மலையகத்தில் சரியான தகவல்கள் கிடைக்காமையே பின்னடைவுக்குக் காரணம் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் சரியான தகவல்கள் கிடைக்காமையே பின்னடைவுக்குக் காரணம்

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு இன்று முழு நாடுமே பொருளாதார ரீதியில் முடங்கிப் போயுள்ளது. இதில் பாரிய அளவில் மலையக சமூகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனை  பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்  அரசாங்கம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதார ரீதியில் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக தொழில் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கியது.

இவ்வாறு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மலையகத்திலுள்ள பெருந்தோட்ட மக்களை சென்றடையவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதே நேரம் நிவாரணங்கள் பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தலைமைகள் நாளாந்தம்  பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும்   அறிக்கையிட்ட  வண்ணமே உள்ளன.

ஒரு சிலர் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.    இந்த நிவாரணங்கள் கிடைக்காதவர்களுக்கு அவை கிடைக்கும் வகையில் மீண்டும் மீண்டும் பல சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

எத்தனை சுற்றுநிருபங்கள் வெளிவந்த போதிலும் மலையக பகுதியில் வாழுகின்ற மிகவும் வறிய குடும்பங்கள் மற்றும் வயோதிபர்கள், ஆதரவற்றவர்கள் விசேட தேவை உடையவர்கள், ஆகியவர்களுக்கு இந்த கொடுப்பனவுகள் முறையாக சென்றடையவில்லை. என்பதனை ஊடகங்கள் பல தடவை சுட்டிக்காட்டியும் உள்ளன.

இதற்கு பிரதான காரணமாக பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதிலும் சில கிராம சேவகர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும்  தங்களுடன் நெருங்கிய அரசியல் தொடர்புகளை வைத்திருந்த  நபர்கள் சொல்லுகின்ற குடும்பங்களுக்கும் குறித்த நிவாரணத்தை  பெற்றுக் கொடுத்துள்ளனர். இன்னும் சில இடங்களில் கமிசனுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன  என்பதும் உண்மையே.

இதே நேரம் சில தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் குறித்த நிவாரணங்களை தங்களுடைய அங்கத்தவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வந்தன. இந்நிலையில் எந்த  ஒரு தொடர்பும் இல்லாத பல நூறு குடும்பங்கள் இன்னமும் அதே நிலையில் தான் உள்ளன.

இதற்கு பிரதான காரணமாக அமைந்தது அரசாங்க அதிகாரிகளிடம் பொதுவாகவே தோட்ட புறம் சார்ந்த உண்மையான தகவல்கள் எதுவும் இல்லாமையே தகவல் தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் சிகரத்தினை தொட்டுள்ள போதிலும் மலையக பகுதிகளை பொறுத்தவரையில் சரியான தகவல்கள் இதுவரை எந்த ஒரு நிறுவனத்திலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. இதனால் பெருந்தோட்ட பகுதிகளில் தோட்டத் துறைகளில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். எத்தனை பேர் வெளிமாவட்டங்களில் தொழில் புரிகிறார்கள் என்ற விபரங்கள் இல்லாததன் காரணமாக இன்று பலர் பல்வேறு வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இதே நேரம் பெருந்தோட்ட துறைகளில் கடமை புரிவதற்கு அமர்த்தப்பட்டுள்ள கிராம சேவகர்களின் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்ததைச் சேர்ந்தவர்களாக இருப்பதனாலும் பெருந்தோட்டங்களில் உள்ள குடும்பங்களின் விபரங்கள் அவர்களது வாழ்வியல் அம்சங்கள் தெரியாததன் காரணமாகவும் பெருந்தோட்ட மக்கள் பெரும் சிரமங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்.

உதாரணமாக ஒரு வீட்டில் நாலைந்து குடும்பங்கள்  இருக்கின்றது என்பதனை கூட இன்னும் கூட அறியாத எத்தனையோ கிராம சேவகர்கள் இந்த பெருந்தோட்ட பகுதிகளில் இருப்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதேநேரம் பெருந்தோட்ட பகுதிகளில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் சுமார் நாலாயிரம், ஐயாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் எவ்வாறு இவர்கள் குடும்பங்களின் விபரங்களை சேகரிப்பது இதன் காரணமாகவே வருமானம் இல்லாத பல குடும்பங்கள் இந்த நிவாரண நிதியை பெறமுடியாதுள்ளன.

அது மாத்திரமல்லாது இன்று மலையக பகுதியில் எத்தனை பேர் தொழில் இன்றி இருக்கின்றனர், எத்தனை பட்டதாரிகள் இருக்கின்றனர்,  எத்தனை அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர் எந்தெந்த துறைகளில் எத்தனை எத்தனை பேர் தொழில் புரிகின்றனர் என்பது எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாததன் காரணமாக இன்று நாம் பல அரச தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளோம். பல வரப்பிரசாதங்களை இழந்துள்ளோம்.

ஒரு திட்டத்தை சரியான முறையில் வெற்றிகரமான முறையில் நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு அந்த பிரதேசத்தின் சரியான தரவுகள் தான் காரணமாக அமைகின்றன.

ஒரு விடயத்தை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் கூற வேண்டும் என்றாலும்  தரவுகள் தான் முக்கியமானதாக அமைகின்றன.

இந்த தரவு களை சரியாக நெறிப்படுத்தாதன் காரணமாக பலருக்கு கிடைக்கவேண்டிய அரச  மற்றும் அரச சார்பற்ற எத்தனையோ விடயங்கள் கை நழுவிப்  போய் உள்ளது.

 எத்தனையோ திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு  அவை  பூரண படுத்தாத நிலையில் கைவிடப்பட்டுள்ளன.  சில இடங்களில் தேவைக்கு அதிகமான அரச பணம் வீணாக சில  செலவு செய்யப்பட்டுள்ளது.

அதிக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது.  இவற்றிற்கெல்லாம் பிரதான காரணமாக அமைவது எம்மிடம் சரியான தகவல் இல்லை என்பதுதான்  இன்று ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் அபிவிருத்திப் பணிகள் போய் சேர்வதாக  பரவலாக பேசப்படுகின்றது.  இதற்குக் காரணம் என்ன? சரியான தகவல்கள் இன்மையே  எனவே  மலையகம் அபிவிருத்தி காண வேண்டுமானால்  இங்கு வாழ்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்பினையும்  அடிப்படை உரிமைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும்  பெறவேண்டுமென்றால்  மலையக மக்கள் தொடர்பாக சரியான தகவல் மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  இனம், மொழி, சமயம்  ஆகியவற்றினை உள்ளடக்கியதாகவும் ஒவ்வொரு பரிவிலும் எத்தனை வாக்காளர்கள் தொழில் வாய்ப்பு கல்வி சுகாதாரம்  நில அளவு கட்டிடங்கள் வீடுகள் பாதைகள் என அத்தனை அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு தகவல் மையத்தினை உருவாக்குவதன் மூலமே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காணமுடியும் என்பது அனைவரதும் நம்பிக்கையாகும்.இதனை உருவாக்குவதற்கு கல்விமான்கள் அரசியல் தலைவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்கள் தொண்டர்கள் அரசு உத்தியோகத்தர்கள் தோட்ட நிர்வாகங்கள் என எல்லாவற்றினது

ஒத்துழைப்பினையும் பெற்று உருவாக்கப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கே.சுந்தரலிங்கம் - ஹட்டன் விசேட நிருபர்

Comments