கனவிலும் நினைத்துப் பார்த்திரா வாய்ப்புகள் தந்திருக்கும் கொரோனா | தினகரன் வாரமஞ்சரி

கனவிலும் நினைத்துப் பார்த்திரா வாய்ப்புகள் தந்திருக்கும் கொரோனா

புராண வரலாற்றில் துருவன் என்றொரு பாத்திரம் வருகிறது. இது இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்குப் பிறந்து அவமானப்பட்ட ஒரு ஒன்பது வயதுச் சிறுவன். துருவன் தன் தாயின் முன் ஏன் தமக்கு அந்தநிலை என்ற கேள்வியை கேட்கிறான். அவள் அது தமது தவப்பலன் என்கிறாள். அந்த தவப் பயனை தானும் பெற அந்த சிறுவன் சிவனை நோக்கி தவமிருந்து வரம்பெற்று பெரிய சாம்ராஜ்யத்தையே அமைத்தான்.

அவனுக்கு ஒரு பையன் பிறந்தான் தந்தையின் பற்றற்ற நிலைகண்டு நாலு வயதிலேயே அவன் ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்கிறான் “தந்தையே! இப்படி எதிலும் பற்றில்லாமல் உங்கள் கடமையை செய்கிறீர்களே என்ன காரணம். என்று. அதற்கு அவர்

“ஏனென்றால் நான் எந்தநேரத்திலும் சாவை அடையலாம். அதற்குள் என்னால் இயன்ற நன்மைகளை செய்துவிடவேண்டும் அல்லவா? அதனால்தான்.” என்கிறான். சிறுவன் யோசித்தான்.

“சாவா? அது எப்போது அதன் பிறகு நீங்கள் எங்கே போவீர்கள்?”

“தெரியாது மகனே. நாம் எப்போது பிறந்தோமோ அப்போதே அது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. பிறந்தவை அனைத்தும் இறப்பையும் சந்தித்தே ஆக வேண்டும் ஒவ்வொரு உயிருக்கும் இயமன் தலைமாட்டிலேயே காத்திருக்கிறான்.”

“அப்படியா. இறந்தபின் உயிர்கள் எங்கே போகின்றன?.”

“அதை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”

இதைதான் கண்டறிய அன்றே தவக்கோலம் பூண்டான். நசிகேதன். அவன் கண்டானா கேட்டானா என்பதல்ல இப்போது உள்ள விடயம். இன்று அகிலஉலகமும் வாழும் மனிதர்களுக்கு இந்த ஞானம் வெளித்திருக்கிறது. இதை கிராமிய வழக்கில் ‘சுடலைஞானம்’ என்பார்கள்.

இதைத்தான் ஔவையார் “நமக்குமது வழியே நாம் போமளவும் எமக்கென்ன என்று இட்டு உண்டு இரும்” என்றார்.

கடந்த சில மாதங்களாக நாம் இரண்டு விதமான மனிதர்களை சந்திக்கிறோம் . அன்றாடம் உணவுக்கே வழியற்றிருக்கும் ஒருதொகுதி மக்கள். எந்த சேமிப்பும் இல்லாமல் அன்றைக்கு உழைப்பதை அன்றைக்கே செலவுசெய்தவர்கள் இவர்கள். கொஞ்சம் வசதியாக இருந்தவர்கள் தமக்கு வரப்போகும் இடரைநிரவும் வகையில் இயன்ற அளவில் தமக்கான உணவு மற்றும் தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி சேமித்தவர்கள் இவர்கள் எதிர்பார்த்தபடி ஊரடங்கு நீடித்தாலும் அல்லது பொருட்களின் வரவுநின்று போனாலும் குறைந்தது மூன்று மாதங்களுக்கான பொருட்கள் நிரப்பி வைத்துக் கொண்டவர்கள். இப்போது கடைத்தெரு திறந்துகொண்டால் மக்களை காணவில்லை.

பொக்கணை முள்ளிவாய்க்கால் பகுதிகளின் உணவின்றி தத்தளித்த மக்கள் வேறென்ன செய்வார்கள். ஒரு வதந்தி எழுந்ததால் பெருங்காயம் பூடு வேர்க்கொம்பு 'இஞ்சி' என்பன வேகமாக விற்றுத்தீர்த்தது. நேற்று ஒரு நண்பர் சொன்னார் பூடு முளைக்க ஆரம்பிக்கிறதே என்ன செய்யலாம்”என்று அவரிடம் அதை காற்றோட்டமாக புகை பிடித்து வைக்கும்படி கூறினேன். அவருடைய பிள்ளைகள் பால் குடிக்கும் வயதில் வெறுமனே உப்பும் தண்ணீரும் விட்டு அவித்த பருப்பும் சோறும் உண்டு பல மாதங்கள் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மீண்டும் அந்த துயரைக் கொடுக்க அவர் விரும்பாமல் போனதில் ஆச்சரியமென்ன. சிலரிடமும் பணம் இருக்கவில்லைத்தான் தங்கநகையை அடகுவைத்தே பொருட்களை வாங்கியிருந்தாகள்.

நீண்டநேர ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பலருடைய மனதில் பெருமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதோ முகநூலில் வந்த பதிவொன்று,

நீங்களே நினைத்தால்கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது. அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை. காலையில் சூரியன் வந்தபின்பும் அவதி இன்றி அமர்ந்திருக்கிறோம். சாலையில் புகைகக்கும் வாகனங்கள் இல்லை. பகல் வேளைகளில் நிசப்தம் நிறைந்த வீதிகளை பார்க்கமுடிகிறது. அடிதடி வெட்டுக்குத்து குறைந்திருக்கிறது. மதுக் கடைகள் மூடிக்கிடக்கிறது. நகைக் கடைகள் பூட்டியபடியே கிடக்கின்றன. புடவைக் கடைகள் விளம்பரங்கள் செய்வதில்லை. நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை. படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. தெருவெல்லாம் சுத்தமாக இருக்கிறது. அடுத்தவன் பொருள்மேல் ஆசை வருவதில்லை. எதுவேண்டுமென்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். தேவையில்லாமல் எதையும் வீணடிப்பதில்லை. மருத்துவர்கள் மீது அளவில்லாத மதிப்பு கூடுகிறது. செவிலியரை உண்மையாக சகோதரிகளாய் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம். சுத்தமாக இருக்கப்பழகி இருக்கிறோம். சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக பறக்கின்றன. பறவைகளின் சத்தத்தை பலமாக கேட்கமுடிகிறது. பொழுது சாயும்போது எந்த இரைச்சலும் இல்லை. நீ எப்படி வருவாயோ என்ற பயம் உன் குடும்பத்துக்கு இல்லை. போதைதேடி யாரும் செல்வதில்லை. சிகரட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை. தெருவில் எச்சில் துப்ப யோசிக்கிறோம். அகந்தை அழிந்துபோய் இருக்கிறது. நான் என்ற கர்வம் தளர்ந்துபோய் கிடக்கிறது. சிறுவயது ஞாபகங்களை அசைபோட துவங்கியுள்ளோம்.

தொட்டதற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்வதை நிறுத்தியுள்ளோம். சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். சிந்திக்கப் பழகியிருக்கிறோம். மற்றவர்களின் வலி புரிந்திருக்கிறது. மனது நோகாமல் பேசப் பழகியிருக்கிறோம். இதுமட்டும் போதாது. அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள்.  அம்மாவின் மடியில் தலைசாய்த்துப் படுங்கள். பிள்ளைகளின் தேவையை அறிந்து சொல்லிக் கொடுங்கள். பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள். மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம்...’

இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதே ஒரு மருத்துவர் இப்படி குறைபட்டுக் கொண்டார். அவர் கடமை முடிந்து வீட்டுக்கு வந்தால் தாவிவரும் குழந்தையை தூக்கமுடியாது. தாய்முதல் தாரம் வரை மறைந்து நிற்கிறார்கள் ஏதோ தீண்டத்தகாதவரைப் பார்ப்பது போல ஒதுங்கி நிற்கிறார்கள். நேராக குளியலறைக்குள் நுழைய வேண்டியிருக்கிறதுதான் குளித்த அறையையும் எட்டி நின்றே மருந்தடித்து கழுவுவதை எண்ணி நொந்துபோகிறேன் என்றார்.

சில மாதங்களுக்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. சாமானியமான மரணங்களைப் பற்றிபேச யாரும் இல்லையே.  இதுவும் கடந்துபோகும்.

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments