அர்ப்பணிப்புக்கான அந்தஸ்து கிடைக்காத பெருந்தோட்ட பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

அர்ப்பணிப்புக்கான அந்தஸ்து கிடைக்காத பெருந்தோட்ட பெண்கள்

கடந்த ஞாயிறு எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் சம்பிரதாயப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அது பற்றிய ஒரு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு பேசினார்.  கொழும்பில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் வெளியே வரும் ஒருநாள் இந்த மகளிர் தினம் மட்டுமே. அவர்கள் இந்நாளில் மகளிர் உரிமைப் பற்றிப் பேசுவார்கள். பேரணி போவார்கள். படங்கள் பிடிப்பார்கள். ஊடகங்களில் உலா வருவர். இவ்வளவும் எதற்காக? அத்தனையும் வெளிநாட்டு அமெரிக்கன் டொலர்களுக்காக என்று ஆவேசக் குரல் எழுப்பினார் மைத்திரி.  

அவர் இப்படி கடிந்து கொண்டது அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களைச் சுட்டியே. இந்த தொண்டு நிறுவனங்கள் நாட்டின் முக்கிய நகரங்கள்தோறும் நிலை கொண்டுள்ளன. அதிலும் மலைநாட்டு நகரங்களில் சற்று அதிகமாகவே இயங்குகின்றன. இவற்றுள் சில சேவை நோக்கோடு காரியம் ஆற்றுகின்றன. சிலது அந்நிய நாட்டு நிதிக்காக அடிவருடுகின்றன. ஆனால் இவைகளே சர்வதேச சிறப்புத் தினங்களை மறக்காமல் ஞாபகமூட்டி வருகின்றன. சர்வதேச மகளிர் தினம் சிறுவர் முதியோர் தினம் என்றெல்லாம் எதையும் விட்டு வைக்காமல் கொண்டாடுவது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாம்.  

வழமை போலவே இந்த தடவையும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடி முடிக்கப்பட்டு விட்டது. பேரணி, பேச்சு மேடை, மகளிர் கெளரவிப்பு என அமர்க்களப்பட்டது. இது தேர்தல் காலம். எனவே மலையக அரசியல்வாதிகளும் தம் பக்கம் சோடை போகவில்லை என்பதைக் காட்ட வீதிகளில் உலா, மேடைகளில் முழக்கம் என மும்முரமாக செயற்பட்டிருந்தனர்.  

ஆயினும் என்னவாம் கொழுந்துக் கூடைகளுக்கு மட்டும் தான் விமோசனமே இல்லை. அது தான் சமூக ஆர்வலர்களின் சஞ்சலம். சர்வதேச ரீதியில் சகட்டு மேனிக்கு பெண்கள் சங்கடப்படுத்தப்பட்ட காலம். அது வரலாற்று ரீதியாக 1400 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1789 ஆம் ஆண்டு வரையில் அடக்கு முறைக்கு எதிரான அவலக்குரல். எதிர்ப்புப் போராட்டங்கள். மொழிவாரி ரீதியிலான பங்கேற்புகள். அதன் முடிவாக 1789 இல் பாரிஸ் நகரில் பெண்கள் ஒன்று கூடினார்கள். போர்க்கொடி ஏந்தினார்கள். பால் வேற்றுமை இன்றி சமவுரிக்காக சங்கநாதம் எழுப்பினார்கள.் எட்டு மணி நேர வேலை வேண்டும் என்று மூலை முடுக்கெல்லாம் முழக்கம். பிரான்சிய புரட்சி தொடங்கியது.  

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் கொள்கை அகிலம் எங்கும் ஆரவாரித்தது. இது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவும் ஆரம்பித்தது. அப்போது அரசணையில் இருந்தார் பிரான்சிய மன்னர் 2ஆம் லுயிஸ். இவர் பெண்களுக்கு வாக்குரிமையும் ஆரச ஆலோசனைக் குழுக்களில் அங்கத்துவமும் வழங்கி வைத்தார். இது சர்வதேசம் எங்கும் விடுதலை வேட்கையை விதைத்தது. அதுவே வினையாகியும் போனது.  

