கூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா? | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா?

ஒருபக்கம் கொரோனா வைரஸ் பற்றிய பரபரப்பான செய்திகள். மறுபக்கத்தில் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய புதினங்கள். இரண்டுக்கும் நடுவே மக்களாகிய நாம். “ஒரு புறம் வேடன். மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்....' என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஏறக்குறைய இரண்டுமே ஆபத்தானவை என்ற நிலையில்தான் உள்ளன.  

கொரோனோவாவைத்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அதற்கான முனைப்பில் உலகம் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கொரோனோவையும் விட மோசமான நம்முடைய அரசியலை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது? ஒழுங்குக்குள் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. அந்தளவுக்கு ஆரம்பமே அமர்க்களம் என்கிற மாதிரி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கண்டு பிடிப்பது, ஆசனங்களைப் பங்கீடு செய்வது போன்ற விவகாரங்கள் கொரோனா வைரஸாகப் பரவி வருகின்றது.  

தேர்தல் என்றாலே கண்ணியம், நாகரீகம் அறம், நியாயம் என அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு, வெற்றி என்ற லாபத்தை மட்டுமே குறியாகக் கொள்ளும் மோசமானதொரு பண்பாடு நம்மிடம் வளர்ந்துள்ளது. இதில் சிறிய கட்சிகள், புதிய கட்சிகளை விடப் பெரிய கட்சிகள், மூத்த கட்சிகளே மோசமாக உள்ளன.  ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடையும் நிலைக்கு இந்தத் தேர்தல் அதிகாரப் போட்டி கோலோச்சுகிறது. குறைந்த பட்சம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்குச் சென்று விடக் கூடாதென்பதில் ரணில் விக்கிரமசிங்க தரப்பு உறுதியாக நிற்கிறது. இதற்காக அவர்கள் கட்சியே – அதனுடைய வெற்றி வாய்ப்பையே பலியிடத் தயாராகியிருக்கிறார்கள்.  

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அது ஒவ்வொரு தேர்தலிலும் ஆசனப்பகிர்வு (இட ஒதுக்கீடு) வேட்பாளர் தெரிவு, வேட்பாளர் நியமனம், கட்சித் தாவல் போன்ற விடயங்களால் திணறும். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.  

கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் உறுப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரனை தமிழரசுக் கட்சி பிடுங்கி எடுத்துள்ளது. அல்லது கோடீஸ்வரன் ரெலோவிலிருந்து தமிழரசுக் கட்சிக்குத் தாவியிருக்கிறார். கட்சி தாவியதற்கான காரணங்கள் எதையும் சொல்லவில்லை கோடீஸ்வரன். இது ரெலோவுக்குக் கடுப்பை உண்டாக்கியுள்ளது.  

இதனால் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. ஆனாலுமென்ன, இறுதியில் மாவை வெற்றியடைந்து விட்டார். அதாவது தமிழரசுக் கட்சி வெற்றியடைந்துள்ளது. இப்போது கோடீஸ்வரன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர். வரவுள்ள தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே போட்டியிடவுள்ளார். ஆனால், கடந்த தேர்தலில் அவர் ரெலோவின் ஆள். ரெலோவிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான குறைந்த பட்ச நியாயத்தையேனும் கோடீஸ்வரன் சொல்ல வேணும்.  

ஆனால், அதை அவர் சொல்லப்போவதில்லை. அப்படிச் சொல்லாமலே தமிழ் அரசியலைத் தயக்கமில்லாமல் செய்யலாம் என்று கோடீஸ்வரனுக்குத் தெரியும். இதற்கு கோடீஸ்வரனுக்கான முன்னோடிகளாக சிறிதரன், சிவமோகன் போன்றோர் உள்ளனர். இதனால் தனக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மேலும் பலமே கிடைக்கும் என தமிழரசுக் கட்சிக்கும் தெரியும். கோடீஸ்வரனுக்கும் தெரியும்.  

இந்த மாதிரியான நிலைமை ஒன்றும் கூட்டமைப்புக்கு, அதில் உள்ள கட்சிகளுக்குப் புதியதல்ல. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவமோகன் போன்றவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து தமிழரசுக் கட்சிக்குத் தாவியிருக்கிறார்கள். இதை விட மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த பலரைப் பிடுங்கி எடுத்திருக்கிறது தமிழரசுக் கட்சி.  

பங்காளிக் கட்சிகளிலிருந்து இப்படி ஆட்களைப் பிடுங்கி எடுப்பது தவறு என்று தமிழரசுக் கட்சி ஒரு போதுமே உணர்ந்ததில்லை.

அதற்கு அது பொருட்டுமல்ல. மற்றக் கட்சிகளைப் பலவீனப்படுத்தித் தன்னை வளர்த்துக் கொள்வதே அதனுடைய முதன்மையான நோக்கம். இதனால்தான் அது கூட்டமைப்பை உத்தியோக பூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யாமலே காலத்தைக் கடத்துகிறது.  

தமிழரசுக் கட்சியின் இந்த அரசியல் அநாகரீகத்துக்குக்கும் அதிகாரத்துக்கும் தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலையிலேயே கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறியது. இதைப்பற்றி ஏற்கனவே பல தடவை ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பகிரங்கமாகப் பேசித் தமிழரசுக் கட்சியைக் குற்றம் சாட்டியிருக்கிறார்.  

