தற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே | தினகரன் வாரமஞ்சரி

தற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே

கோவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகப் பொருளாதாரச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப் போயுள்ள இன்றைய புறச்சுழலில் உலகப் பொருளாதார ஒழுங்கு விதிகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கருத்துருவங்கள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் பரவலான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக நாடுகள் ஒன்றுடனொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு உலகக் கிராமமாக மாறியிருப்பதனாலேயே கோரோனா போன்ற நோய்கள் துரிதமாகப் பரவி பேரழிவை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக, உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளின் விரிவாக்கமும் அதன் காரணமாக எழும் சர்வதேச தொழில் வாய்ப்புக்களின் பெருக்கமும் அத்துடன் நாடுகளுக்கிடையே நடைபெறும் சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு காரணமாக இடம்பெறும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் போன்ற மீயுயர் மட்ட உலகமயமாக்க (Hyper Globalization)) செயற்பாடுகளே கொரோனா தொற்று உலகநாடுகள் முழுவதும் கடுகதியில் பரவக் காரணமாகியது என வாதிடப்படுகிறது. விமானப் போக்குவரத்து மற்றும் கடல் வழிப்பயணிகள் போக்குவரத்தின் ஊடாகவே இலங்கை போன்ற தீவு நாடுகளில் இந்நோய் துரிதமாகப் பரவியது என்பதில் சந்தேகமில்லை.

1980களின் பின்னர் மேலே கூறப்பட்ட உலக மயமாக்கச் செயற்பாடுகள் மிகத் துரிதகதியில் அதிகரித்தன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank), சர்வதேச நாணய நிதியம் (IMF), தீர்வைகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது உடன்படிக்கை (GATT) என்பன சர்வதேச வர்த்தகத்தின் மீதான தடைகளை தளர்த்தவும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவாக்கவும் பெரிதும் துணைபுரிந்தன. அதேவேளை 1950களில் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இன்றைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெரும்பாலானவை 1950 - 1970 காலப்பகுதியில் தற்சார்பு பொருளாதார மாதிரியை பின்பற்றின. இறக்குமதிகளுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இறக்குமதிப் பதிலீட்டு கைத்தொழிற் கொள்கையை (Import Substitution Industrialization) கடைப்பிடித்தன.

தற்சார்புடைய தன்னிறைவுப் பூர்த்தி நோக்கில் உள்நாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்ட உள்நோக்கிய அபிவிருத்தி உபாயம் (Inward Oriented Development Strategy) அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பலவற்றின் பிரதான பொருளாதார உபாயமாக அமைந்தது. சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி போன்றன உலக வர்த்தகம் மற்றும் நிதிச்சந்தைகளின் தாராளமயமாக்கத்தையும் வலியுறுத்திய போதிலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இறக்குமதிப் பதிலீட்டு கைத்தொழிற் கொள்கையை கடைப்பிடிக்க அனுமதித்தன. இதன்கீழ் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது இளநிலைக் கைத்தொழில்களை (Infant Industries) வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களின் போட்டியிலிருந்து பாதுகாத்து, உள்நாட்டில் வலுவான ஒரு கைத்தொழில் அடித்தளத்தை இட்டு; தமது பொருளாதாரங்களை வளர்த்தெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளும் இக்கொள்கைகளை 1950 - 1970 காலப்பகுதியில் இறுக்கமாகக் கடைப்பிடித்தன. எவ்வாறாயினும் இக்கொள்கைகளை கடைப்பிடித்த நாடுகளால் எதிர்பார்க்கப்பட்ட கைத்தொழில் விருத்தியையும் பொருளாதாரப் பாய்ச்சலையும் அடைய முடியவில்லை. இவற்றின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்த அதேவேளை, மக்களின் வறுமை நிலையும் வருமான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துச் சென்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இறக்குமதிப் பதிலீட்டு உள்நோக்கிய அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை எட்டாமலேயே தோல்வியடைந்ததாகக் காட்டின.

அதேவேளை கிழக்காசிய வட்டகையைச் சேர்ந்த ஜப்பான் (1950) உள்ளிட்ட கொரியா, ஹொங்கொங், சிங்கப்பூர் போன்ற நாடுகள் 1960களிலும் தாய்லாந்து, மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் 1970களிலும் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில் உபாயத்தின் அடிப்படையிலான உள்நோக்கிய அபிவிருத்திக் கொள்கைகளைக் கைவிட்டு ஏற்றுமதிச் சந்தைகளை நோக்கிய கைத்தொழில் விருத்தியை (Export Oriented Industrialization) இலக்காகக் கொண்ட வெளிநோக்கிய அபிவிருத்திக் கொள்கைகளைக் (Outward Oriented Development Policies) கடைப்பிடித்தன. அவற்றுள் பல நாடுகள் 1960 - 1980 காலப்பகுதியில் வருடாந்தம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டன. இவ்வளர்ச்சியானது இதேகாலப்பகுதியில் உலகின் முன்னணிக் கைத்தொழில் நாடுகள் பலவற்றினதும் வளர்ச்சியை விட மிக அதிகமாகும்.

எனவேதான் இந்நாடுகளின் வியத்தகு பொருளாதாரச் செயலாற்றம் கிழக்காசிய அற்புதம் (Eastern Asian Miracle) என உலக வங்கியினால் அழைக்கப்பட்டது. இந்த நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அபிவிருந்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு 1982 ஆம் ஆண்டிலிருந்து கட்டமைப்புச் சீராக்கக் கொள்கைகளை (Structural Adjusment Policies) வடிவமைத்தன. இவ்விரு நிறுவனங்களும் தாம் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் கடன்களின் கடன் நிபந்தனையாக (Conditionality) அமைப்புச் சீராக்கக் கொள்கைகளை அமுல்படுத்த வலியுறுத்தின. பொருளாதாரத்தில் அரசாங்கத்துறையின் தலையீட்டைக் குறைத்தல், தனியார் மயப்படுத்தல், சந்தையைத் தொழிற்பட அனுமதித்தல், சர்வதேச வர்த்தகத்தைத் தாராளமயமாக்கல், நிதி மற்றும் மூலதனச் சந்தைகளை தாராளமயமாக்கல், பொருளாதாரத்தை உலகமயமாக்கல் என்பன கடன் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க உலகின் மிகப்பெரிய சோசலிச பொருளாதாரமாகிய சோவியத் ஒன்றியம் (Soviet Union) மிக்கெயில் கொர்பச்சேவின் (Mikhail Gorbachev) தலைமைத்துவத்தின் கீழ் 1980களில் அறிமுகப்படுத்திய பெரஸ்ரொய்க்கா (Perestroika) பொருளாதாரச் சீராக்கங்களின் காரணமாக சோவியத் ஒன்றியம் 1990களில் 15 தனித்தனி நாடுகளாகப் பிரிந்து போனதுடன் சந்தைப் பொருளாதாரங்களாக மாறி உலக மயமாக்கல் செயன்முறையில் தம்மை இணைத்துக் கொண்டன.

அத்துடன் மற்றுமொரு சோசலிச நாடாகிய சீனாவும் 1992ல் பொருளாதார சீர்திருத்தங்களை செய்து உலகமயமாக்கல் செயன்முறையில் இணைந்தது. இந்தியாவும் இதேகாலப் பகுதியில் தற்சார்புப் பொருளாதாரத்திலிருந்து விலகி உலகமயமாக்கலை ஏற்றது. இவ்வாறு இடதுசாரி உலகின் பலம்வாய்ந்த நாடுகள் உலகச் சந்தைகளை நோக்கி நகர்ந்தமையும் உலக மயமாக்கலை இன்னொரு கட்டத்திற்கு இட்டுச்சென்றது. இன்றைய உலகின் உற்பத்திச் செயன்முறையின் கீழ் கைத்தொழிற் பொருட்களில் பெரும்பாலானவை ஒரு நாட்டிலே முழுமையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்கள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது உதிரிப்பாகங்கள் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஓரு நாட்டில் ஒருங்கிணைக்கப்படுகின்றன (Assemble).

உதாரணமாக, நாம் பயன்படுத்தும் i phone கைத்தொலைபேசிகள் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், சுவிட்ஸர்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களை ஒருங்கிணைத்து பெறப்படுகின்றன. ஒருங்கிணைக்கும் நாட்டின் பெயரே உற்பத்தி செய்யப்படும் நாடாக பொருளில் பொறிக்கப்படுவது பொதுவான நடைமுறையாகும். அதேபோல் நெடுந்தூர பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் போயிங் 787 ரக ஜெட் விமானங்களின் உதிரிப்பாகங்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இன்னொரு உதாரணம், விம்பிள்டன் டென்னிஸ் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் பந்துகள் 50000 மைல்களுக்கும் அதிகமாகப் பயணம் செய்தே பந்தயத்திடலை அடைகின்றன. பந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகள் நான்கு கண்டங்களில் உள்ள 11 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் பந்தாக உருவெடுத்து இறுதி 6600 மைல்களைக் கடந்து பந்தயத்திடலுக்கு வருகிறது. சாதாரண ஒரு டென்னிஸ் பந்தின் உற்பத்தியே இவ்வாறு நிகழ்கிறதென்றால் ஏனைய உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகள் எவ்வாறு நிகழும் என்ற விடயத்தை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம். சுருங்கச் சொன்னால் இன்றைய உலகில் நாம் பயன்படுத்துவது ஒரு நாட்டின் உற்பத்திப் பொருள் அல்ல. மாறாக உலக உற்பத்திப் பொருளாகும் (Global product).

எனவே ஒவ்வொரு நாட்டின் உற்பத்திப் பொருள்களும் இன்னொரு நாட்டின் இடைநிலைப் பொருளில் தங்கியுள்ளது. ஒவ்வொரு நாடும் உற்பத்திப் பொருளின் ஏதோவொரு கட்டத்தில் அதன் பெறுமதியை அதிகரிப்பதில் (Value Addition) பங்களிப்புச் செய்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் உலகமயமாக்கச் செயன்முறையில் இணைவதன் மூலம் உற்பத்தி வலையமைப்பின் (Production Networks) ஓரு பங்காளியாகி உலக பெறுமதிச் சங்கிலி (Global value chain) யில் இணைந்து பயன்பெற முடியும்.

இப்போது ஏற்பட்டுள்ள உலக சுகாதார நெருக்கடி நிலை காரணமாக மீண்டும் உலக நாடுகள் இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கையை கடைப்பிடித்து தற்சார்பு நிலைக்கு திரும்புவதால் எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரம் வளர்ச்சியடையாது. மாறாக உலகின் எல்லா நாடுகளுமே கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும். ஓருபுறம் எல்லா நாடுகளும் இறக்குமதிப் பதிலீட்டை கடைப்பிடித்தால் ஏற்றுமதி செய்வதற்கு உலகில் எந்த ஓரு நாடும் இருக்காது. மறுபுறம் ஒரு நாட்டின் உற்பத்தியானது இறக்குமதி உள்ளீடுகளில் தங்கியிருந்தால் இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கைகள் எப்பயனையும் தராது. எல்லாவற்றிற்கும் மேலாக தற்சார்பு நிலை என்பது இறக்குமதிப் பதிலீட்டின் மூலம் உள்நாட்டுச் சந்தைக் கேள்வியைப் பூர்த்தி செய்வதைக்கருதும். எந்தவொரு நாட்டை கருத்திற் கொண்டாலும் அதன் உள்நாட்டுச் சந்தை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும்.

மிகப்பெரிய சனத்தொகை கொண்ட நாடுகளாகிய சீனா, இந்தியா போன்றவற்றின் உள்நாட்டுச் சந்தைகள் பெரிதாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் சந்தையின் அளவு அதன் சனத்தொகையில் மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக கொள்வனவுச் சக்தியிலும் நுகர்வு நடத்தையிலும் தங்கியுள்ளது. எனவேதான் உலகின் மிகப்பெரிய நாடுகளும் கூட பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதிச் சந்தைகளில் தங்கியுள்ளன. உலகின் எந்தவொரு நாடும் தனது உள்நாட்டுச் சந்தையை மட்டும் நம்பியிருக்குமாயின் அதன் பொருளாதார வளர்ச்சியானது உள்நாட்டுச் சந்தைப் பருமன் வரை மட்டுமே விரிவடைய முடியும். உதாரணமாக இலங்கை சுமார் 21 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இலங்கை தற்சார்புப் பொருளாதாரமொன்றை நோக்கி நகருமாயின் அதன் சந்தை 21 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டிருக்க முடியும். அதற்கு மேல் விரிவடைய முடியாது. மேற்படி மிகச்சிறிய சந்தையை வைத்துக் கொண்டு வருடாந்தம் 7 தொடக்கம் 8 வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடைவது ஒருபோதும் சாத்தியப்படாது. மறுபுறம் இலங்கை தற்சார்பு நிலை எடுத்து இறக்குமதிப் பதிலீட்டைக் கடைப்பிடித்தால் அதன் ஏற்றுமதிச் சந்தைகளும் இலங்கையின் ஏற்றுமதிகள் மீது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதனால் தற்சார்புப் பொருளாதாரத்தையும் ஏற்றுமதி ஊக்குவிப்பையும் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது.

இப்போதைய நெருக்கடி எப்படியோ முடியத்தான் போகிறது. பொருளாதாரங்கள் வழமைக்குத் திரும்ப எத்தனிக்கும்போது உலக நாடுகள் தற்சார்பு நிலையெடுத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிக்கலாம். ஆனால் அது நெருக்கடிக்குத் தீர்வாக அமைய முடியாது. கடந்த காலத்தில் 1929 - 1936 காலப்பகுதியில் உலகப்பெருமந்த காலப்பகுதியில் மேற்குலகப் பொருளாதாரங்கள் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச வர்த்தகமும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. இச்சரிவிலிருந்து உலகப்பொருளாதாரம் 1950களின் பின்னரே மீட்சியடைய முடிந்தது. அதுவும் குறிப்பாக உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் உலக வர்த்தகத்தையும் வெளிநாட்டு முதலீடுகளையும் விரிவாக்க எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே சாத்தியமாகின.

எனவே உணர்ச்சி வேகத்தில் என்ன பேசுகிறோம் என்ற சுரணையே இpல்லாமல் சில பிரகிருதிகள் தற்சார்புப் பொருளாதாரம் தான் ஒரே தீர்வென்றும் உள்ளுரிலேயே எல்லாவற்றையும் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் வாதிடுவது உலக அனுபவமற்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுக்கும் பகுத்தறிவற்ற பிராணிகளின் நடத்தையாகும். ஆனால் உணவுப்பாதுகாப்பு நோக்கம் கருதி அத்தியாவசிய உணவுப் பொருள்களில் தன்னிறைவடைவதென்பது கட்டாயமாக ஒவ்வொரு நாடும் நிர்ணயிக்க வேண்டிய இலக்காகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இலங்கையில் இறக்குமதிப் பதிலீட்டை அடிப்படையாகக் கொண்ட தற்சார்புப் பொருளாதாரமொன்றை உருவாக்க 1970 - 1977 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்த விதம் பற்றியும் மக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றியும் தற்போது இலங்கையில் தற்சார்பப் பொருளாதாரத்திற்கு குடைபிடிப்பவர்கள் ஒரு முறை திரும்பிப்பார்ப்பது நல்லது. தற்போதைய நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக அதனைக்கருதினாலும் துரித பொருளாதார வளர்ச்சியை அடையவும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் நீண்டகாலத்தில் அது திறனற்ற ஒரு கொள்கையாகும்.

ஆகவே கொரோனாவின் பாய்ச்சல் உலகமயமாக்கற் செயன்முறைக்கு சாவு மணியடித்து சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக ஆணியடித்து விட்டதாக சொல்லப்பட்டாலும் நீண்ட காலத்தில் அது மீள உயிர்த்தெழும். ஏனெனில் உலகில் எந்த ஒரு நாடும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட முடியாது என்பதனாலாகும்.

Comments