இரு தேசங்களை இணைக்கும் கச்சதீவு திருவிழா | தினகரன் வாரமஞ்சரி

இரு தேசங்களை இணைக்கும் கச்சதீவு திருவிழா

நாம் மிகவும் பயத்துடனே வருகை தந்தோம். பயத்துடன் வருகை தந்த எமக்கு எல்லாமே இலகுவாக முடிக்கக் கூடியதாக இருந்தது. கடுமையான சூடு தாங்க மாட்டீர்கள் என்றார்கள்!... கொரோனா நோய் அபாயம் உள்ளது போகவேண்டாம் என்றார்கள்!... முதற்தடவை என்பதால் ஆர்வத்தின் காரணமாக இறைவணின் துணை என்று நாம் வருகை தந்தோம். இது இம்முறை கச்சத்தீவு உற்சவத்திற்கு வருகை தந்த இலங்கை இந்திய பக்தர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்களாகும்.

கொரோனாவின் தாக்கம் உலகளாவிய ரீதியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதரணமாகும். என்றாலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுமார் எட்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்திருந்தமை வியப்பாகவே இருந்தது.

யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கச்சதீவு, சுமார் 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பகுதியாகும். காங்கேசன்துறையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவிலும் (70 கிலோ மீற்றர்) நெடுந்தீவிலிருந்து சுமார் 10.3 கடல் மைல் தொலைவிலும் (18.54 கிலோ மீற்றர்) சர்வதேச கடல் எல்லையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவிலும் (1.8 கிலோ மீற்றர்) இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 12.5 கடல் மைல் தொலைவிலுமே இந்தத் தீவு அமைந்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு காங்கேசன்துறை இறங்கு துறையிலிருந்து இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “ஹங்சயா” எனும் பயணிகள் கப்பலில் சுமார் 40ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் புறப்பட்ட கப்பல் காலை 6 மணியளவில் கச்சத்தீவை அண்மித்தது. பாரிய கப்பல் என்பதால் கடலில் வைத்தே மற்றுமொரு சிறிய ரக படகிற்கு மாறி கச்சத்தீவை வந்தடைய வேண்டும் அவ்வாறே நடந்தது.

வழக்கத்தைவிடவும் ஒன்றரை மணித்தியாலயம் தாமதமாக கச்சத்தீவை வந்தடைந்தோம் நாம் எதிர்பார்த்ததை விட மாறுபட்ட காட்சிகளையே காணமுடிந்தது. தீவைச் சூழ கரை எங்கும் இரு நாட்டு மீன்பிடி படகுகள் வள்ளங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் மீனவர்களும் பக்தர்களும் பரீசோதனைக்கு மத்தியில் உள்நுழைவதையும் காணமுடிந்தது.

தற்காலிக கொட்டில்களில் பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்கள காரியாலயம், பிரதேச சபை காரியாலயம் என அமைக்கப்பட்டிருந்தது.

இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற நிலையில் அச்சத்தின் காரணமாகவே இரு நாட்டு பக்தர்களின் பங்குபற்றுதல் குறைவாகக் காணப்பட்டதாக கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் கொரோனா நோய் தொற்றுகள் எதுவுத் ஏற்படாத வண்ணம், விஷேட மருத்துவ மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதை காணக்கூடியதாக இருந்ததுடன், வருகை தந்த மற்றும் வெளியேறிய அனைவரும் விஷேட கருவிகளினால் பரிசோதிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

கச்சதீவுக்கு இம்முறை இந்தியாலிருந்து 86 வள்ளங்களில் 2510 பேரும் இலங்கையிலிருந்து 300 படகுகளில் 6073 பேரும் வருகை தந்திருந்தனர். அத்துடன் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 150 மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியதுடன் மாலை சிலுவைப்பாதையும் இடம்பெற்றது. அத்துடன் சனிக்கிழமை 07ஆம் திகதி காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றதுடன் கொடி இறக்கமும் இடம்பெற்றது.

