இக்கரைக்கு அக்கரை பச்சை! | தினகரன் வாரமஞ்சரி

இக்கரைக்கு அக்கரை பச்சை!

"மச்சான் எப்படி இருக்கிற நீ?"

"பிரச்சினை இல்லை மச்சான்! இங்க எங்கடை நாட்டிலை ஒரு பிரச்சினையும் இல்லை! நாடென்றால் இதுதான். உங்கடை நாடென்ன நாடாடா?"

"அவ்வளவுக்கு நல்லமா மச்சான்?"

"பிறகென்னடாப்பா, மெடிக்கல் எல்லாம் பிறி. சாப்பாட்டுச் சாமான் வேண்டிய மட்டும் வாங்கேலும்! நினைச்சால் வேலை, இல்லையென்றால், சுதந்திரமாய் சுற்றித்திரியலாம். எவருக்கும் அடிமை இல்லை! இந்தா நான் இப்ப வேலை முடிஞ்சுதான் வந்திருக்கிறன்"

"இப்ப அங்க எத்தினை மணி மச்சான்?"

"இங்க எங்கடை நாட்டிலை என்றால், இப்ப காலைமை ஆறு மணி. உங்கடை நாட்டிலை இப்ப பின்னேரம் மூண்டு முப்பதா இருக்ேகாணும் என்று நினைக்கிறன்!"

இப்படித்தான் கடந்த இரண்டு மூன்று மாசத்திற்கு முந்தி ரெலிபோன்ல இலங்கைக்குக் கதைச்ச ஆட்கள் எல்லாரும் சொன்னாங்கள். இப்ப நிலைமையே மாறிப்போயிட்டுது என்கிறார் நண்பர்.

சொல்லுக்குச் சொல்லு...எங்கடை நாடு! உங்கடை நாடு!

2004இலை சுனாமி வந்து மனிசங்களக் கொஞ்சம் திருத்திப்போட்டுப் போனது. பிறகு மறுபடியும் மனிதனோட குணத்தைச் சொல்லத் தேவையில்லை! என்று ஆத்திரப்படுகிறார் நண்பர்.

நண்பரோடை இந்தக் கதையைக் கேட்கக்குள்ள, எனக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல்தான் நினைவுக்கு வருகுது. பிரசாரம் உச்சக் கட்டத்தை அடைஞ்சிருந்த நேரம். ரீவியிலை ஒரு பிரபல பாடகர் பெயர் குறிப்பிடாமல், ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசிக்ெகாண்டிருந்தார். அவர் தன்னுடைய பேச்சில் என்ன சொன்னார் என்றால்,

"பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள்! அதுவும் ஆங்கிலத்தைப் படிப்பியுங்கள். எப்பாடுபட்டாவது எங்காவது ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுங்கள்! இங்க வைச்சிருக்க வேண்டாம்! இது நாடே அல்ல!" என்றார்.

இன்று இலங்கையைப் பார்த்து வெளிநாட்டுக்காரங்களே சொல்லுறாங்கள், கொரோனா வைரசுக்குப் பாதுகாப்பான நாடென்று. இலங்கையிலை முதன் முதலிலை ஒரு சீனப் பெண்ணுக்குத்தான் இந்த வைரஸ் தொற்றியது. ஆனால், நாட்டிலை ஆரும் அலட்டிக்ெகாள்ளவே இல்லை. அந்தப் பிள்ளையும் நல்லா சிகிச்சை எடுத்துக்ெகாண்டு; சுகம்பெற்று இலங்கையர்களுக்கும் நாட்டுக்கும் நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டது! இப்ப இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேருக்குக் கொரோனா என்றதும் முழு நாடும் அலட்டாகியிருக்கிறது. ஸ்கூல்களுக்கு லீவு கொடுத்தாச்சு! மக்களெல்லாம், கடைகள்ல முண்டியடித்துக்ெகாண்டு சாமான்களை வாங்குறாங்கள். அதிலும் எங்கடை மற்றொரு நண்பர் சொல்றார், பெருங்காயமும் மஞ்சள் கொடியும் வாங்கிறத்துக்குச் சனம் முண்டியடிக்குதாம்! ஏனெண்டு கேட்டால், பெருங்காயத்திற்குக் கிருமியைத் தொற்ற விடாமற்செய்யும் திறன் இருக்குதாம். சொன்னவர், மனைவி வெள்ளைத்துணியால் கட்டியனுப்பிய பெருங்காயத்துண்டொன்றைப் பையிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். சரியென்றால், அதைக் கையில்தான் கட்ட வேணுமாம்! ஐயா, பொக்கற்றில் வைச்சுக்கொண்டு வந்திருந்தார்!

எல்லாத்துக்கும் காரணம் சமூக வலைத்தளங்கள்தான். கண்ட கண்ட தகவல்களைப் பரப்பி மக்களை வீண் குழப்பத்திற்கு ஆளாக்கிவிடுகிறார்கள். இதனாலை, நாடு முழுவதும் மக்கள் உணவுப் பொருள்களை வாங்கிச் சேமித்து வைப்பதில் ஆர்வங்காட்டிவருகிறார்கள். பல இடங்களில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு என்றுகூடத் தகவல்.

சிலவேளை, கடைகளைப் பூட்டுமாறு அரசு உத்தரவிடுமாகவிருந்தால், அந்த நேரத்தில் திண்டாட முடியுமா? அதுதான் முன்னெச்சரிக்ைக நடவடிக்ைக என்கிறார்கள். அப்படி நிலை உருவாகும் அளவிற்கு இலங்கையில் ஆபத்து இல்லை என்பதுதான் அதிகாரிகளின் தகவல். எது எப்படியாகினும் பிரச்சினை தலைக்கு மேல் சென்றதும், அரிசியைச் சேமித்து வைப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை! சரி அது போகட்டும்.

இந்த நிலைமைக்கு மத்தியிலைதான் வெளிநாடுகளிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள். வருவது புறத்தியல்ல; நமது நாட்டிலிருந்து சென்றவர்கள். உங்கடை, எங்கடை நாடு என்று கதைத்தவர்கள். அவர்கள் வந்தால் யார் அரவணைப்பது? நாம்தானே? அவர்களை அங்கத் தங்க வைக்கக்கூடாது! அவர்கள் கொண்டு வரும் பணத்தை மாற்றிக்ெகாடுக்கக்கூடாது என்று நாமே ஆர்ப்பாட்டம் செய்யலாமா? என்பது மனிதாபினமான கேள்வி! ஆனால், அதேநேரம், இந்த நோய் என்பது உலகின் 119 நாடுகளில் பரவியிருக்கிறது. சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். ஒரு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். எந்த நாட்டுக்குச் சென்றாலும் தப்ப முடியாது. அப்படியிருக்கும்போது, அடைக்கலம் கொடுத்து அரவணைத்துப் பிரஜாவுரிமை வழங்கிய நாட்டைவிட்டுவிட்டுத் தப்பி வருவது சரியா? என்றும், இலங்கையைவிடச் சிறப்பாக வாழலாம் என்ற நாட்டைவிட்டுச் சென்றவர்கள், நல்லதோ, கெட்டதோ அங்கேயே இருப்பதுதானே முறை? என்று கேள்வி கேட்கிறாள் ஒரு நண்பி! அவர் கேட்டது பகிடிக்கு என்றாலும், அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

யார் எதைச் சொன்னாலும், வெளிநாடுகளுக்குத் தொழிலுக்காகச் சென்றவர்கள், கல்வி பயில சென்றவர்கள் திரும்பி வரக்கூடாது என்று நாம் எந்த விதத்திலும் சொல்ல முடியாது. அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதையும் எதிர்க்க முடியாது. ஊருடன் ஒத்து வாழ்ந்தேயாகவேண்டும். இக்கரைக்கு அக்கரை பச்சையென்பதெல்லாம், இப்படியான நேரத்தில்தானே உறைத்துத் தொலைக்கிறது!

Comments