கொரோனா; மனிதாபிமானத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு சவால்! | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா; மனிதாபிமானத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு சவால்!

கோவிட் 19 என்கின்ற கொரோனா வைரஸ், உலகத்தையே உலுக்கி வரும் நிலையில், இதுபற்றிச் சரியான புரிதல் இலங்கையர்களுக்கு இன்னும் ஏற்படவில்லையென்பது, அண்மைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 

பொய், புரட்டு, புரளிக்கு உள்ள நம்பகத்தன்மையும் மரியாதையும் உண்மைக்குக் கிடையாது என்பதையும் இந்தக் கொரோனா உணர்த்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, என்னதான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்றாலும், தாய்நாட்டின் மகிமையையும் இந்த வைரஸ் இடித்துரைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, வௌிநாடாக இருந்தாரலும் சரி, உள்நாடாக இருந்தாலும் இலங்கையர்கள் எந்தளவிற்குச் சுயநலமிகள் என்பதையும் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.  

2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு மனிதர்களிடத்தில் மனிதாபிமானத்தைப் புரியவைத்தது. அதற்குப் பின்னர் எத்தனையோ வடிவங்களில் இயற்கை வெளிப்பட்டு மனிதனுக்குப் புத்தி புகட்டியிருக்கிறது. இருந்தும் என்ன அவன் இன்னமும் திருந்தாத ஜென்மம் என்பது கொரோனா வைரஸ் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. 

இதுவரை உலகின் 119 நாடுகளில் சுமார் ஒன்றை இலட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் ஆறாயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். இலங்கையில் நேற்றுவரை 7 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளிநாட்டவர்கள் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சைபெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் யாரும் அலட்டிக்ெகாள்ளவில்லை. வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றிய ஒருவருக்குத் தொற்று வந்துவிட்டது என்றதும்தான் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நபரின் பிள்ளையைப் பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டாம், என்ற போராட்டத்தால், குறித்த பாடசாலை மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதான் தாமதம், நாட்டின் நாலா புறங்களிலும் மக்கள் உணவுப் பொருள்களைக் கொள்வனவு செய்வதில் முண்டியடிக்கத் தொடங்கிவிட்டனர். முக்கிய நகரங்களின் சிறப்பு அங்காடிகளில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அரிசி, பருப்பு, உப்பு, பெருங்காயம், பெரிய வெங்காயம் எனப் பலதரப்பட்ட பொருள்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டார்கள்! 

இதற்குக் காரணம் சில பொறுப்பற்ற ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும்தான் என்கிறார்கள். அப்படி நடக்குமா, இப்படி நடக்குமா? என்று ஊகங்களின் அடிப்படையில் ஆதாரமற்ற; ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை எழுதுவது, சிலர் தங்களின் மேதாவி தனத்தைச் சமூக வலைத்தளங்களில் காண்பிப்பது என்ற போக்கினால், மக்கள் மத்தியில் ஓர் இனம்புரியாத பீதி பரவியது. கடைகள் மூடப்படுமா, அலுவலகங்கள் மூடப்படுமா, வீட்டிலிருந்தபடி வேலை செய்யச் சொல்வார்களா? என்பதுதான் ஆளாளுக்குப் பேச்சு. இந்தப் பேச்சுகளை முகாந்திரமாகக் கொண்டு சிலர் சமூக வலைத்தளங்களில் நக்கல் செய்து பதிவுகளை இடுகிறார்கள். சுண்டெலிக்கு ஜீவன் போக, பூனைக்குக் கொண்டாட்டம் என்பதாக சில பண்டிர்களின் கருத்துகள் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. 

பொதுவாக மனிதனிடத்தில் உள்ள குரோதத்தையும் வைராக்கியத்தையும் போக்குவதற்கே இந்தக் கொரோனா வந்திருக்கிறதோ என்று கேட்கிறார் ஒரு சிறுவர். உண்மையில் சிறுவர்களுக்குள்ள புத்திக்கூர்மைகூடச் சமூகத்தில் வளர்ந்துவிட்டவர்களுக்கு இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. 

தகவல் பரப்புவதும் தன்னிலை விளக்கம் சொல்வதும் சுயநலத்தின் உச்சத்தையே புலப்படுத்துகின்றன. சீனாவில் உருவான இந்த வைரஸ்,இதுவரை 119 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அப்படியென்றால், அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் எந்த நாட்டுக்குப் பாதுகாப்பு தேடி ஓடுவார்கள்? சீனாவில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்கவும் இந்தியர்களை மீட்கவும் சிறப்பு விமானங்கள் சென்றன. ஆனால், சீனர்களை மீட்பதற்கு எந்த விமானங்கள் செல்லும், எந்த விமானங்களால் அஃது இயலும்? இப்படி நம்மை நாமே கேட்டுக்ெகாண்டு விடை கண்டுகொள்ள முடியுமா?

சீனாவிலும் ஏன் இத்தாலியிலும்கூட மக்கள் முண்டியடித்துக்ெகாண்டு உணவுப்பொருள்களைக் கொள்வனவு செய்தார்கள். இந்தத் தகவல்களையும் உள்நாட்டுத் தகவல் பரப்புநர்களின் செய்திகளையும் பார்த்துத் தாங்களும் தங்கள் குடும்பத்தவர்களைப் பட்டினிபோட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்ைக நடவடிக் ைககளை மேற்கொள்வது சுயநலமாகாது என்கிறார்கள் சிலர். அது சுயநலமல்லவென்றாலும், அந்தப் பரபரப்பைத் தோற்றுவித்தது பொறுப்பற்றோரின் நடத்தை என்பதைத்தான் நினைவுபடுத்த வேண்டும்.

வெளிநாடுகளுக்குத் தொழிலுக்காகச் சென்றோரும் மேற்படிப்புக்காகச் சென்றோரும் தாய்நாட்டுக்குத் தப்பி வருவதற்குத் தூதரகங்களில் அடைக்கலம் தேடுவதில் தப்பில்லை. ஆனால், இந்த நாடு சரியில்லை என்று சென்றவர்கள், அந்த நாட்டுக்கு விசுவாசமாக நடக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்புவதும் தவறாகத் தெரியவில்லை! இதனைத்தான் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவரும் சொல்கிறார். அதாவது, இத்தாலியில் கொரோனா பிரச்சினை என்று, இலங்கைக்குச் செல்லாதீர்கள்! அங்குள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள் என்பது அந்தப் பெண்மணியின் கோரிக்ைக.

எவ்வாறிருந்தாலும், ஒரு பேரிடர் ஏற்படும்போது அதுபற்றி நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்ைககளை மேற்கொள்வது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பு! இந்தப் பொறுப்புகள் கடந்த காலங்களில் தவறவிடப்பட்டதன் விளைவும், அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்ைகயீனமும், மக்கள் தாங்களாகவே தற்காப்பு நடவடிக்ைககளை மேற்கொள்ளும் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுவே யதார்த்தம்!

இருந்தாலும், தற்போது கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கும் நடவடிக்ைகயை இலங்கை அரசு திறம்பட மேற்கொள்கிறது என்று வெளிநாடுகளே சான்றளித்துள்ளன. ஆகவே, பொதுமக்கள் அரசின் செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா? என்பதை அறிந்துகொள்வதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்ைகயை அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்து எதிர்ப்பைத் தெரிவிப்பதும், வெளிநாட்டிலிருந்து வரும் தாயக உறவுகளைப் புறக்கணிப்பதும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்ெகாள்ளும் நடவடிக்ைகயாகாது!

ஒரு தேசிய நெருக்கடியான காலகட்டத்திலாவது இனரீதியாகவன்றி, இலங்கையர்களாகச் சிந்திக்க வேண்டும். இதற்குப் பலர் முன்னுதாரணமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான இடங்களைத் தெரிவு செய்யும் நடைமுறையைச் சிலர் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் உள்ள தமது உல்லாச விடுதியொன்றை முழுவதுமாக அரசுக்கு வழங்கிய பெருந்தகையும் இருக்கத்தான் செய்கிறார். இவ்வாறு தேசிய நெருக்கடியின்போது தேசிய ரீதியாகக் கரங்கோக்க வேண்டும். அதனைவிடுத்து, ஆசுப்பத்திரிக்கு ​நோயாளியைக் கொண்டு செல்வதற்கும் எதிர்ப்பைத் தெரிவிப்பது, எந்த நாகரிகத்தில் அடங்கும்? முகாம் ஸ்தாபிக்கப்பட்டதும் குழம்புவது எந்தத் தார்மிகத்தில் உள்ளடங்கும்?

இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளே மக்கள் மனத்தில் வேதனையைத் தோற்றுவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால், இந்தக் கொரோனா வைரஸ் என்பது மனிதர்களின் மனிதாபிமானத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு சவால் என்றுதான் கொள்ள வேண்டும். இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்குத் தேசிய சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் தேசிய சிந்தனையுடன் செயற்படும்போது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரியவர்கள் எவ்வாறு நடந்துகொள்வது?

அவர்கள், தங்களைத் தனிமைப்படுத்தக்கூடாது என்று போராட்டம் செய்வதா? அல்லது அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பியோடிவிடுவதா? அவ்வாறு தப்பியோடிய பெண்ணொருவர் (மொறட்டுவைப் பகுதியில்) சிறப்பங்காடிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்தபோது பொதுமக்கள் அறிந்துகொண்டுள்ளார்கள். பின்னர் அவரைச் சோதித்துப் பார்த்ததில் அவருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சென்று வந்த இடங்கள் அனைத்தும் சோதனையிடப்படுகின்றன.

தனிமைப்படுத்தப்படும் அனைவருக்கும் வைரஸ் தொற்று இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அவ்வாறு சந்தேகிக்கப்படும் நோயாளர்கள், அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு அனுப்பி மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் அங்கொடை என்றதும் மனநல வைத்தியசாலை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல! இதனையெல்லாம் புரிய வைக்கவேண்டிய பொறுப்பு அங்கீகாரம் பெற்ற ஊடகங்களுக்கே இருக்கிறது. சிலவேளை, அவ்வாறு நினைத்துக்ெகாண்டுதான், தப்பிச் செல்ல எத்தனிக்கிறார்களோ தெரியவில்லை.

இதுபற்றிய தௌிவை மக்களுக்கு வழங்க வேண்டிய தலையாய பொறுப்பை அரசாங்கத்தின் துறைசார்ந்த அதிகாரிகள் ஏற்றுச் செயற்பட வேண்டும். அவர்கள் அடிக்கடி செய்தியாளர்களுக்குத் தகவல்களை வழங்கி, அவற்றைப் பொதுமக்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும். அப்போதுதான், மக்கள் மத்தியில் நிலவும் வீணான பீதியைக் களைய முடியும்.

விசு கருணாநிதி  

Comments