ஜமுனா ராணியைச் சந்தித்தேன் | தினகரன் வாரமஞ்சரி

ஜமுனா ராணியைச் சந்தித்தேன்

சென்னையில் பாடல் ஒலிப்பதிவின் பின்னர் பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணியுடன். பாடல் ஒலிப்பதிவின் போது இடமிருந்த வலம் பாடலாசிரியர் சந்திர தாச பெர்ணாண்டு பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி. உதவியாளர் மர்சூக் இசை அமைப்பாளர் பூபதி.

2013 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், ஒரு நாள், சென்னையில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் வி. ராஜகோபால் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்.

தான் ஒரு சிங்களத் திரைப்படம் தயாரிக்க இருப்பதாகவும் இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவு செய்ய வேண்டும் அதற்கான பாடல்களை எழுதக் கூடிய ஒரு பாடல் ஆசிரியரையும் அழைத்துக் கொண்டு வரும் படியும் கேட்டுக் கொண்டார்.

ஆரம்பக் கால சிங்களத் திரைப்படங்களில் பாடல்களை தெளிவாகப் பாடக் கூடிய தமிழ்ப் பாடகிகளாக கே. ராணி, ஜிக்கி, ஜானகி, ஜமுனா ராணி போன்றவர்கள் அன்று இருந்தாலும் இப்போது முப்பது நாற்பது வருடங்களாக அவர்கள் பாடுவது இல்லை என்றாலும் அன்று அவர்கள் பாடிய அந்த சிங்களப் பாடல்களுக்கு இன்றும் சிங்கள மக்களிடத்தில் ஆமோக வரவேற்பிருக்கிறது.

கே. ராணியும் ஜிக்கியும் இங்கிருந்து தொலைப் பேசியில் தொடர்பு  கொள்ள முடியாததால் ஜானகியைத் தொடர்;பு கொண்ட போது அவர் சுகயீனமாக இருப்பதாக அவர் மகன் சொன்னதால் ஜமுனா ராணியைத் தொடர்;பு கொண்டேன்.

அப்போது அவர் ஹைதராபாத்தில் இருந்தார்.

தொலைபேசியில் நாளை மறு நாள் பாடல் ஒலிப்பதிவுக்கு சென்னை வருவதாக ஒப்புக் கொண்டார்.

ஜமுனா ராணி தென்னிந்திய தமிழ்ப் படங்களில் பிரபல பாடகியாக சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜொலித்தவர்.

இரண்டு நாட்களில் விமான ரிக்கற்றுகள் வந்தன.

எனது சிங்களப் படங்களுக்கு பாடல்கள் எழுதி நன்கு பரீச்சயமான சந்திரதாச பெர்ணாண்டு என்பவருடன் மறு நாள் சென்னையை நண்பகல் அடைந்து, சாலிக்கிரா மத்திலுள்ள சன்சிடைன் ஹோட்டலில் தங்கினோம்.

மாலை தயாரிப்பாளர் ராஜகோபால், இசையமைப்பாளருடன் வந்து ‘ இவர் தான் மியூசிக் டைரக்டர் பூபதி ’  எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தயாரிப்பாளர் கதையில் பாடல்கள் இடம் பெற வேண்டிய சந்தர்ப்பங்களைச் சொன்னார்.

நான் பாடல்களை எழுத வேண்டிய விதிகளை சிங்களத்தில் பாடல் ஆசிரியருக்கு விளக்கி விட்டு, பூபதியுடன் தனிமையில் உரையாடினேன்.

பூபதி நடுத்தர வயதுள்ளவர்.

ஏ. சாமிநாதன் என்ற புகழ் பெற்ற முன்னாள் சண்டைப் பயிற்சியாளரின் இரண்டாவது மகன். இவருக்கு மூத்தவர் பெப்சி விஜயன் என்ற பெயரில் தமிழ்த் திரைப் படங்களில் வில்லனாக இப்போது நடித்து வருகிறார்.

ஜமுனா ராணி என்ற பாடகியையும் அவரது பாடல்களையும் முன்பின் அறியாத பூபதி அவர் ஒரு பழம் பெரும் பாடகி என்றதும் வெல வெலத்துப் போய் வேறு யாரையாவது புதியவர்களை வைத்து பாட வைக்கலாம் என முரண்படலானார். தயாரிப்பாளரையும் குழப்பி விட்டார்;.

நான் அது முடியவே முடியாது என அவர் கருத்துக்கு இணங்க மறுத்து விட்டேன்.

பாடல் ஆசிரியர் சந்திரதாசவும் ஜமுனா ராணியின் பழைய சிங்களப் பாடல்களைப் புகழ்ந்து பேசவே பூபதியும் தயாரிப்பாளரும் என் இஷ்டப்படியே செய்யும் படி விட்டு விட்டனர்.

பாடல் ஒலிப்பதிவு அன்று ஜமுனா ராணி ஸ்டூடியோவுக்குள் நுழையும் போதே  யாரும் எதிர்பாராத விதத்தில் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்;து வணங்கிய பூபதி, ‘ நான் தானம்மா உங்களப் பாட வைக்கும்படி சொன்னேன் ’ என்றார்.

தயாரிப்பாளர் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

நான் விறைத்துப் போய் நின்றேன்.

பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன்

Comments