இனவாதமே எங்களது பொது எதிரி | தினகரன் வாரமஞ்சரி

இனவாதமே எங்களது பொது எதிரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவானம் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி... 

கேள்வி : அறிவிக்கப்படிருக்கின்ற தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில் : - ஐந்து வருடம் முடிய நடக்க வேண்டிய தேர்தல் நான்கரை வருடத்திலேயே நடக்கிறது. அது தெற்கு இனவாதிகளின் தேவைக்காக 6 மாதம் முன்னதாக நடக்கிறது. இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் பலவீனமாக உள்ள நிலையில், அவர்கள் இத் தேர்தலில் வெற்றி பெற்று தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடாத்துகின்றனர்.  

இத் தேர்தலை தமிழர் தரப்பும் ஒரு மாற்றத்திற்கான அடிப்படையாகப் பார்க்கலாம். ஏனெனில் கடந்த அரசில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் நடைபெற்று முற்றுப் பெறாமல் இருக்கிறது. அந்த அரசியலமைப்பில் முன்னேற்றங்களும் உண்டு. அதே நேரம் பின்னடைவுகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே அந்த அரசியலமைப்பை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக இத் தேர்தலை நாங்கள் பயன்படுத்தலாம்.  

ஏற்கனவே எங்களது பின்னடைவுகளுக்கான வாய்ப்பின் தளமாக இத் தேர்தலைப் பார்க்கலாம். முன்னோக்கிச் செல்வதற்கான இந்த வாய்ப்பை உரிய முறையில் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எமது மக்களும் தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.  

கேள்வி : தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தமிழ்க் கட்சிக்குள்ளேயே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில் : - வேட்பாளர் தெரிவில் உண்மையில் பெரிய அளவில் பிரச்சினை வந்தது யாழ்ப்பாணத்தில் தான். ஆனால் வன்னியில் பெரியளவில் பிரச்சினைகள் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையிலோ அல்லது ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையிலோ பிரச்சினைகள் இருக்கவில்லை.  

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஐந்து பேர் இருக்கின்றார்கள். அதே நேரம் அதற்கு மேலதிகமாக வேட்பாளர்களும் இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் எங்களுக்கு ஏழு இடங்கள் யாழில் இருந்தன. அதில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள். ஐந்தாவது பெண் வேட்பாளர் என்ற ரீதியில் சசிகலா ரவிராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

ஆனால் இன்னொரு பெண் வேட்பாளர் தெரிவான அம்பிகா சற்குணநாதன் தெரிவு சம்பந்தமாக ஒரு பிரச்சினை இருந்தது. அவர் உள்ளுரில் வசிக்காதவர் பிரச்சினை தெரியாது கட்சியில் உறுப்புரிமை இல்லாதவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது. அதே நேரத்தில் மகளிர் அணியினரும் ஆட்சேபணை தெரிவித்தாலும் கூட அது பெரிய பிரச்சினையில்லை. அது மட்டும் தான் அதிருப்தியான சற்று முரண்பாடான நிலையாக இருந்தது. மற்றும் படி கட்சிக்குள்ளே அல்லது கூட்டமைப்பிற்குள்ளோ வேறு பிரச்சனைகள் ஒன்றும் இல்லை.  

கேள்வி : - வேட்பாளர் பிரச்சினைகளுக்கு தற்போது சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதா? வேட்பாளர் அறிவிப்புக்கள் எப்போது வெளியாகும்?  

பதில் : - வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்பிற்குள் தற்போது பிரச்சினை இல்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த பிரச்சினையும் சீர்செய்யப்பட்டுள்ளதாகவே நம்புகின்றேன். ஆனால் சலசலப்பாக சில கருத்துக்கள் வந்தவண்ணம்தான் தான் இருக்கிறது. . ஆகையால் வேட்பாளர் தெரிவு ஓரளவிற்கு திருப்தி கரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.  

அந்த வேட்பாளர் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். அவ்வாறான ஒரு நிலையில் தான் வேட்பாளர்கள் தொடர்பில் முழுமையாக வெளிப்படுத்தப்படுமென்று நினைக்கிறேன். வேட்பாளர் அறிமுகத்தில் எல்லாம் சொல்லப்படுவதுடன் எல்லாருக்கும் தெரிந்தவர்கள் தான் போட்டியிடுகின்றனர் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.  

கேள்வி : வடக்கு தேர்தல் களம் என்பது பலமுனைப் போட்டிகள் நிறைந்த சவாலானது என சொல்லப்படுகிற நிலைமையில் உங்களது கருத்து என்ன?  

பதில் : - வடக்கில் தேர்தலில் நிற்கின்ற எல்லாரும் முக்கியஸ்தர்கள் தான். எங்களுடன் நிற்கிற நான்கு, ஐந்து பேர் முன்னாள் பாராமன்ற உறுப்பினர்கள். அதே போல் முன்னாள் முதலமைச்சர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறு அணியில் நிற்கிறார்கள். ஆகவே தேர்தல் என்பது கடுமையான போட்டி தான்.  

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 7 பேர் தான் போகலாம். தேசியத்தோடு நிற்கிறதென்றால் 6 பேர் தான் போகலாம். யார் யார் போறது என்றது தான் பிரச்சினை. எல்லாரும் எம்பியாக வர முடியாது. ஆகையினால் கடுமையான போட்டியாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.  

ஆனால் தேர்தல் போட்டி என்பது வழமை போல இருந்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாக பார்த்தால் இவ்வாறான சலசலப்புக்கள் கருத்துப் பரிமாற்றங்கள், சேறு பூசல்கள் எல்லாம் நடக்கும். இறுதியில் மக்கள் அவற்றையெல்லாம் புறமொதுக்கி எங்களையே ஆதரித்து வந்திருக்கின்றனர்.  

