கொரோனா: வாழ நினைத்தால் வாழலாம் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா: வாழ நினைத்தால் வாழலாம்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நமது நாட்டவரையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை வெளிநாட்டவர்களுடன் பணியாற்றிய சில இலங்கையர்களுக்கு இந்நோய் தொற்றியிருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்தவார நடுப்பகுதியில் நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவிய இச்செய்தியை அடுத்து கொழும்பில் பிரபல பாடசாலையொன்றில் ஏற்பட்ட பதற்ற நிலையானது  நாட்டின் சகல பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடிவைப்பதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. 

இத்தீர்மானத்தை அறிந்த மக்கள் அதிலும் குறிப்பாக நகரவாசிகள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை இயன்றளவு விரைவாக பெருமளவில் தமது தாக்கிக் கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியானது நாகரீகமான ஒரு சமூகம் எந்தவிதத்திலும் எதிர்பாராத ஒன்றாகும்.   மனித சமூகத்தின் கெளரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அம்மக்கள் நடந்துகொண்ட விதமானது  வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது.

கொரோனா நோயின் பாதிப்பால்  சகல தொடர்புகளும்   துண்டிக்கப்பட்டு வூஹான் மாகாணத்தில் சிக்கியிருந்த நம்நாட்டு மாணவர்களை அந்நோயின் பாரதூரத்தையும் பாராது மீட்டுவரும் முயற்சியில் மிகுந்த துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும்  விமான சேவை ஈடுபட்டமை ஒட்டுமொத்த உலகத்தினதும் கவனத்தினையும் பாராட்டையும் பெற்றதோடு  உயரிய செயலாகவும்  வர்ணிக்கப்பட்டது.

இன்று அதே இலங்கையைச் சேர்ந்த ஒருசிலர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்காக வத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்.   இன்று இச்செய்தியும் உலகின் பேசுபொருளாகியிருக்கின்றது. முதலில் கூறிய விடயம் நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்த காரணமாக அமைந்த அதேநேரம் இரண்டாவது சம்பவமானது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்திருக்கின்றது.   

ஆரம்பத்திலேயே உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்குமென தெரிவித்திருந்தது. அதனை கவனத்தில் கொண்ட சீனா, வூஹான் மாகாணத்தில் 16 பிரத்தியேக வைத்திய நிலையங்களை அமைத்து துரித சிகிச்சைகளை வழங்கி வந்தது. ஒரு நாடு என்ற வகையில் அந்த நாடு எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்புமிக்க அந்த   செயற்பாட்டின் பலனாக சுமார் ஐம்பது நாட்களுக்குள் அவ்வைத்திய நிலையங்களை அகற்றிவிடக்கூடிய நிலையை இன்று அடைந்திருக்கின்றது. தமது மக்களை காப்பாற்றுவதற்கான சீனாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அச்செய்தி உலகெங்கும் பரவிவரும் பின்னணியில் அந்த முயற்சியில்   தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் அந்நாட்டு ஜனாதிபதியே நேரடியாக அம்மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நமது நாட்டிலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் செயற்திட்டத்தினை அரச தலைமைத்துவத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் வைத்தியர்களும் அரச பாதுகாப்புப் படையினரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவரும் பின்னணியில் நோய்வாய்ப்பட்ட நம்மவர்களையே சிகிச்சைக்காக நமது நாட்டுக்கும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கும் அழைத்துவரப்படுவதை சகிக்காத சிலர் அச்செயற்பாட்டுக்கு பாரிய எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமையானது எவ்விதத்திலும் மானிடத்திற்கு ஒவ்வாத செயற்பாடாகவே அமைகின்றது.  

கொரோனா வைரஸானது நமது நாட்டுக்கு மட்டும் பிரத்தியேகமான ஒரு அனர்த்தமன்றி ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் ஒரு உலகளாவிய அனர்த்தமாகும். ஆகையால் அது படிப்படியாக நமது நாட்டின் பொருளாதாரத்தையும் சர்வதேச பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.  காலப்போக்கில் அதன் மேலதிக  தாக்கத்திற்கும் முகங்கொடுக்க நேரிடும் என்பது தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகும்.

குறிப்பாக  எமது முன்னணி ஏற்றுமதி பொருட்களான தேயிலை மற்றும் ஆடை ஆகியவற்றுக்கு சர்வதேச சந்தையில் இருந்துவரும் கிராக்கி குறையும்பட்சத்தில் நமது பொருளாதாரத்தையும் அது வெகுவாகப் பாதிக்கும். மறுபுறத்தில் பெரும்பாலும் சீன உற்பத்திகள் உள்ளிட்ட வெளிநாட்டு உற்பத்திகளில்  பெரிதும்  தங்கியிருக்கும் ஒரு நாடு என்ற வகையில் அவ் இறக்குமதிகளில் பாரியளவு வீழ்ச்சி ஏற்படுமாயின்   அது நாட்டின் பொருளாதாரம் மீதும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  

இந்தப் பின்னணியில் இச்சவால்களுக்கு முகங்கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டியது மக்களின் தலையாய கடமையாகும். ஆயினும் மேற்குறிப்பிட்ட நிர்சனங்களுக்கு அமைய இலங்கையர்கள் இன்னும் கொரோனாவின் தாக்கம் எவ்வாறானதாக அமையும் என்பதை சரிவர புரிந்துகொள்ளாதவர்களாகவே செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக தேவைக்கேற்ப திட்டங்களை வகுத்து செயற்படுவதற்குப் பதிலாக மக்கள் ஏற்படுத்திய அநாவசிய பதற்றம் காரணமாகவே பாடசாலைகளை உடனடியாக மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சமூகப் பாதிப்பினை பொருட்படுத்தாத பொறுப்பற்றவர்களைப்போல் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொள்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியின்போது  மக்கள் நடந்துகொண்ட விதமானது  நமது சமூகத்தின் சமூகப்பொறுப்பு என்ற விடயத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.  

அத்தோடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி கண்டிருக்கும் நாடுகள் முன்னெடுக்கும் மக்கள் பராமரிப்பு செயற்பாடுகளுக்கு நிகரான வகையில் இலங்கை அரசாங்கமும் தமது மக்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை முப்படையினரின் பாரிய அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவரும் பின்னணியிலும்  அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு பதிலாக அச்செயற்பாட்டை குறைகூறி அவமதிக்கும் விதத்தில் ஒருசிலர் நடந்துகொள்கின்றமை கவலையளிக்கின்றது.

ஆகையால் இக்குறைபாடுகளைத் தவிர்த்து கொரோனா வைரஸ் ஒரு  சர்வதேச அனர்த்தம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தனி மனிதருக்கும் இதன்பால் இருக்கின்ற பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது தற்போதைய கட்டாயத் தேவையாக இருக்கின்றது. ஒரு நாடு என்றவகையில்  சமூகப் பொறுப்புடன் செயற்படும்போதே இத்தகைய பாரிய நெருக்கடிகளுக்கு சிறந்த முறையில் முகங்கொடுத்து வெற்றிகாண முடியுமென்பதை பலதடவை வரலாறு பாடம் புகட்டியிருக்கின்றது. ஆயினும் சுனாமி உள்ளிட்ட கடந்தகால அனுபவங்களைக்கொண்டு பாடம் கற்றுக்கொள்வதற்கோ அநாவசியப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது உருவாகியிருக்கின்ற பிரச்சினைகளுக்கு விடை காண்பதற்கோ ஒரு சமூகம் என்ற வகையில் இலங்கை சமூகமானது இன்னும் தம்மை தயார்படுத்திக் கொள்ளவில்லை தற்போது  மிகுதி தெளிவாக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

இதனாலேயே அரசாங்கம் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பில் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை தரும்படி இந்நாட்டு மக்களிடம் ஜனாதிபதியே நேரடி வேண்டுகோளை   விடுத்திருக்கின்றார். அரச பாடசாலை விடுமுறையை இந்த சூழ்நிலைக்கேற்ற வகையில் உபயோகப்படுத்திக் கொள்வதுடன் சமூகத்தில் அநாவசிய பீதியை ஏற்படுத்தாது உண்மையான தகவல்களின் அடிப்படையில் செயற்பட்டு இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரு நாட்டு மக்கள் என்ற வகையில் ஒன்றுபட்டு செயற்படுவோமாயின் நிச்சயம்  நமது மக்களையும் நாட்டையும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.    

ரவி ரத்னவேல்

Comments