அடியோடு வீழ்ந்தது மட்டக்களப்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் | தினகரன் வாரமஞ்சரி

அடியோடு வீழ்ந்தது மட்டக்களப்பு விவசாயிகளின் வாழ்வாதாரம்

தற்போதைய நிலையில் நாட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ளது விவசாயப் பொருளாதாரம் எனலாம். ஏனெனில் இலங்கைத் தீவு விவசாயத்தையும் மீன்பிடியையும் பிரதான தொழில்களாகவும், ஜீவனோபாயமுமாகக் கொண்டுள்ளது. ஆனாலும் தற்போது உலகையே பீடித்துள்ள கொவிட் - 19 எனப்படும் புதியவகை கொரோனா வைரஸின் தாக்கத்தினால் சகல துறைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை முழு உலகும் அறிந்த விடயமாகும்.

எது எவ்வாறு  அமைந்தாலும், மனிதன் உயிர் வாழ வேண்டுமானால் உணவுத் தேவைக்காக ஏதோ ஒருவகையில் வருமானம் தேடவேண்டியுள்ளது. அரச மற்றும் தனியார், அரச சார்பற்ற அமைப்புக்களில் பணிபுரிபவர்கள் நிரந்தர வருமானங்களைப் பெற்றுக் கொள்வார்கள். எவ்வாறுதான் ஊரடங்கு சட்டங்கள் போட்டாலும், நோய்த்தாக்கங்கள் வந்தாலும், மாதம் முடியும் போது அவர்களின் வங்கிக் கணக்கில் வேதனம் வரவு வைக்கப்படும். ஆனால் தினமும், நாட் கூலிகளாகவும், விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கின்ற விளை பொருட்களை விற்று அப்பணத்தில் தமது குடும்பத்தைப் பாதுகாத்துவரும் மக்களுக்கு தற்காலத்தில் எவ்வாறு வருமானம் பெறுவதென்பது பதில் தெரியாத கேள்வியாகவே தற்போதைய நிலையில் இருந்து வருகின்றது.

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக விவசாயத்தையே நம்பி வாழும் மட்டக்களப்பு மக்களின் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் வருமானமிழந்து காணப்படுகின்றது. இவ்வாறு இன்னலுறும் மக்களின் உட்கிடைக்கைகளே  இக்கட்டுரையூடாகப் புலனாகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வேளாண்மைச் செய்கைக்கும், கத்தரி, வெண்டி, மிளகாய், பீர்க்கு, பயற்றை, புடோல், பாகல், வெங்காயம், உள்ளிட்ட பல மேட்டுநில மரக்கறிப் பயிர்ச் செய்கைக்கும் பெயர்போன மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் விளைகின்ற விளைபொருட்கள், மாவட்டத்திற்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கும், பொதுச் சந்தைகளுக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும், ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இது இவ்வாறு இருக்கின்ற நிலையில் தற்போது பீடித்துள்ள கொரோனா நோயின் அச்சம் காரணமாக மாவட்டத்திலுள்ள மேட்டுநில விவசாயிகளின் விளை பொருட்களை மாவட்டத்திற்குள்ளேயும், ஏனைய மாவட்டங்களுக்கும்,  ஏற்றுமதி செய்யவோ, விற்பனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மரக்கறிவகைகள் அனைத்தும், பழுத்து பழுதடைவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க கிழக்கு மாகாணத்திற்கென மட்டக்களப்பு களுதாவளையில் கிராமிய பொருளாதார அமைச்சின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் நிர்மாணப்பணிகள் முடிவுற்று 2 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் அதனை இன்னும் செயற்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. எனினும், கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பிரசன்னத்துடன் அந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து அப்பகுதி விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்திருந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மாத்திரமின்றி வர்த்தகர்களும், பொதுமக்களும் மிகுந்த சந்தோசமடைந்திருந்தனர்.

இவ்வாறு களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட்டு விளைபொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதை அறிந்த விவசாயிகள் தம்மிடமிருந்த மரக்கறிவகைகளக் கொண்டு சென்று அங்கு விற்பனை செய்தனர். விளை பொருட்களுக்கு என்றுமில்லாத வகையில் உடனேயே பணமும் கிடைத்தது.

மறுநாளும் அங்கு தமது பொருட்களை விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்ற விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சி  ஏற்பட்டது. பொருட்களை இனிமேல் நாம் கொள்வனவு செய்வதில்லை என திருப்பியனுப்பி விட்டார்கள். அந்த பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து பொருட்களை கொள்வனவு செய்யும் செயற்பாடு ஒருநாளோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைவதோடு, இது எமது விவசாயிகளை ஏமாற்றும், அல்லது அலைக்கழிக்கும் செயற்பாடாகும் எனவும் அப்பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

வழக்கமாக வருடாந்தம் இக்காலப்பகுதியில் மிளகாய் ஒரு கிலோ மொத்த விலையாக 100 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய்க்குமேல் காணப்படும். தற்போது ஒரு கிலோ மிளகாய் 30 ரூபாவுக்காவது எம்மிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகள் வருகின்றார்கள் இல்லை. இதனால் மரத்திலேயே அனைத்தும் பழுத்துப்போய் விழுகின்றன. 

“களுதாவளையில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் அரசாங்கம் ஒரு நாள் மாத்திரம் எமது மரக்கறிகளைக் கொள்வனவு செய்தது. தற்போது அவர்கள் அத்துடன் நிறுதிவிட்டார்கள் என்ன காரணம் என தெரியாது”. வங்கியில் கடன் பெற்றுத்தான் நாம் இவ்வாறு தொழில் செய்து வருகின்றோம் எமது மரக்கறிகள் விற்பனை செய்யமுடியாமல் மரத்துடன் கிடந்து பழுதடைவதனால் எவ்வாறு வங்கிக் கடனை மீளச் செலுத்துவது என தெரியாதுள்ளது. எனினும் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் எமக்கு அரசாங்கம் எதுவித உர வகைகளையும், மானியங்களையும், தருவதில்லை, அனைத்து செலவுகளையும் நாங்களாகவே செய்து மிகவும் சிரமத்தின் மத்தியில் தொழில் செய்து வந்தாலும் தற்போது நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். விவசாயத் திணைக்களத்தினரும் எமது உற்பத்திக்குரிய சந்தை வாய்ப்புக்கள் தொடர்பில் அக்கறை காட்டவில்லை.

நான் 40 வருடகாலமாக இவ்வாறு மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். இதுவரைகாலமும் இவ்வருடம் ஏற்பட்ட சேதங்கள்போல் ஏற்பட்டிருக்கவில்லை இவ்வருடம்தான் கொரோனா நோயின் நிமித்தம் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் நம் நிர்க்கதியாகியுள்ளோம் என தெரிவிக்கின்றார் களுதாவளையில் 2 ஏக்கரில் மிளகாய் செய்கையில் ஈடுபட்டுவரும் இரத்தினம் பாக்கியராசா என்ற விவசாயி.

விவசாயி பாக்கியராசாவின் உட்கிடக்கை போல் களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் அப்பகுதி மக்களின் விளை பொருட்களுக்கு தகுந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என நினைத்தாலும், அது எட்டாக்கனியாகவே காணப்படுவதாக ஏனைய விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு கிலோ மிளகாய் மொத்த விலையாக 30 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் போகின்றது, ஒரு கிலோ மிளகாய் பறிப்பதற்கு கூலி 20 ரூபாய் மேலும் மிளகாய் பறிப்பவர்களுக்குரிய உணவு, மற்றும் மின்சாரச்செலவு, உரம், கிருமிநாசினிகள், என அனைத்தையும் பார்த்தல் நாம் தொழில் செய்து பாரிய நட்டத்தைத்தான் எதிர்கொண்டுள்ளோம் என தெரிவிக்கின்றார் மற்றுமொரு விவசாயியான இராசையா குணரெத்தினம்.

வங்கியில் எம்மிடம் இருந்த பொருட்களையெல்லம் அடகு வைத்து நாம் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தோம். தற்போது இந்த கொரோனா நோயின் தீவிரத்தன்மையினால் தொடர்ந்து எம்மால் எமது தொழிலை மேற்கொள்ள முடியாமலுள்ளது. ஊரடங்கு சட்டம் போட்டாலும் விவசாய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் எம்மால் செய்கை பண்ணப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாதுள்ளது. அனைத்தும் மரத்துடன் பழுதடைந்து போயுள்ளன. கொள்வனவு செய்பவரும் வியாபாரிகளும். மிகக் குறைந்த விலையில்தான் எம்மிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்கின்றார்கள். இதற்கு அரசாங்கம் தக்க நிவாரணங்களையோ, சலுகைகளையோ ஏற்படுத்தித் தரவேண்டும். என தெரிவிக்கின்றார் ஜனகன

உள்ளுர் மரக்கறி உற்பத்திகளில் சிறந்து விளங்கும் மட்டக்களப்பு களுதாவளைப்பகுதி விவிசாயிகள் மலையகப் பகுதிகளில் உற்பத்தி செய்யும் பீற்றூட் செய்கையிலும், தற்போது ஈடுபட்டு வருகின்றார்கள் இந்நிலையில் களுதாவளையில் பீற்றூட் செய்யும் தோட்டத்தைப் பார்வையிடுவதற்கும், தமது சொந்த தேவைக்காக மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கும் வந்திருந்த வைத்தியர் விவேகானந்தநாதன் இவ்வாறு தெரிவிக்கின்றார், நான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிகின்றேன், களுதாவளையில் பீற்றூட் மிகச் சிறந்த முறையில் செய்யை பண்ணப்படுவதாக அறிந்தேன். அதனை என்னால் நம்ப முடியவில்லை. இதனை தற்போது நான் நேரில் வந்து பாரவையிட்டு, எனது வீட்டுப் பாவனைக்கு பீட்றூட் கொள்வனவு செய்துள்ளேன். இந்த விவசாயிகள் மிகவும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.

காலத்திற்குக் காலம் விவசாயத் தொழில்நுட்பங்களும், விவசாயத் தன்மைகளும், மாறிக் கொண்டு போகின்றன. அந்தக் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் எமது பகுதி விவசாயிகளும் மாற்றப்படல் வேண்டும், இல்லையேல் நாம் இழப்புக்களைத்தான் சந்திக்க வேண்டிவரும். இவ்வாறான விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மேலும் பல உதவிகளை மேற்கொள்ள வேண்டும். என அவர் தெரிவிக்கின்றார்.

வழக்கமாக மிளகாய், கத்தரி உள்ளிட்ட பயிர்களை; செய்து வந்த நான், தற்போது, எமது கடற்கரை மண்ணில் மலைநாட்டு மரக்கறிச் செய்கையான பீற்றூட் செய்கையை செய்துள்ளேன் இது  எனக்கு மிகுந்த சந்தேசத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றேன், ஆனால் கடந்த வருடம் அரை ஏக்கரில் இரண்டு தடவைகள், பீற்றுட் பயிர் செய்து 3 இலட்சம் ரூபாய் வருமானம் எனக்குக் கிடைத்தது என தெரிவிக்கின்றார் களுதாவளையில் பீட்றூட் செய்கையில் ஈடுபட்டுவரும் பரசுராமன் ஜீவரெத்தினம்

பரம்பரை பரம்பரையாக வருடம்தோறும் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வரும் நாம் தற்போது சந்தைவாய்ப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம். இருந்தாலும் எமது பகுதி மக்கள் சிறந்த முறையில் விசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிவாய்ப்புக்களையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என  தெரிவிக்கின்றார் விவசாயி கணபதிப்பிள்ளை கணேசபிள்ளை.

எமது அமைப்பில் 950 விவசாயிகள் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள் தற்போது இக்காலத்தில் அதிகளவானவர்கள் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 450 இற்கு மேற்பட்ட ஏக்கரில் செய்கைபண்ணப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம்போட்டாலும், வழக்கமாக எமது செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் எமது உற்பத்திகளை விற்கமுடியாமல் பொருளாதார ரீதியாக பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளோம். கடந்த காலங்களில் எமது பொருட்களுக்கு சரியான விலையைத் தீர்மானிக்க முடிந்திருந்தது தற்போதைய கொரோனா நோய் அச்சத்தின் மத்தியில் எம்மால் எமது பொருட்களை விலைபேசி விற்க முடியாதுள்ளது. அதுபோல் எமக்குத் தேவையான உரவகைகள் உள்ளிட்ட உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்வதிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அதிகவிலையிலும் விற்பனை செய்கின்றார்கள். இதனால் அதிக விலை கொடுத்துதான் உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

மேட்டுநிலப் பயிற்செய்கைக்கு மானிய உரவகைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். ஒரு கிலோ பச்சை மிளகாயை உற்பத்தி செய்வதாயின் சுமார் 70 ரூபாய் செலவாகின்றது. விவசாயிகளை நம்பி பல நூற்றுக்கணக்கான நாட்கூலி செய்பவர்களும், காணப்படுகின்றார்கள், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இவையனைத்தையும் அரசாங்கம்தான் கவனத்திலெடுத்து செயல்பட வேண்டும் என களுதாவளை நெய்தல் மேட்டுநில கமநல அமைப்பின் தலைவர் என்.ஜெயராசா தெரிவிக்கின்றார்.

களுதாவளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவக் குழுவின் தலைவராக மட்டக்களப்பு மாட்ட அரசாங்க அதிபரும், அதன செயலாளராக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளருமாகக் கொண்ட நிருவாகக் குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். இக்குழுவிற்கு அமைச்சு இந்நிலையத்தைக் இன்னும் கையளிக்கவில்லை. இந்நிலையில்தான் இம்மத்திய நிலையம் திறக்கப்படாத நிலையில் அதனுள் வைத்து நாம் அண்மையில் அப்பகுதி உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தோம், பொருட்களை தொடர்ந்து கொள்வனவு செய்வதில் பிரச்சினைகள் உள்ளன.

இந்நிலையில் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைத்து உணவு சவால்கள் மற்றும் சந்தை வாய்ப்புக்களுக்கான முறைமை ஒன்றை உருவாக்கும் பொருட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தினுள் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் (மரக்கறிச் செய்கை தானியவகைகள், பழ உற்பத்தி, மீன்பிடி, கருவாடு, இறைச்சி, முட்டை, பல் மற்றும் விற்பனை சம்பந்தமான, தகவல்கள் திரட்டப்படுகின்றன. இத்தகைய உற்பத்திகள், மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள், எமது பிரதேசத்திற்குடப்பட்ட கிராம சேவை உத்தியோகஸ்த்தர்களுடாக திரட்டப்படுகின்றன.

கடந்தவாரம் எமக்கு அமைச்சரவைத் தீர்மானம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,... பிரதேச மட்டத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை பிரதேச செயலாளர் மட்டத்தில் தீர்மானிக்க வேண்டும், அதன் பின்னர் அது மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மாவட்ட மட்டத்தில் விலை தீர்மானிக்கப்பட்டு, விற்பனை செய்யவும், கொள்வனவு செய்யவும், முடியும். அதற்கமைய பிரதேச மட்டத்தில் நாம் விலை நிர்ணய குழு ஒன்றை அமைத்துள்ளோம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

வ.சக்திவேல்

Comments