தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டும்!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனம், தங்கள் தொழிலாளர்களை தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவிட் - 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம். மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பரிந்துரை செய்ததை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன. இதை மீறி தேவையில்லாமல் வீதியில் பயணிப்பவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவது அனைத்து நாடுகளிலும் அரங்கேறி வருகிறது. இப்படி கோவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து தங்கள் நாட்டை பாதுக்காக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகையில் சில நாடுகளில் இருக்கும் தொழில்துறை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடும் தொழிலகங்களில் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று தெரிந்தும் அதை அந்நிறுவனங்கள் அலட்சியப்படுத்துகின்றன என்பது உண்மையிலேயே கவலை அளிக்கும் விஷயம்.

இதனை எதிர்த்து அந்நிறுவன தொழிலாளர்கள் தன்னெழுச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் தொழிலக ஊழியர்கள் வேலைக்கு வர மறுத்து வேலைநிறுத்தம் செய்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள இறைச்சி அடைக்கும் JBS நிறுவனத்தில் வேலை செய்த பத்து தொழிலாளர்கள் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் சுய தனிமைப்படுத்தல் காரணமாக வீடுகளில் இருந்தால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்திருந்தது. கோவிட் - 19 தொற்று உள்ளவர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்க முன்வந்தது. அந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு வேலை செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி அங்கே சாத்தியமாகாது. அத்துடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் எதுவும் வழங்கப்படவில்லை.

JBS தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கம் இறைச்சி பதனிடும் தொழிற்துறையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இலவச மருத்துவ வசதியும், இலவச குழந்தை பராமரிப்பு வசதியும் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்படி வளர்ந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அரசின் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்தி தங்கள் பணியாளர்களை வேலைக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர். அதுபோன்ற நிறுவனங்களில் ஒன்று இத்தாலியில் இயங்கி வருவது இன்று உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகளவில் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பெர்கமா நகரில் அமெரிக்காவின் எஃப் - 35 (F-35) போர் விமானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இத்தாலி நிறுவனமான Leonardo, அமெரிக்க நிறுவனமான Lockheed Martin இணைந்து இத்தாலியில் எஃப் - 35 விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது இத்தாலியின் ஆயுத விற்பனைக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிற்துறை ஆகும்.கொரோனா தொற்று அதிகமாக உள்ள பெர்கமா (Bergama) என்னும் இடத்தில்தான் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் பெர்கமாவில் உள்ள எஃப் - 35 விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. மேற்படி தொழிற்சாலை இரண்டு நாட்கள் மட்டும் தன் உற்பத்தியை நிறுத்தியது. அதன் பின்னர் அமெரிக்க தூதரகமும், இத்தாலி முதலாளிகளின் சங்கமான Confindustria கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்கள், இப்போது சமூக வலைத்தளைங்களில் தமது எதிர்ப்புணர்வை காட்டி வருகின்றனர். முதலாளிகள் சங்கத்தின் சின்னத்தின் கீழ் ‘உங்களது உடல் ஆரோக்கியத்தை விட எங்களது இலாபம் முக்கியம்’ என்ற வாசகம் பொறித்த படத்தை பரவலாக பகிர்ந்து வருகிறார்கள்.

Comments