நேர்மையாகக் கதைத்து நடந்த பின்னடைவுகளை பகிரங்கமாகச் சொல்லி ஏற்றுக் கொள்கிற கட்சியாக நாங்கள் இருக்கிற பொழுது, குறிப்பாக தமிழரசுக் கட்சி இருக்கின்ற காரணத்தினால் அதனையெல்லாம் மக்கள் சீர்தூக்கிப் பார்த்து தமிழரசுக் கட்சியைச் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே மீண்டும் வாக்களிப்பார்கள் என்று நான் பலமாக நம்புகின்றேன்.  

கேள்வி : - கூட்டமைப்பின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இத் தேர்தலில் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?  

பதில் : - விமர்சனங்களோ குற்றச்சாட்டுக்களோ முன்வைக்கப்படுகின்ற போது அதில் உண்மையிருக்குமாயின் அதனை வரவேற்றுக் கொண்டு சீர் செய்ய வேண்டியது அவசியமானது. அதே நேரம் வேண்டுமென்று திட்டமிட்டு சேறுபூசும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தான் எங்கள் மீது அதிகளவில் முன்வைக்கப்படுகின்றன.  

அதே நேரம் எங்கடைய தவறுகள் அல்லது நாங்கள் செய்யத் தவறிய விடயங்களை சுட்டிக்காட்டுவது ஆரோக்கியமானது. அதை நாங்கள் கண்டன கண்ணோடு பார்க்கத் தேவையில்லை. அதை விமர்சனக் கண்ணோடு பார்க்க வேண்டும். ஆகையினால் அதில் இருந்து எதனைத் திருத்தலாம் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு முன்னேறலாம் என்றதைப் பரிசீலிக்கிற ஒரு வாய்ப்பாகத் தான் பார்க்கிறோம். நாங்கள் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பிழையாகவே இருக்கும்.    உதாரணத்திற்கு எங்களை ரணில் ஏமாற்றி விட்டார் என்று வெளிப்படையாக சொல்கிறேன். ஏன் என்றால் உண்மைகளை ஏற்றுக் கொண்டு அதனை வெளிப்படுத்துகின்ற அந்த மாதிரியான தலைமைத்துவதற்திற்குள்ளாகவே நான் வளர்ந்து வந்தேன். ஆனால் அது இப்பத் தான் சிவஞானத்திற்கும் சுமந்திரனுக்கும் தெரிய வந்தது என்று கேட்கலாம். உண்மையில் அது 2018 ஒக்ரோபரில் தான் தெரிய வந்தது.  

அதனை நாங்கள் பகிரங்கமாக சொல்கிறோம். நாங்கள் ஏமாந்துபோனோம் அல்லது ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற நிலைப்பாட்டை சொல்லத் தான் வேண்டும். அதே நேரம் அவர்களும் எங்களுடன் சேர்ந்து பயணித்ததை மறுக்கவில்லை. ஆக விமரச்னங்களை ஏற்றுக் கொள்கிறோம். அது பரிசிலிக்கப்பட வேண்டும். ஆகவே விமர்சனங்களை  ஏற்றுக் கொண்டு பரிசீலித்து அதனை சீர் செய்து கொண்டு முன்னொக்கி செல்லுவோம்.  

கேள்வி :- விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் இந்த தேர்தலில் கடந்த முறை போன்று மக்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று கருதுகின்றீர்களா?

பதில் : - இந்தமுறை எங்களுக்கு சில சிக்கலகள் இருக்கிறதென்பது உண்மை. கடந்த தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் இடையில் பார்த்தால் பல விடயங்கள் வேறுபட்டதாக இருக்கிறது. குறிப்பாக கடந்த தேர்தல்களில் எங்களுடன் இருந்த சிலர் இந்த முறை எங்களுடன் இல்லாமல் வேறு அணியில் நிற்கிற நிலை இருக்கிறது.

கடந்த முறை விக்கினேஸ்வரன் கூட வெளிப்படையாக எங்களுக்கு எதிராக நிற்கவில்லை. அவர் மறைமுகமாக வீட்டுக்களிலிருந்த வெளியில் வந்து வாக்களியுங்கள் என்று இரட்டை அர்த்தக் கருத்துக்களை சொன்னாரே தவிர வெளிப்படையாக எங்களுக்கு எதிராக கருத்துச் சொல்வில்லை. அதே நேரம் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றவர்கள் எங்களுடன் தான் நின்றார்கள்.  

அதே நேரத்தில் மற்றப் பக்கத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் நின்றது. ஆனால் இன்று அப்படியில்லை. அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு அணியாகவும் விக்கினேஸ்வரன் தலைமையில் எங்களுடன் நின்றவர்கள்கள் எல்லாம் இன்னுமொரு அணியாகவும் நிற்கின்ற நிலைமை இருக்கிறது. அவர்கள் எங்கடைய வாக்குகளின் எண்ணிக்கையில் இருந்து தான் ஒரு கணிசமான ஒரு சொற்ப வாக்குகளைப் பிரிப்பார்கள் என்பது உண்மை.  

ஆனால் அது பெரியளவில் வரும் போது ஒற்றமைக்கும் பலத்திற்கும் பாதிப்பாகவே அமையும். ஆனால் உதிரிகளை தவிர்த்து ஒருமித்து கூட்டமைப்பிற்கே மக்கள் வாக்களித்து பலப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

 எஸ்.நிதர்ஷன்- பருத்தித்துறை விசேட நிருபர் 

Comments