தர்மத்தின் தலைவன்! | தினகரன் வாரமஞ்சரி

தர்மத்தின் தலைவன்!

“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” சுபஹூத் தொழுகைக்கான (அதான்) பாங்கோசை காற்றிலே கலந்து வந்து, பாத்திமாவின் காதுகளில் ஒலிக்கின்றது. 

அதனைத் தொடர்ந்து அவள் தனது ‘தஹஜ்ஜத்’ வணக்கத்தை (பின்னரவுத் தொழுகை) முடித்துக் கொண்டவளாக பாங்கோசைக்குச் செவிசாய்த்தாள். 

அவர்களின் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள பள்ளி வாசலில் இருந்தே அந்த ‘அதான்’ ஓசை, இனிமையாக வந்து அவளின் காதுகளில் பாய்ந்தது. ஆம், ‘அந்த ஓ​சை, இனிமையாக வந்து அவளின் காதுகளில் பாய்ந்தது. ஆம், அந்த ஓசைக்குச் சொந்தக்காரர் வேறு யாருமேயல்ல, அவளின் அன்புக் கணவரான றசீட் முஅத்தினார்தான். 

கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாகவே, றசீட் நானா அந்தப் பள்ளிவாசலில் முஅத்தினாகக் கடமை பார்த்து வருகின்றார். பள்ளிவாசலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் பணிகளைக்கூட அவரே செய்து வந்தார். 

சாதாரணமாக மாதாமாதம் கிடைக்கும் சம்பளத்திற்கு மட்டுமே பள்ளியில் கடமை பார்ப்பராக இல்லாமல், “இது அல்லாஹ்வுடைய வீடு... நான் இங்கு செய்யும் வேலைகள் அனைத்துமே, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், அவனுடைய திருப்தியையும், நன்னையும் நாடியே செய்கின்றேன்” என்று, அங்கு வேலைசெய்யும் ஒவ்வொருநேரமுமே மனத்தால் எண்ணித் திருப்திப்பட்டுக்கொள்வார். 

றசீட் நானாவுக்கு மொத்தமாக ஏழு பிள்ளைகள். ஐந்து பெண் பிள்ளைகளும், கடைசியாக இரண்டு பையன்களும்! இறுதியாகப் பிறந்த றஸூல் இப்போதுதான் முதலாம் ஆண்டில் சேர்ந்திருக்கின்றான். “இத்தன புள்ளைகள வச்சிக்கிட்டு இந்தப் பள்ளிவாசல்ல கெடைக்கிற, சின்னச் சம்பளத்துல எப்பிடிப்பா சமாளிக்க ஒன்னால முடியுது?!” நண்பர்கள் அவரைப் பார்த்துக் கவலையுடன் கேட்பார்கள். றஸீட் நானாவோ புன்னகை பூத்த முகத்துடன் “அல்ஹம்துலில்லாஹ்... வருமானம் பெரிசோ சிறிசோ...அதனப் பத்திக் கவலப்படாம, வாற வருமானத்துல வாழப் பழகிக்கிட்டா, அதுல பெரிய பறக்கத் இருக்குப் பா... எனக்காவது இந்த வருமானமாச்சும் கையில இருக்கு.,.. இந்த ஒலகத்துல எந்தத் தொழிலுமே இல்லாம, எத்தனபேரு தவிச்சுக்கிட்டிருக்காங்க... இது தாராளமாப் போதும் அல்ஹம்துலில்லாஹ்” அவ்வாறு கூறி எந்தவொரு சலிப்புமேயில்லாமல் மிகவும் பெருமை பட்டுக்கொள்வார். 

சுபஹூத் தொழுகைக்கான பாங்கோசை முடிந்தவுடன் பாத்திமா சுபஹூத் தொழுகையைத் தொழுது முடித்தார். தொழுகையை முடித்த கையோடு நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளையெல்லாம், தொழுகைக்காக எழும்பினார்கள். 

பெண் பிள்ளைகளெல்லாம் எழுந்து, தொழுவதற்காக ஆயத்தமானார்கள். ஆண்பிள்ளைகள் இரண்டுபேரும் இன்னும் நன்றாகப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத்துயின்று கொண்டிருந்தார்கள். 

“இந்தப் பெடியனுகள எத்தன தடவைகள் எழுப்பிட்டன்... எழும்புறாங்களில்லயே... மழபேஞ்ச கூதலுக்கு, ஆக்களுக்கு எழும்புறதுக்குச் சோம்பலாயிருக்கு...அப்துல்லாஹ், றசூல் எழும்புக்க கண்ணுகாள்... எழும்பித் தொழுறதுக்குப் பள்ளிக்குப் போங்கவாப்பா” பாத்திமா பிள்ளைகளை அன்பாக, அரும்பாடுபட்டு எழுப்பிப் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காக அனுப்பிவிட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள்.

