2020: பொருளாதார வீழ்ச்சிப்போக்கை தடுத்து நிறுத்துவது இலகுவல்ல | தினகரன் வாரமஞ்சரி

2020: பொருளாதார வீழ்ச்சிப்போக்கை தடுத்து நிறுத்துவது இலகுவல்ல

விளிம்பு நிலை மக்களும் பாதிக்கப்படும் அபாயம்

அண்மையில் இலங்கை மத்திய வங்கியானது, 2019 ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டிருந்தது. நாடு கொரோனா கொள்ளை நோய்க்கு முகங்கொடுத்துள்ள ஒரு பேரனர்த்த சூழலில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை இலங்கைப் பொருளாதாரம் தொடர்பான சில முக்கியமான தகவல்களையும் எதிர்வு கூறல்களையும் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, 21 தொடக்கம் 24 பக்கம் வரையில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் சிறப்புக் குறிப்பு கோவிட் 19 தொடர்பாக இலங்கை எதிர்நோக்கும் சவால்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான கொள்கைகள் மற்றும் எதிர்காலம் குறித்த உசாவல்கள்; பற்றிய ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளது. கோவிட் 19 இனைக் கட்டுப் படுத்தும் நோக்கில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடக்கல் நடவடிக்கைகள் விடுமுறைகளை பிரகடனப்படுத்தல், ஊரடங்கு, மட்டுப்படுத்தப்பட்ட பொது சேவைகள் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மூடுதல் உள்ளிட்ட மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகள் என்பனவும் பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மத்திய வங்கி கூறுகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விளைவாக 2020ல் இலங்கைப் பொருளாதாரம் எதிர்க்கணிய பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்க நேரிடலாம்.

கோவிட்19 தொற்று நோய்ப் பரவலின் விளைவாக சமூகத்தின் கணிசமான சதவீதத்தினர் தமது வருமானம் மற்றும் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடுவதனால் ஏற்படும் சமூக - பொருளாதாரத் தாக்கமும் விரிவானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இலங்கையில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோரில் சுமார் 60 சதவீதத்தினர் பொருளாதாரத்தின் முறைசாராத் துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவர்களில் சுமார் 19 இலட்சம் பேர் நாளாந்தக் கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் நிச்சயமற்றதும் இடர் மிக்கதுமான ஒரு சூழலை எதிர்நோக்கும் அபாயம் நிலவுகிறது. அத்துடன் வயது முதிர்ந்த சிரேஷ்ட பிரஜைகளும் மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்படாத ஆனால் அதன் விளிம்பில் அதற்கு சற்று மேற்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களும் தற்போதைய சூழலில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சனத்தொகையின் ஏனைய பிரிவினராக மத்திய வங்கி அடையாளப்படுத்தியுள்ளது.

முறைசார்ந்த துறையிலுள்ள நிறுவனங்களும்கூட மூடப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொள்ளலாம். அத்துடன் சம்பள வெட்டு பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதனால் வேலைவாய்ப்புகள் அருகி வேலையின்மை அதிகரித்துச் செல்லும் போக்கு தோன்றலாம். அதுமட்டுமன்றி வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுவதனால் இந்நிலைமை மேலும் மோசமடையலாம்.

பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு பொருளாதாரத்தில் பாரிசவாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனவே மிகக்குறைந்த மட்டத்திலாவது பொருளாதாரத்தை இயக்கிச் செல்லவேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. கோவிட் 19 ஒரு சமூகப்பரவல் நிலையை அடைவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முடக்கல் நிலை கணிசமான வெற்றியைத் தந்துள்ள போதிலும் இன்னும் அந்த அபாயம் நீங்கிவிடவில்லை. மேலே சொல்லப்பட்ட மாவட்டங்களில் மே 11 வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஒருபக்கம் நோய்ப்பரவலைத் தடுத்துநிறுத்த வேண்டிய கட்டாயம். மறுபுறம் தொடர்ந்து சரிந்து செல்லும் பொருளாதாரப் போக்கினைக் தடுத்து நிறுத்த அல்லது சரியும் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். இவை இரண்டையும் ஏககாலத்தில் கையாள்வது எவருக்கும் இலகுவான காரியமன்று. உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீ;ண்டகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டியுள்ளது.

இதற்கு தகுதி வாய்ந்த பொருளாதார வல்லுநர்களின் பங்களிப்பு மிக இன்றியமையாததாகும். வியாபாரத் துறையினரின் பங்களிப்பும் முக்கியம் என்றாலும் அவர்களால் ஒரு நாட்டுக்குத் தேவையான கொள்கைகளை தூரநோக்குடன் வகுக்க முடியாது. உதாரணமாக ஒரு நோயாளிக்கு அவரது நோயின் குணங்குறிகளை இனங்கண்டு வைத்தியரே மருந்து தரவேண்டும். நோயின் தன்மையினை மதிப்பிட நோயாளியின் பங்களிப்பு முக்கியம் என்றாலும் நோயாளியே தனக்குரிய மருந்தை தானே தெரிவுசெய்ய முடியாது. நோயாளியின் நிலையிலேயே இலங்கையின் வியாபாரத்துறை உள்ளது. அவர்களால் பொருளாதாரக் கொள்கை வகுப்பினைச் செய்யமுடியாது. அவ்வாறு செய்ய முனைந்தால் அது வியாபாரத்துறைக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஏனெனில் ஒரு நாடு என்பது வியாபார நிறுவனமல்ல. முழு உலகும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு பல்பக்க அணுகுமுறையே தேவைப்படும்.

1929 தொடக்கம் 1936 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தின் பின்னர் ஏற்பட்ட மிகமோசமான பின்னடைவினை உலகப் பொருளாதாரம் தற்போது அனுபவித்து வருகின்றது. உலகின் முன்னணி நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், யூரோ வட்டகை மற்றும் ஜப்பான் போன்ற பல அபிவிருத்தி கண்ட பொருளாதாரங்கள் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார வீழ்ச்சியினை எதிர்கொள்ளும் அதேவேளை சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளும் குறிப்பிடத்தக்களவு பொருளாதார மந்தகதியினை அடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகளாவியரீதியில் 2020 ஆண்டில் உலக வர்த்தகத்தின் அளவு மூன்றில் ஒருபங்கு (32 சதவீதம்) வீழ்ச்சியடையலாமென உலக வர்த்தக நிறுவனம் எதிர்வுகூறுகின்றது. இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளில் பொருள்கள் சேவைகள் மீதான கேள்வி குறைவடைவதனால் அந்நாடுகளில் பொருளாதாரச் செயலாற்றமானது குறைவடையும். இது இலங்கையில் ஏற்றுமதி வருவாய்கள் மீது நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை, கோவிட் 19 நோய்ப்பரவலைக் குறைக்கும் விதமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நோய்ப்பரவலின் குறுகியகாலப் பொருளாதாரத் தாக்கம் என்பன ஒன்றிணைந்து உலகளாவியரீதியில் பொருள்களின் நிரம்பல் சங்கிலியில் (Supply Chain) தடங்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக நாட்டில் நிகழ்கால மற்றும் எதிர்கால ஏற்றுமதி இயலளவு பாதிக்கப்படும்.

2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையானது தொடர்ச்சியாக பொருளாதார வீழ்ச்சிப் போக்கினை எதிர்கொண்டு வருகிறது. 2020 இல் இவ்வீழ்ச்சியானது மேலும் கூர்மையடைந்து எதிர்க்கணியமாக மாறும். அதனைத் தடுத்து நிறுத்துவது இலகுவான காரியமன்று.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments