வீர மரணமடைந்த மொனரவில கெப்பெட்டிப்பொல | தினகரன் வாரமஞ்சரி

வீர மரணமடைந்த மொனரவில கெப்பெட்டிப்பொல

மத்திய மலைநாட்டுச் சிங்களவர்களின் மனோநிலையிலிருந்து வேறுபட்டவனாகக் காணப்பட்டதோடு, அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்ப்பதொன்றே தமது குறிக்கோளாகக் கொண்டு துணிவுடன் போராடிய மாவீரன் மொனரவில கெப்பெட்டிப்பொல ஆங்கிலேயர்களின் கைதியாகி கண்டி இராணுவ நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டான். தனது ஆவி பிரியும் முன்னர் புனித தளதா மாளிகையை தரிசிக்க விரும்பிய அவனது விருப்பத்தை நிறைவேற்றியது அரசு. நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கும், சிறையிலிருந்து தளதா மாளிகைக்கும் அழைத்துச் செல்லப்பட்ட கெப்பெட்டிப்பொல அடுத்து கொலைக்களம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டான். 

கெப்பெட்டிப்பொலையின் சிரம் கொய்யப்பட தெரிவு செய்யப்பட்டஇடம், அதற்கு முதல் நாள் எல்லேபொல சிரச்சேதம் செய்யப்பட்ட இடமாகும். 

முதலில் தண்டனையை ஏற்றுக்கொள்வதற்கு கெப்பெட்டிபொல தயாரானான். தனது இறுதி நேரத்தில் மலைநாட்டு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க கெப்பெட்டிப்பொல தவறவில்லை. தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்ட கெப்பெட்டிப்பொல தன் முன் கொண்டுவரப்பட்டகுவளை நீரினால் முகம் வாய் கழுத்துபோன்ற அங்கங்களைக் கழுவி துப்புரவானான். அடுத்து தனது தலைமுடியை வாரி அதனை உச்சந்தலையில் முடிந்து கொண்டான். பின்னர் புனித தளதா மாளிகை முகம் பார்த்து அமர்ந்து கொண்டான். இதுவரை நேரமும் தனது இடுப்பில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடியைக் கையில் எடுத்த கெப்பெட்டிப்பொல அதில் அடங்கியிருந்த பாளி மொழியிலான சுலோகங்களை உச்சரிக்கலானான். 

பதுளையில் தாம் பணிபுரிந்த போது தனக்கு உற்ற நண்பனாக விளங்கிய சோவர்ஸ் தன்னிடம் காட்டிய கருணை மிக்க நட்பை நினைவு கூருமுகமாக அவ்வோலைச் சுவடியை சோவர்சுக்கு அன்பளிப்பு செய்வதாகக் கூறி அவனிடம் கையளிக்கமாறு அங்கிருந்த இராணுவ அதிகாரியிடம் கொடுத்தான் கெப்பெட்டிப்பொல. 

அதனைத் தொடர்ந்து சிரச்சேதத்துக்கு தயாரான கொலைஞனைப் பார்த்து தாம் புத்தபகவானின் துதியைப்பாடும் போது சிரத்தை வெட்டுமாறு கேட்டுக்கொண்ட கெப்பெட்டிப்பொல. அதன்படி ‘அரஹஸ்’ என்னும் சொல் கெப்பெட்டிப்பொலையின் வாயிலிருந்து வெளிவந்த நேரத்தில் அளுகோசுவின் வாள் வீச்சு கெப்பெட்டிப்பொலையின் கழுத்தைப் பதம் பார்த்தது. ஒரே வெட்டின் மூலம் சிரம் துண்டாடப்படாமை காரணமாக இரண்டாவது வெட்டினையும் ஓங்கி வெட்டி அவன் தனது கடமையை நிறைவேற்றினான். 

உடம்பிலிருந்து துண்டாடப்பட்ட தலையை அள்ளியெடுத்த அலுகோசு அதனை கெப்பெட்டிப்பொலையின் மார்பின் மீது வைத்தான். 

அடுத்தப்படியாக சிரச்சேதத்திற்கு முகம் கொடுக்கும் தருணம் மடுகல்லேயை நோக்கி நகர்ந்தது. தனது தலைமுடியை வாரி முடிந்து கொள்வதற்கோ, சிரச்சேதத்திற்கு ஏற்றவாறு தனது தலையை பணித்துக்கொள்ளவோ மடுல்கலைக்கு திராணியிருக்கவில்லை. கொலைக்களத்தின் பிறிதொரு சேவகன் மடுகல்லேயின் தலைமுடியை முடிவதற்கும், கழுத்தை பணிப்பதற்கும் உதவினான். நடுங்கிய குரலில் ஒரே தடவையில் தனது கழுத்தை வெட்டி துண்டாடுமாறு கேட்டுக் கொண்டான் மடுகல்ல. எனினும் இரண்டாவது வெட்டு விழும்வரை மடுல்கல்லேயின் சிரம் உடம்பிலிருந்து விலகவில்லை. 

இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கணடுகளிக்க கண்டி மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து பெருந்தொகையான ஆங்கிலேயர்கள் வருகை தந்திருந்தனர். சத்திர சிகிச்சை வைத்தியராக இராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஹென்ரி மார்ஷலும் இக்காட்சியைக் காண சமூகமளித்திருந்தான். 

கெப்பெட்டிப்பொலையின் அதிசயிக்கத் தக்க வீரத்தையும் துணிவையும் வெகுவாக பாராட்டிய ஹென்ரி மார்ஷல் துண்டாடப்பட்ட இரு தலைகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டான். இத்தகைய துணிவும், வீரமும் கொள்வதற்கு மூளையில் ஏதேனும் விசேட சக்தி இருத்தல் வேண்டுமென டாக்டர் ஹென்ரி மார்ஷல் கருதினான். இது பற்றி பரிசோதனை மேற்கொள்ள விரும்பிய மார்ஷல் இருவரின் தலைகளையும் எடின்பரோவில் உள்ள மண்டை ஓடு பற்றிய பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைத்தான். அதன்மூலம் இவர்களின் விசேட தன்மையை தெரிந்து கொள்ளலாமென நம்பினான். 

இது பற்றி டாக்டர் ஹென்ரி மார்ஷல் எழுதிய சரித்திர முக்கியத்தும் வாய்ந்த நூலில் குறிப்பிட்டுள்ளான். பிற்காலத்தில் கெப்பெட்டிப்பொல தெய்வநிலை அடைந்துள்ளதாக நம்பிக்கை கொண்ட மத்திய மலைநாட்டு சிங்கள மக்கள் “மொனரவில் அளுத் தெவியோ” என கெப்பெட்டிப்பொலையை நினைவில் நிறுத்தி வழிபடலாயினர். 

ஆங்கிலேயர்களின் குறிப்பொன்றின் பிரகாரம் கண்டி வாவியை அண்மித்த ஓர் இடத்தில் கெப்பெட்டிப்பொல மற்றும் மடுகல்லேயின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

சடலங்களை அடக்கம் செய்தபின்னர் பிலிமத்தலாவையையும், இஹகம தேரரையும் கொழும்புக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது ஆங்கிலேய அரசு. பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் பிலிமத்தலாவையும் இஹகமையும் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

ஒருசாரார் உயிர்ப்பிச்சைக்காக ஆங்கிலேயர் முன்னால் மண்டியிட்டு சரணாகதியடைந்தனர். இத்தகைய துரோகக் கும்பல்களின் ஒத்தாசையுடன் நவீன துப்பாக்கி முதலிய ஆயுதங்களைக் கொண்டு மத்திய மலைநாட்டின் இறைமையைப் பறித்துக் கொள்வதில் ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் வெற்றி கண்டான். 

வெற்றிக்களிப்பில் மிதந்த பிரித்தானிய மன்னனின் பிரதிநிதியாகிய ஆளுநர் நவம்பர் மாதம் 28ஆம் திகதி களனி கங்கைக் கரையை அடைந்து படகு மூலம் கொழும்பு வந்தான். களனி கங்கை வழியே கொழும்புக்கு வரும் ஆளுநரின் வெற்றியைப் பாராட்டுமுகமாக பெரும் வரவேற்புபசாரம் கொழும்பு பாலத்துறை (கிராண்ட்பாஸ்)யில் ஏற்பாடாகியிருந்தது.

தோணிக்கரையில் சுமார் ஏழாயிரம் பேர் கூடியிருந்தனர்.

இதுபற்றிய தகவல் பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளுக்கான அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இக்கடிதத்தை ஆளுநர் பிரவுன்றிக் தன்கைப்பட எழுதியதோடு தனது திறமைபற்றி வானளாவ புகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

கொழும்பு பாலத்துறையிலிருந்து ஆளுநர் மாளிகை (இராணி மாளிகை) பாதை வரை இருமருங்கிலும் குழுமியிருந்த சுதேசிகளின் மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தாம் மனமார ஏற்றுக்கொண்டதாகவும் அம்மடலில் பிரவுன்றிக் குறிப்பிட்டுள்ளான். 

ரொபர்ட் பிரவுன்றிக் எனப்படும் ஆக்கிரமிப்பு சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி தன்மீது சுமத்தப்பட்டிருந்த பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றினான். இந்நாட்டின் சுயநலப்பேர்வழிகளாகிய சிங்களவர்கள் பிரிவுன்றிக்கின் முயற்சிக்கு உறுதுணையாகினர். 

இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக் தமது சாம்ராஜ்ஜியத்திற்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக பிரித்தானிய மாமன்னர் அவருக்கு கௌரவ பட்டமும் பதவிகளும் வரப்பிரசாதங்களும் வழங்கி கௌரவித்தார்.   

சி.கே. முருகேசு
தகவல்:
கண்டியின் சுதந்திர போராட்டங்கள்  
தயாவன்ச ஜயக்கொடி

Comments