கேட்பாரற்றுக் கிடக்கும் பிரம்படித்தீவு | தினகரன் வாரமஞ்சரி

கேட்பாரற்றுக் கிடக்கும் பிரம்படித்தீவு

மனிதன் நாளாந்தம் தினமும் ஒருபடி முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றான். அவ்வாறு வாழ்வில் முன்னேறுவதற்கு பல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு உந்து சக்தியளிக்க வேண்டியது துறைசார்ந்தவர்களின் பொறுப்பு வாய்ந்ததும் தாலையாயதுமான கடமையுமாகும். அவ்வாறு வாழ்வில் முன்னேற எத்தனித்துக் கொண்டிருக்கும் ஓர் கிராமத்தின் கதையே இது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றுத் தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, பூலாக்காடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராமமே பிரம்படித்தீவு எனும் கிராமமாகும். சுற்றிவர வயல் நிலங்களால் சூழப்பெற்ற இக்கிராம மக்கள் மிக நீண்டகாலமாக சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். 

எனக்கு 45 வயது. நாங்கள் பிறந்து வளர்ந்தது இந்தக் கிராமத்தில்தான். கடந்த காலத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். தற்போது வாழ்வாதாரத்தினாலும், காலத்திற்குக் காலம் வெள்ளம் வரட்சியினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதிலிருந்து இன்னும் மீளமுடியாமல்தான் இருக்கிறது. அப்போது எமது பிள்ளைகளைப் படிப்பிக்க முடியாமல் பிள்ளைகளின் படிப்பு பாதியிலே நின்றுவிட்டது. தற்போது பிள்ளைகளில் சிலர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையும் படித்திருக்கின்றார்கள், ஆனால் எதுவித தொழில் வாய்ப்புக்களுமின்றித்தான் இருக்கின்றார்கள். அரசாங்கத்தினூடாக வருகின்ற சேவைகளை எமது கிராம சேவை உத்தியோகத்தர் மிகவும் திறம்பட செய்து வருகின்றார். அதேபோல் அவ்வப்போது அரச சார்பற்ற அமைப்புக்களும் நிவாரணங்களைத் தந்துவிட்டுச் செல்கின்றன. ஆனால் எமக்குரிய நிரந்தரத் தொழில் வாய்ப்புக்களையோ, வாழ்வாதாரத் திட்டங்களையோ யாரும் முன்வைக்கின்றார்களில்லை. 

கிண்ணையடி ஆற்றைக் கடந்து போவதற்கு தோணியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் பாடசாலை மாணவர்கள், உள்ளிட்ட பலரும்  பயங்கரத்தின் மத்தியில்தான் பயணம் செய்கின்றார்கள், இதற்கு தற்காலிகத் தீர்வாக இயந்திரப் படகு ஒன்றையாவது சேவையிலீடுபடுத்தினாலாவது ஓரளவு நிம்மதியாய் இருக்கும் என தெரிவிக்கின்றார் பாலிப்போடி தேவி. 

பிரம்படித்தீவு கிராம மக்களின் உட்கிடக்கைகளை அறிவதற்காக கள விஜயம் ஒன்றினை அண்மையில் நான் மேற்கொண்டிருந்தேன். இதன்போதே பாலிப்போடி தேவின் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் கிரான் சந்தியூடாக கிரான் பிரதேச செயலகத்தின் பின்னால் செல்லும் வீதிவழியாகச் சென்றேன். சற்றுத் தூரம் சென்றது.  இரண்டு பிரதான வீதிகள் பிரம்படித் தீவுக்குச் செல்கின்றன. ஒன்று கற்கள் நிறைந்து, தூர்ந்து போய்கிடக்கும் வீதிபோல் உள்ளது, மற்றையது, பள்ளமும் மேடுமாய், சேறும் சகதியும் நிறைந்ததாய் உள்ளது, உண்மையிலே நடந்துகூட  அவ்வீதிகளுடாகச் செல்ல முடியாது. 

பிரம்படித்தீவு உள்ளிட்ட பல கிராம மக்கள் போக்குவரத்துச் செய்யும் பிரதான வீதிகளையாவது இதுவரை காலத்தில் புனரமைப்புச் செய்து கொடுக்காதது ஒரு வகையில் மனித உரிமை மீறல் எனலாம். மனிதன் சுதத்திரமாக தமது போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்களின் கடமையாகும். மக்கள் தமது தேவைகளை அதிகாரிகளிடத்தில் பலமுறை விண்ணப்பிக்க முடியுமே தவிர மக்களால் உட்கட்டுமாண செயற்றிட்டங்களை மேற்கொள்ள முடியாது. 

கிராம மக்களின் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்து கொடுக்கா விட்டாலும், வீதி புனரமைப்பு, வீடமைப்பு, பேரூந்து போக்குவரத்து வசதிகள், சுத்தமான குடிநிர் வசதிகள், உள்ளிட்ட சிலவற்றையேனும் தகுந்த முறையில் ஏற்பாடு செய்து அந்த மக்களுக்கு வழங்கினால் அவற்றைக் கொண்டு அந்த மக்கள் சுயமாகவே தமது வாழ்வை மேற்கொண்டு செல்லக்கூடிய சூழல் உருவாகிவிடும். 

இந்நிலையில் எமது கிராமம் கடந்த யுத்த காலத்தில் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்ட கிராமமாகும். தற்போது யுத்தம் முடிவுற்று 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எமது கிராமம் அபிவிருத்திகளுக்குள் இட்டுச் செல்லவில்லை. கிரானிலிருந்து 18 கிலோமீற்றர் தூரம் கரடு முரடான பாதையினால் சுற்றி வரவேண்டும். இதனைவிட எமது கிராமத்திற்கு அருகாமையில் ஆறு ஒன்று (கிண்ணயடித் துறை) செல்கின்றது.  அந்த ஆற்றைக் கடந்து போவதாயின் 2 கிலோ மீற்றர் தூரத்தில் கிரான் பிரதான வீதியைச் சென்றடையலாம். ஆனால் அந்த கிண்ணயடி ஆற்றைக் கடப்பதற்கு தோணியைத்தான் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் தினமும் ஆபத்தான் நிலமையில்தான் எமது போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. கிண்ணையடி ஆற்றுக்கு பாலம் அமைத்தால் எமது கிராமத்திற்கான போக்குவரத்துப் பிரச்சினைக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கலாம். 

இவ்வாறு தோணியைப் பயன்படுத்தி பயணம் செய்வது நாங்கள் மாத்திரமல்ல பூலாக்காடு, முறுத்தானை, வாகனேரி, வடமுனை, ஊத்துச்சேனை, அக்குறாணை, உள்ளிட்ட பல கிராம மக்களும் இதனால் பயணம் செய்து வருகின்றனர். அதுபோல் எமது கிராமத்தில் அனைத்தும் கிறவல் வீதியாகத்தான் உள்ளன. கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தினால் அனைத்து வீதிகளும் முற்றாக சேதமடைந்துள்ளன. 

பூலாக்காட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குபட்டபட்ட 370 குடும்பங்களைச் சேர்ந்த 1500 இற்கு மேற்பட்ட மக்கள் இந்த கிராம சேவகர் பிரிவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் மீன்பிடி, விவசாயக் கூலித் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்பவர்களாகத்தான் உள்ளார்கள். வருடாந்தம் வெள்ள அனர்த்தத்திற்குட்படும் எமது கிராம மக்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும். இவ்வாறு இவ்வருடமும் 3 நாட்கள் எமது கிராம மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து கிண்ணையடி பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தோம். இம்முறை திடீரென வெள்ளம் வந்ததனால் நள்ளிரவு ஒரு மணியளவில் மக்களை இயந்திரப் படகின் மூலம் கடற்படையினர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன், ஏற்றிக் காப்பாற்றினோம். இதற்காக எமக்கு இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. அதனை யாராவது எமது கிராமத்தில் அமைத்துத் தரவேண்டும். 

கடந்த யுத்தகாலத்தில்  எமது மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது அதிலிருந்த மெல்ல மெல்ல மீண்டு வருகின்றாரகள். இவ்வாறான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களை சம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுக்க உடன் முன்வரவேண்டும். எமது கிராம சேவையாளர் பிரிவில் எந்தவொரு அரச உத்தியோகத்தர்களும் இல்லை அரசாங்கத்தினால் தற்போது வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற ஒரு லட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் எமது கிராமத்தைப்போன்று பின்தங்கிய கிராம மக்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கினால் அது  பெரும் வாய்ப்பாக அமையும். 

அரச போக்குவரத்துக்கள் எமது கிராமத்திற்கு வருவது கிடையாது. தபால் கந்தோர்கூட எமது கிராமத்தில் கிடையாது. ஆரம்பப் பாடசாலைகள் 2 உள்ளன. அதற்கு மேல் படிப்பதற்கு ஆற்றைக் கடந்து அல்லது 18 கிலோ மீற்றர் சுற்றி மிக நீண்ட தூரம் சென்றுதான், எமது பிள்ளைகளை படிப்பிக்க வேண்டியுள்ளது. எனவே எமது கிராமத்திற்குரிய வீதிகளைச் செப்பனிட்டு அரச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி பாடசாலைகளைத் தரமுயர்த்தி, வாழ்வாதார வசதிகளையும் ஏற்படுத்தி, தபால் கந்தோர் வசதிகளையும் ஏற்படுத்தினால் ஓரளவேனும் எமது கிராமம் புத்துயிர் பெறும், எனத் தெரிவிக்கின்றார். கோறளைப்பற்று தெற்று (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட பிரம்படித்தீவு கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவரான மகாலிங்கம் ஜெயசீலன்.  

வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த போடிகளுக்குச் சொந்தமான வேளாண்மைகளைச் சூழ்ந்துள்ள இக்கிராம மக்கள் அந்த வயல் வெளிகளில் காலத்திற்குக் காலம் கூலிவேலை  செய்தும், மின்பிடி, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.  அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு உந்துசக்தியளிக்க யாரும் இதுவரையில் முன்வரவில்லை, என அக்கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர். எது எவ்வாறு அமைந்தாலும், தமது எதிர்கால பிள்ளைகளின் நலன்கருதி தமது கிராமத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் நலன் கருதி தொழிற்போட்டை ஒன்றை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் முன்வைக்கின்றனர்.

தமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நோய்வாய்பட்டாலும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெறுவதென்பது மிகவும் கடினமானதாக அமைந்துள்ளது. எனவே தமது பகுதியை மையப்படுத்தி ஒரு ஆரம்ப வைத்தியசாலை ஒன்றையாவது அமைத்துத் தரும்படி அக்கிராம மக்கள் வேண்டுகோள் முன்வைக்கின்றனர். 

பிரம்படித்தீவு கிராமத்தில் மாத்திரமல்ல எமது பிரதேசத்தில் அமைந்துள்ள 80 வீதமான வீதிகள் அனைத்தும் பழுதடைந்துதான் கிடைக்கின்றன. அவை அனைத்தும் உடன் புணரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது. இந்த வீதிகள் அனைத்தும் பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளாகும், இவைகளை பிரதேச சபைதான் புணரமைப்புச் செய்ய வேண்டும். எமது பிரதேச செயலகத்தினூடாக வரும் செயற்றிட்டங்கள் அனைத்தும் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அண்மையில் முன்மொழியப்பட்ட சப்ரகம வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி முன்மொழியப்பட்ட தேவைகளில் வீதிகளைத்தான் மக்கள் தெரிவு செய்திருந்தார்கள், அவை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றினைவிட பிரம்படித்தீவு – கிண்ணையடி ஓடத்துறைக்கு பாலம் அமைப்பதற்கு உரிய திட்ட வரைபை நாம் அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அதுபோல் அக்கிராம மக்கள் எதிர்பார்க்கும், இரண்டு மாடிக் கட்டடத்திற்கும் உரிய முன்மொழிவுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்  என கோறளைப்பற்று தெற்று (கிரான்) பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு தெரிவித்தார். 

எமது பிரதேசத்திற்குட்பட்ட பிரம்படித்தீவு, மினுமினுத்தவெளி, பூலாக்காடு, முறுத்தானை உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள வீதிகள் கடந்த மழை வெள்ளத்தினால் மிகவும் மோசமான முறையில் பழுதடைந்து கிடக்கின்றன. எமது பிரதேச சபைக்குட்பட்ட கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி ஆகிய 3 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளடக்கப் பட்டுள்ளன. அவற்றுள் 14 வட்டாரங்கள், உள்ளன. எமக்குக் கிடைக்கின்ற நிதியை மக்களின் தேவைகளுக்கேற்ப, பகிர்ந்தளித்துதான் சேவை செய்து வருகின்றோம், பிரதேச செயலாளர்கள் கிறவல் எடுப்பதற்குரிய உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்கள், நாங்கள் எமது சபையின் வாகனங்களைக் கொண்டு கிறவல் இட்டு செப்பனிட்டு வருகின்றோம். ஆனால் அது வெள்ளத்தில்  அள்ளுண்டு போய்விடும், மாறாக இவையனைத்திற்கும் நிரந்தர கொங்றீட் வீதிகளைத்தான் போடவேண்டியுள்ளது. தற்போதைக்கு எங்களால் கொங்கறீட் வீதிகளை போட முடியாதுள்ளது. அந்த அளவிற்கு நிதி வசதிகள் எமம்மிடம் இல்லாமலுள்ளது என கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்ஜித் தெரிவித்தார். 

பிரதேச செயலாளர், மற்றும் பிரதேச சபைத் தவிசாளர், ஆகியோரின் கருத்துக்கள் பிரம்படித்தீவு மக்களுக்கு தற்காலிகத் தீர்வாக அமைந்தாலும், அம்மக்கள் எதிர்பார்க்கின்ற நிரந்தரத் தீர்வையே வேண்டி நிற்கின்றனர். காலத்திற்குக் காலம் மக்களின் காலடிக்குச் சென்று கௌரவமாக வாக்குக் கேட்டும் மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் வெற்றி பெற்றதும் இவ்வாறான கிராமங்களை அடையாளம் கண்டு அபிவிருத்தியில் மேலோங்கச் செய்ய வேண்டும்.  பிரம்படித்தீவு கிராம மக்களின் தேவைகளை நன்கறிந்து அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க  சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை அக்கிராம மக்கள் எதிர் பாத்திருக்கின்றனர்.

வ.சக்திவேல்

Comments