1909 ஆம் ஆண்டு அது மார்ச் 8 ஆம் திகதி நடந்தது அந்த அராஜகம். சமவுரிமை கோரி 120 பெண்கள் தாம் பணிபுரிந்த ஆலைக்கு உள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கினார்கள். ஆலை நிர்வாகமோ தன் வக்கிர வேலையைக் காட்டியது. 120 பெண்களையும் ஆலைக்குள்ளேயே போட்டுப் பூட்டியது. ஆத்திரத்தோடு தீ மூட்டியது. இது உலக மயமான செய்தி ஆனது. அது சர்வதேசரீதியில் மகளிருக்கென ஒரு மகத்துவத்தை ஏற்படுத்தும் தேவையைக் காட்டியது. இந்த சர்வதேச மகளிர் தின சரித்திர சுருக்கம். இது இரத்த சரித்திரம். கறை படிந்த வரலாற்றுச் சங்கதி.  

உலகநாடுகளை இந்தச் சம்பவம் உலுக்கியது உண்மை. அதன் பரிகாரமாக பெண்ணுரிமைப் பேணப்பட்ட வேண்டும் என்று பேசப்பட்டது நிஜம். ஆனால் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் இதனால் விழிப்படையவில்லை. விமோசனத்துக்கான வழி திறக்கப்படவில்லை. மாறாக உரிமைக் கோரலுக்கான உணர்வுகள் மழுங்கடிக்கப்படடன. இந்தியா பெண்களைக் கெளரவப் படுத்தும் முகமாக அரசியலில் 33 சதவீத இட ஓதுக்கீட்டை அண்மையில் வழங்கியது. கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையிலும் அரசியலில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது முன்னைய அரசாங்கம்.  

எனினும் இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இந்த இட ஒதுக்கீட்டைப் பூரணத்துவப்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகள் தவறிப் போயின. மலையகத்திலும் இதே நிலைமை தான். இன்று பெருந்தோட்டப் பெண்களை மட்டுமே நம்பி தேயிலைத் தொழில் இருக்கின்றது. பரிச்சயமாகிவிட்ட இத்தொழிலை இவர்களால் விட முடியாது. அதற்கான மாற்று வழி ஏதும் இதுவரையிலும் இல்லை. அதற்கான மாற்று வழியேதும் இதுவரையிலும் இனம் காணப்படவில்லை. இது குறித்ததான எந்தவொரு திட்டமும் மலையகத் தலைமைகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.  

1993 இல் இலங்கை பெண்களின் பட்டயத்தை அங்கீகரிக்கலானது. ஆனால் இதன் பயன் மலையக பெண்களுக்கு கிடைக்காமல் போனது. பெருந்தோட்டங்கள் இன்றைய நிலையிலும் நாட்டின் மிகப்பெரிய ஆளணி வளம் கொண்ட துறையாக இதுவே காணப்படுகின்றது. இருந்தும் என்ன.மலையக மாதருக்கான அங்கீகாரமும் மரியாதையும் இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனால் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகள் உலக பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அவர்களின் ஈடுபாடு பற்றி விதந்துரைக்கின்றது.  

குடும்ப மட்டத்தில் ஓரங்கட்டப்படுவதும் சமுதாய ரீதியில் சமதையான வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதை. பால் அடிப்படையிலான தொழில் பாகுபாடு, கல்வி, சுய தொழில் வாய்ப்பற்ற நிலை, குடும்ப வேலைத்தள வன்முறை, அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுதல், வேலைத்தள பாதுகாப்பின்மை, ஓயாத உழைப்பு, வறுமை, தொற்றுநோய், தொற்றா நோய்கள் என பிரச்சினைகள் ஏராளம். இதிலிருந்து விடுபடுவது என்பது சாமன்ய சங்கதியா என்ன.  