தினமும் இவ்வாறுதான் பாத்திமா தனது ஆண்பிள்ளைகளிரண்டையும், சுபஹுதொழுவதற்கு எழுப்பிவிடப் பெரும்பாடுபடுவாள். வழமையாகப் பள்ளிவாசல் வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு, காலை எட்டுமணிக்குள் வீட்டுக்கு வருகின்ற றசீட்நானா, இன்றோ காலை ஒன்பது மணியான பின்பும் வீடு வந்து சேரவில்லை. “ம்... என்ன, இண்டக்கி இவங்க இத்தன சுணக்கம்?” மனத்திற்குள் கவலைப்பட்டவராகப் பாத்திமா, தனது மகன் அப்துல்லாஹ்வைக் கூப்பிட்டார். 

பாத்திமாவின் கூப்பிட்ட குரலுக்கு, அப்துல்லாஹ்வின் பதில் குரலோ, இரண்டு வீடுகளைத் தாண்டியிருக்கும் பாழ்வளவிற்குள்ளிருந்து ஒலித்தது. “இண்டக்கிச் சனிக்கிழம, புள்ளைகள் விளையாடப் போயிருக்காங்க” மனத்திற்குள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே “ஏன்மா கூப்பிட்டீங்க?” கேட்டுக்கொண்டே ஓடிவந்தான் எட்டுவயது நிறைந்த அப்துல்லாஹ்! 

“வாப்பாவ இன்னும்தான் காணல்ல மகன்... நீங்கபோயி பள்ளிவாசல்ல வாப்பா இருக்காங்களாண்டு பாத்துட்டு ஓடிவாங்க மகன்” மகனிடம் கவலையோடு பாத்திமா சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்தார் றசீட்நானா. 

“என்னங்க இண்டக்கி இவ்வளவு சுணக்கம்?... தஹஜ்ஜத் தொழுறதுக்கு எழும்பின நீங்க, இண்டக்கி ஒரு பிளேன்ரித் தண்ணிகூடக் குடிக்காமப் பள்ளிவாசலுக்குப் போயிட்டீங்க... நீங்க சுணங்கினதால, என்னவோ ஏதோண்டு மனசுக்கு ஒரு மாதிரியாயிடுச்சி” தன் ஆதங்கத்தைக் கணவரிடம் ஒப்புவித்தார் பாத்திமா. மனைவியின் அன்பைப் புரிந்து கொண்டவராக றஸீட்நானா சுணக்கத்திற்கான காரணத்தைச் சொன்னார். 

“இண்டக்கி இரவு காத்தும் மழையும் வந்ததால, பள்ளி வாசல் வளவெல்லாம் ஒரே குப்பையாக கெடந்திச்சி... அந்தக்குப்பைகளையெல்லாம், கூட்டிப் பொறக்கிச் சுத்தமாக்கின... அதுதான் நேரம் போச்சி” அவர் கூறி முடித்தார். 

“ஓமோம்.... தாற சம்பளத்தோட ஓர் ஆயிரம் ரூபாய கூடத்தந்துருவாங்க!!!... மத்தவங்க பாத்துக்கிட்டுப் போறாப்போல நீங்களும் பாத்துக்கிட்டு வாறதானே... மோதினார்ரவேல பாங்கு சொல்ற வேல மட்டும்தானே... நீங்க எல்லா வேலைகளையும், வலிய இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்வீங்க” எனத் தனது அடிமனத்திலுள்ள ஆதங்களை வெளிப்படுத்தினார் பாத்திமா. 

“பாத்திமா அப்பிடிச் சொல்லாதிங்க... அது அல்லாஹ்ட வீடு பாத்திமா... அவன்ட வீட்ட இருக்கிற அழுக்குகள, நாம நீக்கிச் சுத்தம் செஞ்சா... அவன் நம்ம வாழ்க்கைல இருக்கிற அழுக்குகளையும்... நம்ம ஒடம்பில இருக்கிற அழுக்குகளையும், நோய்களையும் கிளீன் பண்ணிடுவான் பாத்திமா, அத நல்லாப் புரிஞ்சிக்கோங்க” அவர் கூறிவிட்டு வீட்டினுள் நுழைந்தார். அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து, மனச்சாந்தி பெற்றவராகப் பாத்திமா, அடுக்களையினுள் நுழைந்து; சற்றே நேரத்தில் கணவருக்காப் பால்தேனீர்க் குவளையுடன் கணவரிடம் வந்தார். கணவரைப் பருகுமாறு கூறிவிட்டு, மீண்டும் அடுக்களையினுள் நுழைந்தார். 

உள்ளே சென்ற பாத்திமா சுமார் அரைமணி நேரத்தின் பின்னர் வெளியே வந்தார். கணவர் எதையோ மிகவும் ஆழகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். கொடுத்த தேனீர் பருகப்படாமல் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. 

“அல்லாஹ்... தேத்தண்ணியும் பச்சத் தண்ணியா ஆறிப்போயிடுச்சி... ஏங்க ஏன் தேத்தண்ணியக் கூடக் குடிக்க மறந்து... அப்படி எதப்பத்தி யோசிச்சிக்கிட்டிருங்கீங்க?” பாத்திமா ஆதங்கப்பட்டவளாக விசாரித்தாள். அப்போதுதான் சிந்தனையிலிருந்து விடுபட்டவராக “ஓ... ஓம்புள்ள, நல்லாத்தான் இத மறந்து போனன்” றசீட் நானா தடுமாறியபடியே மனைவியைப் பார்த்துச் சொன்னார்.  

மனைவியோ கணவரின் சிந்தனைக்கான காரணத்தை மீண்டும் வினவினார். “ஒருநாளுமே இப்படி நீங்க இருந்தத நான் காணல்ல... ஏன் ஏதோபோல கவலையா இருக்கீங்க?” பாத்திமாவிடம் தனது கவலை, சிந்தனைக்கான காரணத்தைச் சொன்னார் றஸீட்நானா. 

பள்ளிவாசலில் சுபஹூத் தொழுகை முடித்து எல்லோருமே போன பின்பு, றஸீட்நானாவின் மூத்த சகோதரியின் கணவர் அன்சார் அவரைச் சந்தித்ததாகவும், அவரின் மூத்தமகள் அஸ்னாவுக்கு, நல்ல மாப்பிள்ளை ஒன்று வந்திருப்பதாகவும், கையிலே தற்போதைக்குப் பணமில்லை என்றும், ஒரு இலட்சமோ ஒன்றரை இலட்சமோ இருந்தால் கல்யாணம் செய்யலாம். ஆனால், வசதிதான் இல்லையே என்று கவலைப்பட்டு விட்டுப் போனதாகவும், அதைத்தான் தான் தற்போது சிந்திப்பதாகவும் றசீட்நானா கவலையோடு சொன்னார். 

“பாவம்தான், அஸ்னாவுக்கும் இப்ப முப்பது வயசையும் தாண்டிருச்சி... அவக்குப் பொறகு இன்னும் மூணு பெண் பிள்ளைகள் இருக்காங்க... முப்பது வயசையும் தாண்டின இவக்கு மாப்பிள்ள தேடுறதும் பெரும் கஷ்டம், வந்திருக்கிற மாப்பிள்ளை நல்ல மாப்பிள்ளண்டா, விடவும் முடியா... என்னதான் செய்வாங்களோ...? பாத்திமாவும் தன் கணவர் சொன்ன விடயத்தை எண்ணிக் கவலைப்பட ஆரம்பித்தார். இருவரும் ஆளையாள் பார்த்துக் கொண்டு சிந்தித்துக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தனர். 

திடீரென ஓர் எண்ணம் பிறந்தவராக “பாத்திமா இப்ப டிச் செஞ்சாலென்ன?” கேள்விக்குறியோடு நிறுத்தினார் றசீட் நானா. “என்னங்க அது?!” ஆச்சரியமாகவும், ஆவலாகவும் கேட்டார் பாத்திமா. ‘நான் உம்றாவுக்கு மக்கா போறதுக்குச் சேர்த்து வச்சிருக்கிற, ஒண்ணரலட்ச ரூபாய் அப்படியே குடுத்து, கல்யாணத்தப் பண்ணச் செய்வமா?” றசீட்நானா மகிழ்ச்சியோடு கேட்டார். 

“என்னங்க?.... அது பதினைஞ்சு வருசத்துக்கு மேலால, அஞ்சுரூபா, பத்து ரூபாண்டு நீங்க ஆசையோடு, மக்காவுக்கு உம்றாவுக்குப் போறதுக்கு... எவ்வளவு கஷ்டப்பட்டுக் குருவி சேத்தமாதிரிச் சேத்த காசி... வாறமாசம் போறதுக்கண்டு, ஆசையோட இருங்கீங்களே, அந்தக் காசையா குடுக்கப்போறீங்க?” பாத்திமா வேதனையோடு கணவரைப் பார்த்துக் கேட்டார். 

