மிளகு பயிர்செய்கை எதிர்கொள்ளும் ஆபத்து | தினகரன் வாரமஞ்சரி

மிளகு பயிர்செய்கை எதிர்கொள்ளும் ஆபத்து

மசாலா பொருட்களின் அரசன் என பெயர்பெற்ற மிளகு உலகில் அதிகமாக பாவிக்கப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். இலங்கையின் வருட மிளகு உற்பத்தி 30,000மெற்றிக் தொன்னாகும். இலங்கை பூராவும் உள்ள 75,000ஏக்கரில் மிளகு பயிரிடப்படுகின்றது. தரத்தில் உயர்ந்த மிளகு எமது தாய் நாட்டிலேயே விளைகின்றது என்ற பெருமையை பாதுகாக்க நோய் மற்றும் பூச்சிகள் பாதிப்பில்லாத மிளகை உற்பத்தி செய்ய வேண்டும்.  

இலங்கையின் அதிகமான பிரதேசங்களில் மிளகு கொடிகள் திடீரென வாடி இலைகளும் காம்புகளும் உதிரும் தொற்று நோய் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனை கடும் மழையின் பின்னர் ஏற்படும் வரட்சியின்போதே காணலாம்.  

இது மிளகு பயிர்செய்கையில் விரைவில் வாடும் நோய் என (Quick wilt) அறியப்பட்டுள்ளது. மழைபெய்து ஒரு மாதத்தின் பின்னர் இந்நோய் பரவும் அவதானமுள்ளது. இதன் முக்கிய அறிகுறிகள் மிளகு கொடி திடீரென வாடுவதும் இலைகள் காம்புகள் உதிர்வதுமாகும். “பைடோப்தொர கெப்ஸிஸி” (Phytopthora Capsici) என்றும் பூஞ்சணம் மூலமே இந்நோய் பரவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

விரைவில் வாடும் நோய் முதலில் பரவுவது மிளகுகொடியின் அடியிலும் வேர்தொகுதியிலாகும். அது நிலத்துக்கு அடியில் நடைபெறுவதால் ஆரம்பத்தில் இந்நோய் அடையாளங்களை காண முடியாது. ஆனால் சில நாட்களில் மிளகுக் கொடியின் இலைகள் மஞ்சள் நிறமாகும். மஞ்சள் நிறமான இலையில் கறுப்பு நிறங்கள் அடையாளங்கள் காணப்படுவது இந்நோயின் ஏனைய அடையாளங்களாகும்.  

பின்னர் இந்த புள்ளிகள் இலை முழுவது பரவும். இந்நோய்த் தொற்று ஏற்பட்டு இரண்டு மூன்று வாரங்களில் கொடி இறந்து போகின்றது.  

இந்நோய் அடையாளங்களைக் கண்டவுடன் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில் காணியில் தண்ணீர் தேங்கி நின்றால் உடனடியாக வழிந்தோட செய்ய வேண்டும். அதேபோல் மழைக்காலங்களில் பயிருக்கு நிழலை குறைத்தல், மிளகுக் கொடியை சுற்றியுள்ள கைகளை கட்டுப்படுத்தல் அவசியமாகும். மேலும் மிளகு கொடியின் நில மட்டத்திலிருந்து ஒரு அடி வரையான குறுக்காகவுள்ள கிளைகளை அகற்றுவது முக்கியமாகும். அதே போல் வேர், கீழே விழுந்துள்ள இலைகள், என்பவற்றை அகற்றி எரிந்து விட வேண்டும்.  

நோயால் பாதிக்கப்பட்ட கொடிகள் மற்றும் அதன் அண்மையிலுள்ள நோயற்ற கொடிகளின் வேரில் மென்கோசெப் 64% , 8%வீதமும் கொண்ட பூஞ்சன நாசினியில், 25கிராமை 10லீற்றர் நீரில் கரைத்து கிடைக்கும் கலவையை கொடியின் அடிபாகம் நன்றாக நனையுமாறு பூவாளி மூலம் தெளிக்கவும். இதற்காக பூஞ்சன நாசி கலவை 3-4லீற்றர் போதுமானதாகும். கிருமிநாசினியை தெளிக்கும் போது தெளி கரு வியை பாவிக்கக் கூடாது. அதற்கு காரணம் அதன்மூலம் அதிக அழுத்தம் ஏற்படுவதால் கிருமி நாசினி கொடியிலிருந்து அப்பால் அடித்துச்செல்லப்பட்டு வீண் விரயமாகின்றது. இதனை இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் தெளிக்க வேண்டும் கிருமி நாசினியை பாவிக்கும் போது கொடியைச் சுற்றி உலர்தன்மை காணப்பட்டால் நீரினால் நனைக்கவும் அவ்வாறு செய்த பின்னர் மறுநாள் கிருமி நாசினியை தெளிப்பதால் சிறந்த பெறுபேறு கிடைக்கும்.  

மிளகுப் பயிர் செய்கையில் ஏற்பட்டுள்ள இந்த நோய் தொற்று நிலைமையை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை ஏற்றுமதி விவசாய திணைக்களம் இலவசமாக வழங்குகின்றது. அதே போல் களப்பயிற்சிகளையும் நடத்துவதோடு நோய் தொற்றிய காணிகளை பரிசோதித்து நோயை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

அதைத் தவிர நோய்த் தொற்று ஏற்பட்ட மிளகுச் செடிகளை ஆய்வுக்குட்படுத்தி அறிக்கைகளைப் பெறவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மிளகு கன்று நட்டு நோய் தொற்றிய கொடிகளிலிருந்து நடவுக்கான பகுதியை பெறுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாற்று மேடைகளிலும் நோய் தொற்றக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். இவ்வாறான தொற்று நோய் நிலைமையின் கீழ் மிளகு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் சரியான விழிப்புணர்வுடன் நோயை அறிந்து கொண்டு விரைவாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏற்றுமதி விவசாய திணைக்கள மாத்தளை மத்திய ஆய்வு நிலையத்தின் தாவர நோய் ஆய்வு பிரிவின் பிரதிப்பணிப்பாளர் (ஆய்வு) ரோஹன விஜேகோன் மிளகு உற்பத்தியை பாதிக்கும் முக்கிய நோயான விரைவில் வாடும் நோய் தற்போது மீண்டும் நாட்டின் சில பாகங்களில் விரைவாக பரவி வருகின்றது. பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு பரவியுள்ளது.  

விசேடமாக இம் மாவட்டங்களில் மிளகுப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள பயிர்செய்கையாளர் என்றால் நோய் மற்றும் கிருமிநாசினி தொடர்பாக கவனமெடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

தமிழில் வீ.ஆர். வயலட்

Comments