கண் திறந்தது | தினகரன் வாரமஞ்சரி

கண் திறந்தது

“அவனும் அவன்ட கூட்டாளிமாரும் ம்... ம்..." ரோட்டிலிருந்து வந்த காசீம் போடியார் வீட்டிற்கு வந்ததும் சத்தம் போட்டார். “வந்ததும் வராததுமாக ஏன் சத்தம் போடுறீங்க, ஆறுதலாக இருங்க தேனீர் கொண்டு வாறன்” ஆறுதலாக இருக்குமாறு அவரது மனைவி ஆயிஷா சொன்னாள். “ஓம்... ஓம்... நான் எனக்குச் சத்தம் போடுபவன் போல விளங்குது ஏனென்றால், மகன் ஒண்டைப் பெத்து காவாலி களிசரைகளோட ஊர் சுத்த அனுப்பியாச்சு பாரு” ஆத்திரப்பட்டார் காசிம் போடியார். 

என்னது! நானா ஊர் சுத்தச்  சொல்லி அனுப்பியிருக்கேன். தேவையில்லாத கதைகளை உட்டுப்போட்டு வேலையைப் பாரு” ஆத்திரப்பட்டார். காசிம் போடியார். 

என்னது நானா ஊர் சுத்த சொல்லி அனுப்பியிருக்கேன். தேவையில்லாத கதைகளை உட்டுப்போட்டு வேலையை பாருங்க” மறுப்புத் தெரிவித்தாள் ஆயிஷா ‘என்ன தேவையில்லாத கதைத்து உன்னை...” உறுமினார் போடியார் “என்ன இந்த ஆள் என்னுல பாயிது ஒரு நாளும் இல்லை, ரோட்டுல ஆரோடையும் வாக்குவாதம் பட்டீங்களா? சண்டை கிண்ட பிடிச்சிங்களா? “அமைதியா ஆயிஷா கேட்டாள். “ஓவ்... இப்ப உனக்கு சண்டைக்காரனா போனேன் என்ன” மீண்டும் அதட்டினார் போடியார் “மடத்தனமான கதைகளை உட்டுப் போட்டு என்ன விடயம் என்று சொன்னாத்தானே தெரியும்” என்று கேட்டாள். “சொல்றன் இப்ப சொல்றன் அது உன்ட மகன் இருக்கானே... கதையை ஆரம்பிக்கவில்லை. இந்தக் கதையை உடுங்க... உடுங்க... என்று எத்தனை நாளைக்கு சொல்லி இருக்கன் உங்களுக்கு? யாரு மகன் இல்லையா நம்முட மகன் என்று சொல்லுங்களேன்” ஆயிஷா கோபமாகச் சொன்னாள். 

“சரி... சரி நம்முட பிள்ள ரமிஸ் இருக்கானே! அவன் மீன் வீசிப் படிக்கிற கந்தசாமி மெகானிக், பண்டா இவர்களுடைய மக்களோட கூடித் திரிகிறான். இதைப் பார்க்க எனக்குப் பொறுக்கல்லே” போடியார் அவர் கௌரவத்தை தெரிவித்தார். அவங்களும் மனுஷன் தானே நம்முட பிள்ளையை போல அவனுகளும் ஒரு வகுப்புல படிக்கிற அவர்கள் சுத்தித் திரிகிறார்கள். இதுல ஒரு தப்பும் இல்லையே! கந்தசாமிட மகன் குமார், பண்டாட மகன் பியசேன ஒழுங்கான பிள்ளைகள். அவனுகளைப் பார்த்தாத் தெரியுது” ஆயிஷா புரிய வைத்தாள். 

“எனக்கிட்ட ஒரு கதையும் பேச வேண்டாம். நான் எடுக்கிறது தான் முடிவு. எவ்வளவு ஒழுக்கமானவன் என்றாலும் அவனுகள் யாரு? வேற ஆக்கள். இப்படிப்பட்டவர்களோட கூடித்திரிவதைப் பற்றி ஒரு முடிவு எடுக்கத்தான் இருக்கன். அவன் இப்ப இவடத்த வரட்டும்” ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார் போடியார். “வயது போன மனுஷனுக்கு பொறுமை கொஞ்சமாவது இருக்கணும். அவன்ட முகத்தில் ஏதும் கதைச்சுக் கிதைச்சுப் போட்டிறாதீங்க. புள்ளட மனம் உடைஞ்சி ஏதாவது செஞ்சிடுவான்” ஆத்திரத்தை கொஞ்சம் தணிய வைத்தாள் ஆயிஷா. “அப்படிச் செஞ்சிட்டாலும் பரவாயில்ல. நம்முடைய கதையைக் கேளாதவனுகள், ஏன் இந்த ஊட்டுல இருக்கணும்? இன்டைக்கே இந்த ஊட்ட உட்டுப் போகணும். துடித்துக் கொண்டிருந்தார் போடியார். 

“அவனைப் பெத்து வளர்க்கப் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். எத்துன நோம்பு பிடிச்சிருக்கன்; எத்தனை ஏழைகளுக்குச் சாப்பாடு கொடுத்திருப்பேன். இஞ்ச ரமீஸ் வாறான் போல ஒண்டும் பேசாதீங்க” போடியாருக்கு மெதுவாகக் கூறினாள் ரமிஸின் தாய். “ஓம்... அவன் அவங்களோட கூடித் திரிந்து என்ட கௌரவத்தைக் குறைக்கிற அதை நான் பார்த்துக் கொண்டிருக்கணும். இஞ்ச நான் இந்த ஊரில் பணக்காரன், பணக்காரனாகத் தான் இருக்கணும். ஏழை ஏழையாகத் தான் வாழணும் துள்ளிக் கொண்டிருந்தார் போடியார். 

ரமிஸ் வீட்டுக்கு வந்து வீட்டுக்குள் காலடி வைக்கவில்லை “நில்லு! எங்க போயிட்டு வாறாய்” அகங்காரமாய் கேட்டார். “இப்பதான் வாப்பா  டியுசன் முடிஞ்சி வாறன்” அமைதியாகச் சொன்னான். “டியுஷன் முடிஞ்சு வாறாயா? இல்ல அந்தக் காவாலி களிசரைகளோட ஊர் சுற்றிப் போட்டு வாறாயா? மீண்டும் போடியார் அதட்டினார்” இல்ல வாப்பா அவனுகள் நல்ல பிள்ளைகள்; நாங்க வகுப்பில் ஒற்றுமையாக இருந்தால் தான் எனக்குத் தெரியாதவற்றை அவனுக்கிட்டயும் அவனுக்கு தெரியாதவற்றை என்னிட்டையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வாப்பா நீங்க பெரிய மனிதராக இருந்து கொண்டு இப்படி இருக்கக் கூடாது. வயது போன நீங்க எங்களுக்கு மட்டும் அல்ல, இந்த நாட்டுக்கே முதுகெலும்பு போன்றவர்கள், வழிகாட்டிகள். இப்படி இருக்க நீங்க இவ்விதமாக நடக்கக் கூடாது” தனது மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்தான் ரமிஸ்.  

“டேய் நீ செய்ற அனைத்தும் எனக்குத் தேவைப்பட்டதில்லை. நான் சொல்லுவதைக் கேள். உன்ட வகுப்பில் ஆப்தின் மாஸ்டர் மகனும் பழைய விதானட மகனும் படிக்கிறல்லவா? அவர்களோட சேர்ந்து திரிஞ்சா என்ன?” வசதி படைத்த பிள்ளைகளுடன் சேருமாறு அடம் பிடித்தார். “வாப்பா அவர்கள் வசதி படைத்தவர்களானாலும் பெருங்குள்ளர்கள். என்ன வந்தாலும் அவனுகளுடைய உறவை இன்றே உடணும்" " நீ என்னை எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்திட்டாயா? என்னமாவது செய்! வயலுக்குப் போகணும், போயிட்டு வாறன்.” 

‘உம்மா, வாப்பா இந்த ஊரில் பெரிய பணக்காரன், எல்லோரிடமும் சேர்ந்து பழக வேண்டியவர் ஏன் உம்மா ஏழை பணக்காரன் என்று பாகுபாடு காட்டுகிறார்?” ரமிஸ் சொல்ல ஆயிஷா “அந்த மனிசன்ட கதயை உட்டுப்போட்டு வந்து சாப்பிடு மகன்” சொன்னாள் “எனக்குப் பசிக்கலம்மா பொறகு சாப்பிடுவோம்” ரமிஸ் சொன்னான். 

இஞ்ச உங்கட அகமலெப்பை மச்சான்ட மகன் நயீம் கடிதம் தந்துட்டுப் போகுது. பின்னேரம் அஸருக்கும் பிறகு கூட்டமாம். பெரிய மகா வித்தியலாயத்திலயாம், கண்டிப்பா வரட்டாம். கெம்பசுக்கு எடுபட்ட பிள்ளைகளைப் பாராட்டயாம். அதுலயும் நம்முட ரமிஸ்ர கூட்டாளிமாருக்கு டாக்டருக்குப் படிக்கவும் மற்றக் கூட்டாளியான பியேசேனாவுக்கு எஞ்சினியருக்குப் படிக்கவும் முடிவு வந்ததாம். அதை கௌரவிக்கயாம். நம்முட பிள்ளட தலையில் அப்படிப் படிக்க எழுதல்ல” ஆயிஷா வீட்டுக்கு வந்த கணவனிடம் கூறினாள். 

“ஆரு அகமலெப்பை மச்சாண்ட மகன் நயீம் தம்பியா கடிதம் தந்த? ஒவ் நம்முட குடியான் கடிதம் தந்திருக்கார். கண்டிப்பாகப் போகத்தான் வேணும்” போடியார் கூற “இஞ்ச இது நம்முட ஊர் முதியோர் சங்கம் இந்தக் கூட்டத்த நடத்துகிறதாம். அதில முதியோர்கள் தானே? கண்டிப்பாகப் போய்ப் பாருங்க. மீண்டும் கூட்டத்திற்குப் போகுமாறு ஆயிஷா அவசரப்படுத்தினாள். “இங்க பாருங்க நீங்க ஏழை, பணக்காரன் கௌரவம் இல்லாதவன் என்று ஊரின் முதன்மை மனிதர்களாக வர இருக்கிறார்கள். யாரையும் பழித்து எள்ளி நகையாடுதல், எந்த மார்க்கத்திலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தாவது இந்த ஊரில பெரிய மனிசனாக நல்லவராக வாழப் பழகிக் கொள்ளுங்கள்” ஆயிஷா சில புத்திமதிகளைக் கூறினாள். “சரி சரி... என்ன சாப்பாடு வை” போடியார் சொல்ல ஆயிஷா குசினிக்குச் சென்றாள். 

முதியோர் சங்கக் கூட்டம் ஆரம்பமானது தலைவர் உரை நிகழ்த்தினார். இன்னும் பேசினார்கள். இறுதியாகப் பிரதம பேச்சாளர் பேச எழுந்தார். தலைவர் அவர்களே! மற்றோர்களே! அனைவருக்கும் வணக்கம்! இன்று என்னை முதியோர் பற்றி பேச அழைத்திருக்கிறார்கள். முதியோர் இந்த நாட்டின் முதுகெலும்பு. வயது சென்றவர்கள் அரச தொழில் செய்வது ஓய்வு பெற்ற ஆண், பெண் இருபாலரும் முதியோர்கள் என்று கூறலாம். இவர்களை இன்றைய காலத்தில் சிரேஷ்ட பிரஜைகள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் வளரும் இளைஞர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன்மாதிரியான வழிகாட்டிகளாகவார்கள். இவர்களுக்கு வளரும் சமூகம், மதிப்பு, கௌரவம், மரியாதை வழங்குவது கட்டாய பொறுப்பும் கடமையும் ஆகும். முதியோர்கள் என்று நினைத்த அவர்களை எள்ளி நகையாடி தள்ளிவிடக் கூடாது. நம் மத்தியிலே காய்த்து பழுத்து பயன் தந்தவர்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால், பலதும் பத்தும் தெரிந்த பயனுள்ளவர்கள் இப்படிப்பட்டவர்களை நாம் கண்ணியமாகக் கவனித்து வழி நடத்துதல் வேண்டும். 

முதுமை என்பது அனைத்து உயிர்களுக்கும் உண்டு. இது போல இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் கூட இயந்திரங்களை இடை நிறுத்தி ஓய்வு வழங்க வேண்டும். எனவே, உழைத்துக் களைத்தவர்கள், முதுமையானோரும் நீண்ட நாட்கள் உயிருடன் வாழக் கூடியதாக உள்ளது. எல்லா மனித இன்பமும் பகலில் வேலை செய்து இரவில் தூங்கும் வழக்கம் உடையோராக இருக்கிறார்கள். இரவில் உடலும், மூளையும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், நமது இதயத்துடிப்பு சுவாசம் நாம் தூங்கும் வேளையிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. என்பதை யாராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது. உடலுக்கும், உள்ளத்துக்கும், உற்சாகத்தை வழங்குவது முதுமைதான் என்பதை மறுக்க முடியாது.  

வயது சென்றவர்கள் (நோயாளர்களை விட) மற்றையவர்கள் நாம் முதியோர் ஆகிவிட்டோம். நமக்கு வேலை ஒன்றும் தேவையில்லை என்று பொன்னான நேரங்களை வீணடிக்காமல் இருப்பது முக்கியமான பல தீய செயல்களில் அதாவது மது குடித்தல், வெறியாட்டம், விபசாரம், திருட்டு ஆகிய செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. “சோம்பேறியின் உள்ளம் சைத்தானின் வேலைத்தளம்” என்று பழமொழியும் உண்டு எனவே, முக்கியமான வேலைகளில் ஈடுபட்டால், நமது சிந்தனை செய்யும் வேலையில் அகப்பட்டு அதில் கவனம் செலுத்தும் என்பது உறுதி. 

