கொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை

இலங்கையில் இரண்டாவது கொரோனா நோயாளியும் அடையாளங் காணப்பட்ட பின்னர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பீதி தொற்றிக் கொண்டுள்ளமையை அதானிக்க முடிகிறது. வியாழன் நண்பகலின் பின்னர் பாடசாலைகளை மூடுவதாக தீர்மானிக்கப்பட்ட செய்தி வெளியானதும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யத் தொடங்கினார்கள். அங்காடிகளில் பெரும்பாலும் பொருட்கள் விற்றுத் தீர்ந்த நிலையில் வெறுமையாக காணப்பட்டன. பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதையும் காணமுடிந்தது.

இவ்வாறு குறுகிய காலத்திற்குள் மக்கள் பீதியடைந்து முண்டியடிப்பது அநாவசியமான ஒன்றாகவே அரசாங்கம் கூறுகிறது. வெள்ளிக்கிழமை நண்பகல் பல்கலைக்கழகங்களை மூடிவிட எடுக்கப்பட்ட தீர்மானம் புத்திசாலித்தனமான ஒன்றாகவே கருதவேண்டும். சனக்கூட்டம் நிறைந்த இடங்களில் இருந்து தவிர்ந்து கொள்வது அடுத்துவரும் இருவாரங்களுக்கு முக்கியமானதாகும்.

உலக சுகாதார தாபனம் கொரோனா தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு நிலையமும் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இலங்கைச் சுகாதாரத் தரப்பினரும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் இலங்கை இப்போது கொரோனா பீதியால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மத்திய கோட்டு அயன வலயப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் கூடிய வெப்பநிலை நிலவும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் இலகுவாக அழிந்து விடும் என பலரும் நம்பினார்கள். ஆயினும் புதிய தகவல்களின் படி வெப்பமான சூழலிலும் தொற்று ஏற்படும் சாத்தியங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் ஏற்பட்ட தேவாலய பயங்கரவாத தாக்குதல்களின் போதும் இலங்கையர்கள் மத்தியிலே மிகப்பெரிய பீதி நிலை தோன்றியதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும். இப்போது ஏற்பட்டுள்ள இந்த நோய் தொற்றுச் சூழல் அதனை விடவும் ஆபத்தானது என்பது தெளிவானது. சாதாரண தடிமன் பரவுவதைப் போன்ற வழிகளில் அதைவிட சற்று வீரியமான நோய்த்தொற்றாக இதனைப் பார்க்கலாம். ஆனால் அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதே பிரசைகள் என்ற வகையில் ஒவ்வொருவரினதும் கடமையாகிறது.

அநாவசிய பீதி காரணமாக தேவைக்கும் அதிகமாக எதிர்வினையாற்றுதல் இல்லாத பிரச்சினைகளை உருவாக்கக் காரணமாகலாம். உதாரணமாக, தேவைக்கு அதிகமான பொருள் கொள்வனவு செய்வது செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகள் உயர்வடைய காரணமாகலாம். அத்துடன் அன்றாடம் உழைத்து சீவியம் நடத்தும் மக்களை செயற்கையான பொருள் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் மிக மோசமாகப் பாதிக்கும்.

கொரோனா தொற்றுக் காரணமாக உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்கனவே பலத்த அடி ஏற்பட்டுள்ளது. உலக எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் உலகின் பங்குச் சந்தைகள் யாவும் மிகப்பெரிய சரிவை சந்திக்க நேர்ந்தது. அச்சரிவிலிருந்து மிதமான ஒரு மீட்சி அவதானிக்கப்பட்டாலும் நிச்சயமற்ற சூழலும் பீதி நிலையும் இன்றும் தொடர்கிறது. முதலீட்டாளர்கள் தம்மிடமுள்ள ஆவணங்களை விற்றுவிட்டு பணமாக மாற்றத் தொடங்கியதால் சந்தைகள் சரிந்து போயின. இலங்கையில் கூட பங்குச் சந்தை உள்ளிட்ட அரச ஆவணங்களில் முதலீடுகளை செய்திருந்தவர்கள் அவற்றை கடந்த இரு வாரங்களில் மிகப்பெரிய அவாவில் விற்றுவிட்டு மூலதனத்தை வெளிக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இது இலங்கைக்கு அந்நிய செலாவணிப் பிரச்சினையை துரிதப்படுத்தும் ஒன்றாகும். அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய கொரோனா காரணமாக தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையவர்கள் எவரும் வெளிச்செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏலவே வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதுவும் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை பெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

விமானப்பயணங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் விமானப்போக்குவரத்துத் துறை பலத்த அடியை வாங்கியிருக்கிறது. ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா எயார்லைன்சுக்கு இது எதிர்பாராத ஒரு தாக்குதலாகும்.

இலங்கை சுற்றுலாத்துறை முடக்கத்தை சந்திக்கும் நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டங்களும் கொரோனா நோயினால் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாத்துறை வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனைச் சார்ந்துள்ள மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூலப்பொருள் வருகை குறைந்தமையினால் மூடப்பட்டதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. கைத்தொழில் மூலப் பொருள்கள் சீனாவில் இருந்தே பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால் வைரஸ்தாக்கம் காரணமாக அவற்றின் இறக்குமதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஆடை தயாரிப்பு போன்ற துறைகளின் சிறிய நடுதர முயற்சியாளர்கள் தொழில் முடிவுறும் நிலையை எட்டலாம். எதிர்வரும் இருவாரங்களுக்கு நிச்சயமற்ற தன்மை நிலவக்கூடிய நிலை உள்ளது. ஒன்றில் நோய்த்தாக்கம் பெரியளவில் அதிகரிக்கச் கூடிய நிலை உருவாகலாம் அல்லது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படலாம். இவ்விரண்டில் எது நிகழ்ந்தாலும் பொருளாதாரத்தின் மீது அவை ஏற்படுத்தப் போடும் தாக்கங்களை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது.

மக்களின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்பு பொருளாதாரத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வு நடவடிக்கைகளை பாதிப்பதனால் – அவற்றை உடனடியாக சரிசெய்ய முடியாது. கொரோனோவை இலங்கை முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாலும் அது ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கங்களில் இருந்து உடனடியாக மீள்வது சாத்தியமில்லை.

மாறாக ஐரோப்பிய நாடுகளில் பரவியதுபோல எதிர்வரும் நாட்களில் கொரோனா பரவினால் அவ்வாறான சூழ்நிலையை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதா? என்பதே நம் முன்னே உள்ள மிகப்பெரிய கேள்வியாகும். மிகப்பெரிய எண்ணிக்கையில் நோயாளர்கள் உருவானால் அதைச் சமாளிக்க கூடிய நிலையில் தற்போதைய சுகாதார வசதிகள் உள்ளனவா? அவ்வாறான ஒரு நிலையை சமாளிக்க போதிய நிதி வசதிகள் உள்ளனவா? ஒரு வார காலம் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க நேர்ந்தால் சமாளிக்க முடியுமா போன்ற யதார்த்தமான வினாக்களே நம் முன்னே எழுகின்றன. இவ்றுக்கு நம்பகமான விடை நம்மிடையே இல்லை என்பதே யதார்த்தம். இந்நிலையில் வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே புத்தி சாலித்தனமாகும். இது ஹீரோயிசத்திற்கான நேரமல்ல, சிந்தித்து செயற்பட வேண்டிய நேரம்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments