மரண வாயிலிலும் தன் அஞ்சா நெஞ்சத்தை வெளிப்படுத்திய கெப்பெட்டிபொல | தினகரன் வாரமஞ்சரி

மரண வாயிலிலும் தன் அஞ்சா நெஞ்சத்தை வெளிப்படுத்திய கெப்பெட்டிபொல

பிரிட்டிஷ் மாமன்னருக்கெதிராக சதி புரிந்ததாகவும் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட கெப்பெட்டிப்பொல மீதான தீர்ப்பின் பிரகாரம் தண்டனை நிறைவேற்றப்படும் தினமும், இடமும் நிர்ணயிக்கப்படும்வரை கெப்பெட்டிப்பொல தடுப்புமுகாமில் வைக்கப்பட்டான்.  

1818நவம்பர் மாதம் 16ம் திகதி புரட்சித் தலைவர்களில் ஒருவனாகிய மடுகல்லவுக்கு எதிரான வழக்கு கண்டி இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

மடுகல்லவுக்கு எதிரான விசாரணையும் முற்றுப் பெற்றது. வழமை போன்று மரண தண்டனை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்து இளைய பிலிமத்தலாவையின் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமாயிற்று. 

கெப்பெட்டிப்பொலைக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்ததைப் போன்று போலி அரசனின் கீழ் அரச பதவி பெற்றமைக்கான குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அரச விரோத சதி வேலைகளில் ஈடுபட்டமைக்கான குற்றச்சாட்டு பிலிமத்தலாவை மீது சுமத்தப்பட்டிருந்தது. 

ஏழு கோறளை (குருணாகல) யின் திசாவையாக கடமைபுரிந்த பிலிமத்தலாவை கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் அரசவிரோத சதிகளில் ஈடுபட்டுசட்டப்பூர்வமான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஆயுத போராட்டம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தான். வெள்ளையர்களின்வழமையான விசாரணை நிறைவுற்று மரண தண்டனை தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது. 

1815ம் ஆண்டு முதல் கண்டி ஒப்பந்தத்தையும் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு ஆட்சியையும் எதிர்த்துவந்த முன்னாள் பௌத்த பிக்குவாகிய இஹகமவுக்கு எதிராக வழக்கு இராணுவ நீதிமன்றத்தில் அடுத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

போலி அரசனின் கீழ் வலப்பனை திசாவையினால் பதவியையேற்று சதிபுரிந்து சட்டப்பூர்வ அரசாங்கத்தை பதவியிழக்கச் செய்வதற்காக கிளர்ச்சி புரிந்தமை குறித்து விசாரிப்பதாக இவ்வழக்கில் கூறப்பட்டது. 

இக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவதாக மறுநாள் கண்டி இராணுவ நீதிமன்றம் அறிவித்தது. 

 இந்த சகல வழக்குகளும் விசாரிக்கப்பட்டு முடியும் வரையும் பொறுமை காத்த ஆளுநர் பிரவுன்றிக் 1818நவம்பர் 24ம் திகதி அடுத்த நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டான். அதன் பிரகாரம் கெப்பெட்டிப்பொலையும், மடுகல்கலையும் நவம்பர் 26ம் திகதி காலை எட்டு மணிக்கு கண்டி போகம்பறை வதைமுகாமில் மரணத்தைத் தழுவ வேண்டுமெனக் குறிப்பிட்டது அந்த ஆளுநர் பிரகடனம். 

கண்டி இராணுவ முகாமில் விடுமுறையில் இருக்கும் சிப்பாய்கள் உட்பட இராணுவத்தினர் அனைவரும் அன்றைய தினம் போகம்பறையில் கெப்பெட்டிப்பொல, மடுகல்ல ஆகியோரின் சிரச்சேதத்தை கண்ணுற்று மகிழ வேண்டுமென மேலும் ஆளுநரின் அறிக்கை தெரிவித்தது. 

அவ்வறிக்கையில் பிலிமத்தலாவை மற்றும் இஹகம ஆகியோரின் தண்டனைகள் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டு உயிர்ப்பிச்சை அளிக்கப்படுவதாகவும் ஆயுள் முழுதும் வெளி நாட்டில் சீவிப்பதற்கு நாடு கடத்தப்படுவதாகவும் அவர்கள் இருவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும்வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமெனவும் அதற்காக அவர்களை கொழும்புக்கு அழைத்து வரும் பணியை கெலீயிடம் ஒப்படைப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தான் ஆளுநர் பிரவுன்றிக். 

1818ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் திகதி பரவாகமையில் புரட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆறுதல் கொண்ட ஆளுநர், தலைவர்களுக்கு தக்க தண்டனை அறிவிப்பு வெளிவந்தததும் புளகாங்கிதம் அடைந்தான். 

தலைவர்கள் இருவரின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் தூக்கிலிடப்படாது சிரச்சேதத்துக்குள்ளாவதற்கு அனுமதி வழங்கினான் ஆளுநர். 

மரணதண்டனை நிறைவேற்றப்படும் தினத்தில் தாம் கண்டியில் தரித்திருப்பதை பிரவுன்றிக் விரும்பவில்லை. தாம் கண்டி இராச்சியத்தைவிட்டு வெளியேறி கொழும்பை அடைந்த பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அறிவித்தான். அதனைத் தொடர்ந்து சகல விதமான அரச மரியாதைகளுடன் ஊர்வலமாக கன்னொருவ தோணிக்கரையை அடைந்தான். ஆளுநரை வாழ்த்துவதற்காகவும் அவரது நிருவாக்கத்தின் கீழ் புரட்சித் தலைவர்கள் கைதாகி மரணமடையும் நற்செய்தியைக் கொண்டாடி மகிழவும் வெள்ளையர்களோடு ஏராளமான சிங்கள பிரதானிகளும் கன்னொருவ தோணிக்கரையில் திரண்டனர். 