முதுமை நேரத்தில் ஒரு தொழிலில் ஈடுபட்டால், அந்தத் தொழிலை எப்படிக் கொண்டு நடத்தலாம் என்று அரச தொழில் செய்பவராக இருந்தாலும், மேலதிகாரியின் நன்மையை நாம் பெறுவதற்கு இராப்பகலாக பாடுபடல் வேண்டும்! என்று நமது எண்ணங்கள் அதில் நோட்டமிடும். எனவே, நமது சிந்தனை மகிழ்ச்சியாக இருக்காது. தொழிலில் ஓய்வு பெற்றால் எந்த எண்ணமும் இன்றி ஆண்டவனை வணங்கி அவர்கள் வேலையில் ஈடுபடுகின்றார்கள். 

முதியோர்களாகிய நாம் பெரிதும் வருத்தப்படாத தொழில்களில் ஈடுபட வேண்டும். இப்படி இருந்தால், ஏதும் நோய்கள் வந்து அணுகாது. இதுபோல நமது வீட்டு வளவில் நமக்குப் பயன்தரக் கூடிய வகையில் மரக்கறி வகைகளை வைத்து நீரூற்றியும், கோழி வளர்த்தல், கை வேலைகள் செய்வது முக்கியமானதாகும். அதுபோல பத்திரிகை, சஞ்சிகை, கதைகள் படித்தல், வானொலி கேட்டல் பயனுள்ள தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தல் ஆகியவை நமது முதுமைப்படுவதை புத்துணர்ச்சி பெற வழிவகுக்கிறது. 

பொதுவாக முதியவர்கள் சமூக சேவைகளில் கூடுதலாக நேரத்தைச் செலவு செய்யலாம். சுயநலம் பாராது இப்பணிகளை நாம் செய்தால் நிறைய நிம்மதி வருகிறது. இவர்கள் கல்வியைப் புகட்டலாம். குழந்தைகள் பயன்படக்கூடிய ஆலோசனைகளை வழங்கலாம். தமது பின்தங்கிய கிராமங்களுக்கு அபிவிருத்திப்பணிகளையும் உதவிகளையும் செய்யலாம். மற்றவர்களுக்கு உதவி புரியலாம். தமது முதுமைக்காலத்தில் கலைத்துறை, எழுத்துத் துறையில் உள்ளவர்கள் மற்றையவர்களுக்கு பயிற்சி வழங்கலாம். அவர்கள் பயன்பெறுவார்கள். முதுமை என்பது கடுமையான உழைப்பால் ஏற்படும் சோம்பலைப் போக்கவும் இலகுவான வேலை ஒன்றில் ஈடுபடுவதும் சாலச் சிறந்தது. நமது முதுமையின் காலத்தில் நமது குடும்பத்துக்கும் நமது நல் சமூகத்துக்கும் பயனுள்ள வழியில் செலவு செய்து நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் நாம் நடந்து சிறப்புடன் வாழ்வதே பெரும் பேறாகும். எனவே, நாம் இவர்கள் அனைவரையும் சாதிசமயம் பார்க்காது அவர்களை நமது பிள்ளைகள் போன்று பார்க்க வேண்டும். யாரையும் ஏழை பணக்காரன் என்று பார்க்க கூடாது. எனவே, எல்லோரும் சாந்தி சமாதானமாய் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்" கூட்டம் முடிந்தது அனைவரும் சென்று விட்டார்கள். 

வீட்டுக்குள் வந்தார் போடியார் “புள்ளேய்! புள்ள!! ஒருக்கா இஞ்ச வாயன்! எனக்கு இப்பதான் கண் திறந்துட்டு! கூட்டத்துல அந்த சுப்பிரமணிய அண்ணன், அழகாக ஆணித்தரமாக பல உண்மைகளைச் சொன்னார். இவ்வளவு நாளும் குருடனாகத்தான் வாழ்ந்திருக்கிறேன். இப்போ எல்லாம் தெளிவடைந்து விட்டது! அல்லாஹ் நான் செய்த தவறுகளை மன்னித்துவிடு! ஆண்டவனிடம் பாவமன்னிப்பு கேட்டு விட்டு, இனிமேல இந்த ஊரில் ஒரு பெரிய நல்ல மனிதராக வாழப்போறன்” சொல்லிக் கொண்டிருந்தார். தன் மனைவி ஆயிஷாவிடம் 

“அல்லாஹ் உங்கட கண் திறந்தது மட்டும் போதும்! என்று சொல்லி அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டாள் ஆயிஷா”.   

பாலமுனை 
ஆதம் லெவ்வை

Comments