நல்லதம்பியாக வாழ்ந்து மறைந்த நெடுஞ்செழியன் | தினகரன் வாரமஞ்சரி

நல்லதம்பியாக வாழ்ந்து மறைந்த நெடுஞ்செழியன்

தமிழ் சாதி, வீரத்துக்கும் எழுச்சி உணர்வுகளுக்கும், ஏன் மாற்று சிந்தனைகளுக்கும் பெயர்போன இனம் என்பது புதிய செய்தி அல்ல. சங்ககால வரலாற்றில் இருந்து இன்றைய காலம் வரை இதற்கு ஏராளமான சான்றுகள் சிதறிக் கிடக்கின்றன. மலையகத்தில் தலவாக்கலை மைந்தர்களை தமிழ் உணர்வுக்கு உதாரணமாகச் சொல்லலாம். தலவாக்கலை என்றதும் சட்டென நமக்கு நினைவில் தோன்றுபவர் பெரியசாமி சந்திரசேகரனாகத்தான் இருக்க முடியும். மலையக அரசியலில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியவர். படித்த இளைஞர் பட்டாளத்தைத் தன்பக்கம் திரட்டியவர். அவர் வழியில் பயணிக்கும் உணர்வாளராக நீங்கள் சட்டத்தரணி தம்பையாவைப் பார்க்க முடியும். கலை இலக்கியம் என்று திரும்பினால் மல்லிகை சி. குமார் ஒரு பல்கலை கலைஞராகத் தெரிகிறார். கொள்கை ரீதியான அரசியல் பார்வையும் எழுத்தாற்றலும் கொண்ட மு. சிவலிங்கம் மற்றொரு தலவாக்கலை மைந்தர் என்றால் கல்வியாளர் தை. தனராஜ் மற்றொரு தலைவாக்கலைக்காரர்.

அந்த மண்ணில் பிறந்தவர்தான் காலஞ்சென்ற நல்லதம்பி நெடுஞ்செழியன். தலவாக்கலை பாரம்பரியத்தில் வந்தவர். ஊடகவியலாளர்களையும் எழுத்தாளர்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு தொழில்முறையாக அதையே தொழிலாகக் கருதுபவர்கள். இரண்டாவது பகுதிநேரத் தொழிலாக அல்லது ஆன்ம திருப்திக்காகச் செய்வது. தொழில் முறையாக பத்திரிகையாளராக இருப்பவர்களையும் இரண்டாகப் பிரிக்கலாம். ஊடகத்துறையில் இருக்கும் செல்வாக்கு மையங்களைப் பயன்படுத்தியும், குறுக்கு வழிகள் மூலமும், செல்வாக்கானவர்களின் கைப்பாவையாக விளங்குவதன் மூலமும் தம்மை 'பெரிய ஆளாக'க் காட்டிக்கொள்வோர் ஒரு வகை. இவர்களிடம் சொந்தத் திறமை இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இன்னொரு பிரிவினர் தமது சொந்தத் திறமைகளைப் பயன்படுத்தி பெயரும், செல்வாக்கும் அதன் மூலம் நிறைய செல்வமும் திரட்டுவதற்கு முயற்சிக்காமல் தமது பணிகளை சிறப்பாகச் செய்பவர்கள்.

நெடுஞ்செழியன் இவ்வகையில் நல்ல தம்பியாகவே தன் வாழ்நாள் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறார். அவரது அப்பா நல்லதம்பி இடதுசாரி சிந்தனை கொண்டவர். தோழர் இளஞ்செழியனின் இலங்கை தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவின் தம்பியாக தன்னை இணைத்துக்கொண்ட நாராயணசாமி தன் வைதீக பெயரை நெடுஞ்செழியன் என மாற்றிக்கொண்டார். அவர் ஒரு கல்லூரி பேராசிரியர். படிப்பாளி. நாத்திகத்தை கடைசிவரை கைவிடாதவர். தீக்குழியில் நடப்பவர்கள் இரும்பு பாளத்தை பழுக்கக் காய்ச்சி அதன்மீது ஆண்டவன் பெயரால் நடந்து காட்டட்டும் என சவால்விட்டு மக்களை சிந்திக்கச் செய்தவர்.

அத்தகையவரின் பெயரைத்தான் தன் மகளுக்கு சூட்டி மகிழ்ந்தார் நல்லதம்பி என்ற பகுத்தறிவுவாதி. கொழுந்து கூடைகளைப் பின்னி தோட்டங்களுக்கு விநியோகிப்பது அவரது குடும்பத்தொழில். அக்காலத்திலேயே சுயதொழில் செய்து பிழைத்தவர். தலவாக்கலையில் சிறிய கடையும் வைத்திருந்தார். இதனால் நெடுஞ்செழியனுக்கு கைப்பணிப் பொருட்களை செய்யும் கலை கைவந்திருந்தது. பகுத்தறிவுவாதி குடும்பத்தவர் என்பதால் வாசிப்பும் தேடலும் சுயமாக சிந்திப்பதும் அவரிடம் இயல்பாகவே புதைந்திருந்தது. ஒரு எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளருக்கு மாற்றி யோசிக்கும் திறனும் இருப்பவை எல்லாமே சரியாகத்தான் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாத தன்மையும் இருந்தால்தான் அவரால் சிறந்த பத்திரிகையாளராக பிரகாசிக்க முடியும். நெடுஞ்செழியனிடம் அது இருந்தது.

நல்லதம்பி நெடுஞ்செழியன் நல்ல பத்திரிகையாளராக இருந்தார். ஒரு நேர்மையான சிறந்த பத்திரிகையாளரிடம் இருக்க வேண்டிய கவசகுண்டலங்கள் அவரிடம் இருந்தன. செல்வாக்கு மையங்களைச் சார்ந்தோர் 'ஏழைப் பிராமணன்' வடிவில் வந்த அவரிடம் கவச குண்டலங்களை யாசித்திருப்பார்கள்தான். ஆனால் அவர் அவற்றை இழக்கவில்லை. தமது கவசகுண்டலங்களை இழக்காதவர்களே சிறந்த ஊடகவியலாளர்கள் என்றால், அங்கே இடம்பிடிப்பவர்களில் ஒருவராக நெடுஞ்செழியன் இருப்பார்.

ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து வாழ்நாள் முழுவதும் ஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த உன்னதமான ஊடகவியலாளர் நல்லத்தம்பி நெடுஞ்செழியன் தனது 65 வயதில காலமானார் என்ற செய்தி தமிழ் ஊடகத்துறைக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் முன்னாள் வீரசேகரி ஞாயிறு வாரமலர் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் தொழில் புரிந்தவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான நல்லத்தம்பி நெடுஞ்செழியன் தனது 40 வருட கால பத்திரிகை உலகில் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர். யார் மனதையும் துன்புறுத்தாது எல்லோரையும் அன்புடன் அரவணைப்பவர். தலவாக்கலை தோட்டத்தில் 21.6.1955 ம் ஆண்டு நல்லத்தம்பி லக்ஷ்மி நயினம்மாள் தம்பதியின் புதல்வராக பிறந்த நெடுஞ்செழியன் தனது ஆரம்ப இடைநிலைக் கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் உயர்கல்வியை ஹற்றன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றார்.

இவரின் தந்தையான நல்லத்தம்பி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர பற்றாளராக இருந்தமையினால் அதன் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான நெடுஞ்செழியன் பெயரை தனது மகனாக இவருக்கு சூட்டினார். நல்லத்தம்பி நெடுஞ்செழியன் பாடசாலை காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதுவார். ஹற்றன் ஹைலன்ஸ் கல்லூரியில் 1977 -- 1979 ஆண்டுகளில் இவர் க.பொ.த உயர்தரம் கற்றபோது கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ், மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி இராஜேந்திரன், சட்டத்தரணி தம்பையா ஆகியோர் இவரது பள்ளித் தோழர்கள் ஆவர். இவர்களால் அக்காலப்பகுதியில் வெளியிடப்பட்ட கொந்தளிப்பு என்ற சஞ்சிகை பெரும் வரவேற்பை பெற்றது.

சிறந்த ஓவியரான இவர், தனது பாடசாலை காலத்தில் சமூக விழிப்புணர்வுமிக்க பாடல்களை மாணவர் மன்ற நிகழ்ச்சிகளில் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பல நூல்களை வாசித்து அதை விமர்சனம் செய்வதும் இவரது முக்கிய அம்சமாக இருந்தமை பிற்காலத்தில் இவர் ஊடகத்துறையில் நிலைத்திருக்க பெரிதும் துணையாக இருந்துள்ளது. 1980களில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நுவரெலியா மாவட்டத்தின் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தராக கடமையாற்றினார். இதன்போது தற்போதைய மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அந்தனி லோரன்ஸ் தலைமையில் முதலாவது இளைஞர் கழகம் தலவாக்கலையில் அமைக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராக நல்லத்தம்பி நெடுஞ்செழியன் தெரிவு செயற்பட்டார். அக்காலப்பகுதிகளில் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரிதும் உறுதுணையாக இருந்தார். இவருடன் எழுத்தாளர் மல்லிகை சி.குமார், ஓய்வு பெற்ற அதிகாரியான எம். நாகலிங்கம், எம். முத்துவேல் போன்றோரும் இவருடன் இணைந்து செயற்பட்டனர்.

அக்காலப்பகுதியில் இலக்கியம், எழுத்துத் துறையிலும், சமூக செயற்பாட்டிலும் ஈடுபாடு அதிகம் காட்டினார். மலையக மக்கள் முன்னணியிலும், சிறிது காலம் முழு நேர ஊழியராக செயற்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஊடக பயணத்தை தினபதி மற்றும் சிந்தாமணியின் ஊடாக ஆரம்பித்தார். தினபதி பத்திரிகையின் தலவாக்கலை நிருபராக தனது பத்திரிகை பணியை தொடங்கினார். பின்னர் லேக்கவுஸ் பத்திரிகையின் வெளியீடான தினகரன் பத்திரிகையின் தலவாக்கலை நிருபராகவும் இருந்துள்ளார். பத்திரிகை நிருபராக இருந்தபோது மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். அதேபால் 2000 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 4 வருடங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவில் கடமையாற்றினார். பின்னர் சக்தி ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக பணியாற்றினார். பின்பு வீரகேசரி நிறுவனத்தின் வாரவெளியீட்டுப் பிரிவின் மலையகப் பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். அதன் பின்னர் சூரியகாந்தி பத்திரிகைக்கு பொறுப்பாக ஹற்றன் கிளை காரியாலயத்தில் கடமையாற்றி வந்தார்.

திறமையானவர்களை மதிப்பதிலும் அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஒரு சிறந்த மனிதர். அவரின் ஏற்ப்பாட்டில் 2018 ஆம் ஆண்டு ஹற்றன் டி.கே.டபள்யூ மண்டபத்தில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் நல்லத்தம்பி நெடுஞ்செழியன் சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதேபோல் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆண்டு விழாவிலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தயாமணியின் அன்புக் கணவரான இவருக்கு சாத்விகா என்ற மகளும் வைஷாகன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் உடல் நலம் குறைவால் நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 65 வயதில் 21.4.2020 செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். மலையகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சத்தில் மறைந்த நல்லத்தம்பி நெடுஞ்செழியன் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

கொரோனா தொற்று காரணமாக நெடுஞ்செழியனின் இறுதிக் கிரியைகளின்போது பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவில்லை. எனினும் இரண்டு தினங்களாக ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வந்து சென்றிருந்தனர்.

அவர் ஒரு நல்ல ஊடகவியலாளராகவும், நல்ல மனிதராகவும் வாழ்ந்து மறைந்தார். நாம் மற்றொரு நல்ல தோழரை இழந்திருக்கிறோம். அவர் பூஜை புனஸ்காரங்களிலும், மத நம்பிக்கையிலும் ஆர்வமற்றவராக இருந்தபோதிலும் இந்து சமய முறைப்படித்தான் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. அவருக்கு மறு வாழ்விலும் ஆன்மாவிலும் நம்பிக்கை இருந்ததா என்று தெரியவில்லை. எனவே 'ஆன்மா சாந்தி அடைவதாக' என்று முடிக்காமல், ஊடகத்துறையிலும் சமூகத்திலும் நல்லதம்பியாக வாழ்ந்து மறைந்தவர் என்று முடித்துக்கொள்கிறோம்.

தலவாக்கலை பி. கேதீஸ்

Comments