“பாத்திமா, நமக்கு அல்லாஹ் நாடினா எப்படியும் அந்த உம்றா விசயம் நடக்கும்.... இப்ப நாம இந்தக்காசக் குடுத்துக் கல்யாணத்தச் செய்யச் சொல்லுவம்.. அஸ்னாட வயச நெனைக்கக்குள்ள, இந்த மாப்பிள்ளையைத் தவற விடுறது கவலப்படுற விசயமாயிடுமே... நாம குடுத்துக் கல்யாணத்த முடிப்பம், நமக்கு அல்லாஹ் நன்மையத்தாறதோட, நல்ல வழியையும் காட்டுவான்... நீங்க என்ன சொல்றீங்க பாத்திமா?” கேட்டுவிட்டு மனைவியின் முகத்தை ஆவலுடன் நோக்கினார் றசீட் நானா. சற்று நேரம் மௌனமாகச் சந்தித்த பாத்திமா “சரிங்க... நீங்க நெனச்சமாதிரியே செய்யுங்க, குமர்காரியம்... அல்லாஹ் நமக்கு எத்தனையோஉம்றா செஞ்ச நன்மயத்தருவான்” சந்தோசமாகக் கூறினார்.   றசீட் நானாவுக்குச் சந்தோசத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை. மனைவியின் உச்சியை முகர்ந்துவிட்டு “என்ட தங்கப் பொண்டாட்டி!’ என்று மனைவியை தாளாத ஆனந்தத்துடன் புகழ்ந்து விட்டு, வீட்டுக்குள் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு, துவிச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்டு தனது சகோதரியின் வீடு நோக்கிச் சிட்டாகப் பறந்தார். 

இரண்டு மணிநேரம் கடந்து றசீட்நானா வீட்டுக்கு வந்தார். வந்ததும் தனது சகோதரி வீட்டார் அடைந்த மகிழ்ச்சியையும், ஆவனந்தத்தையும் பாத்திமாவிடமும், தனது பிள்ளைகளிடமும் சொன்னார். அதைக் கேட்டு விட்டு, அவர்களும் பெரும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைந்தார்கள். 

அவ்வாறு மகிழ்ச்சியில் அவர்கள் இருந்த வேளையில் பாத்திமா, ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து றசீட் நானாவுடைய கரங்களில் கொடுத்து விட்டு “இத, ஜூம்ஆப்பள்ளிவாசலால கொடுத்துவிட்டு “இத,ஜூம் ஆப் பள்ளிவாசலாவ கொண்டுவந்து, உங்ககிட்ட கொடுக்கச் சொல்லித் தந்தாங்க” றசீட்நானா கடிதத்தை உடைத்து விபரத்தைப் படித்துவிட்டு, அப்படியே “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூறியபடியே கீழே உக்கார்ந்தார். அவரின் இருவிழிகளிலுமிருந்து ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் கொட்டியது. 

இதைப் பார்த்த பாத்திமாவும் பிள்ளைகளும் விபரம் புரியாமல் விழித்தார்கள். “யா அல்லாஹ்... உன்னோட கருணைக்கும் அன்புக்கும் ஒரு அளவே இல்ல... உன்னப் புகழ எத்தன நாவு வேணும் யாஅல்லாஹ்” ஆனந்தக் கண்ணீருடன் கரங்களிரண்டையும் உயர்த்தி  பிரார்த்தனையுடன் படைத்தவனுக்கு நன்றி செலுத்தினார். 

“என்னங்க.... கடிதத்துல அப்படி என்னங்க இருந்துச்சி... ஏன் இத்தன சந்தோசப் படுறீங்க?” மனைவி ஆவலுடன் கேட்டார் “பாத்திமா, பள்ளிவாசலில நீண்டகாலமா வேலசெய்யுற, முஅத்தின்மார் பட்டியலில, என்னையும் ஓர் ஆளாகத் தெரிவு செஞ்சிருக்காங்களாம்... அப்படித் தெரிவான நூறு முஅத்தின்மார்கள, சவூதிநாட்டு அரசாங்கம், அவங்கிட்ட முழுச்செலவில, அடுத்த மாசம் உம்றாசெய்யுறதுக்காக, மக்காவுக்கு அழைக்கிறாங்களாம்.. இலவசமாக உம்றாவுக்குப் போறதுக்கான, அழைப்புக்கடிதம் தாம்மா இது” கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவாறே றஸீட்நானா சொன்னார். 

பாத்திமாவும் பிள்ளைகளும் இதைக்கேட்ட ஆனந்த மிகுதியால் “அல்லஹ்துலில்லாஹ்” என்றார்கள் ஒருமித்த குரலில். அப்போது அந்த நேரத்திலே தூரத்திலுள்ள ஒரு பள்ளிவாசலில் லுஹர் (மதியம்) தொழுகைக்கான பாங்கோசைகேட்டது. மறுகணமே றஸீட்நானா எதையுமே கவனிக்காமல், வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல பள்ளி வாசலை நோக்கி விரைந்தார் பாங்கு சொல்வதற்காக! பாத்திமாவும் பிள்ளைகளும் படைத்தவனைப் புகழ்ந்தார்கள். தர்மத்தின் தலைவன் அவனல்லவா. அவனை நம்பியோர் என்றுமே கைவிடப்படுவதேயில்லை!   

நிந்தவூர் 
எம்.ஐ. ஊஸனார் ஸலீம் 

 

Comments