நான் எப்படி இருக்கிறேன்? | தினகரன் வாரமஞ்சரி

நான் எப்படி இருக்கிறேன்?

எல்லோரும் வீட்டில் இருக்கிறோம். ஆனால், எல்லோரும் ஒருவரையொருவர் அறியாமல் தொழில்நுட்ப சாதனங்கள் மீதுதான் அதீத அன்புடன் இருக்கிறார்கள். அதிலும் கூடுதலானவர்களுக்கு அலைபேசி மீதே அன்பு அதிகம் என்றால் கோபிக்கமாட்டீர்கள்.

அடுத்த பிறவியில் யாராக பிறக்க விரும்புகிறாய் என்று ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் கட்டுரை எழுதச் சொன்னதற்கு அவன் இப்படி எழுதுகிறான்:  அடுத்த பிறவியில் நான் ஓர் அழகான செல்போனாக பிறக்க விரும்புகிறேன். அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் அதையேதான் கூடவே வைத்துக் கொள்கிறார்கள். கணக்கு சொல்லித்தருமாறு அப்பாவைக் கேட்டால் அப்புறம் சொல்லித்தாரேன் என்று சொல்கிறார். ஆனால், செல்போனிலே மெசேஜ் வந்தால் உடனேயே அதற்கு பதில் தருகிறார்.  படங்கள் வரைந்து தா என அம்மாவைக் கேட்டால் சேட்டிங் முடிந்த பின் வருகிறேன் என்கிறார். என்னைவிட இங்கே இவர்கள் இருவருக்கும் செல்போனைத்தான் அதிகம் பிடிக்கிறது.  அது தரும் ஒலிகளுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் நான் விடும் குரலுக்கு கிடைப்பதேயில்லை. அதுதான் அவர்களை மகிழ்ச்சியாய் வைக்கிறது. எனவேதான் நான் அடுத்த பிறவியில் அந்த செல்போனாகவே பிறக்க விரும்புகிறேன்.  இதைப் படித்து திடுக்கிட்ட வகுப்பு ஆசிரியை, அவனது பெற்றோரைக் கூப்பிட்டு கட்டுரையைத் தருகிறார். படித்தபின் உறைந்து நிற்கின்றனர் பையனின் பெற்றோர். சிறிய வீடியோ காட்சியாகப் பார்த்த இப்புனைவு, இன்றைய யதார்த்தத்தை முகத்தில் அறைகிறது என்கிறார் பா. ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ் அவர்கள்.

அனைத்து வீடுகளுக்குள்ளும் வந்துவிட்ட தொலைக்காட்சி, அத்தனை மரியாதையையும் அள்ளிக்கொண்டு விட்டது. வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தாலும் அந்தந்த நேரத்தில் அந்தந்த தொடரைப் பார்க்காமல் இருந்து, விருந்தினரை உபசரிக்க பலர் விருப்பம் கொள்வதில்லை. தொடரில் ஒரு கண்ணும் விருந்தில் ஒரு கண்ணும் நோக்குவது விருந்தை குழையச் செய்து உறவைக் குலைக்கிறது.

பெற்றோர் - குழந்தைகளின் வார்த்தைப் பரிமாற்றங்கள், கோளாறாகி குறைந்து கொண்டும் வருவது சாதனங்களின் சாதனையாக காணக்கிடைக்கிறது.  தந்தை  ஒரு டெஸ்க்டாப்-பில், தாய் ஒரு செல்போனில், மகன் ஒரு மடிகணினியில், மகள் ஒரு ஐபேடில் என அவரவர் உலகத்தில் அவரவர் வாழ்கிறார்கள். கூடி அமர்ந்து உண்பது  கூட்டாக விளையாடுவதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று வந்த நேரத்தில் இந்தக் கொரோனா வைரஸ் சற்று மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அழைப்புகளை எப்போதும் எதிர்நோக்கியும் தகவல்களுக்குத் தங்களை முன் நிறுத்தியுமே பலர், காலங்கள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே வீட்டுக்குள் இருப்பவர்களிடம் இருந்து விலகி நிற்கிறார்கள். வீட்டிற்குள் பாராட்டுகள் குறைந்துவிட்டதால் வெளியே பாராட்டுகளுக்கு ஏங்குகிறார்கள். தன்னை படமெடுத்துக் கொண்டு பதிவேற்றுவதும், தான் செய்யும் செயல்களைப் பந்தி வைப்பதும், பாராட்டு எதிர்நோக்கும் பரிதாப நிலைதான்.