கடற்படையின் விஷேட படகுகள் மூலம் காங்கேசன்துறையிலிருந்து கச்சதீவுக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ரேமன் விக்ரமசிங்க உட்பட விஷேட பிரமுகர்கள் அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் திருப்பலி பூஜை இடம்பெற்றது. இலங்கை சார்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ரேமன் விக்ரமசிங்க ஆகியோர் திருப்பலி பூஜையை நடத்தினர். நெடுந்தீவு பங்கு தந்தையும் இந்தியாவின் சார்பில் சிவகங்கை குருமுதல்வர் அருட்திரு லூதர் ராஜா அடிகளாரும் சிங்கள மொழியில் கொழும்பு மறைமாவட்ட அருட்திரு சிஸ்வாண்டி குரூஸ் அடிகளாரும் மறை உரைகளை நிகழதினர். இம்முறை மும்மொழிகளிலும் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் வழிகாட்டலில் இலங்கை கடற் படையினரின் பூரண உதவியுடனும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வருடாந்த திருவிழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், யாழ் முதல்வர் இமானுவேல் ஆர்ணல்ட், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன், மேலதிகஅரசாங்க அதிபர் எம்.பார்த்தீபன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் ஷங்கர் பாலச்சந்திரன், பிரதி கொன்சியூலர் ஜெனரல் எம். கிருஷ்ணமூர்த்தி, பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இலங்கை கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் கபில சமரவீர யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மீனவவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய, கடலுக்கு அதிபதியாக விளங்கும் புனித அந்தோனியார் தேவாலயம் என கிறிஸ்தவர்களினால் போற்றப்படுகின்ற கச்சதீவு திருவிழாவிற்கு இம்முறை இலங்கையைச் சேர்ந்த பக்தர்களே அதிகமாக கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள பக்தர்கள் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

இவ்வாண்டு இரு நாடுகளிலிருந்தும் சுமார் பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இம்முறை எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக இலங்கை கடற்படை, மற்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரின் வழித்துணையுடன் சர்வதேச கடல் எல்லை வரை அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து கச்சதீவு வரை இலங்கை கடற்படையின் வழித்துணையுடனும் அழைத்துவரப்பட்டனர். இதேவேளை, கச்சதீவு வருடாந்த திருவிழா நிகழ்வில் பங்குகொள்ள வருகைத்தரும் விஷேட பிரமுகர்களுக்கான கடல் போக்குவரத்து வசதிகளையும் இலங்கை கடற்படையினர் திட்டமிட்ட அடிப்படையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகள், மலசலகூட வசதிகள், தற்காலிக தங்குமிட, மின்சார விநியோக வசதிகள் மற்றும் வருகைத்தரும் படகுகளை நிறுத்துவதற்கான தற்காலிக இறங்குதுறை போன்ற வசதிகளையும் இலங்கை கடற்படையினர் வழங்கியிருந்தனர்.

திருவிழாவிற்கு வருகைதந்த பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேசமயம் தேவையின் நிமிர்த்தம் கடற்படையின் மருத்துவ மற்றும் உயிர்க்காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் தற்காலிக கூடாரங்களில் கச்சதீவு பொலிஸ் நிலையம், நீதிமன்றம், இந்திய வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன அமைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததனாலும் பக்தர்களின் நலனை கருத்திற் கொண்டு 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து பல மணிநேர கடல்வழி பயணத்தை மேற்கொண்டு கசச்தீவுக்கு வருகை தந்த பக்தர்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றதுடன் மூன்று வேளை உணவு கடற்படையினரால் இலவசமாக வழங்கப்பட்டது. அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றது.

தமிழகத்தில் இராமேஸ்வரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 100 இற்கும் அதிகமான அருட் சகோதரிகளும் அருட் தந்தைகளும் இலங்கையிலிருந்தும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் தங்குவதற்கு தனித்தனியான தற்காலிக கொட்டில்கள் வழங்கப்பட்டிருந்தன.

இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமையும் விஷேட அம்சமாகும். இவர்கள் கடற்படையின் கப்பல் மூலம் காங்கேசன்துறையிலிருந்து கச்சதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அத்துடன் இலங்கை அரசு மற்றும் இலங்கை கடற்படையினரின் திருவிழா மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் விஷேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

திருப்பலி முடிந்தவுடன் ஆங்காங்கே மக்கள் ஒன்று கூடி கதைத்து பழகுவதையும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் காணமுடிந்தது. அங்கு பனை மரத்தின் கீழ் சிலர் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர் இவர்கள் யார் என்பதை சரியாக ஊகிக்க முடியாத நாம் அவர்களை அணுகி கதைத்த போது அங்கிருந்து இரு மொழிகளில் கதைக்கத் தொடங்கினர் மரத்தின் ஒரு பகுதியில் இந்திய பக்தர்களும் மறுபகுதியில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த சிங்கள மொழி பேசக்கூடிய பக்தர்களும் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்வதை காணக்கூடியதாக இருந்தது. இது இரு தேசங்களை இணைக்கும் திருவிழா என்று கூறுவதை உணர முடிந்தது.  (மிகுதி தொடரும்)

Comments