குடும்ப நிர்வாகம் இவர்கள் கைகளில் தங்கியிருக்கிறது. குடும்பத்தின் வறுமை மீட்புக்கான போரட்டமாகவே இவர்களது வாழ்வுக்காலம் வரண்டு போகின்றது. பெண்களை உப வருமானம் தேடுபவர்களாகவே கணிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்களை பிறர் தயவில் தங்கிநிற்க வேண்டிய நபர்களாகவுமே எடை போடும் ஆணாதிக்க போக்குக்கு மத்தியிலே இவர்களுக்கான விமோசனம் கிடைப்பது சர்வ சாதாரணமாக இருக்கப் போவது கிடையாது. 

இப்படி ஏகப்பட்ட தடைச் சமாச்சாரங்களோடு நாளாந்தம் மல்லுக்கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இந்த மலையக பெண்களுக்கு. இதனாலேயே மலையகத்தில் நடக்கும் மகளிர் தின விழாக்கள் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. உரிய முறையில் விழிநடாத்த வக்கில்லாத தன்மையிலேயே மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் அலை மோதுகின்றன. ஒரு வகையில் இது நம்பிக்கைத் துரோகம்.  

எனவே மலையக பெண்களுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரமும் அந்தஸ்தும் அவசியமாகின்றது. வெறும் கொழுந்து பறிக்கும் போட்டிகளை நடாத்தி கெளரவிப்பதால் மட்டும் இந்தப் பெண்களின் பின்னடைவு மாறப்போவது இல்லை. இவர்களின் உரிமைகள் பேணப்படுவது முக்கியம். இவர்கள் தொழில்சார் ரீதியிலும் குடும்பம் சார் நடத்தலிலும் முகம் கொடுக்கும் உடல் உளவியல் பாதிப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவது இன்றியமையாதது. இதுவரை இது பற்றிய எவ்வித நம்பிக்கையூட்டும் நகர்வுகளும் காணப்படுவதாய் இல்லை.  

மலையக தொழிற்சங்கங்கள் மாதர் சங்கம், மகளிர் அணி என்றெல்லாம் வைத்துக் கொண்டுள்ளன. தொழிற்சங்க காரியாலயங்களில் குறைந்த வேதனத்தில் பெண்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இந்தப் பெண்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட இந்தத் தொழிற்சங்கங்கள் வழங்க முன் வந்தபாடில்லை. இந்த நிலையில் தோட்டக் கம்பனிகள் மனிதாபிமானத்தோடு நடாத்த வேண்டும் என்று கோரமுடிமா? அரசாங்கம் தேசிய ரீதியில் பெருந்தோட்டப் பெண்களை கெளரவப்படுத்த வேண்டும் என்று கொக்கரிக்க இயலும்?  

இந்த இலட்சணத்தில் மகளிர் தினத்தில் மட்டும் மலையக பெண்களை மாண்புபடுத்தி பேசுவதும் பேரணி போவதும் சுத்த பித்தலாட்டமாகவே இருக்கிறது. அரசு சார்பற்ற அமைப்புக்களும் கூட வாய்ப்பு வந்தது விளம்பரப்படுத்திக் கொள்ள என்று வரிந்து கட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதால் அவை மட்டுமே மகிழ்ச்சியடைய முடியும். இதனால் ஆகப்போவது என்ன?  

மவையக சமூகம் விழிப்பணர்வு பெறாவிட்டால் இன்னும் பல காலத்துக்கு இக்குறைபாடுகளையே பேசிக் கொண்டிருக்க வேண்டி நேரிடும். பெண் விடுதலை பெண்ணுரிமை எல்லாமே வர்ணனைக்கு மட்டும் உரிய வரிகளாகவே இருந்துவிடும்.    

பன். பாலா

Comments