ரமழான் நோன்பின் மாண்பு | தினகரன் வாரமஞ்சரி

ரமழான் நோன்பின் மாண்பு

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ரமழான் மாத நோன்பு அடுத்துவரும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்றது. இந்த நோன்பை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம்கள் வழமை போன்று மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆர்வத்தோடும் உள்ளனர்.

இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ரமழான் மாத நோன்பை அடைந்து கொள்வதற்காக ஸுன்னத்தான நோன்புகளை நோற்று எவ்வாறு தயாரானார்களோ அதே ஒழுங்கில் முஸ்லிம்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அல் குர்அனினதும் முஹம்மத் (ஸல்) அவர்களதும் வழிகாட்டல்கள் இதற்கு அடிப்படையாக உள்ளன. 

உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவரதும் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சத்துக்கும் விமோசனத்திற்கும் நேர்வழிகாட்டவென  அல்லாஹ்வினால் வகுத்தளிக்கப்பட்டிருக்கும் அல் குர்ஆன் கி.பி 610 முதல் கி.பி 623 வரையும் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாகக் கட்டம் கட்டமாக உலகிற்கு அருளப்பட்டு 23 வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவே உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்காகவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இறைவழிகாட்டலாகும். 

இவ்வாறு மகத்துவமும் சிறப்பும் மிக்க இந்த உலகலாவிய இறைவழிகாட்டலான அல் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் உலகிற்கு அருளப்பட்டது என்றும் அம்மாதத்தை அடைந்து கொள்பவர்கள் நோன்பு நோற்குமாறும் நோயாளர்களாகவும், பிரயாணிகளாகவும் இருப்பவர்கள் ரமழான் அல்லாத நாட்களில் கணக்கிட்டு நோன்பை நோற்றுக் கொள்ளுமாறும்  அல்லாஹ் அல் குர்ஆனின் ஸுரத்துல் பக்ரா என்ற  அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கின்றான்.

இதன்படி ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கமும் அதனை நோற்பதற்கான காரணமும் மிகவும் வௌிப்படையானது.  நோன்பானது தினமும் குறிப்பிட்ட மணித்தியாலயங்கள் உணவையும் பானத்தையும் தவிர்த்து இச்சைகளைக் கட்டுப்படுத்தி இறை வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 

அதேநேரம் இவ்வாறான ஏற்பாடுகளுடன் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் அல்லாஹ் குறிப்பிடத்தவறவில்லை.

'(நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.'

(அல் குர்ஆன் 02 ; 183)

இந்த வசனத்தின்படி முஹம்மத் (ஸல்) அவர்களது சமூகத்திற்கு முற்பட்ட சமூகங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்துள்ளது. அது போன்று இந்த சமூகத்திற்கும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. இதன்  நோக்கமும் எதிர்பார்ப்பும் மிகவும் தௌிவானது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இறையச்சம் மிகவும் இன்றியமையாததாகும். மனிதன் தான் படைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தையும் இலக்கையும் அடைந்து கொள்ளவும் அதற்கேற்ப அவனை புடம்போட்டு அவனைப் பக்குவப்படுத்திட வழிவகுக்கும் பண்பு அது தான்.

அல்லாஹ் மனிதனை பூமியினதும் விண்ணகத்தினதும் கலவையாகப் படைத்திருக்கின்றான். அவன் வெறும் தசைப் பிண்டம் அல்ல. மாறாக ஆன்மாவையும் கொண்டிருப்பவன் அவன். அதேநேரம் உடலும் உள்ளமும் கொண்டவனாக விளங்கும் மனிதன் உணர்வுகளையும் இச்சைகளையும் வேட்கைகளையும் கொண்டிருகின்றான். அத்தோடு தற்பெருமை, ஆணவம், அகங்காரம் போன்றவாறான பண்புகளும் கூட அவனில் இருக்கவே செய்கின்றது.

இவ்வாறு பல்வேறுவிதமான தன்மைகளையும் பண்புகளையும் ஒருங்கே பெற்றுக்கொண்டிருப்பவனாக விளங்கும் மனிதனை ஈருலக வாழ்வுக்கும் ஏற்ற வகையில் நெறிப்படுத்தி பக்குவப்படுத்துவது மிகவும் அவசியமானது.  அப்போது தான் அவனது வாழ்வு அர்த்தபூர்வமானதாக அமையும். அது ஈருலக வாழ்விலும் சுபீட்சம் அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எனினும் இதனை அவனால் தனித்து நின்று செய்ய முடியாது. ஏனெனில் அவனில் வரையறையற்ற ஆசை, இச்சை, எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன. அவன் மண்ணுலகப் பொருட்களோடும் வரையறையற்ற ஆசைகளோடும் கட்டுண்டுள்ளான்.  அவற்றை அவனால் தனித்து நின்று மிகைப்பதும் கடந்து செல்வதும் இலகுவான காரியமல்ல. 

