ஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது யார்? | தினகரன் வாரமஞ்சரி

ஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது யார்?

நீரும் நிலமும் வாழ்க்கைக்கு அவசியமானவை நீருக்காகவும் நிலத்துக்காகவும் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நிலத்துக்கான சட்டங்கள் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்தின் தேவைக்கென வழங்கப்படும் நிலம் பராமரிக்கப்பட்டு குடியிருக்க உபயோகிப்பதுடன் அது என்ன தேவைக்காக வழங்கப்படுகிறதோ அந்த தேவையை பூர்த்தி செய்தாக வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் வழங்கப்படுகின்றன.  

குடியானவன் பிள்ளைகளை பெற்று வளர்க்கிறான் அவர்களுக்கு திருமணம் நடைபெறுகிற போது தனக்குரிய நிலத்தில் பிள்ளைகளுக்கு வசிப்பதற்கான தொழில் செய்வதற்கான நிலத்தை வழங்குகிறான். தமிழர் வாழ்க்கையில் வீடு, வளவு கொடாத திருமணப் பேச்சுவார்த்தை கிடையவே கிடையாது காதலித்து ஓடிய பிள்ளைகள் கூட, தமக்கு குழந்தைகள் பிறந்த பின்னர் பெற்றோரிடம் ஒண்டிக்கொண்டு தமக்கான நிலத்தை கேட்டு பெற்றுக் கொள்கின்றனர். ஒரு நிலமானது அதன் உரிமையாளர் அல்லாத ஒருவரால் எந்த இடைஞ்சலுமின்றி பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்யப்பட்டு வந்தால் அதற்கு அவர் உரிமைகோர முடியும் அதை ஆட்சியுரிமை கோருதல் என்பர்.  

இந்த ஆட்சியுரிமையானது வெளிநாடுகளில் இருப்பவர்களுடைய சொத்துகளில் செல்லாது. அதேபோல போர் நடந்த காலப்பகுதியில் உயிர்ப்பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்தவர்களின் காணிக்கும் செல்லாது. எது எப்படியோ ஒரு காணியை அரசாங்கத்திடம் பெறும் நபர் அடுத்த இருபத்தைந்தாவது வயதில் முதலாவது தலைமுறையை கண்டுவிடுவார். அடுத்த இருபது வருடங்களில் பேரர்களும் வந்துவிடுவர். ஆக குத்தகை அடிப்படையில் பெறும் அரசகாணி ஐம்பதாவது வருடத்தில் குத்தகை அற்றுப்போக சுய சொத்தாகிவிடும்.  

விருப்பமோ இல்லையோ காணிகள் துண்டாடப்பட்டேயாக வேண்டும். ஒருவருடைய காணி நான்கைந்து பேருக்காகும். சந்ததி வளரும். காணி வளருவதில்லை. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளில் எமது கிராமத்தில் ஐம்பத்தாறு குடும்பங்களே இருந்தன. நான் போர் முடிந்து மீளக் குடியேறியபோது இருநூற்று ஐம்பத்தெட்டு குடும்பங்கள் இருந்தன. அதிகமான குடும்பங்கள் இடம் பெயர்ந்தவர்களின் நிலங்களை பிடித்திருந்தனர்.  

 இந்த சொத்தை மற்றவர்களுக்கு சட்டப்படி மாற்ற அதன் அனுமதிப்பத்திரத்தை பெர்மிட் என்ற வகையிலிருந்து உறுதி என்ற வகையில் மாற்றியாக வேண்டும். இரத்த உரித்துள்ளவர்களுக்கே மாற்ற முடியும். இதில் பிள்ளைகள், பேரர்கள், சகோதரர்கள், அடங்குவர். திருமணம் செய்து வந்தவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். இதை செய்யும் அதிகாரம் காணி அமைச்சினதாக இருந்தாலும், மாவட்ட தியாக பிரதேச செயலர்களின் சிபார்சில் தங்கியுள்ளது.  

இங்குதான் குறுநில மன்னர்களாக ஒவ்வொரு பிரதேச செயலர்களும் தமது அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலம் வழங்கல் பிரிவிடுதல், மாற்றுதல் என்பவற்றுக்கான அதிகாரத்தை இந்த குறுநில மன்னர்கள் பெற்றுக்கொண்டு செய்து வரும் தனி நீதிமன்றுகளின் அமர்வுகள் வெகு ஜோராக நடைபெறுகிறது. அதுவும் போரால் சிதைக்கப்பட்ட வன்னிப்பகுதியில் இவர்களுடைய அதிகாரம் கொடிகட்டிப்பறக்கிறது.  

சாதாரணமாக ஒரு மாவட்ட நீதிமன்றில் ஒரு காணி வழக்கானது விசாரித்து முடிந்து தீர்ப்பு வழங்க பல வருடங்களாகிவிடும். அந்தளவுக்கு விசாரணைகள் கசடற இருக்கும். ஆனால் ஒரு பிரதேச செயலரின் முன்னான காணிப்பிரச்சினைகள் ஒரு மணித்தியாலத்தில்  ஐந்து அல்லது ஆறு பிரச்சினைகள் தீர்க்கப்படுகிறது. சென்ற செவ்வாயன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இப்படியான காணிப்பிரச்சினையொன்றுக்காக சென்றிருந்த போது நான் அவதானித்தவை. ஒருவருடைய காணிக்கு யார் வேண்டுமானாலும் உரிமைகோரலாம். பிரதேச செயலருக்கு யாரைப்பிடிக்கிறதோ அவருடைய தரப்பு வாதத்தை மட்டும் கேட்பார். பத்து நிமிடத்தில் தீர்ப்புக்கு வந்துவிடுவார்.  

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்பதாம் ஆண்டு வழங்கப்பட்ட எமது நிலத்துக்கு உறுதி எடுப்பதற்காக ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டு விண்ணப்பித்தேன். அப்படியே இடம்பெயர்ந்து விட்டேன். பின்னர்  இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு விண்ணப்பித்தேன். பின்னரும் இடம்பெயர்ந்தோம். அதன்பிறகு இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு விண்ணப்பித்தேன். கடுமையான அலைச்சலின்பின் அரச அதிபருக்கு ஒரு மனுப்போட்டேன். அடுத்த வாரமே அதற்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் வந்தது. விளைவு எனது ஆவணங்கள் அனைத்தும் பிரதேச காணி அலுவலகத்திலிருந்து தொலைந்து போய்விட்டது. மீண்டும் விக்கிரமாதித்தன் போல முருங்கை மரத்திலேறி சகல ஆவணங்களையும் கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன்.  

இந்த நிலை போர் நடந்த காலத்திலும் இருந்ததுதான் மக்கள் தமது பிரச்சினைகளை தலைவருக்கு எழுதலாம்.  பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் தலைமை செயலகம் உருவாகியது. அங்கே ஒரு தலைமை செயலர் இருப்பார். அவர் தலைவருக்கு வரும் கடிதங்களை அது யாருக்கு எதிரானதோ அவரிடமே அனுப்பி பதிலை கேட்பார். கடிதம் எழுதியவரை இது இனங்காட்டிவிடும். அவருடைய பிரச்சினை தீராதது மட்டுமல்ல, அவர் ரகசியமாக எச்சரிக்கப்படுவார்.  

சென்ற வாரம் அந்த காணிக்கு மீள் விசாரணை என்றும், அலுவலகத்துக்கு சமூகமளிக்குமாறும் கடிதம் வந்தது. அந்த முதல் விசாரணை எப்பவுமே நடக்கவில்லை என்பது தனிக்கதை. அங்குதான் நான் போயிருந்து அந்த ஒருமணி நேரத்தில் பல வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த பிரதேசசெயலர்  என்னும் நீதியாளரை கண்டேன்.  

ஒரே சொல் நான் இயக்கத்தில் இருந்தேன் என்று சொன்னதுடன் அவர் என்னிடம் எந்த விபரத்தையும் கேட்க மறுத்துவிட்டார். எதிரிகளாக இருந்த எமக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் நல்லபடி வாழ வகைசெய்த எங்கள் இலங்கை அரசுக்கும், எம்முடன் கலந்துள்ள தமிழ் அதிகாரிகளுக்குமான வேறுபாடு இப்படியிருக்கிறது என்பதை வேதனையுடன் கூறித்தான் ஆகவேண்டும். கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் அநேக போராளிகள் நிலங்களை வாங்கி வீடுகட்டியிருந்தனர். இன்று அவர்கள் கொடுத்த பணமும் போய் நிலமும் கொடுத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிலங்களை மனிதாபிமானத்துடன் திருப்பி கொடுக்க யாராலும் முடியவில்லை.  

இன்று நான் குடியிருக்கும் நிலம் எனக்கு கிடைத்ததென்றால் அது ராணுவத்தினரிடம் பத்திரமாக இருந்ததால்தான். இராணுவத்தினர் எம்மை அழைத்து நிலத்தை தந்தனர். ஆனால் பிரதேச செயலர் அவற்றை பிடுங்க தலைகுத்தென நின்றார். ஆளுநரின் அனுசரணையால் எங்கள் பதினைந்து பேரின் நிலங்கள் கிடைக்கப்பெற்றோம். இதே பிரதேசத்தில் இப்போதுதான் வந்து குடியேறிய சிலர் அனுமதிப்பத்திரம் வைத்துள்ளனர் என்பது பெரியபுதினம் அது எப்படி என்பதை யாராவது கண்டுபிடித்தால் கூறுங்கள்.  

தமது அதிகாரத்தின் வழியாக வன்னி மாவட்டமெங்கும் எத்தனை குளங்களுக்குள் மண் கொட்டப்பட்டு அவை குடியிருக்கும் மாளிகைகளாகி வருகின்றன  என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த ஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் உண்டு என்பது விசேடமான செய்தி இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கியது யார்? மரங்களை தறிக்க அனுமதி பெறவேண்டும் என்பது விதி. தெருக்கரைகளில் நின்ற ஏராளமான வைரமரங்கள் தறிக்கப்பட்டு விட்டதே யாருடைய அனுமதி. காலத்துக்குகாலம் மாறிமாறிவரும் அதிகாரிகள் பற்றியும் அவர்களின் நடவடிக்கை பற்றியும் முன்னரே ஒரு கட்டுரை எழுதிவிட்டேன். இவர்களின் முன்னால் சட்டம் என்ன சட்டம் நீதி என்ன நீதி காணிக்கென அரசாங்கம் வழங்கிய ஆவணமே செல்லாது. காணியை மாற்றும்போது யார்யாருக்கு மாற்றலாம் என மகாணசபை அறிவித்ததெல்லாம் தூசு. இந்த குறுநில மன்னர்கள் பழங்கால ஜமீன்தார்கள்போல இன்னும் சாட்டையை கையிலெடுக்கவில்லை அவ்வளவுதான். 

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments