நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே! சென்ற வாரத்தில் இருந்த சங்கடங்கள் இன்னும் இரண்டு  நாட்களுக்குத் தொடரத்தான் செய்யும். திங்கள் மாலை 05.02வரை சந்திரன்  அட்டமத்தில் இருக்கும் காலத்தில் வாகனம் சம்பந்தமான செலவுகள், சிறு விபத்துக்கள்,  திருத்தங்கள் வரும். அன்னை வழியில் மருத்துவம் செய்ய நேரிடும். வீடும் செலவுகளை இழுத்து வைக்கும். ஆனால் இவையெல்லாம் பெரிய பாதிப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  வருமானத்தில் இடையூறுகள் இல்லை, கொடுக்கல் வாங்கல்களில் தெளிவாக நடந்து நல்ல  பெயர் வாங்கிக் கொள்வீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள்  வளர்ச்சியாகும். குடும்பமும் சுற்று சூழலும் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்.  

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! தட்டுத் தடுமாறி தலை குப்புற விழுந்தவனை, குதிரை ஏறி, முகுகில்  மிதித்த கதையாகத்தான் உங்கள் நிலை இப்போது இருக்கிறது. தொழில் வகையில்  நஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டிய சங்கடங்கள் இருக்கின்ற போது, தேக ஆரோக்கியமும் தனது கை வரிசையைக் காட்டி  நிம்மதியைப் பறிக்கும். மனதில் உறுதி குலைந்து, ஒன்றும் சொல்லக் கூட முடியாத  சூழ்நிலையில் தொந்தரவுகள் தலையெடுக்கும். இப்படியான நேரத்தில் உறவுகளுக்கு விருந்து  உபசாரம் செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவீர்கள். மனதில் பாரமும்,  முகத்தில் புன்னகையுமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். 

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! சொல்லித் திரியும் துன்பங்கள் அல்ல உங்களது. அவைகளை  மனதின் அடித் தளத்தில் ஆழப் புதைத்து, ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் மறைக்க, மறக்க வேண்டியவைகள். தீதே செய்பவர்களை நம்பி, நன்மைகளை எதிர்பார்த்து ஏமாந்தவைகளை எப்படி வெளியில் சொல்வது? எனினும் மற்றவர்களுக்காக சந்தோஷமாகவும், சிரித்த முகத்துடன் உலா வர வேண்டியது அவசியமாகிறது. தொழிலில் இருக்கும் ரகளைகளும், கலகங்களும் அவ்வளவு எளிதில் தீர்ந்து போக வாய்ப்புகள் இல்லை. என்றாலும் தொழில் முடக்கம் ஒரு பிரச்சினையாகவே இருக்கும்.  இவைகளுக்கும் சேர்த்து குடும்பத்திலும் வேண்டிய அளவு தொந்தரவுகள் முளைக்கும். தானாக உருவாகும் இந்த விவகாரங்கள் பெரிதாக வளர்ந்து தாங்க முடியாத தொந்தரவுகளைத் தரும். 

கடகம்

கடக ராசி அன்பர்களே! மன உளைச்சல் கொஞ்சமும், உடல் ஆரோக்கியக் குறைவு சிறிதுமாக இந்த வார பயணத்தைத் தொடங்க நேரிடும். வழக்கம்  போல் செலவுப் பட்டியல்  நீளமாகவும், அதிக பணத்தை அள்ளிச் செல்லும் வகையிலேயே அமைந்திருக்கும். வருமானம்  உங்கள் நேக்கங்களை நிறைவேற்றும் முறையில் இருப்பதனால் கவலைப்பட ஏதுக்கள் இல்லை. செய் தொழிலிலும் சிக்கல்கள் வராது. கிடைக்கும் சுகத்தை அனுபவித்துக் கொண்டு, அதோடு இணைந்து வரும் விருந்து உபசாரங்களையும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்வதே ஒரே வழியாகும். சில அபூர்வ சிந்தனைகளும், திட்டங்களும் மனதில் உருவாக இடமுண்டு. அவைகளை நடைமுறைப்படுத்த இப்போது முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் அவைகளின் பலன்களைப் பெற முடியும். இல்லறத்தில் கலவரங்கள் வர இடமுண்டு.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! நிதானப் போக்கும், சமரச நோக்கும் உங்களுக்கு ஈட்டித்  தந்திருக்கும் கெளரவத்தினால், தலை நிமிர்ந்து வாழக் கிடைத்திருக்கும். ஆனால் உள்ளுர  பல இடைஞ்சல்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், அவை லேசில் வெளியே தெரியப் போவதில்லை. எதையும், தாங்கிக் கொள்ளவும், எதிர்த்து வெல்லவும் போதுமான தைரியமும், நுண்ணிய அறிவுத் திறமும் வாய்க்கப் பெற்றவர்கள் தாங்கள். மனதில் உள்ளிருக்கும் பீடைகள் ஒரு நாளும் உங்களை வெல்லாது என்பதும் நிச்சயமே. தொழில் அபிவிருத்தி அடைய இடமுண்டு. அதே நேரம் இருக்கும் சொத்துக்களைக் கையாள நேரம் போதாமல் இருக்கும். ஆனால், புதிதாக முதலீடுகளைச் செய்யாவிட்டாலும், தற்போது நடக்கும் தொழிலில் திருப்தி கொள்ளாது மாற்றங்களையும், புதிய உத்திகளையும் புகுத்துதல்  அவசியமாகும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! கதவைத் தட்டும் கவலைகளை எப்படி மறக்க முயற்சி செய்ய  முடியும்? கை நிறையக் காசு கிடைக்க வாய்ப்புகள் வந்தாலும், அதைத் தொடர்ந்து  துன்பங்கள் தொடரத்தானே செய்கின்றது? சந்திப்பவர்களை நண்பர்களா விரோதிகளா என்று  எப்போதும் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள், அது பலவகைகளில் உங்களுக்கு  உதவும். எதிரிகள் உங்களோடு இணைந்தே உங்களுக்குத் துரோகம் இழைக்க முற்படுவார்கள். அவர்களை இனம் கண்டு ஒதுங்குவது, ஒதுக்குவது உங்களது கடமையாகும். வேண்டாத விவாதங்களில் மூழ்கி நஷ்டத்தை அடைவது நலமா என்றும் யோசித்து முடிவெடுங்கள். அடிப்படை விவகாரங்களில் சந்தேகப்படுவதும் பல முரண்பாட்டினை உண்டாக்கும். நிதானமாக நடப்பதும் முக்கியமே. 

துலாம்

துலா ராசி அன்பர்களே! முயற்சிகளில் சிக்கல்கள் வரும் போது சம்பந்தம்  இல்லாதவர்களை முறைத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அப்படிச்  செய்தால் மட்டுமே உங்களுக்கு இருக்கும் மதிப்பு மரியாதைகளைக் காப்பாற்றிக் கொள்ள  முடியும். வருமானங்கள் என்று வரும் போது அவை தாராளமாய்க் கிடைக்கவே வாய்ப்புள்ளது. செயல் முறைகளில் வரும் கோளாறுகளால் நஷ்டங்களும் தோல்விகளும் வரக்கூடும். நுண்ணிய அறிவாற்றல் உடைய தாங்கள் திட்டங்களை வகுக்கும் போது கவனத்துடன் இயங்குவதும் முக்கியமே. சுற்றுச் சூழலை கவனித்தே வியூகங்களை அமைக்க வேண்டும், போட்டிகள் நிறைந்த உலகில் இது அத்தியாவசியமாகும். குடும்பங்களில் குழப்பங்களை நிச்சயமாக எதிர்பாருங்கள், அலட்டிக் கொள்ளாவிட்டால் அவை நன்மைகளாகவே முடிவுரும். பெண்களால் வரவிருக்கும் வம்புகளில் தலையிடாமலே தவிர்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! பல தில்லு முல்லுகளைக் கட்டாயம் சந்திக்கும் சூழ்நிலையே  தென்படுகிறது. எதையும் விட்டுக் கொடுக்கால் அசட்டுத் துணிவுடனேயே காரியங்களில்  ஈடுபடுவீர்கள். சிலவற்றில் வெற்றிகளையும் அடைவீர்கள். முயற்சிகளின் தோல்விகளாலும்,  பண நஷ்டங்களாலும் அடிபட அடிபட, அடி மனதில் பயமும் பீதியும் தலை காட்டத் தொடங்கும். ஆனால் வீரமும் தைரியமும் கொண்ட உங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்லவே. தேவையான காலங்களில் உதவிகளைச் செய்யவோ, வழி காட்டவோ யாரும் இல்லை என்பதும் யோசிக்க வேண்டிய சமாச்சாரமாகும். தன்னந்தனியாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் பல தடவைகள் ஏற்பட்டமாதிரியே இம்முறையும் நடக்கும். எவ்வளவு சிரமங்களைச் சந்தித்தபோதும், தொழிலில், வருமானங்களில் உங்கள் கவனம் சிதறாமல் இருப்பதால் அவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! எல்லாவற்றையும் இழந்து விடுவேனோ, தெருவில் வீழ்ந்துவிடுனோ  என்கின்ற மாதிரியான பிரமை மனதில் எழத்தொடங்கியிருக்கும். இருந்த கொஞ்ச நஞ்ச  நம்பிக்கையும் தோல்விகளாலும் நஷ்ட்டங்களாலும் சிதறி, சின்னாபின்னப்பட்டுப்  போயிருக்கும். ஆனாலும் விரக்தி மனப் பான்மை மட்டும் மேல் எழும்பாமல் ஏதோ ஒரு சக்தி  உங்களை வழி நடத்தும். அது கடைசி வரை காப்பாற்றும் வல்லமையும் கொண்டதே. நோயும்  தொல்லைகள் தரும், குடும்பத்தில் உள்ளவர்களும் கட்டுப்பாட்டை மீறி நடந்து  பிரச்சினைகளை எழுப்புவார்கள். தொழில் துறை என்பது எப்படியோ நன்றாகவே நடக்கும்.  ஊழியர்கள், உதவியாளர்கள் முழு ஒத்துழைப்புத் தராவிட்டாலும், ஓரளவு நன்றாகவே நடந்து  கொள்வார்கள்.  

மகரம்

மகர ராசி அன்பர்களே! ஏராளமாகப் பணம் வருகிறதே தாராளமாக முதலீடு செய்யலாம் என்று  நினைக்கும் போது, செலவுகள் பெருகி, கரை கடந்து போய்க்கொண்டிருக்கும். தவிர்க்க  முடியாத கோவில் திருப்பணிகளும் வந்து நிற்கும். குடும்பமோ நீண்ட பட்டியலைத் தயாராய்  வைத்திருக்கும். எதையாவது முடியாது என்ற மறுத்தால், பின் விளைவுகள் பெரும் தொந்தரவுகளாக இருக்கும். மிச்சம், மீதம் என்பது நடக்காத கதைபோலவே, கனவாகத் தோன்றும். போதாக் குறைக்கு, தொழில் தொந்தரவுகளை உண்டாக்கி மனதைக் குழப்பி பலர் குளிர் காய்வார்கள். இவைகளில் இருந்து தப்பிப் பிழைக்க முயலும் போது என்னை மறந்து விட்டாயா என்று உடலும் தன் பங்காக மருத்துவச் செலவுகளை இழுத்து வைக்கும். அரச அதிகாரிகள் மட்டும் கருணை காட்டுவார்கள். வேண்டியவைகளைச் சரியாகச் செய்து முடிக்க உதவுவார்கள். நீண்ட காலமாகக் தேங்கிக் கிடந்தவைகளை ஒரு மாதிரியாக முடித்துக் கொள்ளும் சாதகமான நிலை இருக்கும். 

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! எடுக்கும் முயற்சிகள் பல நல்ல வெற்றிகளைத் தரும்.  அதிகாரங்களையும், பண வரவுகளையும் தரத் தக்கவல்ல பல காரியங்கள் எளிதில் நடந்தேறும். இதற்கு அனுசரனையாக அரசு அதிகாரிகளும் இருப்பார்கள். என்றாலும் சத்ருக்களின் கை ஓங்கவும், சிக்கல்களைச் சந்திக்கவும் வரலாம். முக்கியமாகச் சிலர் ஒன்று சேர்ந்து நுணுக்கமாகத் திட்டமிட்டு உங்களை வலையில் சிக்க வைக்க முயல்வார்கள், அவமானப் படுத்தக் காத்திருப்பார்கள், எச்சரிக்கை அவசியம். குடும்ப விஷயங்களில் பிறரின்  செல்வாக்கை அனுமதிப்பது தொந்தரவுகளைக் கொண்டுவரும். உறவினர்களின் வேஷங்களைப்  புரிந்து, அதற்கேற்றாபோல் நடிப்பதே நல்ல உத்தியாகும். பொருளாதார, சொத்து  விவகாரங்களில் உங்கள் ஸ்திர நிலையைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களே  அவர்களாவர்.

மீனம்

மீன ராசி அன்பர்களே! இருக்கின்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வெற்றி  கொள்வதைவிட, அதிலிருந்து ஒதுங்கித் தப்பித்துக் கொள்வது எப்படி என்று மனம்  சிந்திக்கத் தொடங்கி இருக்க வாய்ப்புகள் அதிகமே. சத்ருக்கள் அதிகமாகிக் கொண்டே  போகிறார்கள், அவர்களுக்குச் செல்வாக்கும் பெருகிக்கொண்டே போகிறது,  நம்முடன்    இருப்பவர்களை நம்புவதும் கடினமாக இருக்கிறதே என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது, இருப்பினும் எதையும் விட்டுக் கொடுக்க மனமும் ஒப்பவில்லை என்பதும் உண்மையே. தொழில் தொலைந்து போய் நடுத்தெருவிற்கு வர நேரலாம் என்றும் தோன்றும், நம்பிக்கையுடனும், அதிவேகமாகவும் செயல் பட்டு நிலைமைகளைச் சரி செய்வதே இப்போதைய அவசரத்தேவையாகும். விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இப்போது சுற்றி நிற்பார்கள், அவர்களும் கழன்று போய்விடக் கூடிய அபாயம் உள்ளது.

Comments