இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள்

இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு சுற்று தேர்தல் செய்தித் தலைப்புகள் வரத்தொடங்கி விட்டன. ஜனநாயக நாடு ஒன்றில் தேர்தல் என்பது மிகமுக்கியமானதொரு செயன் முறையாகவும் இன்றியமையாததாகவும் நோக்கப்படுகிறது. ஜனநாயக பாரம்பரியங்களை பேணும் நாடுகளில் மக்களால் மக்களுக்காக ஆட்சி நடத்த தத்தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயன்முறை என்பதால் அதற்கு அத்துணை முக்கியத்துவம் தரப்படுகிறது.

மக்கள் மத்தியிலிருந்தே ஆட்சியாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்னும் உன்னத நெறிமுறைக்கமைய அந்தப் புனிதமான கடமையை வாக்காளர் ஒவ்வொருவரும் கட்டாயம் ஆற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஒரு நாடு ஜனநாயக மரபுகளை மேற்கொண்டு முன்வர வேண்டுமாயின் ஆள்வோர் ஆட்சி செய்யப்படுவோர் ஆகிய இருதரப்பினரும் ஜனநாயக பாரம்பரியங்கள் பற்றியும் ஒழுக்கங்கள் பற்றியும் சரிவர கற்று ஒழுகினால் மட்டுமே எதிர்பார்க்கப்படும் ஜனநாயக ஆட்சி அர்த்தம் உள்ளதாக மாறும். அவ்வாறில்லாமல் கட்சிகள் தெரிவு செய்யும் வேட்பாளர்கள் கட்டத்திற்கு முன்னால் புள்ளடியிட்டு எவனையாவது தெரிவு செய்தால் போதும் என்ற நோக்கில் வாக்காளர் கூட்டம் நகருமாயின் ஜனநாயகம் என்ற சொல்லே கேள்விக்குரியதாக மாறிவிடும்.

மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடைய, கற்றறிந்த, புலமைவாய்ந்த அல்லது உலகம் சார் அனுபவ அறிவு முதிர்ச்சி கொண்ட தன் உடைமை போலவே நாட்டின் உடமைகளையும் பாதுகாத்து மக்கள் நலனுக்காகவும் நாட்டின் கௌரவத்திற்காகவும் பாடுபடும் அர்ப்பணிப்புள்ள வேட்பாளர்களை கட்சிகள் நிறுத்த வேண்டும்.

அவர்களில் சீர்தூக்கிப் பார்த்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவை புரியக்கூடிய அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதே ஜனநாயக ஆட்சி முறைமை எதிர்பார்க்கும் இலக்காகும். இவ்விரு சாராரில் எவர் பலவீனமாக இருந்தாலும் ஜனநாயகம் என்பது கேலிக் கூத்தாகப் போய்விடும். “ஆயிரம் எலிகளின் ஆட்சியை விட ஒரு சிங்கத்தின் ஆட்சி சிறப்பானது” என ஜனநாயக ஆட்சிமுறைமையை விமர்சிக்கவும் இந்த பலவீனங்களே காரணமாக அமைகின்றன.

நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய தகுதியுடைய, இயலுமை கொண்ட கற்றறிந்த வேட்பாளர்களை முன்னிறுத்த கட்சிகளால் முடிவதில்லை. பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் கட்சிகளால் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவதால் அங்கே வாக்காளர்களுக்கு உரிய தெரிவுகள் இல்லாத காரணத்தால் மூன்றாவது அல்லது நான்காவது சிறந்த தெரிவுக்கே புள்ளடி போடவேண்டியுள்ளது. எல்லாத் தொழில்களுக்கும் ஓய்வுபெறும் வயதெல்லை என்ற ஒன்று இருக்க, அரசியலுக்கு மட்டும் அது இல்லாமல் இருப்பது அவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. அரசியல் பிரபலத்தன்மை என்பது நல்லொழுக்கங்கள் காரணமாகவும் வரலாம், தீயொழுக்கம் காரணமாகவும் வரலாம். மக்கள் இந்த இரண்டில் எதனைத் தெரிவு செய்வார்கள் என்பது அவர்களது அரசியல் எழுத்தறிவில் தங்கியுள்ளது.

கட்சிகள் கற்றறிந்து நிபுணத்துவம் கொண்ட, சமூக சிந்தனை கொண்ட தொழில்சார் அரசியல் அக்கறை கொண்டவர்களை சிலவேளை வேட்பாளர்களாக நிறுத்தினாலும் அவர்களால் பெரும்பாலும் வெற்றி பெறமுடிவதில்லை. காரணம், ஜனநாயகம் என்ற பேரால் வாக்காளர் பயிற்றப்பட்டிருப்பதெல்லாம் சண்டித்தனம் காட்டும் அதிகார உச்சத்தை எதிர்பார்க்கும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யத்தான் என்பதே இதற்குக் காரணம்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பலவற்றில் செயற்பாட்டில் உள்ள ஜனநாயகம் இத்தகைய ஒழுங்குபாட்டிலேயே இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் நோக்கலாம். மாறாக சிங்கப்பூர் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கைக்கொள்ளப்படும் ஜனநாயக நடைமுறைகள் காரணமாக நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் நாடு ஆட்சி செய்யப்படும் வாண்மைத்துவம் வாய்ந்த ஜனநாயக அலகுகளாக அவை உள்ளன.

ஒரு காலத்தில் இலங்கையை பின்பற்ற விரும்பிய சிங்கப்பூர் ஜனநாயக ஆட்சிமுறை தொடர்பில் மிகப்பெரிய சாதனைகளை சத்தமில்லாமல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 89வருடகால ஜனநாயக அனுபவமுடைய இலங்கை இன்றும் அந்த ஆட்சிமுறையில் வெகுதூரம் நெடுங்காலம் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

எதிர்வரும் தேர்தல் செலவு மிக்கதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு கட்சியும் பலமடங்கு செவு செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். இதில் எந்தக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் புதிய அரசாங்கம் எதிர்நோக்கப்போகும் பொருளாதார சவால்களை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

முழு உலகையுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு உலகமே அதிர்ந்து போயிருக்கிறது. உலகின் தொழிற்சாலையான சீனா ஏற்கனவே முடங்கிப்போயுள்ளது. உலகின் நுகர்வுச் சாலையான அமெரிக்காவில் வைரஸ் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு தேடும் நோக்கில் சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பித நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் ஏற்கனவே அரண்டு போய் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி வருகின்றன.

இந்நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தான் இலங்கையின் ஏற்றுமதி நாடுகளாகவும் உல்லாசப் பயணிகளின் தோற்றுவாயாகவும், தொழிலாளர் வருமான மூலாதாரங்களாகவும் உள்ளன. இந்நாடுகளில் ஏற்படும் தேக்க நிலை  இலங்கைப் பொருளதாரத்தை கணிசமாகப் பாதிக்கும். இதிலிருந்து உடனடியாக மீள்வது புதிய அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக அமையும். இரண்டாவது, அரசிறை வருவாய்களை திரட்டிக் கொள்வது முக்கியமான ஒரு சவாலாக அமையும். வரவு செலவுதிட்ட குறைநிறைகளை குறைக்கவும் நடைமுறைச் செலவினங்களை ஈடுசெய்யவும் நிதிகளைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக அமையும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியமை காரணமாக இலங்கையின் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்படப்போகும் தாக்கங்கள் புதிய அரசாங்கம் எதிர்நோக்க வேண்டிய மற்றொரு முக்கிய சவாலாகும்.

அண்மையில் மனிதவுரிமை கவுன்சிலில் இலங்கை எடுத்த முடிவுக்கு உலக நாடுகள் காட்டப்போகும் எதிர்வினைகளும் நிச்சயமற்ற ஒன்றாக இருப்பது இன்னுமொரு சவாலாகும். முன்பு போன்று GSP+ இல் கைவைக்கப்படுமாயின் அது இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கும்.

இவ்வாறான சவால்களில் இருந்து விடுபட்டு நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி முன் நகர்த்திச் செல்வது எவருக்கும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  நட்பு நாடுகளின் உதவியும் உள்ளூர் நிபுணத்துவம் வாய்ந்த வாண்மையாளர்களின் வழிகாட்டலும் பொருத்த முற அமைந்து வீண்விரயங்களை தவிர்த்து வாயை வயிற்றைக் கட்டி (Tighten Your Belt) ஒரு நிலைமாறு கட்டத்தை கடந்தால் மாத்திரமே இலங்கையின் பொருளாதாரம் மீள எழும்ப முடியும் அவ்வாறன்றி “பழைய குருடி கதவை திறவடி” என்று செயற்பட்டால் இலங்கை இன்னும் பல தசாப்தங்கள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடாகவே தலைமுறைகளை காண நேரிடலாம். “வாய்ப்புக்களை தவற விட்ட நாடு” என்றும் அடைமொழி இலங்கைக்கு ஏற்கெனவே உள்ளதை ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தம்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி.

பொருளியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments