கொரோனா முதலாவது மரணம் பதிவு | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா முதலாவது மரணம் பதிவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் முதலாவது மரணம்  நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மாரவில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜா சிங்க நேற்று தெரிவித்தார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் என்பதுடன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

இதேவேளைஇ நாட்டில் நேற்று புத்தளம் மற்றும் கண்டியில் மேலும்  02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

இதன்படி தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 113 பேர் உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜா சிங்க தெரிவித்தார். இவர்கள் அனைவரும் அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 14 நாட்களுக்குள் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் நாட்டில் எந்தப் பிரதேசத் திலிருந்தாலும் அவர்களது பகுதி சுகாதார அதிகாரிகளுக்கு அது தொடர்பில் அறிவிக்குமாறும் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று தம்மை பரிசோதனைக்குட்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜா சிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் புத்தளம் நகரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலை அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நபர் கடந்த 17ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து புத்தளத்திற்கு வந்தவர் என்றும் அவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனையடுத்து அவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து கொழும்பு ஐ.டி.எச்.மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அக்குரணை பகுதியிலிருந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின்பேரில் அங்கிருந்து கொழும்பு ஐ.டி. எச்.  மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 15ஆம் திகதி இந்தியாவிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்தவர் என்றும் இந்தியாவிலிருந்து வந்த விடயம் தொடர்பாக எவருக்கும் அவர் அறிவிக்கவில்லை. எந்த தனிமைப் படுத்தலுக்கும் அவர் உட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. கண்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் காய்ச்சல் காரணமாக சென்ற பின்பே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இந்நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரின் இரு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும்  அது தொடர்பாக மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது தொடர்பாக பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments