கொரோனா தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட கூடியதும் நாட்டின் ஒட்டு மொத்த வாக்காளர்கள் பக்கம் நின்று செயற்படக் கூடியதுமான நிறுவனம் ஆகும். அரசாங்கத் தரப்பானாலும் எதிர்க்கட்சித்தரப்பானாலும்  எமக்கு ஒன்றுதான். அதேசமயம் ஆணைக்குழு சுயாதீனத் தன்மை கொண்டது. ஆணைக்குழுவின் தலைவர் என்று நான் தன்னிச்சையாக எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. ஆணைக்குழு எந்த முடிவையும் ஒருமித்து ஏகமனதாக மேற்கொள்ளும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விசேட நேர்காணலின் போது தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுத்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாத நெருக்கடி நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணைக்குழு எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு கேட்டபோதே அவர் வாரமஞ்சரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் விபரம் வருமாறு:-

கேள்வி:  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு  இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் தேர்தலை நடத்தக் கூடிய உறுதியான திகதியை உத்தரவாதப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றதே?

பதில்:  மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியையும் புதிய பாராளுமன்றம் கூடும் திகதியையும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தினர். அதற்கமைவாகவே  தேர்தலை நடத்துவதற்கு உரிய பணிகளை ஆணைக்குழு ஆரம்பித்தது. இந்த நிலையில் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாளன்று தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாத நெருக்கடி நிலை நாட்டில் காணப் படுவதால் தேர்தலை பிற் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொரோனா  நோய்த் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதன் காரணமாக தேர்தலை நடத்தக் கூடிய உறுதியான திகதியை கூற முடியாத நிலை காணப்பட்டது.

ஏப்ரல் 29 ஆம் திகதி கூடிய ஆணைக்குழு - கட்சிகளின் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய தேர்தலை நடத்தும் திகதியை  ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானித்து அதுவும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. எனினும் ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என்பதை மே மாதம் பத்தாம் திகதி கூடி தீர்மானிக்க ஆணைக்குழு முடிவெடுத்தது.

ஏனெனில் கொரோனா  வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி உள்ளதால் அதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாகும். சுகாதாரத் துறையும் பாதுகாப்புத் துறையும் மே மாதம் பத்தாம் திகதி ஆகும் போது கொரோனா தொற்று பரவல்  முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ஜூன் 20-இல் தேர்தலை நடத்துவது குறித்து யோசிக்க முடியும்.

கேள்வி:  அப்படியானால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தேர்தலை பின்போட தீர்மானித்து உள்ளீர்கள்?

பதில் : உங்களது இந்தக் கேள்வி பழியை என் மீது சுமத்துவது போன்றல்லவா காணப்படுகின்றது. தேர்தலை நடத்தும் திகதியையோ ஒத்தி போடுவது குறித்தோ நான்  தனித்துத் தீர்மானம் எடுக்க முடியாது. ஆணைக்குழு தனிநபரை கொண்டதல்ல குழு உறுப்பினர்கள் மூவர் இருக்கின்றார்கள்.  ஆலோசனைக் குழு வேறு உள்ளது.

எல்லோரும் கூடி தான் பேசித் தீர்மானிக்க வேண்டும் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் இறுதியில் முடிவு ஒன்றாக இருக்கவேண்டும். ஏகமனதாக தீர்மானம் எடுக்க வேண்டும்.

நான் மட்டும் தீர்மானிப்பதாக இருந்தால் ஆணைக்குழு அவசியமில்லை. தலைவரும் தேவைப்படாது முன்னர் தேர்தல் திணைக்களமும் பணிப்பாளர் நாயகமும் இருந்தாலே போதும் ஜனநாயகத் தேர்தலை, வாக்குரிமையின் நம்பகத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் நோக்கிலேயே சுயாதீன ஆணைக் குழு உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் தேர்தல்  வீதிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அசாதாரணமான நிலைமைகள் தோன்றும் போது மக்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது அவ்வாறு நடத்தினால் ஒருபோதும் அது ஜனநாயக தேர்தலாக அமைய முடியாது. இவ்வாறான நிலையில் தேர்தலை ஒத்திப் போடும் நிலை உருவாகின்றது.

இன்றைய சூழ்நிலையில் நாட்டில் மோசமாக  பரவியுள்ள கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் தேர்தலை நடத்த முடியாது.

யாப்பு விதிகளுக்கு உட்பட்ட விதத்தில் தேர்தலை ஒத்தி  வைக்கும்போது ஒரு மாற்று திகதியை அறிவித்தே ஒத்தி வைக்க முடியும். அதற்கமையவே   ஜூன் 20ஆம் திகதி அறிவித்தோம். எனினும்  ஜூன் 20 தான் உறுதியான திகதி  எனக் கொள்ள முடியாது.

எம்மைப் பொருத்தவரை மக்கள் பங்கேற்காத தேர்தலை நடத்துவதில் எந்தவித  அர்த்தமும் கிடையாது. மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேவைப்படாது  என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி: அப்படியானால் மீண்டும் எவ்வளவு காலத்துக்கு தேர்தலை ஒத்தி வைப்பது என்று உத்தேசம்?

பதில்:  அதனை என்னால் தனித்து கூறமுடியாது. எதிர்வரும் 10 ஆம் திகதி ஆணைக்குழு கூடும் போது சுகாதாரத் துறை பாதுகாப்புத் துறை உயர் மட்டத்தினர் உடனான கலந்துரையாடலின் பின்பே மாற்று திகதி நிர்ணயிக்க முடியும். அதுதான் இறுதி என்பதையும் எம்மால் உத்தரவாதப்படுத்த முடியாது.

கொரோனா தொற்றுப் பரவல்  முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை  சுகாதார, பாதுகாப்பு துறைகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதன் பின்னர் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதன் பின்னர் தான் தேர்தலை நடத்த முடியும்.

பொதுத்தேர்தல் எப்போது நடக்கும் என்பதை நானோ ஆணைக்குழுவோ தீர்மானிக்க முடியாதுள்ளது. இங்கு  ஒன்றை மட்டும் கூற முடியும் "கொரோனா  தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக மாறிப் போயுள்ளது".   இந்த சவால் வெற்றி கொள்ளப்பட வேண்டும். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எம். ஏ. எம் நிலாம்

Comments