ஆனால் மனிதனின் உலக வாழ்வு கட்டம் வரையறுக்கப்பட்டதாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கின்றது. இந்த வாழ்வுக்கட்டத்தை எதிர்வரும் வாழ்வுக்கட்டங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பை மனிதன் கொண்டிருக்கின்றான். அதனால் இந்த உலக வாழ்வுக்கட்டத்தை பொறுப்புணர்ந்து உரிய ஒழுங்கில் அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் இவ்வாழ்வு கட்டத்திலும் எதிர்வரும் வாழ்வுகட்டங்களிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையே ஏற்படும். ஆனாலும் பல்வேறு பண்புகளையும் தன்மைகளையும் ஒருங்கே பெற்றுக் கொண்டிருக்கும் மனிதனால் இவ் உலக வாழ்வுக்கட்டத்தை எதிர்வரும் வாழ்வுக்கட்டங்களுக்கு  ஏற்ப தனித்து நின்று வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள முடியாது. அவனுக்கு இறைவழிகாட்டலும் இறையச்சமும் இன்றியமையாதது. அப்போது தான் எதிர்வரும் வாழ்வுக்கட்டங்களுக்கு ஏற்ப இவ் உலக வாழ்வுக்கட்டத்தை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

அந்த வகையில் இந்த இறையச்சத்தை அடைந்து கொள்ளப் பெரிதும் உதவக்கூடியதாக ரமழான் மாத நோன்பு விளங்குகின்றது.  அதனால் அல்லாஹ்வின் கட்டளைக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களது வழிகாட்டலுக்கும் ஏற்ப நோன்பு நோற்று இறைவழிபாடுகளில் ஈடுபடும் போது இறையச்சம் மேலோங்கும்.

குறிப்பாக நோன்பு நோற்பதன் ஊடாக பசி உணர்வைப் புரிந்து கொள்ளலாம். இச்சைகளை நெறிப்படுத்திடலாம்.  இவற்றின் ஊடாக சகிப்புத்தன்மை, பொறுமை மேலோங்குவதோடு மனிதனில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் கருணை, இரக்கம்,  பொறுமை என்பன வளர்ச்சியடைவதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு ஏழை, வறிய மக்களின் பசியையும் எதிர்பார்ப்புக்களையும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் 'மனிதன் ஆன்மாவைக் கொண்டவனாக இருக்கின்றான். அது மண் சார்ந்ததல்ல. அது விண் சார்ந்தது. அதனால் அவனது ஆன்மாவை வளப்படுத்தவும் பக்குவப்படுத்தவும் மண் சார்ந்த பொருட்களால் முடியாது. அதற்கு இறையச்சமும் இறைத்தொடர்பும், இறைவனுடனான நெருக்கமும் எண்ணமும் இன்றியமையாதது.. மண்சார்ந்த பொருட்களோடும் எல்லையற்ற ஆசைகளோடும் கட்டுண்டு கிடைக்கும் வரையும் மனிதனின் ஆன்மாவால் விண்ணோக்கி மேழெழ முடியாது. ஆனால் அவனது ஆன்மா இயல்பாகவே விண்ணை நோக்கி பயணிப்பதிலேயே விருப்பம் கொண்டிருக்கும். அவ்வாறு பயணிக்கும் போது அதன் இயல்பான ஆற்றல்களும் திறமைகளும் வெளிப்படும். மனிதனின் ஆன்மாவுக்கு நோன்பு பெரிதும் வளம் சேர்க்கும். அதனை வளப்படுத்தும். அத்தோடு நோன்பின் ஊடாக உள்ளம் வளம் பெறக்கூடிய பயிற்சி கிடைக்கப்பெறுவதோடு புலன்களையும், இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளவும் சக்தி கிடைக்கின்றது. சகிப்புத்தன்மை, பொறுமை, கருணை என்பன மேலோங்கவும் அது வழிவகுக்கின்றது'  என்று அல்லாமா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் தமது ததப்பருல் குர்ஆன் விளக்கவுரையில் இவ்வசனத்திற்கு எழுதியுள்ள விளக்கவுரையின் ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதனால் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளபடி இறையச்சத்தை அடைந்துகொள்வதற்கு ஏற்ப நோன்பை அமைத்துக்கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.  அது ஆன்மாவை பலப்படுத்தும். உரிய ஒழுங்கில் ஆராய்ந்து பார்த்தால் மனிதனுக்கு பலமும் சக்தியும் வலிமையும் அளிப்பது உடலை விடவும் ஆன்மா என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலுகளுக்கும் ஏற்ப இவ்வருடமும்  ரமழான் மாத நோன்பை நோற்று இறைவணக்கங்களில் ஈடுபடுவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக இறையச்சம் மேலோங்கவும் ஆன்மா பலம் பெறவும் வழியேற்பட வேண்டும. அப்போது ஈருலக வாழ்வுக்கு ஏற்ப தம்மை புடம் போட்டு பக்குவப்படுத்திக் கொள்வது இலகுவாகிவிடும். அதுவே ஒவ்வொருவரும் அடைந்துகொள்ள வேண்டிய இலக்காகும்.

மர்லின் மரிக்கார்

Comments