பின்னாளில் தமிழரசுக் கட்சியின் அதிகாரத்துவப் போக்கைக் கண்டித்து வந்தனர், ரெலோவின் மூத்த உறுப்பினர்களான ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிங்கமும். இதையிட்டு ரெலோவின் தலைவர் இறுக்கமான எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார் என்றும் கண்டித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் வேறு வழியில்லாமல் இருவரும் ரெலோவிலிருந்தே வெளியேறினார்கள்.  

இப்படித் தன்னுடன் இணைந்திருக்கும் ஏனைய தரப்பைப் பலவீனப்படுத்துவதை தமிழரசுக் கட்சி மிகக் கச்சிதமாகச் செய்து வருகிறது. இதற்கு முடிவேயில்லை. இது  இன்றோ அல்லது நாளையோ புளொட்டுக்கும் நேரலாம். அப்படி நேரும் எனப் புளொட்டுக்கும் தெரியும். எதுவோ நடப்பது நடக்கட்டும். அதுவரையில் சமாளித்துக் கொண்டிருப்போம் என்ற கணக்கில் நடந்துகொண்டிருக்கிறார் புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.  

ஏன், கோடீஸ்வரனைப் பிடுங்கியதையிட்டு தமிழரசுக் கட்சியின் மீது எந்தப் பெறுமதியான கோபங்களும் ரெலோவுக்கும் வரவில்லை. என்தான் எட்டி உதைத்து, முகத்தில் காறி உமிழ்ந்தாலும் உங்கள் காலடியிலேயே கிடப்போம் என்பதே செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் அரசியல் உறுதிப்பாடு.  

இது ரெலோ, புளொட் ஆகியவற்றின் ஏனைய உறுப்பினர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.  

இது ஒரு புறம் என்றால், தமிழரசுக் கட்சி ஆசனப் பகிர்வைக் கூடத் தன்னுடைய இஸ்டப்படியே செய்கிறது. சும்மா ஒரு போமால்டிக்கு பங்காளிக்கட்சிகளையும் இணைத்து ஒரு பட்டியல் விவாதத்தை மட்டும் நடத்தும். அந்தப் பட்டியல் விவாதத்தில் எந்தப் பெரிய மாற்றங்களையும் பங்காளிகளால் செய்து விட முடியாது. சுமந்திரன், சம்மந்தன், மாவை ஆகிய மூவரும் இதில் நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகள். இங்கே ஜனநாயகத்தைப் பற்றியும் கண்ணியத்தைப் பற்றியும் நியாயத்தைப் பற்றியும் யாரும் பேச முடியாது. அப்படிப் பேசினால் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறிச் சென்றதைப்போலக் கூட்டமைப்பிலிருந்து விலகி விட வேண்டியதுதான். அந்தளவுக்கு தில்லோ தனித்துத் தீர்மானம் எடுக்கக்கூடிய திராணியோ செல்வம் அடைக்கநாதனுக்கும் இல்லை. சித்தார்த்தனுக்குமில்லை.  

இந்தச் சூழலில்தான் தமிழரசுக் கட்சி பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக வெளிவந்த செய்திகள், அறிவிப்புகளின்படி சில புதிய முகங்களைத் தமிழரசுக் கட்சி களமிறக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. முக்கியமாகச் சில பெண்களை.    இவர்களில் சிலருக்குக் கூட்டமைப்பைப் பற்றியோ, அது போட்டியிடும் களமான வடக்குக் கிழக்கைப் பற்றியோ தெரியாது.

அங்குள்ள மக்களை, அவர்களுடைய வாழ்நிலையை, அங்குள்ள பிரதேசங்களை, அவற்றின் தாற்பரியத்தை என எதைப்பற்றிய அறிதலும் இல்லாமலே தேர்தலில் குதிக்க முற்பட்டிருக்கிறார்கள். ஏன் தேர்தலைப் பற்றிக் கூடத் தெரியாது.    இப்படியானவர்களைத் துணிந்து போட்டிக் களத்தில் இறக்க முன்வந்துள்ளது தமிழரசுக் கட்சி. இதைக்குறித்துக் கூடக் கேள்வி எழுப்பத்திராணியில்லாமலே உள்ளன ரெலோவும் புளொட்டும்.

அவையும் இப்படியான பிரமுகர் தெரிவில் உள்ளதால் எப்படிப் பேச முடியும்?  

ஆக, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லாதவர்கள், தேர்தல் வரும் வரையில் அரசியலிலும் அது சார்ந்த கட்சிப் பணிகளிலும் ஈடுபட்ட பரிச்சமில்லாதவர்கள் எந்தக் கூச்சமும் தயக்கமும் இல்லாமல் போட்டிக்குத் தயாராகி விட்டனர்.

தங்களைக் குறித்து மக்கள் என்ன கருதுவார்கள் என்ற ஒரு சிறிய கேள்வி கூட இவர்களுடைய மனதில் எழவில்லை. அப்படி ஒரு கேள்வி இவர்களிடம் எழப்போவதுமில்லை.

கருணாகரன்  

Comments