கொரோனா மாற்றத்திற்கான மற்றுமொரு ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா மாற்றத்திற்கான மற்றுமொரு ஆரம்பம்

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. வல்லரசுகள் கூட இவ் வைரஸ் பரவுவதையும், அதன் மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்த முடியாமல் தினறிப்போய் நிற்கின்றன.

இதனால் உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. பெரு நகரங்கள் தொடக்கம் நாடுகள் வரை முடக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட முடியாத வகையில், ஓருவரோடு ஓருவர் நெருங்கிப் பழக முடியாதவாறு மாநிலங்களாக, மாவட்டங்களாக, கிராமங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடுகளின் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்;வாதாரம் பாதிப்படைந்துள்ளன. சுகாதாரம், போஷாக்கு கீழ்நிலைக்கு சென்றுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டள்ளது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் காரணம் கொரோனா என்ற வைரஸ் என்று கூறினாலும் உண்மையான காரணம் அதுவன்று.

மனிதன் தன்னால் எதனையும் செய்ய முடியும், தான் கண்டுபிடித்த விஞ்ஞானத்தால் எதனையும் மாற்றியமைத்துவிட முடியும் என்ற இறுமாப்புக்கு இயற்கை கொடுத்த சாட்டையடி தான் இப்போது இந் நிலைமை ஏற்படக் காரணம்.

ஒவ்வொருவரும் தமது சுயம் எதுவென்பதை மறந்து நாகரீகம், நாகரீகம் என்று அதன் பின்னால் ஓடத் தொடங்கியதன் விளைவு தான் இன்று இந்நிலைமை.

பார்க்கப்போனால் இந்த வைரஸ் பரவியதும் ஒரு விதத்தில் நன்மையாகத் தான் அமைந்துவிட்டது. நிச்சயம் இந்த வைரஸுக்கு எதிரான மருந்தை மனிதன் கண்டுபிடித்துவிடுவான். ஆனால் அதற்கு முன்பாக உலகம் தன்னை முழுமையாகவே மாற்றியமைந்துவிடப் போகின்றது.

அந்த மாற்றத்தின் ஆரம்பம் தான் இந்த வைரஸ்.

சற்றுப் பின்னோக்கிச் சென்று எமது கடந்த காலத்தை திருப்பிப் பார்ப்போம். நாம் எவ்வாறு வாழ்ந்தோம்?. எமது உண்மையான பழக்கவழக்கம் என்ன?. எமது உண்மையான உணவுப் பாரம்பரியம் என்ன?. எமது உண்மையான பொருளாதார நிலை எப்படியிருந்தது?.

ஆனால் இன்று எப்படியிருக்கிறோம்?. எதனை உண்ணுகிறோம்?. எம்மிடம் என்ன உற்பத்தி இருக்கிறது?. எமது பொருளாதார கட்டமைப்பு என்ன?.

இன்று மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு ஊரடங்கு சட்டம் போட்டப்பட்டதும் எமக்கு தேவையான உணவினைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு கஸ்ரப்படுகிறோம்?. ஏன் இந்நிலைமை ஏற்பட்டது?.

வெளியில் சென்றுவிட்டு வந்தால் இப்போது கை, கால், முகம் கழுவி தானே இப்போது உள்ளே வருகின்றோம். புதிதாக எவரும் வந்தாலும் சரி, இப்போது யாருடனும் கதைப்பதானாலும் சரி அவர்களுக்கிடையில் ஒரு இடைவெளியை வைத்திருக்கிறோமே?.

ஆனால் கொரோனா என்ற வைரஸ் பரவும் வரையில்; அது எமது நாட்டையும் ஆக்கிரமிக்கும் வரையிலும்; நாம் இவ்வாறெல்லாம் செய்தோமா? அப்படியான பழக்கவழக்கங்களை பின்பற்றினோமா?

சரி பின்பற்றியிருந்தால் எப்படி இந்த வைரஸ் எம்மிடையே இவ்வளவு வேகமாக பரவியது?

இப்போது போன்று அன்றும் இருந்தோமா? இல்லையே. ஆனால் அவ்வாறு செய்யாததன் விளைவு தான் இன்று வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது என்பதை இப்போதாவது புரிந்துகொள்கிறீர்களா?.

'புதிதாக வருபவர்களை தனிமைப்படுத்தி வையுங்கள். அவர்களுடன் எவரும் நெருங்கிப் பழக வேண்டாம். வெளியில் சென்று வந்தால் கை, கால்களை கழுவுங்கள். எப்போதும் சுத்தமாக இருங்கள். போஷாக்கான உணவுகளை உண்ணுங்கள்.

இவ்வாறு இருந்தால் கொரோனா பரவுவதிலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்' என்று சுகாதார வைத்தியத் துறையினர் தெரிவித்ததுடன் இப்போது அதனை எல்லோரும் செய்கின்றார்கள்.

ஏன் இப்போது செய்கிறார்கள்?. எல்லாவற்றுக்கும் மரண பயம் தானே காரணம்!

ஆனால் இது தான் எமது பாரம்பரியம;;;; இதனைத் தான் எமது முன்னோர்கள் தினம் தினம் செய்துவந்த ஒன்று. தன் குழந்தையை கூட தன்னோடு முழுமையாக அனைத்து முத்தம் கொடுப்பதும், ஆண் பெண் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதும் எமது பாரம்பரியம் அல்ல. அது எமது பழக்கவழக்கமும் அல்ல.

தன் கையினை வாயில் வைத்து அதில் முத்தமிட்டு அந்த கையை குழந்தையின் கன்னத்தில் வைத்து தனி மனித சுகாதாரத்துடன் அன்பை பரிமாறியது தான் எமது வாழ்வியல் பண்பாடு. அதேபோன்று தான் எமது அன்றாட வாழ்வியல் முறமையும் இருந்தது.

காலை எழுந்து வீட்டைப் பெருக்கி மஞ்சள் நீர் தெளிப்பதும்; சாணத்தால் முன் வாசலைப் பூசி மொழுகுவதும்; வீட்டுக்கு புதிதாக வருபவர்களும், வீட்டார் வெளியில் சென்றுவிட்டு வருபவர்களும் மஞ்சள் கலந்த நீரில் கை காலினை அலசிவிட்டு உட் செல்வதுமே வழக்கம். இவற்றுள் சாணம், மஞ்சள் போன்றவை யாவுமே கிருமித் தொற்று நீக்கிகள். மிகச் சிறந்த மருத்துவ குணமிக்கவை.

அதேபோன்று காலையில் கோப்பி, ரீ குடிப்பதல்ல எமது பழக்கவழக்கம். மாறாக கொத்தமல்லி அல்லது சுக்கு (வேர்க்கம்பு அல்லது காய்ந்த இஞ்சி) கலந்த கோப்பியையே உட்கொள்வதே வழக்கம்.

மரண வீடுகளுக்குச் சென்று வருவோர் வீட்டினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் கட்டியிருக்கும் உடை அத்தனையையும் களைந்து கழுவப் போட்டு, தலையில் குளித்த பின்னர் புது உடைகள் உடுத்தே உள்ளே வர வேண்டும்.

வைத்தியசாலைகளுக்குப் போய்வருவோரும் முற்றாகக் கை, கால் அலம்பிய பின்னரே வீட்டினுள் நுழையலாம். குளித்த பின் வாழையிலையில் உணவு உட்கொள்வார்கள். வாழையில் ஓளஷத குணங்கள் உண்டு.

