கொரோனாவும் குடித்தனமும்! | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவும் குடித்தனமும்!

எது எதையெல்லாம் நடத்த முடியாது என்று நினைத்தோமோ எல்லாவற்றையும் கனகச்சிதமாய் நடத்தி வைத்திருக்கிறது கொரோனா.

பழகி வந்த பழக்கத்தை விட்டுவிட முடியாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வைத்தியரைப் பார்க்காமல் உயிர் வாழ முடியாது. மருத்துவர் குறித்துத் தந்துள்ள குறிப்புப் புத்தகத்தை எடுத்துப் பார்க்காமல் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது என்பதையெல்லாம் பொய்யாக்கி இருக்கிறது கொரோனா.

புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கத்தையெல்லாம் விட்டுவிட முடியவில்லையே என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இந்த நாற்பத்தைந்து நாளாக துறந்திருக்கவில்லையா? பாரம்பரிய பழக்கத்திலான உணவு முறைகளை மீண்டும் கைக்கொள்ளவில்லையா? ஆடம்பரமில்லாமல் திருமண வைபவங்களை நடத்திப் பார்க்கவில்லையா?

இப்படியெல்லாம் சொல்லும்போதும் ஹும் இத்தனை நாட்களாகப் பல்லைக் கடித்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கவில்லையா? என்று கேட்கிறார். நண்பர். அவருக்கு வீட்டில் இருந்ததே ஒரு சாதனை. வேலை வேலை என்று அலுவலகமே கதியென்று இருந்தவர்களுக்குத் தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரு பாக்கியம்தான். ஆனால், சதா வீட்டில் இருப்பவர்களுக்குச் சற்று வெளியில் சென்றுவரக்கூட இந்தக் கொரோனா அனுமதிக்கவில்லை என்பதுதான் வேதனை. நண்பருக்கு இருப்பது அந்த ஆதங்கம்தான் என நினைக்கின்றேன்.

இருந்தாலும், இந்தக் கொரோனா காலத்தில் மனிதன் சக மனிதனைப்பற்றி அறிந்துகொள்ளவும் ஏன், சொந்தக் குடும்பத்து உறுப்பினர்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் பிள்ளைகள் பெற்றோரையும் புரிந்துகொள்வதற்கும் இது நல்லதொரு சந்தர்ப்பம்.

அரச வங்கியில் பணிபுரியும் ஒருவர் இன்னும் ஓரிரு ஆண்டில் ஓய்வுபெற இருப்பதாக நண்பர் ஒருவரிடம் கூறுகிறார். அதற்கு அவரின் மனைவி சொல்கிறார், ஐயோ வேண்டாம். இவர் ஓய்வு பெறக்கூடாது. வீட்டிலிருந்தால் சும்மா இருக்கமாட்டார். பிள்ளைகளை நச்சரித்துக்கொண்டு இருப்பார்.

தொடர்ந்து வேலைக்குப் போவதுதான் எனக்கு விருப்பம் என்று. இப்படியான குடும்பங்களில் குடும்பத் தலைவர்களின் நிலை எப்படி இருக்கும் என்று யோசிச்சுப் பாருங்கள் என்கிறார் நண்பர்.

ஒரு மனிதனுக்கு அளவான உணவு, அளவான உறக்கம், அளவான தாம்பத்தியம் இருக்க வேண்டும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. ஆனால், சில வீடுகளில் இந்த விடயங்களில் மாறுபாடான நிலையே காணப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்கிறார் நண்பர். ஆம் என்றும் சொல்வதற்கில்லை. இல்லை என்றும் சொல்வதற்கில்லை. இன்னும் சில வீடுகளில் பிள்ளைகளுக்குத் தந்தை வீட்டிலிருந்தாலே பிடிக்காது தெரியுமா? என்றும் கேள்விகளை அடுக்குகிறார் அவர். இப்படித்தான் ஒரு வீட்டில் தனது ஒரே மகன் காலை வேளையில் அயல் வீட்டு நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது தந்தை வருவதைக் கண்ட அந்த மகன், ஏய் வாருங்கடா, அந்தாள் வாறார், என்று சொல்லிக்கொண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வெளியில் போகிறாராம். இப்படியான இடத்தில் எல்லாம் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க முடியாதா உங்களுக்கு என்று ஆத்திரப்படுகிறார் நண்பர்.

எவர் என்னதான் சொன்னாலும், பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலைமையை விபரிக்க வார்த்தைகள் கிடையா.

பாதுகாப்புத் தரப்பினர், மருத்துவத்துறையினர், ஊடகவியலாளர்கள், சாரதிகள் எனப் பலரை இந்தக் கொரோனா வீடுகளிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது.

அவர்களுக்கு எந்தக் கொரோனா வந்தால் என்ன, புத்தாண்டு, பண்டிகைகள் வந்தால் என்ன அவர்களுக்கு எப்போதும் சமூக விலகல்தான்

வீடுகளிலேயே இருங்கள் என்று மற்றவர்களை நொடிக்கொரு தடவை அறிவுறுத்தும் இவர்கள், தமது தொழிலை நொந்தவர்களாக வீட்டைவிட்டுத் தனித்தே இருக்கிறார்கள். சிலர் கொழும்பில் பணியாற்றிவிட்டு வாரத்திற்கொரு தடவையேனும் சொந்த ஊர் செல்வார்கள். ஒரு வாரம் தாமாகவே சமைத்துச் சமாளிப்பவர்கள், ஓரிரு நாட்கள் வீட்டிற்குச் சென்று குடும்பத்தவர்களுடன் ஒன்றாக இருந்து உணவு உண்பார்கள். இப்போது இவர்கள் ஒன்றரை மாதத்திற்கும் மேலாகத் தனியாகச் சமைத்துண்டு தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார்கள். சரியாகப் பொருள்கள் வாங்க முடியாது. அறைகளுக்குள் அடைபட்டுச் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பற்றிக் குடும்பத்தவர்களுக்கு இருக்கும் அக்கறை, அவர்கள் தொழில்புரியும் நிறுவனங்களுக்கு இருக்குமா? அரசாங்கத்திற்கு இருக்குமா? இல்லை, உங்களுக்குத்தான் இருக்கிறதா?

இதென்னடா வம்பாப் போச்சு..! நண்பர் அடுக்கும் கேள்விக் கணைகள் துளைத்தெடுக்கின்றன. எதுவும் புறந்தள்ள முடியாத கேள்வி. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகத் தமது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றது அரசாங்கம்.

ஆனால், சில பணியாளர்கள் நிர்ப்பந்தத்தின்பேரில் அறைகளில் தங்கியும் நிறுவனங்களுக்குச் சென்றும் பணியாற்றி வருகிறார்கள்.

சிலர் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று வீடுகளில் சும்மா இருக்கிறார்கள். அவர்களை இந்த நிறுவனங்கள் என்ன செய்யும்?

இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலை நாமேதான் கண்டுபிடித்தாக வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலம் இந்தப் பீதியான மனநிலையைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். பழையதை மறந்து புதியதைச் சிந்திப்பதே சிறந்தது என்பதைக் கடந்த காலச் சுவடுகள் கற்றுத்தந்திருந்தாலும்கொரோனா அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்!.

Comments