங்களை நம்பிய மக்களைப்போன்று நாமும் விதிவிலக்காக இருக்கவில்லை. எனவே, இனியும் இதனைப் பார்த்துக்ெகாண்டிருக்க முடியாது. விடைபெற்றுச் செல்லும் தலைமைக்கு மாற்றீடாக ஒரு புதிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்களும் வந்துவிட்டார்கள்."

"மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்த நீங்கள், கொழும்பு மாவட்ட தமிழர் மகாக சபையை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறீர்கள்! அப்படியென்றால், உங்களின் அரசியல் செயற்பாடும் குறுகிவிட்டதாகக் கொள்ளலாமா?"

"நிச்சயமாக இல்லை. பெயரில் மட்டும் 'அகில இலங்கை' எனக் ெகாண்டு செயல்படும் கட்சிகள், ஒரு சில மாகாண மட்டத்தில் மட்டுமே இயங்குகின்றன. கொழும்பு மாவட்டத்தில் குறைபாடுகள் இருப்பினும், மேல் மாகாணத்திலும் அகில இலங்கை ரீதியிலும் உள்ள தமிழ் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராகவே இருக்கின்றோம். அரசியல் களத்தின் இதயமாக விளங்கும் கொழும்பில் இயங்கும் எமது மகா சபை, குறுகாது என்பதைக் கூறிக்ெகாள்ள விரும்புகின்றேன். கொழும்பு அரசியல் என்பது தேசிய அரசியலுக்குச் சமமானது. எனவே, கொழும்பில் வாழ்கின்ற அனைத்துப் பிரதேசங்களின் தமிழ் மக்களுக்கான மகா சபையாகவே செயற்படும்!"

"தலைமை சரியில்லையென்று மாற்றுத் தலைமையை உருவாக்குவது, தமிழர் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற கருத்தியல்  முன்வைக்கப்படுகிறது. தமிழர்கள் இப்படி பிரிந்து நின்று அமைப்புகளை உருவாக்குவது எங்கேபோய் முடியும்?"

"என்னைப் பொறுத்தவரை இதற்குக் காரணம் ஜனநாயக இடைவௌி என்றே சொல்வேன். தமிழர்களின் அரசியலிலும் அமைப்புகளிலும் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது. அரசாங்கத்தைப் பொறுப்பு கூறச் சொல்லும் நாம், மக்களுக்குப் பொறுப்பு கூறுபவர்களாக இருப்பதில்லை என்பதே உண்மை. இந்த நிலைமைதான் மாற்றுத் தலைமை ஒன்றுக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றது. ஜனநாயகம் என்ற பெயரில் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டால், மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்!"

"சரி, உங்களின் நிலைப்பாடுதான் என்ன,தேர்தலில் போட்டுயிடுவதுதான் நோக்கமா?"

"இதற்குப் பதில் ஆம்! ஆனால், வெல்வது யார், தோற்பது யார் என்று தெரிந்திருந்தும் பணப்பேராசைக்காக, சுயநலத்திற்காக, சந்தர்ப்பவாதத்திற்காக ஒன்றைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு எம்மிடம் இல்லை.

தேசிய அரசியல் நகர்வை துல்லியமாகவும் தீர்க்கதரிசனமாகவும் ஆய்ந்தறிந்து செயற்படும் தன்மை கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபைக்கு உண்டு! ஆகவே, தேசிய அரசியலைச் சரியாக மதிப்பீடு செய்வதன் மூலமே தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துக் ெகாள்ள முடியும் என்ற தெளிவான சமூக அரசியலில் பயணிக்கத் தயாராகிவிட்டோம்.

இந்நிலையில் எவர் எதைச் சொன்னாலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கின்றதோ இல்லையோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சார்ந்த கட்சியே ஆட்சியமைக்கும் என்பது உறுதி! அந்த வகையில், கொழும்பு மாவட்ட தமிழ் மக்களின் நலன்களைப் பெற்றுக்ெகாடுக்க சரியான நேரத்தில், சரியான சந்தர்ப்பத்தில் சரியான முடிவை கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபை எடுக்கும் என்பதை உறுதியாகவும் தீர்க்க தரிசனமாகவும் தமிழையும் மக்களையும் இதுவரை ஏமாற்றிய தலைவர்களுக்குக் கூறிக் ெகாள்ள விரும்புகின்றேன்.

எனவே, எமது தமிழ் மக்கள் அனைவரும் தெளிவாக விழிப்பு பெற்று ஒரு புதிய வரவை நோக்கிய பயணத்திற்குத் தயாராகுவது தலையாய கடமையாகும்" என்கிறார் இந்தத் தீர்க்கதரிசனம்மிக்க அரசியல்வாதி!

விசு கருணாநிதி

Comments