நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத நுகர்வோரின் பங்களிப்பு | தினகரன் வாரமஞ்சரி

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத நுகர்வோரின் பங்களிப்பு

இன்று சர்வதேச நுகர்வோர் தினம்

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு காணப்படும் அனைத்து விதமான உரிமைகளும்   அடிப்படை உரிமைகள் என்ற வரைவிலக்கணத்தில் உள்ளடங்கும். அவ்வாறான உரிமைகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் நுகர்வோர் உரிமையாகும். 

உலகில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பதினைந்தாம் திகதி உலக நுகர்வோர் தினமாக அனைத்துலக  மக்களாலும் கொண்டாடப்படுகின்றது.  ஒரு காலத்தில் நுகர்வோருக்கான எந்த விதமான பாதுகாப்பும் மரியாதையும் அற்றுக்கிடந்த காலகட்டத்தில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி  அமெரிக்க பாராளுமன்றில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு கொண்ட  உரையானது நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமைச் சட்டம் என்பவற்றின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வுரையானது 1962ஆம் ஆண்டு பங்குனி மாதம் பதினைந்தாம் திகதி முழு உலகும்  அறியும் வகையில்  அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடியால்  ஆற்றப்பட்டது.   இவரே நகர்வோருக்கு ஆதரவாக முதன் முதலில்  குரல் எழுப்பிய உலகத்தலைவராகவும் கருதப்படுகின்றார்.

முதலில் யார் இந்த நுகர்வோர் என்பதில் தெளிவு  அவசியம்.  பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்து பயன்படுத்தி அதனை அனுபவிப்பவர்   நுகர்வோர் எனக் கொள்ளப்படுகின்றார்.   பொருள் ஒன்றின் உற்பத்தியாளர் அல்லது மீள விற்பனை செய்யும் நோக்கத்துடன் பொருள் ஒன்றினை அல்லது சேவையொன்றினை செய்பவர்கள் நுகர்வோராகக் கருதப்படுவதில்லை.காசு கொடுத்து பொருள் வாங்குவோர் அல்லது பணம் கொடுத்து சேவையொன்றினை அனுபவிப்போர் நுகர்வோர்களாவர். இவ்வாறு சேவையை பெற்றுக்கொள்ளும் நுகர்வோர் தற்போதைய கால சூழ்நிலையில் பாரிய பிரச்சினைகளுக்கும் அதிகளவு உரிமை மீறல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

நுகர்வோரின் நலன்களை மறந்து அதிக விலை, குறைந்த எடை, பொருட்களில் கலப்படம். தவறாக வழிநடத்தல், பொய்யான விளம்பரம், தகுதியற்ற பொருள் விற்பனை, உற்பத்தி பொருட்களுக்கு உண்மைப்பெயர்களை வைக்காமை போன்றவற்றிலிருந்து நுகர்வோர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். தற்போதைய காலத்தில் நுகர்வோர்  ஏமாற்றப்படுவது உள்நாட்டிலும் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் சர்வதேச ரீதியாகவும் இடம்பெற்று வருகின்றது. ஆகவே அவர்களுக்கு தேசிய மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகவும் பாதுகாப்பு தேவையாக உள்ளது.

பாவனை நோக்கம் குறித்த பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்யும்போது அவர்களுக்கு உரித்தான உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் என்று  அறியப்படுகிறது.   

அந்தவகையில் நகர்வோருக்கு உரித்தான உரிமைகள் காலத்துக்குகாலம் தேவைப்பாடுகள் கருதி மாற்றத்துக்கு உள்ளாகி வந்துள்ளன.  அந்தவகையில் முதன் முதலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி மற்றும் சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனம் இணைந்து நுகர்வோருக்கு ஆதரவான உரிமைகளையும் பாதுகாப்பு விடயங்களையும் முன்வைத்தது. 

அவ்வாறு முன்வைத்த விடயங்களில் முக்கியமானது

உயிருக்கும், சுகாதாரத்திற்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் போதிய பாதுகாப்பினை  அளித்தல் என்பதாகும்.   விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட  பொருட்கள் மற்றும் சேவைகளைப்  பெற்றுக்கொள்வதற்கும் போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளுக்கு உட்பட்ட தரமான நம்பிக்கையான பொருட்களையும் சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமையும் முக்கியமானது.

விளம்பரங்கள் வெளிப்புற தகவல்கள் மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள் மற்றும் உண்மையான விலை சரியான நிறை போன்றவற்றின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்கும் தவறான தகவல்களை தெரிந்து சரியான தெரிவுகளை மேற்கொள்வதற்கான உரிமை.  ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள் சேவைகள் தொடர்பாக வெளியிடும் அறிவித்தல்கள், நியாய விலைகள்,  பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்துக்கொள்ளும் உரிமை போன்றவற்றை மிக முக்கியமான நுகர்வோர்   உரிமைகளாக கருதப்படுகின்றன.

 அடிப்படை தேவைகளை பெற்று அதனை நிறைவு செய்யும் உரிமை, நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொள்ளும் உரிமை, சூழல் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளும் உரிமை, சுமுகமான சூழலில் வாழும் உரிமை போன்றவற்றையும் குறிப்பிடலாம். 

இவ்வாறான பல உரிமைகளை அரசியலமைப்பின் ஊடாக பெற்றிருக்கின்ற போதிலும்  அவ்வுரிமைகளின் முக்கியத்துவத்தினை அறிந்திருப்பது எமது தலையாய கடமையாகும். அந்தவகையில் நுகர்வோர் பொருட்களை சேவைகளையும்  விலையினூடாகவே நுகர்வு செய்கின்றனர். ஆகவே அவர்கள் இதனூடாக திருப்தியடைதல் முக்கியமாகும்.  அத்தோடு நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல் வேண்டும், போட்டியான சூழலிலும் நுகர்வோர் பாதுகாக்கப்படல் வேண்டும்.  அத்தோடு நுகர்வோரது உடல், உள நலன்கள் பாதிப்படையாதவாறு திருப்திப்படுத்தப்பட வேண்டும். 

ஆகவே தற்போது நிகழும் நுகர்வோருக்கு உகந்ததல்லாத பொருட்களை சந்தைப்படுத்துவதையும், நியாயமற்ற  வியாபார நடைமுறைகளையும்  இருந்தும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு  தூணாகத் திகழும் நுகர்வோர்களை பாதுகாப்பது அரசுகளின் கடமையாகும்.

மொனறாகலை 
ஜயகுமார் ஷான்

Comments