அதனால்தான், தான் தலைமயிர் வெட்டிக்கொண்டதையும் எப்படி இருக்கிறது என்று பேஸ்புக் நண்பர்களிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

இது காலத்தினதோ தொழில்நுட்பத்தின் கோளாறோ அல்ல. மனிதனின் மனக்கோளாறு. ஊருக்குப் போனால் படம் எடுப்பது, பஸ் தரிப்பிடத்தில் நின்றால் படம், ரயில் நிலையத்தில் நின்றால் படம் எனப் பிரயாசப்படுபவன், தனக்கு அருகில் இருப்பவனின் நிலையை உணரத் தவறிவிடுகிறான்.

அப்பிடி நினைத்திருந்தால், ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் யாருக்கும் தெரியாமல் செத்துப்போய் இருக்கமாட்டார். அவர் செத்துப்போனாலும் காலமாகியிருக்கிறார் என்பது வேறு விடயம்.

நெடுஞ்செழியன் இறந்துபோனதும் அதுபற்றி உருகி உருகிப் பதிவு போடுகிறவர்கள், அவர் ஒரு மாதகாலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதைப் பதிவேற்றித் தகவல் செல்லத் தெரியாமல்போய்விட்டது. இதிலிருந்து என்ன புரிகிறது?

சமூக வலைத்தளத்தில் பெரும்பாலான பதிவேற்றங்கள் மற்றவர்களுக்குப் பயனில்லாதவை.

ஒருவர் தன்னைத்தானே பீற்றிப் புகழ்ந்துகொள்வதாகத்தான் இருக்கின்றன. மிகச் சிலரே பெறுமதியான வியக்க வைக்கும் ஆக்கப்படைப்பை வெளிப்படுத்துகிறார்கள். இதில் ஊடகவியலாளர்கள் எனச் சொல்லிக்கொள்வோரும் அடக்கம்!

இந்தச் சந்தர்ப்பத்திலாவது சிந்திப்பதற்கான அவகாசத்தை எடுத்துக்கொள்ளமாட்டோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அதிக வாய்ப்புகள் தரும் சாதன தொடர்புகள், அதிக புரிதல்கள் தருபவைபோல் ஏமாற்றுகின்றன. சமூக வலைத்தள கணக்கில் இருந்து, தானே தன் குழந்தைகளைத் தள்ளி வைத்ததாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா சொன்னார்.

அனைத்துக்கும் அமெரிக்காவை மேற்கோள் காட்டும் நாம், ஒரு செய்தியாக மட்டும் இதைப் பார்த்து  நகர்ந்துவிட்டோம்.

சமூக அழுத்தம் அதிகமில்லா அமெரிக்காவில், ஜனாதிபதியின் மகள்களுக்கே இது அவசியப்படுகையில், பிணைப்பும் பொறுப்பும் மிக்க சமூகத்தில் பிறந்து வாழும்  நாம் ஏன் சிந்திக்கத் தவறுகிறோம்?

அலைபேசி என்கின்ற கைப்பேசியாகட்டும் அல்லது தொழிலோடு சம்பந்தப்பட்ட கணிணியாகட்டும், அவற்றைப் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தும்போது சற்றுப் பொறுப்புடன் செயற்படுவோம். நான் எப்படி இருக்கிறேன்? என்று கேட்பதைவிட நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்போம். இந்தக் கேள்வியின் மூலமே நான் எப்படி இருக்கிறேன் என்ற கேள்விக்கும் விடை காண முடியும்.

Comments