ஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகப்பட்டுள்ள நிலையில் கட்சி அரசியல் ரீதியில் பிளவுபட்டால் சமூகம் பாரதூரமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாமென எச்சரித்திருக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன் அலி ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இணக்க அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.  

தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு மனம் திறந்து பேசினார்.  

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், சமூகத் தலைவர்கள் அனைவரும் கட்சிபேதமின்றி ஒத்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் தேவைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு சமூகத்தின் பேரால் நாம் ஒன்று படவேண்டும். நாங்கள் இருக்கின்ற கட்சி அரசியல் நிலைப்பாட்டை இணைந்த இணக்க அரசியலோடு பயணிக்க முடிந்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.  

கடந்த காலத்தவறுகளை தொடர்ந்தும் செய்யமுற்பட்டால் சமூகம் எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுக்குள் தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது போகும் எனவும் ஹஸன் அலி எச்சரிக்கின்றார்.  

அவர் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணல் விபரம் வருமாறு.  

கேள்வி – தேசிய அரசியல் போக்கு முஸ்லிம் அரசியலுக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில் – தேசியம் என்ற வார்த்தையானது, நமது நாட்டில் ஒழுங்கு படுத்தப்படாத ஒரு புதுவகையான சித்தாந்தமாக சிதைவடைந்துள்ளது என்பதே எனது அனுமானமாகும்.  

‘தேசியம்’ என்ற பகுத்தறிவு அர்த்தத்தை நம் நாட்டு அரசியலை ஆதாரமாக கொண்டு எவராலும் வகுத்துக்கொள்ள முடியாது.  

உண்மையில் தேசியம் என்பது எந்தவிதமான கூறுகளும் அற்று ஒன்றிணைந்து பயணிப்பதாகவே பொருள்படும். நாட்டின் முழுமையையும் ஒற்றுமையையும் நோக்கம் உடைய போக்கு ஒருவகையானது. நாட்டிற்குள் வாழும் மக்கள் தங்கள் தனித்துவத்தை இனரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிறுவிக்கொண்டு புரிந்துணர்வோடு இணைந்து வாழ்வது இன்னொரு வகையாகும்.  

இந்த இரண்டு வகைகளும் இன்றைய அரசியல் நிலையில் பிரிவினையாக பரிமாணம் அடைந்துள்ளன.  

இந்த தாக்கம் முஸ்லிம் அரசியலுக்குள்ளும் புகுந்துள்ளமை வேதனை தருகின்றது. நமது நாட்டில் வாழும் இரு பெரும் சமூகங்களும் தத்தமது தேசியங்களை நிலையாக நிறுவிக்கொள்வதற்கான இலக்கை நோக்கிப் பயணிகின்றன. அதனையே தமது பிரதான இலக்காகக் கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமை  காணச் செயல்படுகின்றார்கள்.  

ஆனால், முஸ்லிம் சமூகமானது தனது தேசியத்தை இன்னும் புரிந்துகொள்ளாது குழந்தைப் பருவத்திலேயே வளர்ச்சியடையாமல் “கிலுகிலுப்பு” விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.  

முஸ்லிம் தேசியத்தை நிறுவும் நோக்கத்திற்காக பாடுபட்ட முஸ்லிம் சமூகத்தின் மூத்த அரசியல் வாதிகள், பெரும் தலைவர்கள், அனைவரும் அபிவிருத்தி அரசியலுக்கும், அலங்கார, கவர்ச்சி, அடிபிடி, போட்டி அரசியல்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். அண்மையில் மேல்மாகாணத்திலுள்ள ஒருமுஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி மன்றம் தனது சபையில் முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானித்ததாக ஒரு செய்தி வாசித்தேன்.  

எமது முஸ்லிம்களின் தேசிய உணர்வு இவ்வாறுதான் இன்று சீர்குலைந்துள்ளது. தற்போதைய தேசிய அரசியல் போக்கு முஸ்லிம்களுக்குள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த ஒரு சம்பவத்திலேயே புரிந்துகொள்ள முடியும்.  

தேசிய கீதம் என்ற விடயம் இன்று சர்ச்சைக்குரிய ஒன்றாக நம் நாட்டில் மாறி விட்டிருப்பது இன்னுமொரு உதாரணமாகும். தேசிய கீதத்தின் வரிகளின் பொருளை தனது வாய் மொழியில் பாடி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் உரிமை கூட பிரிவினையாக பார்க்கப்படும் அளவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய அரசியலின் போக்கு முஸ்லிம் அரசியலுக்குபுரியாத தொன்றாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.  

கேள்வி – இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம்களுடைய பன்முக அரசியல் சாதகமான நிலையை தோற்றுவிக்கும் என நினைக்கிறீர்களா?  

