சவப்பெட்டி அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

சவப்பெட்டி அரசியல்

இயற்கைக்கு நாம் சவால் விட்ட காலம் போய், இயற்கை நமக்கு சவால் விடும் காலத்தில் தற்போது நாட்கள் நகர்ந்து செல்கின்றன.

ஒருவர் மாத்திரம் அல்ல இன்று உலகமே நிவாரணம் தேடும் ஒரு இக்கட்டான நிலைமையே. சமூகத் தூரமாதல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நிலையில் வாழ்கின்றோம். இடைவெளியை கடைபிடிப்பது என்பது சமூகப் பொறுப்பு ஆகிறது. இந்த சமூகப் பொறுப்பு ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் உரியது.

மலையகத்தில் தனிமைப்படுத்தல்

இந்தக் கொரோனா காலத்தில் தனிநபர்களாக தனிமைப்படுதல், சுய தொற்றொதுக்கல் போன்ற விடயங்களில் தம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டியது சமூகப் பொறுப்பு. அதனைச் செய்துகொள்ள வேண்டியவர்கள் யார் என அவர்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா என்பதன் முன்கூட்டியதான ஒரு சோதனை நடவடிக்கையே இந்த தனிமைப்படுத்தல். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட உடனேயே அவர் வைரஸ் தொற்றாளர் என சமூகத்தினர் புறக்கணிப்புச் செய்வதால் நோய் தொற்றாவிட்டாலும் கூட பாதிக்கப்பட்டவராக உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக நேரிடும். “தனிமைப்படுத்தல் அறிவித்தல்களை தவறாக சித்தரிக்க வேண்டாம். இது ஒரு முன்மாதிரியான பாதுகாப்பு எச்சரிக்கை “ என்பதே எல்லோராலும் புரிந்துகொள்ளப்படவேண்டியது.

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறோமா

உலக நாடுகளுடன் இலங்கையை ஒப்பிடும்போது இந்த வைரஸின் தாக்கம் குறைவாகவே இருக்கின்றது எனலாம். இதற்கு அரசாங்கத்தின் நல்ல பல முன்னெடுப்புக்கள் மக்கள் இப்பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பாக உள்ளது. இருப்பினும் மக்கள் நலன் கருதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டும் பல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதையும். நாம் கண்கூடாக காணலாம்.

‘Stay home’ அதாவது வீட்டிலேயே இருங்கள். கூட்டம் கூடாதீர்கள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவறுத்தல்களுக்கு அமைவாக முக்கிய சுகாதார பழக்க வழக்கங்களை கையாளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை எத்தனை பேர் கடைபிடிக்கின்றனர் என்பதுதான் பிரதான கேள்வியாக உள்ளது. கூட்டம் கூட என அறிவுறுத்தியுள்ள போதும் மலையகத்தில் ஒரு சில பகுதிகளில் இந்த ஊரடங்கு ஒரு களியாட்ட காலமாக எடுத்து கொண்டார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. பொது நலன் கருதிய சுயநலமாக செயற்பட வேண்டிய காலத்தில், அலட்சியப்படுத்தும் போக்கில் செயற்படுவதால் சமூகம் பெரும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலைமையே ஏற்படும்.

மலையகத்தில் நிவாரண உதவி

பொதுவாக உலகளாவிய ரீதியிலும் சரி நாடளாவிய ரீதியிலானாலும் எந்தவொரு இடர் நிலையிலும் உழைக்கும் வர்க்கத்தினரே பாதிக்கப்படுவார்கள். இது இயற்கையின் நியதி. அந்தவகையில், இந்த வைரஸின் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நாட் கூலிகளும் மலையக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்பட்ட வறட்சியான காலநிலையினால் தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க போதியளவு கொழுந்து பறிக்க முடியாத நிலை. இதனால் மார்ச் மாதம் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. சொல்லப்போனால் அந்த மாதத்திற்கு கூட சமாளிக்க முடியாத நிலை. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தினால் கடந்த மார்ச்ச மாதம் 19ஆம் திகதி நடைமுறைக்கு வந்த ஊரடங்கு தற்போதும் தொடர்கின்றது.

தோட்ட நிர்வாகத்தினருக்கும் தொழில் வழங்க முடியாதநிலை. அவ்வாறு சில நாட்கள் வேலை வழங்கினாலும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சநிலை வேலைக்குச் செல்வதை தடுத்து விடுகின்றது. அத்துடன், நிர்வாகம் வேலை வழங்கினாலும் அவற்றின் சமூக அக்கறை பற்றி ‘சமூக வலைத்தளங்களில்’ தொழில் செய்பவர்கள் உட்பட பலரது விமர்சனங்களுக்கும் செவிசாய்க்க வேண்டிய நிலையில் தோட்ட நிர்வாகங்கள். மக்கள் நலனுக்காக இக்கட்டான இக்காலத்தில் முன்னெடுக்கப்படும் நல்ல பலவேலைத்திட்டங்கள் அநாவசியமான விமர்சனங்களால் மக்களுக்கு கிட்டாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உரிய நேரங்களில் கிடைக்க வேண்டிய பணத்தொகை கிடைக்காமையினால் தொழிலாளர்கள் தம்மிடம் உள்ள நகைகளை அடகு வைத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லும் அவலம் தொடர்கின்றது.

இருப்பினும் மக்களின் நலன்கருதி தோட்டப்பகுதிகள் சிலவற்றில் பணமும்/அத்தியாவசிய பொருள் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது, அது மாத்திரமன்றி இந்த வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இத்தகைய இடர்காலங்களின் போது தனிநபர்கள் உதவுகின்றனர். அந்த வகையில் பல அரச/அரச சார்பற்ற அமைப்புக்கள் உதவிகளை வழங்கி வருகின்றது.

கொரோனா அரசியல்

இந்த சமூக அக்கறையில் அரசியல் அக்கறை அதிகமாகவும் சமுதாய அக்கறை மந்தமாகவும் இருப்பது கண்கூடு. அரசாங்கம் கொடுப்பதை தமது கட்சியே கொடுப்பதாக பிரசாரம் செய்து கொடுக்கும் தரப்பும், தமது கட்சி அன்றி தாமே கொடுக்கிறோம் என சில வேட்பாளர்களும் விளம்பர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களிடம் முறையான திட்டம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமது கட்சித் தொண்டர்கள் கீழ் மட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் பொறிமுறைகள் தலைமைகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சில கட்சித் தொண்டர்கள் வெளியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நிதி திரட்டுவதாக அறியமுடிகிறது. அது தவறில்லை. ஆனால் அவை கட்சிகளின் கணக்கு வழக்குகளுக்கு உள்ளாகின்றனவா? என்பதே கேள்விக்குறி. அத்துடன் யார் நிதி பங்களிப்பு செய்தாலும் அதனைக் கட்சிகளின் ஊடாக முன்னெடுக்கும் போது கட்சி சார்பாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். இது பரவலான உண்மை.

அரசாங்கம் கொடுக்கும் நிதியை கட்சியின் பெயரில் கொடுப்பது எந்தளவுக்கு தவறோ அதே போன்று கட்சியில் பெயரால் சிதியைப் பெற்றுவிட்டு தனிநபர்களாக விளம்பரம் செய்வதும் தவறு. அரசாங்கம் கொடுக்க வில்லை என்பதை அழுத்தமாக சொல்லி அரசியல் செய்யும் அளவுக்கு அரசாங்கத்திடம் அதனைப் பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மறுபக்கம் அரசாங்கம் கொடுக்காவிட்டால் அதனை அரசாங்கத்தின் மீது சுமத்தி விடுவதும் அரசாங்கம் கொடுத்து விட்டால் அதில் தமது கட்சிப்பெயரைப் போட்டுக் கொள்வதும் கபட நாடகம்.

தலைநகரிலும் பிற இடங்களிலும் சிக்கித்தவிக்கும் மலையக உறவுகளை ஆதரிக்க அரவணைக்க உருப்படியான அரசியல் நிகழ்ச்சித்திட்டம் இல்லை. எல்லா பணிகளையும் தொழிற்சங்கம் சார்ந்தே மட்டுப்படுத்திக் கொண்ட அரசியல் கட்சி பொறிமுறையே மலையகத்தில் செயற்பாட்டில் உள்ளது. தலைநகரில் தத்தளிக்கும் உறவுகளுக்கு உதவுகிறோம் என செய்தியும் சில தொலை பேசி இலக்கங்களும். தொடர்பு கொண்டால் அதில் பதில் இல்லை. ஒன்றிரண்டு உதவிகளை செய்து அவர்களை வைத்து அரசியல் பேச செய்வது. தட்டுத்தடுமாறி ஊடகத்தில் பாதிப்புற்றவர்கள் அழுது புலம்பிய பின்னரே அவர்களுக்கு ஒரு ஏற்பாடு.

அதிலும் அவரது வழிகாட்டல் இவரது நடவடிக்கை அதிரடி என அரசியல் விளம்பரங்கள் வேறு.

இந்த அரசியல் தலைமைகளுக்கு இந்தக் கட்டுரைகள் ஒன்றும் புதிதும் அல்ல. புத்திமதியும் அல்ல. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ்ட் அதானம் கெபரியேஸ்ஸ் கூறியுள்ள வசனத்தையே அர்ப்பணம் செய்யவேண்டி உள்ளது. “மக்களை காப்பாற்ற வேண்டும், அதிக சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லையெனில் தயவுசெய்து கொரனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்”

ஜீவா சதாசிவம்

Comments