எவரையும் முதன் முதலில் அன்றைய தினம் சந்தித்தால் கை கூப்பியே வணக்கந் தெரிவிப்பார்கள். சுத்தம் சுகந் தரும் என்பது எமது பண்பாட்டில் ஊறிய ஒரு கருத்து. வீட்டில் துளசி, வேம்பு, கற்பூரவள்ளி, திருநீற்றுப் பச்சை போன்ற மரங்களை தவறாது வளர்ப்பார்கள். கொத்தமல்லி இலையை உணவுடன் பல முறை கிழமைக்குக் கிழமை சேர்த்துக் கொள்வார்கள்.

காய்ச்சல், தடிமன், மூச்சடைப்பு, தலையிடி என்று வந்தால் மூலிகைகளினால் ஆன கஷhயத்தையே மூன்று நாட்கள் உட்கொள்வார்கள். நோய் போய்விடும். தும்மல், இருமல் வந்தால் கிருமிகள் பரவாதிருக்க சால்வையால் அல்லது புடவை நுனியால் முகத்தை மூடி தும்முவதற்குப் பாவிப்பார்கள்.

மனிதர்கள் மிக அருகில் அமர்ந்திருக்கமாட்டார்கள். சற்று இடைவெளிவிட்டே அமர்ந்திருப்பார்கள். ஆண்களும் பெண்களும் வேறாக வீட்டினுள் இருப்பார்கள். வெளியாட்கள் வீட்டுக்கு வந்து போன பின் (பொதுவாக தூர இடங்களில் இருந்து வந்து போனபின்) வீட்டை உடனே நீர் கொண்டு அவர்கள் இருந்துவிட்டுப் போன இடங்களை வீட்டார்; கழுவுவார். சாம்பிராணி பிடிப்பார்கள்.

இப்போது போன்று அப்போதும் ஏதும் கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆதனால் தான் எமது முன்னோர்கள் இது போன்ற கட்டுப்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் உருவாக்கியிருக்கலாம். அதுவே பின்னர் எமது பண்பாடாகவும் மாறியிருக்கக் கூடும்.

ஆனால் இவையனைத்தும் காரண காரியத்துடன் தான் எம்மவர்கள் வகுத்து வைத்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கிராமிய பொருளாதார கட்டமைப்பு

அதேபோன்று வீடுகள் தோறும் அன்று வீட்டுத் தோட்டம் செய்தார்கள். தமக்கு தேவையான மரக்கறிகளை தாமே உற்பத்தி செய்தார்கள். இதனால் நாளாந்தம் சுத்தமான போஷாக்கான, கிருமித் தொற்றற்ற இரசாயன மருந்துகளற்ற நல்ல உணவுகள் கிடைத்தன.ஆனால் பின்னர் நகரமயமாக்கல், கிராமங்கள் நகரங்களாக மாற்றமடைந்ததை தொடர்ந்து வீட்டுத் தோட்டம் செய்யும் பழக்கவழக்கத்தையே மறந்துவிட்டோம்.

நல்ல உணவுகளை உண்பதையும் நிறுத்திவிட்டோம். எவரோ எப்படி எப்படியோ செய்யும் உணவுகளை ஓடர் செய்து சாப்பிடத் தொடங்கிவிட்டோம். இதனால் தற்சார்பு பொருளாதாரம் இல்லாமையால் எமக்கு தேவையான உணவுகளை பெறுவதற்கும், மரக்கறிகளை பெற்றுக்கொள்வதற்கும் இன்னொருவரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

கிராமங்கள் தோறும் அன்று கிராமிய சந்தைகள் பல இருந்தன. நல்ல மரக்கறிகள், பயிர்கள் கிடைத்தன. ஆனால் அதன் பினனர் தோற்றம் பெற்ற பெரு வர்த்தகம் மக்களை கிராமிய சந்தைகளை விடுத்து; பெரு நகரங்களை நோக்கி ஓட வைத்தது. அதன் விளைவு கிராமிய சந்தைகள், கிராமிய பொருளாதாரம் சிதைவடைந்தது.

இவ்வாறு எமது பழக்கவழக்கத்தை மறந்து, அதனை தொலைத்து நாகரீகத்தை நோக்கி ஓட தொடங்கியதன் விளைவு; இன்று இப்படியான கொள்ளை நோய்களை உருவாக்கியதும், இது போன்ற பேரீடர் ஏற்படுகின்ற போதும் அதனை சமாளித்துக்கொள்ள முடியாமல் வீட்டுக்குள் முடங்கியிருப்பதுமேயாகும்.

மாற்றத்தின் ஆரம்பம்

ஆனால் இன்று மீண்டும் அந் நிலைமை ஏற்படத் தொடங்கிவிட்டன. அந்த எழுச்சியான மாற்றத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. மீண்டும் மனிதன் தன் பாரம்பரியமான பழக்கவழக்கங்களை கைக்கொள்ளத் தொடங்கிவிட்டான்.

அந்த மாற்றம் உலகம் பூராகவும் ஏற்படத் தொடங்கிவிட்டது. குறிப்பாக தமது அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றத் தொடங்கிவிட்டான். பீட்சாவையும், பேகரையும் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தவன் இன்று மூலிகைகளையும், நல்ல மரக்கறிகளையும், தானியங்களையும் தேடித் தேடித் வாங்கிச் சாப்பிடத் தொடங்கிவிட்டான்.

இதுவரை காலமும் பெரிய பெரிய ஸ்சாப்பிங் மோலில் காந்திருந்தவர்கள் இன்று தானியங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்யும் சந்தைகளில் வரிசையில் நின்று வாங்கும் நிலைக்கு திரும்பிவிட்டான்.

ஆனால் வரிசையில் நின்று களைத்து போனவர்கள் அதனை தாமே உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணரத் தொடங்கிவிட்டனர். பலர் கிராமப் புறங்களிலும், தமது வீட்டுகளில் காணிகள் வைத்திருப்பவர்களும் மீண்டும் அங்கு வீட்டுத் தோட்டம் அமைக்கத் தொடங்கிவிட்டனர்.

விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த பொருட்களை தாமே நேரடியாக விற்பனை செய்யத் தொடங்விட்டார்கள். கிராமிய சந்தைகள் பல மீண்டும் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. இப்போது தான் மீண்டும் கிராமிய சந்தையின் அவசியத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

இது ஆக்கபூர்வமான மாற்றம். ஆனால் அழிவிலிருந்து அந்த மாற்றம் ஏற்படுகின்றது என்பதே வேதனையானது. எனினும் உலக ஒழுங்கினை மாற்ற முடியாது. அது ஜதார்த்தமானது.

நாம் முன்னர் கூறியது போன்று இக் கொடிய வைரஸுக்கு எதிரான மாற்று மருந்தை மனிதன் கண்டுபிடித்து விடுவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கு முன்பாக உலகம் தன்னை முழுமையாகவே மாற்றிவிடும். அந்த மாற்றம் இப்போது ஆரம்பமாகிவிட்டது.

காலத்துக்கு காலம் இப்படியான கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிப் படைத்திருக்கின்றன. ஆனால் அவ்வாறான நிலைகளின் போது எம்மைப் பாதுகாத்துக்கொள்ள எம்மிடம் வலுவான தனிமனித சுகாதாரமும், போஷாக்கான உணவுப் பழக்கவழக்கமும், சிறந்த சுய பொருளாதார கட்டமைப்பும் இருக்க வேண்டும். இருந்தால் அதனை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்பது உறுதி.

அதே நேரம் மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையையும் மனித்துவத்தையும் இது வளர்த்துள்ளது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற மனித நேயத்தையும் இந் வைரஸ் ஏற்படுத;திவிட்டது.

கண்ணுக்குத் தெரியாத அனு அளவான எதிரியாக இது இருந்தாலும்; உலகம் முழுவதும் பல ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டியதே முக்கியமானது.

ரி.விரூஷன்

Comments