எம்மைப்போல அயலவரையும் நேசிக்கத் தொடங்குவது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

எம்மைப்போல அயலவரையும் நேசிக்கத் தொடங்குவது எப்போது?

அடங்கிக்கிடக்கின்றது உலகம்

சூரியன் அதன் போக்கில் உதிக்கின்றது,

மழை பொழிகின்றது.

வழக்கமான உற்சாகத்துடன் அலைகள் அடிக்கின்றன.

மான்கள் துள்ளுகின்றன.

அருவிகள் வீழ்கின்றன.

யானைகள்  உலாவுகின்றன.

முயல்கள் விளையாடுகின்றன.

மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன.

தவளைகள் கூடத்துள்ளியாடுகின்றன.

பல்லிக்குப்பயம் இல்லை.

அணிலுக்கும் பயமில்லை.

அதன்போக்கில் ஓடுகின்றன.

காக்கையும் புறாக்களும்

சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் தேனீக்களும் ஏன் குழவிகளும் அஞ்சவில்லை.

மானிட இனம் அஞ்சிக்கிடக்கின்றது.

அதனால் சக மனிதனையும் நேசிக்கத் தயங்குகின்றது. கூட்டை மூடி பூட்டுப்போட்டு அடங்கிக்கிடக்கின்றது.

முடங்கியது உலகம் அல்ல. மானிடம் கண்டுவைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும்வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான் என்ற கவி வரிகள் பல்வேறு அர்த்தங்களை உணர்த்தி நிற்கின்றது.

மனிதர்கள் பலர் தமக்காகவே தாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள், அதாவது, கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடரங்குச் சட்டத்தினால் அனைத்துப் பிரதேசங்களும் முழுமையாக முடங்கிக் காணப்படுகின்றது. குறிப்பாக, ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் அல்லது பண வசதி படைத்தவர்கள்  ஒவ்வொருவரும் தமக்குக்கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் சதொச விற்பனை நிலையங்கள் வர்த்தக நிலையங்களை  நாடி தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்வோரில் அதிகமானோர் பண வசதி படைத்தவர்கள்.  நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருகின்றார்கள், ஆனால், அன்றாடம் கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தமது அன்றாட உணவுத்தேவையை நகர்த்தும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பணவசதிகளின்றி  இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்யவோ அல்லது களஞ்சியப்படுத்தி வைக்கவோ வழியற்று இருக்கின்றார்கள். இவர்கள் பற்றி அயலில் இருக்கின்ற நாங்களும் கரிசனை கொள்ள வேண்டும். நாங்கள் வாங்குகின்றவற்றில் அவர்களுக்கு சிறிதளவேனும் வழங்குவதற்குரிய மனநிலையில் இருக்க வேண்டும்.

அதைவிடுத்து, நான் மட்டும் வாழ்ந்தால் போதும்  என்னுடைய குடும்பம் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து நாங்கள் அனைவரும் விடுபடவேண்டும். ஊடரங்குச்சட்டம்  அமுலில் இருந்த காலப்பகுதியில் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஒரு நபர், தான் வாழும் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மிக வறுமையில் வாழ்வதாகவும் அவர்கள் பட்டினியுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதே தகவல் கிளிநொச்சிப்பிரதேச சபையினுடைய தவிசாளருக்கு சென்றிருந்தது.  உடனடியாகவே அந்த இடத்தை தேடிச்சென்று அந்த வீட்டிற்கு தவிசாளரும் சில பணியார்களுடன் சென்றிருந்தோம். முன்னதாக இந்த ஊடரங்குச் சட்டத்தினால் உணவின்றி தவித்துக்கொண்டிருந்த அன்றாடம் தினக்கூலி வேலைசெய்யும் குடும்பங்களுக்கு உடனடியாக அன்றைய தினம் பட்டினியைப் போக்கக்கூடிய வகையில் அரிசி தேங்காய் பருப்பு போன்ற பொருட்களை அவர்கள் வீடுகளுக்குச் சென்று வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே முகநூல் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தொலைபேசி  இலக்கங்களுக்கு பட்டினியை எதிர்நோக்கும் குடும்பங்கள் அழைப்பினை ஏற்படுத்தி  உதவிகளைக் கோருகின்றபோது  அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று  இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனால், நாங்கள் சென்று பார்த்த குடும்பத்தின்  நிலைமை வித்தியாசமானது. நான்கு நாட்களுக்கு முன்னர் குழந்தையை பிரசவித்த தாயும் மூன்று சிறு குழந்தைகளும் தந்தையும் அன்று முழுநாளும் உணவேதுமின்றி வீட்டிலிருந்து வெளியேற அச்சப்பட்டும் உதவிகளை கேட்பதற்கு தொலைபேசி வசதி கூட இல்லா நிலைமையுமே காணப்பட்டது.

