அத்தியாவசியப் பொருட்களின்றி வெறிச்சோடிப் போயிருக்கும் சதொச | தினகரன் வாரமஞ்சரி

அத்தியாவசியப் பொருட்களின்றி வெறிச்சோடிப் போயிருக்கும் சதொச

அக்கரப்பத்தனை மன்றாசி ஹோல்புறூக் டயகம ஆகிய பிரதேசங்களில் சுமார் 42 தோட்டங்கள் உள்ளன. 48 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

இம்மக்களின்  நலன் கருதி 35 வருடங்களுக்கு முன்பு ஹோல்புறூக் அக்கரப்பத்தனை ஆகிய  நகரங்களில் மக்களுக்கு ஏற்றவகையில் இரண்டு அரச அங்கீகாரம் பெற்ற ச.தொ.ச நிலையங்கள் இருந்தன.

பிரதேசவாசிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ள வாய்ப்பாக இது அமைந்தது.

இதனூடாக அதிகமான வருமானம் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்நிலையங்களில் முகாமையாளர்களாக பணிபுரிந்தவர்கள் நியாயமற்ற விதத்தில்  பொருட்களை விற்றதுடன் சதொசவுக்கு  கொண்டுவரப்பட்ட பொருட்களை நகரத்தில் உள்ள கடைகளுக்கு வழங்கியதால் பாரிய நஷ்டம் ஏற்பட்டதன்  காரணமாக  அரசாங்கம் நஷ்டத்தில் இயங்கிய  சத்தோச நிலையங்கள் இரண்டையும் மூடியது.
அதன் பின் நகர்ப்புறங்களில் உள்ள வியாபார கடைகளில் அதிக விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினார்கள். இதனால் மக்கள் பல சிரமங்களை  அனுபவிக்க நேரிட்டது.

இப்பகுதி மக்கள் சதொசவில் பொருள்  கொள்வனவு செய்வதற்காக பெரிய நகரங்களான ஹற்றன், தலாவாக்கலை போன்ற இடங்களுக்கு 32 கிலோமீட்டர் தூரம்  செல்லவேண்டும்.

இங்கு செல்ல முழு நாளும் தேவைப்படுவதோடு அதிக பஸ் கட்டணத்தினையும் செலவு செய்யவேண்டிய சூழ் நிலையே காணப்பட்டது. சதொச  ஒன்றினை திறக்கும் படி பல போராட்டங்கள்  இடம்பெற்றன. மலையக அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்ட போதும் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் அக்கறை காட்டவில்லை.

தேர்தல் காலங்களில் மாத்திரம்  வாக்குறுதி வழங்கிச் சென்ற எத்தனையோ பேர் இக்கோரிக்கைகளை புறம் தள்ளிய சந்திரப்பங்களே அதிகம் சில வர்த்தகர்களும் இதற்கு எதிர்ப்பதாகவும் திறக்கவிடாமல் முற்றுக்கட்டையாக இருந்தமை சுட்டிக்காட்டபடவேண்டிய விடயமாகும்.

35 வருடங்களுக்கு பின்பு முன்னாள் கொட்டகலை பிரதேச சபை உபதலைவர்  எஸ் சச்சிதானந்தனின்  கடும் முயற்சியால்  மன்றாசி நகரத்தில்  கடந்த இரண்டு வாரங்களுக்கு  முன்பு புதிய சதொச நிலையம் ஒன்று  திறந்து வைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாகவும்  ஊரடங்கு சட்டம் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாகவும்  அத்தியாவசிய பொருட்களை  அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ச.தொ.ச போன்ற நிலையங்களில் மானிய விலையில் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்தது.  இது வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு பெரிய உதவியாகும்.

இருப்பினும்  குறிப்பாக நுவரெலியா தலவாக்கலை ஹற்றன், மஸ்கெலியா, மன்றாசி,  கொட்டகலை  உள்ளிட்ட நகரங்களில்  இயங்கும் சத்தோச நிலையங்களில்  பொருட்கள்  இல்லாமல்  இங்கு வரும்  மக்கள்  ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு  செல்வதாக கவலை தெரிவிக்கின்றனர். அரிசி கோதுமை மா பருப்பு சீனி டின் மீன் பால் மா உள்ளிட்ட மிகவும் முக்கியமான பொருட்களுக்கு தட்டுபாடுள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனை பயன்படுத்தி நகரங்களில் உள்ள வர்த்தகர்கள்  அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக மக்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.

அதிகமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்பவர்களை பரிசோதனை செய்வதற்கு விலைக் கட்டுபாட்டு அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் முறையாக பரிசோதனைகள் செய்யாமல்  பக்கச்சார்பாக செயல்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே  அனைத்து சதொச நிலையங்களில் காணப்படும் பொருட் தட்டுப் பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்து  தேவையான பொருட்களை  பெற்றுக் கொள்ள  உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

டயகம நிருபர்

Comments