கொரோனா தொற்று 10ஆக அதிகரிப்பு; இரு வாரகாலம் சுமுக நிலை பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா தொற்று 10ஆக அதிகரிப்பு; இரு வாரகாலம் சுமுக நிலை பிரகடனம்

- சமூக ஒன்றுகூடல்கள், கூட்டங்களுக்கு தடை
- மத வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகளை இடைநிறுத்தவும் அறிவுறுத்தல்
- 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பு
- வீடுகளில் வேப்பிலை பாரம்பரியங்களை கையாளுமாறு கோரிக்கை

மக்கள் அதிகமாக கூடும் பொது நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் இரண்டுவாரகாலத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இதுதொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள இரண்டு வாரகாலத்திற்கு அதிகமாக பொது இடங்களில் கூடவேண்டாமென அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்படடுள்ளது. தனிப்பட்ட ரீதியில் நடத்தப்படும் கட்சி மற்றும் கொண்டாட்டங்கள் முதலானவற்றை எதிர்வரும் 2 வார காலத்திற்கு நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி நேற்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் வைபவம் அல்லது கூட்டங்களுக்குப் பொலிஸாரின் அனுமதி பெறப்படவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு அனுமதி வழங்க மாட்டார்கள். எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவந்த சூழலில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்கள் காரணமாகவே கொரோனா வைரஸிலிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடிந்துள்ளது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுப்படுத்தும் வகையிலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் வகையிலும் நாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நினைத்துவுடன் விமான நிலையத்தை மூடிவிட முடியாது. அது பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். நோய் பரவலின் தீவிர தன்மையின் அடிப்படையிலேயே நாம் தீர்மானங்களை எடுத்துள்ளோம். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. அதன் பிரகாரம் சில முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது. சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை எற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நாட்டில் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக செயற்பட்டுவரும் தேசிய செயலணியின் தீர்மானத்துக்கு அமைய அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஈராக் உட்பட பல நாடுகளிலிருந்த இலங்கைக்கு பயணிகள் வருகைதர தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரேனா வைரஸ் உள்நாட்டில் எற்படவில்லை. தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களினாலேயே இந்த நோய் இங்கு பரவ ஆரம்பித்தது. இதனாலேயே இந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களை முதலாவதாக சுகாதார அதிகாரிகள் மூலம் கண்காணிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இதனைத் தொடர்ந்து இவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதற்காக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய முகாம்களையும் அமைத்தோத்துள்ளோம். என்றாலும், இந்த இரண்டு முகாம்களும் அமைக்கப்படுவதற்கு முன்னர் சிலர் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து இலங்கை வருகைந்துள்ளனர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, எதிர்வரும் இரண்டுவார காலத்திற்கு அதிகமாக மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார்.

இங்கு உரையாற்றிய புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர,

கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய சகல வழிபாட்டு நிகழ்வின் போது பக்தர்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்துக்கொள்வதற்கு முடிந்த வரையில் முயற்சிக்குமாறு அனைத்து மத தலைவர்களிடமும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களுக்கும் நாம் இதனை அறிவித்துள்ளோம். நாட்டு மக்களின் சுகாதார நலனை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதேபோன்று திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும். கொரோனா தொற்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இடம்பெறக்கூடும் என்பதினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளயிடுகையில்,

கொரோனா தொடர்பில் மக்களுக்குத் தெளிவுப்படுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுத்து வருகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் செய்திகளின் அடிப்படையில் மாத்திரம் மக்களுக்கு தெளிவுப்படுத்துமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

தொற்றுநோய்கள் தொடர்பில் எமக்கு வரலாற்றுக்காலம் தொட்டு பல அனுபவங்கள் உள்ளன. வீடுகளின் கதவுகளில் வேப்பிலை தொங்க விடுவது முதல் ஏதும் தொற்று நோய் ஏற்பட்டால், பிள்ளைகளைத் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை எமது தாய்மார்கள் முன்னெடுத்துள்ளனர். அந்த முறைமைகளை பின்பற்றுமாறு மக்களிடம் கோருகின்றோம்.

நாட்டில் எவ்விதமான அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தமிழ், சிங்கள புத்தாண்டு முதல் பல மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களும் கையிருப்பில் உள்ளதாக புறக்கோட்டை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக சங்கம் அறவித்துள்ளது. ஆகவே, அவரும் அச்சப்பட வேண்டாமெனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் இரண்டு வாராகாலத்திற்கு நாடு சுமுகமான நிலையில் (Cool Down) இருக்க வேண்டும். அதற்காக அதிகமாக மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. சமூக ஒன்றுகூடல்களூடாகவே ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று அதிகரித்தது. ஆகவே, நாம் போதியளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எதிர்வரும் இரண்டுவாரகாலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டால் நோய்த் தொற்றை நாம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஏற்கனவே 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தபோதே இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளது. அவர்கள் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மறைத்து நாடுக்குள் வந்துள்ளனர். அதனாலேயே கந்தக்காடு முகாமில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் நாத்தாண்டி பிரதேசத்திலும் கந்தக்காடு விசேட வைத்திய முகாமிலுள்ள ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாத்தாண்டியாவில் 43 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் இத்தாலியிலிருந்து வருகை தந்தவராவார். தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்னர் இவர் இலங்கைக்கு வந்துள்ளார். தற்போது குருணாகலை வைத்தியசாலையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கந்தக்காடு வைத்திய முகாமில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்தவராவர்.

கந்தக்காடு முகாமிலுள்ள இரண்டு பேருக்கும் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். என்றாலும் நோய் தொற்றை மறைத்துள்ளனர். இலங்கை வந்தபின்னர் விமான நிலையம் உட்பட சிலருடன் இவர்கள் உரையாடியுள்ளனர். இவர்கள் தொடர்பில் தரவுகள் திரட்டப்பட்டுள்ளதுடன், கந்தக்காடு முகாமில் இவர்கள் மூலம் கொரோனா தொற்று அதிகரித்திருக்கலாம். 16 பேர் கொண்ட அறையிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இந்த 16 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இராணுவத்தினர் நடவடிக்கையெடுத்துள்ளனர். கந்தக்காடு முகாமில் மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

தற்போது நாடு முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 17 வைத்தியசாலைகளில் 103 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பிந்திய தகவலின்படி மேலும் இரண்டு இலங்கையருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இம்மாதம் 07 ஆம் திகதி இத்தாலியிலிருந்து வந்த 56 வயது பெண்ணும் ஏற்கனவே இனங்காணப்பட்ட நோயாளி ஒருவரின் உறவினரான 17 வயது யுவதியும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (வி)

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments