பட்டிக்காடா, பட்டணமா? | தினகரன் வாரமஞ்சரி

பட்டிக்காடா, பட்டணமா?

பட்டிக்காடு என்றால் கிராமம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்ப, பட்டணம் என்பதும் பட்டினம் என்பதும் ஒன்றா?

இல்லை!

பட்டினம் வேறு, பட்டணம் வேறு.

பட்டினம் என்றால் கடற்கரையைச் சூழவுள்ள கிராமம். பட்டணம் என்றால் நகரம். இந்த இரண்டையும் சிலர் குழப்பிக்கொள்வார்கள். இந்தக் குழப்பத்திற்கெல்லாம் விடையைக் கண்டுபிடித்துக்கொடுத்திருக்கிறது இந்தக் கொரோனா வைரஸ்!

பட்டணந்தான் போகலாமடி பொம்பிளே பணம் காசு தேடலாமடி என்று பாடியது ஓரு காலம். ஆனால், பட்டினந்தான் போகலாமடி பந்து சனம் தேடலாமடி என்று பாடும் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது கொரோனா வைரஸ் என்கிறார்கள்.

பட்டணத்தில் வாழ்பவர்கள் குறைந்தது ஆண்டுக்கொரு தடவையாவது பட்டினத்திற்குச் சென்று உறவினர்களுடன் உறவாடுவார்கள். ஒரு பண்டிகைக்கு இல்லாவிட்டாலும் மற்றொரு பண்டிகைக்கு அல்லது விழாவிற்கு ஊருக்குப்போவதை வழக்கமாகிக்கொண்டிருந்தார்கள். அப்படி செல்பவர்கள், பட்டினத்தாரைச் சற்றுக் குறைத்துத்தான் நோக்குவார்கள். பணம் இருக்காது, படிப்பு இருக்காது. நாகரிகம் தெரியாது. பேசத் தெரியாது என்று அவர்களின் தப்புக்கணக்குகள் அதிகரித்துச் செல்லும். எல்லாச் சிந்தனையையும் திரும்பிப் பார்க்கச்செய்திருக்கிறது இந்தக் கொரோனா.

இப்போது எப்படியென்றால், பேசாமல் ஊர்ப்பக்கம் விவசாயம் செய்துகொண்டு இருந்து விடலாம்போல் தோன்றுகிறது.

ஐயய்யோ இனிமேல் இந்த நகர வாழ்க்கைக்கு முற்றுபபுள்ளி வைத்துவிட வேண்டும். என்னதான் இருந்தாலும் ஊரோடு இருப்பதுபோல் வருமா? என்று புலம்ப வைத்திருக்கிறது இந்த வைரஸ்.

அதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், உயிர் காக்கும் ஊரடங்கு. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களைத் தவிர, ஊர்ப்பகுதிகளில் சிறிது சிறிதாகவாவது தளர்த்தப்பட்டது. அப்படியே ஊரடங்குதான் என்றாலும் முற்றத்திலாவது நடந்து திரியலாம். கிராமங்களுக்குள் சைக்கிளிலேனும் சென்று வரலாம். நாலுபேருடன் தூர இருந்தேனும் அளவளாவலாம்.

கொழும்பில் மாடி வீடுகளில் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா? கதவைத் திறந்தால் எதிர்வீடு..கீழே பார்த்தாலும் கட்டடம், மேலே பார்த்தாலும் கட்டடம். வீட்டுக்குள் நாலுபக்க சுவருக்குள் எத்தனை நாட்களுக்குத்தான் அடைபட்டுக்கிடப்பது? இப்படியொரு வாழ்க்கை தேவையா என்று இப்போது சிந்தித்துப் பாரக்கிறாரகள், கேட்கிறார்கள். சிலவேளை கொரோனா வந்துவிட்டால்கூட வெளியில் சென்றுவரலாமே என்று ஏங்கும் அளவிற்கு நிலவரத்தைச் சிக்கிச் சிதறடித்துள்ளது இந்தக் கொரோனா. சிலருக்குப் பெட்டிப்பெட்டியாய் பணமிருக்கிறது, வாங்குவதற்குப் பொருள் இல்லை. பணத்தைப் பதுக்கி வைத்துக்கொண்டு, எங்கேயடா பணம் இருக்கிறது? இந்தக் காலத்தில் வர்த்தகமும் சரியாக இல்லை என்று பொய் சொன்னவர்கள் எல்லாம், இன்று அதே வாயால் சொல்கிறார்கள் பணம் இருக்கிறது, வாங்குவதற்குப் பொருள்தான் இல்லை என்று. எச்சில் கையால் காக்கை விரட்டாதவர்கள் எல்லாரும் இன்று பட்சிகளுக்குப் பந்திவைத்துப் பரிமாறுகிறார்கள் என்கிறார் நண்பர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சைகளுக்கு உலருணவைப் பெற்றுக்கொடுக்கத் துடிக்கிறார்கள். சிலர் நிதி நன்கொடையும் கொடுக்கிறார்கள்.

அதிலும், சொந்தங்களுக்குச் சற்றும் ஈயாதபேர்களெல்லாம், இன்று பேருக்காகவாவது புண்ணியம் செய்யத் துணிகிறார்கள். துடிக்கிறார்கள். மனிதாபிமானம் பற்றிப் பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறார்கள் என்றால், கொரோனா வந்ததும் வந்தது, மனிதனுக்கு மனிதாபிமானத்தையும் கற்றுத்தந்திருக்கிறது என்றுதான் சொல்லணும்.

மனிதாபிமானம் மட்டுமில்லை, எதையெதையெல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளினானோ, அதையெல்லாம் மீண்டும் கைக்கொள்ளுவதற்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புரிதலை ஏற்படுத்துவதற்குப் பக்கபலமாக நிற்பவர்கள் மேற்கத்தேய மருத்துவத்தை அறிவியல் ரீதியாகக்கற்றுத் தேர்ந்த மருத்துவர்கள். அவர்களின் பரிந்துரையும் பாரம்பரியத்தை நோக்கிய நகர்வுக்கு வழிசமைத்திருக்கிறது. அந்தப் பாரம்பரிய வாழ்க்கை முறை கிராமத்தில்தான் சாத்தியம் என்கிறார்கள் நகரத்தார்கள். இந்த மாற்றத்தைக் கொடுத்தது கொரோனா. தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைக்காதே என்பதையும் சேர்த்தே வைக்காதவனை சிறுகச் சிறுக என்றாலும் சேமித்து வை என்பதையும் இடித்துரைத்திருக்கிறது இந்த வைரஸ்.

சீன அமைச்சர் ஒருவர் சொல்கிறார், வெளிநாட்டவர்கள் நாளைய தினத்திற்குரிய பணத்தையும் இன்றே செலவழிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்கள் அடுத்தவர்களின் பணத்தையும் சேர்த்துச் செலவழிக்கிறார்கள். நாங்கள் சேமிப்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். அதனால், எந்தப் பொருளாதார சவாலையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்று.

சீன அமைச்சரின் இந்தக் கூற்றை ஆழச் சிந்தித்தால், அது நாட்டுக்கும் பொருந்தும் வீட்டுக்கும் பொருந்தும். அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த பலர் இந்தக் கொரோனா காலத்தில் நிரம்பவும் நொந்துபோய் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வீட்டுக்கு அருகில் பொருள்கள் வந்துபோவதைப் பார்க்க முடிந்தாலும், அந்தப்பொருள்களைக் கொள்வனவு செய்யும் பணவசதி அவர்களிடம் இல்லை. சேமிப்புப் பழக்கம் இல்லாததால், அரசாங்கம் வழங்குகின்ற இனாமில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. வங்கியில் சிறிதளவேனும் பணமிருந்தால், தைரியத்துடன் காலத்தைக் கழிக்க முடிந்திருக்கும். இந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது கொரோனா! பொதுவாக இந்தப் பக்குவமான வாழ்க்கை முறை கிராமத்திலேயே நிலைத்திருக்கிறது. தொழிலை வேண்டுமானால் நகரத்தில் வைத்துக்கொண்டு கிராமத்தில் வாழ்க்கையை வைத்துக்கொள்வோம் என்று அறைந்திருக்கிறது வைரஸ். இது யதார்த்தமாகிறதோ இல்லையோ, நகரத்தாரைவிடக் கிராமத்தவர்கள் எதிலும் குறைந்தவர்கள் அல்லர் என்ற சிந்தனை பிறந்திருப்பதே பெரிய விடயம்தான்!

Comments