பெருந்தோட்ட சுகாதார மேம்பாடு: திலகராஜின் ஆய்வறிக்கையால் ஆக்கம் பெறுமா? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட சுகாதார மேம்பாடு: திலகராஜின் ஆய்வறிக்கையால் ஆக்கம் பெறுமா?

நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மலையக மக்களுக்குத் தேவையானதொரு காரியத்தைச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். இதை அவரே கூறுகின்றார்.  “எனது முதலாவது பாராளுமன்ற காலப்பகுதியில் அப்பணியை நிறைவேற்றக்கூடிய அனைத்து தடைகளையும் ஆராய்ந்து இந்த உயரிய பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதில் மிகுந்த மிகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக எனது பெருமளவு காலத்தை அர்ப்பணிப்புடன் செலவிட்டுள்ளேன்”.  

அப்படி எந்தப் பணியை அவர் ஏற்றுக்கொண்டார்? அதை எப்படி செவ்வனே செய்து முடித்துள்ளார்? எல்லாம் பெருந்தோட்ட சுகாதார முறைமையை அரச சுகாதார முறைமைக்குள் உள்வாங்குவதில் காணப்படும் தடைகளை எவ்வாறு களையலாம் என்னும் ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் முக்கிய காரியம்தான் அது.  

இது பெருந்தோட்ட மருத்துவ அலகுகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்கும் வகையிலான ஆலோசனைகளை உள்ளடக்கிய அறிக்கை. சுகாதாரம் மற்றும் மனித சேமநலன், சமூக வலுட்டல் பற்றிய மேற்பார்வை குழுவின் தலைவர் என்ற ரீதியில் இதற்கான வாய்ப்பினை பாராளுமன்றம் அவருக்கு வழங்கியிருந்தது.

இதன்படி இத்துறையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவருவதன் மூலம் சாத்தியமாகும் ஒரு சங்கதியை சாமர்த்தியமாக சாதித்து உள்ளார் திலகராஜ்.  

சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் இரண்டுமே ஆரோக்கியமான ஒரு சமூகத்துக்கு அவசியமானவை. கட்டாயம் பேணப்பட வேண்டியவை. ஆனால் இவற்றுள் எதனையும் முழுமையாகப் பெறமுடியாத சுமார் 10இலட்சம் பேர் வரை கொண்டுள்ள ஓர் இனம் இன்னும் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றது. 200வருட கால வரலாறு படைத்துள்ள பக்குவம் கொண்டுள்ளது. இத்தகைய பின்னடைவுக்கு காரணம் பெருந்தோட்டப் பிரதேசங்கள் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாமையே.  

பெருந்தோட்டங்கள் அதன் ஆரம்ப காலந்தொட்டே அதிகமாக தனியார் கம்பனிகளின் கைகளுக்குள்ளேயே தங்கியிருந்த அநுபவம் கொண்டவை. தவிர அதன் கட்டமைப்பு இறுக்கமான அலகுகளை கொண்டதாக உருவாக்கம் பெற்றிருந்தது. இக் கட்டமைப்பானது இங்கு வாழும் மக்களின் தேவைகளை வரையறை செய்து தாமே அதற்கான பொறுப்பை வகிக்கும் பணிகளை உள்வாங்கியிருந்தது. இது ஒரு வகையில் அடிமை நிலைக்கு ஒப்பான போக்கு. எனினும் எந்தவொரு விடயத்திலும் தமக்கான பொறுப்பினை சரியாக நிறைவேற்றவோ அதற்கான பொறுப்புக் கூறலை இதய சுத்தியோடு ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லாத இத்தனியார் கம்பனிகள் தான் தோன்றித்தனமாகவே நடந்து கொண்டுள்ளன.  

இலவச மருத்துவ சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. ஆனால் அது நகர்ப்புறங்களோடு நின்று விடுகிறது. தோட்டப் பகுதிகளைத் தொட்டுப் பார்ப்பதில்லை. இங்கு போஷாக்கின்மை பாரிய பிரச்சினை. தென் கிழக்காசியாவிலேயே சுகாதார மேம்பாட்டு நிலையில் இலங்கைக்குக் கெளரவமான இடம். ஆனால் தீவுக்குள் இன்னுமொரு தீவாக தீர்வு காணப்படாத பல தீராத தொல்லைகளோடு திக்குமுக்காடும் ஒரு கூட்டம் இங்கு வாழ்கிறது. இங்கு பிற சமூகங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் சுகாதார செளகரியங்களை சொந்தம் கொண்டாட இடமில்லை. இதனை நிறைவேற்றும் பொறுப்பை இன்னும் தனியார் கம்பனிகளே தாங்கிக் கொண்டிருக்கின்றன.  

பெருந்தோட்டத்துறையைச் சார்ந்து 500வைத்திய நிலையங்கள் இருக்கின்றன. இவற்றுள் 22வைத்திய நிலையங்கள் வரை 2006காலப்பகுதியில் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டன. ஆயினும் அவற்றிலும் கூட முழுமையான சுகாதார கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமலே உள்ளது. இன்று மலையகத்தில் சோகை, மூளைக்காய்ச்சல், கர்ப்பிணித் தாய் மரணம், சிசு இறப்பு வீதம் அதிகரித்துச் செல்லும் அச்சறுத்தல் காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோஷனம் பெரும் பாதிப்பினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. 2007ஆம் ஆண்டு பெறப்பட்ட ஆய்வறிக்கையானது மலையகப் பகுதிகளில் 5வயதுக்குட்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளில் 40வீதமானவை வளர்ச்சியின்மை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. 25.3வீத குழந்தைகள் எடை குறைவுடனும் 10.5. வீத குழந்தைகள் உயரத்துக்கேற்ப நிறையின்றியும் காணப்பட்டன. அத்துடன் சிறுவர்களில் 35.9சதவீதமானோர் வளர்ச்சிக் குன்றியவர்களாக காணப்பட்டார்கள். இதனால் குறைந்த ஆயுள் கொண்ட ஓர் இளைய தலைமுறை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது.  

வறுமையும் சுகாதார நடை முறைகளுக்கான வசதிகள் இன்மையும் இங்கு பல்வேறு சங்கடங்களை தோற்றுவிக்கிறது. புகைத்தல் மதுபாவனை வெற்றிலைப் பழக்கம் இங்கு தாராளம். சத்தான ஆகாரம் பற்றிய விழிப்புணர்வு இலலை. தொழில்சார் நோய்கள் வேறு தொல்லைத் தருகின்றன. தடிமன், இருமல், தோற்பட்டை வலி, முதுகெலும்பு பாதிப்பு, இரத்த அழுத்தம், இரும்புச்சத்து குறைவு, இளைப்பு என்ற ஏகப்பட்ட ஊடுருவல்கள். இதனால் தாய்ப்பால் ஊட்டலில் தடங்கல்கள். அத்துடன் பிறக்கும் சிசுக்களின் மாதாந்த சராசரி வளச்சிவீத தரவுகளில் பின்னடைவு. சுகாதாரமான சுூழல் இன்மை. கழிவறை வசதிகள் கவனிக்கப்படாமை. வீட்டு முற்ற வடிகான்கள் சேதமடைந்து காணப்படுவதால் நீர்த்தேக்கம், நீர்க்கசிவினால் நுளம்புகள் பெருக்கம். அண்மைக்காலமாக தேயிலை மலைகள் காடுகளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சுற்றாடல் மாசு வேறு. சுத்தமான வளியோ குடிநீரோ கிடைப்பதில்லை. நெருக்கடியான வதிவிடம் சுகாதாரத்துக்குப் பங்கம் விளைகின்றது.  

இத்துடன் மனிதர்களோடு ஆடு, மாடு, நாய், கோழி, புூனை, பன்றி போன்ற விலங்கினங்கள் அண்டி வாழும் சூழ்நிலையில் சுகாதார நலன்கள் கேள்விக் குறியாகின்றன. சிறியவர், பெரியவா், ஆண்கள், பெண்கள் அனைவருமே சுகாதார பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் வாய்ப்புகள் இல்லை. இங்கு காணப்படும் மருந்தகங்களில் அநேகமானவை பெயரளவிலேயே இயங்குகின்றன. அடிப்படை வசதிகள் இல்லை. போதிய வைத்தியர்கள் இல்லை. அம்பியுூலன்ஸ் வசதிகள் கிடையாது. நோயாளியைக் காவிச்செல்ல பல தோட்டங்களில் இன்னும் லொறிகளே பயன்படுத்தப்படுகின்றன. பாதைகள் வேறு கரடு முரடானவை. இதனால் நோயாளிகள் படும்பாடு சொல்லும்தரமன்று.  

இம்மக்களின் சுகாதார சேவை தேசிய சுகாதார சேவையோடு இணைக்கப்படாமையினால் மிகமோசமான வாழ்வியல் சூழலே இங்கு நிலவுகின்றது. இவர்களின் சுகாதார நலன்களைக் கவனிக்க தகுதி வாய்ந்த அதிகாரிகள் இல்லை. தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் எனும் பதவியில் இருக்கும் ஆட்கள் சுகாதாரம் சம்பந்தப்பட்ட அறிவாளிகளோ அனுபவசாலிகளோ அல்ல. இவர்களால் அவசியமான சுகாதார வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வை உண்டாக்க முடியாது. குறிப்பாக பாதுகாப்பற்ற குடிநீர், கழிவு நீர்த்தேக்கம், இராசாயன கொல்லி மருந்து பாவனை, முறையாக கையாளப்படாத குப்பைக் கூலங்கள், ஒழுகிவழியும் கூரைகள் இங்கு சுகாதார நலன்களுக்கு சவால் விடுக்கும் சங்கதிகள்.  

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் இருக்கிறது. பெருந்தோட்டக் கட்டமைப்பு முறைமையானது இங்குவாழும் சமூகத்தை இன்னும் பிறர் தயவில் தங்கிவாழும் மனோபாவத்தை கொண்டதாக வளர்த்து விட்டுள்ளது. எடுத்ததற்கெல்லாம் எவராவது வந்து செய்யட்டும் என்று வாளாதிருப்பதால் எதிலுமே பின்னடைவு. இக்கட்டமைப்பு முறைமையிலிலிருந்து பெருந்தோட்ட மக்கள் விடுவிக்கப்பட்டு வேண்டும். அப்பொழுது தான் புதிய மனோபாவம் பிறக்கும்.  

எனவேதான் பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவை முழுமையாகவே தேசிய ரீதியில் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலமே புதிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்ற குரல் எழுப்பப்படுகின்றது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இதனைச் செய்துவிட முடியாது. இதில் பல தடைகள் உள. அமைச்சு ரீதியிலான அரவணைப்புகள அவசியம். முக்கியமாக சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, காணி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, மாகாணசபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு என்று அனைத்து அமைச்சு அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு இணக்கப்பாட்டுக்கு வருவதென்பது இலகுவான காரியமல்ல. ஆனால் அதனை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் திலகராஜ்.  

அவரின் அறிக்கையின் அடிப்படையில் தோட்ட சுகாதார முறைமையை அரச தேசிய முறைமைக்குள் கொண்டு வருவதில் காணப்பட்ட சகல தடைகளும் நீக்கப்படுவதாக அவரே பெருமிதம் கொள்கிறாா். இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் முயற்சியெடுத்து முடிவைத் தொட்டிருப்பது வரவேற்புக்குரியதே.  

திலகராஜின் கூற்றுப்படி இது பூரணமான அறிக்கை. இவ்வறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இனி ஆவன செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் இந்த அறிக்கையை அங்கீகரித்து அடுத்தக்கட்ட நகர்வுக்குச் செல்லுமிடத்து இதுவரை தனியார் வசமிருந்த பெருந்தோட்ட சுகாதார முறைமை விடுபட்டும் போகும். அது தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்பட்டு மலையகத்தில் சுகாதார மேம்பாட்டுக்கான வழி திறக்கப்படும். அப்படியே ஆக வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு!

பன். பாலா

Comments