வாழ்வைத் தூய்மைப் படுத்தும் ஏற்பாடு | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வைத் தூய்மைப் படுத்தும் ஏற்பாடு

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ரமழான் மாத நோன்பின் சரத்துக்களையும், நிபந்தனைகளையும் எடுத்துப் பார்த்தால் நோன்பு மனிதனை தூய்மைப் படுத்துவதை முக்கிய நோக்காக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் மனிதனின் வாழ்வு இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்பட ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை அல்லாஹ்  அவனது தூதர் நபி முஹம்மத் (ஸல்) அலர்களின் ஊடாக உலகிற்கு அருளியுள்ளான். அதற்கேற்ப மனிதன் தனது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

ஏனென்றால் மனிதனுக்கு எதிராக சைத்தான் போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றான். அவன் மனிதனின் எதிரியாவான். அதனால் அவன் மனிதனின் வாழ்வின் தூய்மையினைச் சீர்குலைப்பதிலும், பாதிப்புக்களை ஏற்படுத்துவதிலும் தொடராக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அந்தவகையில் மனிதன் தம் வாழ்வைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கு ரமழான் மாத நோன்பு சிறந்ததொரு ஏற்பாடாக ஆக்கப்பட்டிருக்கின்றது.

அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை “நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பிருந்தால் தமது நாவினால் வீண் பேச்சுக்களைப் பேசக் கூடாது, கூச்சலிடக் கூடாது,  சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது  என்றும், பிறர் தம்மைத் திட்டவோ, சண்டை சச்சரவுகளில் ஈடுபடவோ முற்பட்டால் நோன்பாளி இவ்வாறு எண்ணிக் கொள்ள வேண்டும், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்”.  (பிறகு அவரது வசைக்குப் பதிலாக நான் எவ்வாறு வசைபாடுவேன்? அல்லது அவருடன் சண்டையிடுவேன்?) (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

இந்த நபி மொழியானது மனித வாழ்வின் தூய்மைக்கு அவசியமான விடயங்களை உள்ளடக்கியுள்ளன. ஆகவே நாம் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைவானச் செயற்பட்டு அல்லாஹ்வின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமது வாழ்வைத் தூய்மைப் படுத்திக் கொள்வோம். அதற்காக ரமழானை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வோம்.

மர்லின் மரிக்கார்

Comments