பதில் – பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 'முஸ்லிம் பன்முகத்தன்மை அரசியல்' என்பது சமூகம் சார்ந்ததாக மட்டுமே சமூக ரீதியான தாக்கத்தைப் பற்றியும் அதன் சாதக பாதகங்களைப் பற்றியும் அலச முடியும். தனிப்பட்ட முஸ்லிம் நபர்களின் ஆசாபாசங்கள் சார்ந்ததாக அந்த பன் முகத்தன்மை இருந்தால் அதனை நாம் என்னவென்று வகைப்படுத்துவது என்பது தனியாரை விமர்சிப்பதாக பொருள்படலாம்.  

சென்ற அரசாங்கத்தில் அங்கம் வகித்த 21 முஸ்லிம் உறுப்பினர்களும், பன்முக அரசியலின் ஒரு பக்கத்தை பரீட்சித்துப்பார்க்கும் நோக்காக பதவிகளைத் துறந்தபோது அதன் மறுபக்கம் பெரும்பான்மை சமூகத்தின் ஒற்றுமைக்கு அத்திவாரமாக அமைந்ததனை நாம் வெளிப்படையாக கண்டோம். ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்கோடு அரங்கேற்றப்பட்ட அந்த நாடகம் பெரும் தேசியத்தில் சங்கமித்த ஒரு சிலரின் தவிர்க்க முடியாத ‘யதார்த்தமான் நகர்வுகளால் புஸ்வானமாகப் போய் விட்டதனையும் நாம் கண்டோம்.  

சமூகம் சார்ந்த அரசியல் செய்வதாக  வெளியில் காட்டிக்கொண்டு தனிநபர் நிகழ்ச்சிகளை சமாந்தரமாக மறைமுகமாக செய்ய முற்பட்டால் முடிவுகள் இவ்வாறுதான் அமையும். எனவே, முஸ்லிம்களின் ‘பன்முக அரசியல்’ திசைமாறி சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும்தான் உண்மை நிலவரமாகும்.  

கேள்வி – அண்மைய காலத்தில் முஸ்லிம் அரசியலில் ஒன்றுபட்ட செயற்பாடு தேசிய அரசியலையே ஆட்டம் காணச்செய்தது. ஆனால் இந்த நிலை தற்போது மாற்றம் கண்டுள்ளதா?  

பதில் – மாற்றம் ஒன்றும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அதிகமாக இறங்குவார்கள். ஊர் வாதம், குடும்பவாதம் போன்ற காரணிகள் வாக்காளர்களிடையே ஆதிக்கம் செலுத்தக் கூடும். கொள்கை கோட்பாடுகள் அடிமட்டத்துக்குச் சென்றுவிடும். அவை பாவிக்கப்பட்டதால் அடிமட்டத்தில் பளிச்சென்று பசுமையாக படுத்துறங்கும் மேடைப்பேச்சுகளில் மட்டும் ஞாபகப்படுத்தப்படும்.

எனவே  இன்றைய முஸ்லிம் அரசியலை ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. அதனால் தேசிய அரசியல் முன்பு ஆட்டங்காணச் செய்தது போல் இம்முறை முடியாது. சென்றமுறை நாம் அவர்களை ஆட்டங்காணச் செய்ததால் ஆடிப்போனது நாம் தான். ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய 95% வீத ஒற்றுமையால் நமது சமூகம் வெற்றிபெற்றும், தேசியமட்டத்தில் படுதோல்வியைத் தழுவிக்கொண்டதிலிருந்து இன்னும் ஒரு படிப்பினையை நாம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.  

வட, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் ஓரளவு பிரிந்து காய்களை நகர்த்துவதாக தென்படுகின்றது.  

வட,கிழக்கிலுள்ளவர்கள் 15 வருடங்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து பெற்றுத்தராத உரிமைகளை எதிர்க்கட்சியிலிருந்து போராடிப் பெற்றுத்தர போவதாக ஏதேதோ சொல்லிக் கொண்டு களமிறங்குகின்றார்கள்.  

இந்த நிலையில் மக்கள் சரியான முடிவை முன்வைப்பார்கள் என நம்புகின்றோம். இலவசங்களும், பணப்பட்டுவாடாக்களும் அவர்களின் கண்களை மறைக்காதிருக்க வேண்டும் என இந்த வேளையில் பிரார்த்திக்கின்றேன்.  

கேள்வி – ஐக்கியத்துக்கு பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் அந்தப்பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளதாக நம்புகிறீர்களா?  

பதில் – ஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல் வாதிகள் யாரும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.  

ஒற்றுமை எனும் கயிற்றைப்பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள்” என்ற திருமறை வாசகத்தை முன்வைத்து பெருநம்தலைவர் அஷ்ரப் அன்று தொடக்கிவைத்த அரசியல் பயணம் இன்று வெவ்வேறு கயிறுகளில் தொங்கிக்கொண்டு தேர்தல் காலங்களில் கயிறு விட்டுக் கயிறுபாயும் கலாசாரமாக உருமாறிவிட்டது.  

ஒற்றுமை என்றபதம் முஸ்லிம் அரசியலில் கசந்துபோன காலம் கடந்த ஒன்றாகிவிட்டது. ஏனைய சமூகங்கள் தங்கள் சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைக் காப்பற்றிக் கொள்வதற்காக வேற்றுமையிலும் ஒற்றுமையாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது நமது கட்சிகள் தங்கள் கட்சிகளை மட்டும் பலப்படுத்திக் கொள்ளத் துடிக்கிறார்கள். கொள்கை, கோட்பாடு, சமூக உணர்வு என்பன கிஞ்சித்தும் இல்லை. வெறும் பிரதேசவாதத்தாலும், இலவசங்கள், கொடுப்பதாலும், பணத்துக்கு வாக்குகளை விலை பேசுவதாகவும் இந்த காரியத்தை அவர்கள் சாதித்துக் கொள்கிறார்கள்.  

அதனால் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் மிகவும் குறைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. வடகிழக்கு நிலமை படுமோசமாக உள்ளது. ஒற்றுமையாக சாதிக்க முடிந்ததை உதறித்தள்ளுகின்றனர். சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் உள்ளூர் கிராமிய தலைவர்கள், மார்க்கத்தலைவர்கள் என்போரும் கூட விழித்துக் கொள்வதாகத் தெரியவில்லை.  

சுமார் 9 ஆசனங்களை ஒற்றுமையாக கிழக்கில் பெறக்கூடிய வியூகங்களை அமைக்கக் கூடிய சாத்தியங்கள் இருந்தாலும் அவற்றைப்பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கட்சிகளைப்பலப்படுத்தி அதனால் வரும் அதிகாரத்தைக் கொண்டு தங்களை சுற்றியுள்ளவர்களையும் குடும்பத்தினரையும் வளப்படுத்திக் கொள்வதிலேயே சிலர் நாட்டம் கொள்கிறார்கள்.  

இதனால் வடகிழக்கின் எதிர்காலம் முஸ்லிம் அரசியல் கேள்விக்குறியாக உள்ளது  

வாக்காளர்களும் தங்களது வாக்குகளுக்கு விலைகளை நிர்ணயித்துக் கொண்டு காத்திருக்கின்றார்கள். மொத்தத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தப் பெயரையும் தக்கவைத்துக் கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக ஆவதைத்தவிர வேறெதுவும் சாத்தியமில்லை.  

கேள்வி – இவ்வாறான நிலைக்கு காரணம் என்ன? 

பதில் – இந்த நிலமைக்குக் காரணம் மேய்ப்பாளர்கள் தான். அவர்களைச் சுற்றி கேடயமாகப் பாதுகாப்புக் கொடுத்துவரும் அரசியல் வியாபாரிகள்தான்.  

நிறைவேற்று அதிகாரம் நாட்டுக்கு ஆபத்தானது என்றும் அதனை நீக்குவதற்குப் போராடும் ஜனநாயக ஆராய்ச்சியாளர்கள் கூட அரசியல் கட்சிகளைத் திரும்பிப்பார்ப்பதில்லை.  

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்படுவதேயில்லை. நாட்டின் ஜனாதிபதியின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது போல் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் தலைவர், செயலாளர் பதவிகள் காலவரையுடன் மட்டுப்படுத்தப்படுவதுடன் ஒன்றுபட்டு கட்சியிலுள்ள தீர்மானம் எடுக்கும் கட்டமைப்பும் தேர்தல் ஆணயகத்தால் நெறிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பேணப்பட்டு தனி ஆதிக்கங்கள் இல்லாமல் உட்கட்சி ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைவிட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குள்ள அதிகாரம் கோள்விக்குட்படுத்தமுடியாததாக உள்ளது. அதனால் தான் கட்சிக்களுக்குள் கோஷ்டிகள் உருவாகி ‘அமீபா’ பெருகுவதைப் போல கட்சிகள் பிளவுப்படுகின்றன.  

சுயதீன தேர்தல் ஆணைக்குழு கட்சிகளின் யாப்புக்களை பொதுவான ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும்.  

தனியார் வர்த்தக நிலையங்கள் போல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இயங்குவதால் தான் கட்சிக்குள் கருக்கொள்ளும். கடும்போக்கு வாதம் நாட்டின் அரசிலையும் பாதிக்கின்றது.  

இந்த நிலமை மாற்றப்படும் வரை கட்சிகள்  கோஷ்டியாக உடைந்து போவதை யாராலும் தவிர்க்கமுடியாது.  

இந்த மாற்றங்கள் பற்றி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எனது அபிப்பிராயங்களை தேர்தல்கள் திணைக்களத்துக்கு நான் தெரிவித்துமிருந்தேன்.  

எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனி மனித ஆதிக்கமின்றி தலைமைத்துவ சபை ஒன்றினால் வழிநடத்தப்படுகின்றது என்பதையும் சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன்.    

நேர்காணல்: எம்.ஏ.எம். நிலாம்

Comments