கன்னொருவவிலிருந்து ரூவான்வெல்ல வரையிலும் இருமருங்கிலும் திரண்டிருந்து மரியாதை செலுத்துவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இதற்காக இப்பிரதேசங்களின் கோறாளைமார்களுக்கும், திசாவைமார்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. ரூவான்வெல்லையில் வரவேற்புபசாரத்தில் கலந்துகொண்ட ஆளுநர் அங்கிருந்து களனி கங்கை வழியே கொழும்பை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தான். 

1818ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அதிகாலை முதல் கண்டி போகம்பறை முகாம் சற்று சலசலப்புடன் காணப்பட்டது. இம்முகாமைச் சுற்றி தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென தனது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினான் கெலீ. சிறைக்கூடத்திலிருந்து கெப்பெட்டிப்பொலையையும், மடுகல்லையையும் வெளியில் அழைத்துவரும் போது இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

பதுளை பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருந்த சோவர்ஸ் சில காலம் கெப்பெட்டிப்பொலையின் நண்பனாக இருந்தவன். பின்னர் எதிரியாகவும் முகம் கொடுத்தவன். அவனும் கெப்பெட்டிப்பொல மரணத்துக்கு முகம் கொடுப்பதை அவதானிப்பதற்காக கண்டிக்கு வந்திருந்தான். 

தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் தலைவர்கள் இருவரும் புனித தந்தத்தினை வணங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இருவரும் புனித தளதா மாளிகைக்கு அழைத்துவரப்பட்டனர். காவலர்கள் சிலரும் ​ேகர்ணல் கெலீயும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். கைதிகளுடன் கெலீயும் தலதா மாளிகைக்குள் பிரவேசித்தான். 

புனித தந்தம் எழுந்தருளியிருக்கும் பேழை அமைந்துள்ள கர்ப்பக்கிரகத்தின் வாசலிலேயே கெப்பெட்டிப்பொலையும், மடுகல்லையும் தரையில் வீழ்ந்து வணங்கினர். புனித தலதாவுக்கு சமர்ப்பணம் புரிய எதுவுமே தம் கையில் இல்லையே என மணமுருகி முணுமுணுத்தான் வீரன் கெப்பெட்டிப்பொல. 

தன் கைவசமிருந்த ஒரேயொரு பண்டமாகிய துப்பட்டாவை எடுத்து புனித தந்த பகவானுக்கு சமர்ப்பணம் செய்த கெப்பெட்டிப்பொலையின் செயல் கண்டு கலங்கினான் பதுளை பொறுப்பாளன் சோவர்ஸ். இச்சமர்ப்பணத்தின் மூலம் கிட்டும் ஆசி சோவர்சுக்கும் கிட்ட வேண்டுமென அங்கு வாய்திறந்து பிரார்த்தித்தான் மொனரவில கெப்பெட்டிப்பொல. 

தனது வாழ்நாளில் சோவர்சிடமிருந்து தன்னால் கண்டுகொள்ள முடிந்த நற்பணிகளை அத்தருணம் நினைவு கூர்ந்தான் கெப்பெட்டிப்பொல. 

இப்பிறவில் தாம் புரிந்த நற்காரியங்கள் காரணமாக அடுத்த பிறவியில் இமயமலையில் பிறக்க வேண்டுமெனவும் அங்கு தவவாழ்க்கை மேற்கொள்ள தனக்கு அருள்புரிய வேண்டுமெனவும் பிரார்த்தனை செய்தான் மொனரவில கெப்பெட்டிப்பொல. 

அவனது பிரார்த்தனை நிறைவு பெற்ற பின்னர் அங்கு பிரசன்னமாகியிருந்த பௌத்த பிக்கு; “மேலே எறியப்பட்ட கல் மீண்டும் பூமியை வந்தடைவது போன்று தாங்கள் சேகரித்துக்கொண்ட புண்ணியம் அனைத்தும் உங்களை அடுத்த பிறவியில் தகுதிவாய்ந்த ஓர் இடத்தில் பிறப்பெடுக்கச் செய்து மக்கள் செழிப்பாக வாழ பெரும்பணி புரியும், அதன் பின்னர் சொர்க்கத்தையடையவும் பிரார்த்திக்கின்றேன்” எனத் தர்ம போதனை புரிந்தார். 

கெப்பெட்டிப்பொல இவ்வாறு அமைதியாகவும், சஞ்சலமின்றியும் காணப்பட்டபோதும் மடுகல்ல அவ்வாறு அமைதியும் அஞ்சாத மனோநிலையுடனும் காணப்படவில்லை. மடுகல்ல புத்தபகவானின் புனித தந்தத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து தனக்கு உயிர்ப்பிச்சைப் பெற்றுத் தருமாறு வேண்டினான். உடனே காவலர்கள் உள்ளே நுழைந்து மடுகல்லையை வெளியில் இழுத்து வரலாயினர். இதனை கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த கெப்பெட்டிப்பொல; “முட்டாள் தனமான செயலில் ஈடுபட வேண்டாம் மடுகல்ல!” என தனது நண்பனுக்கு ஆறுதல் கூறினான்.(தொடரும்) 

சி.கே. முருகேசு
தகவல்:
கண்டியின் சுதந்திர போராட்டங்கள்  
தயாவன்ச ஜயக்கொடி

Comments