உடனேயே அவ்விடத்திற்குச் சென்று அக்குடும்பத்திற்கு அன்று சமைத்து உண்ணக்கூடிய வகையில் உலர் உணவுப்பொருட்களையும், உணவுப்பொருட்களையும் குழந்தையைப் பிரசவித்த தாய் மற்றும் குழந்தைக்குரிய பால்மா மற்றும் சில பொருட்களையும் வழங்கியிருந்தனர் இந்த வீட்டைச்சூழ எத்தனையோ வசதிபடைத்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இதில் யாராவது நினைத்திருந்தால் இவ்வாறான ஓரிரு குடும்பங்களுக்கு அவர்களே  உதவியிருக்கலாம்.

இதேபோன்று, கிளிநொச்சி யூனியன்குளம் பகுதியில்  வசதிபடைத்த ஒருவர் தனது வீட்டிற்கருகில் ஐந்து பிள்ளைகளுடன் ஒரு குடும்பம் கஸ்ரப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அன்றைய தினம் பிற்பகல் 5.00மணியளவில்  அந்த வீட்டிற்குச்சென்ற போது, அந்தக் குடும்பத்தின் நிலையும் மிகமிக பரிதாபகரமானது.

அதாவது துவிச்சக்கர வண்டியில் ஐஸ் பழ வியாபாரத்தில் ஈடுபட்டுஅதன் மூலம் அன்றாடம் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து பசியாறிய குடும்பம்.  தொழில்  இழந்த நிலையில் அன்றையதினம் காலையும் உணவில்லை, மதியமும் உணவில்லை, இரவும் உணவிற்கே எது செய்வ​ெதன்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தது.

அப்போது, நாங்கள் கொண்டு சென்ற இரவு உணவை மாத்திரம் வழங்கியிருந்தோம். அயலில் உள்ளவர்கள்  நினைத்திருந்தால் இவர்களுக்கு ஒரு நேர உணவையேனும் வழங்கியிருக்கமுடியும்.

இவ்வாறு சில மனிதர்களின்  மனநிலையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை.

தற்போது இவ்வாறான குடும்பங்களுக்கான உதவிகளைச்செய்யும் நோக்கில் கொடையாளர்கள், சமுக ஆர்வலர்கள்  தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் உதவிகளை வழங்கிவருவதுடன், அரசும் இவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை  எடுத்துள்ளது.

ஆனால், நாங்கள் எல்லோரும் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் நீண்டவரிசையில் நின்று எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், என்று எமக்குத்தேவையான அனைத்தையும் முண்டியடித்து பெற்றுக்கொண்டு களஞ்சியப்படுத்துகின்றோம். ஆனால் எங்கள் அருகில் உணவின்றி இருக்கின்ற குடும்பத்தை கவனத்தில் கொள்வதோ, அல்லது நாங்கள் வாங்குகின்ற பொருட்களில் சிறிதளவேனும் அவர்களுக்கும் கொடுப்போம் என்ற மனநிலைக்கோ இன்னமும்  நாங்கள் வரவில்லை என்பது தான் இன்று  இருக்கின்ற உண்மையாகும்.

ஜது-பாஸ்கரன்

Comments