அரசாங்கம் மனித உயிருக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கம் மனித உயிருக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது

கேள்வி:  நல்லாட்சி அரசாங்க காலத்தில் இந்நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க வேண்டுமென்று பல நிபுணர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் இன்று அவர்கள் அமைதியாகி விட்டார்கள். அது பற்றி என்ன எண்ணுகின்றீர்கள்?

பதில்:  இவ் வேளையில் ஜனாதிபதி அரசியலமைப்புககு அமையவே செயலாற்றுகின்றார் என அவர்கள் எண்ணுகின்றார்கள். அவர்கள்தான் இந்த19வது திருத்தத்தை கொண்டு வந்து இந்த பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்துக்கிடையேயும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையேயும் அதிகார போட்டியை உருவாக்கி நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தினார்கள். இன்று எதுவும் செய்ய முடியாமல் அமைதியாகி விட்டார்கள். அவர்களுக்கு  ஜனாதிபதி அரசியலமைப்புக்கு அமையவே செயல்படுகின்றார் என்பது தெரிந்து விட்டது.

கேள்வி:  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் இணையும் என   லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அச்சம் உள்ளதா?

பதில்:  அவர்கள் இணைந்தாலும் பிரிந்தாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. தமக்குள் அவர்கள் சண்டைப் பிடித்து கொள்கின்றார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்வதில்லை என கடந்த மூன்று மாதங்களாக மக்கள் அறிந்து கொண்டு விட்டார்கள்.

கேள்வி: கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளது என எண்ணுகின்றீர்களா?

பதில் : எமது நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளது மாத்திரமல்ல, சிறப்பானதுமாகும்.

உலகில் இஸ்ரேலை தவிர வேறெந்த நாட்டிலும்  சுகாதாரப் பிரிவும் புலனாய்வு பிரிவும் இணைந்து செயல்படவில்லை. இவ் வேளையில் பொறுப்பு வாய்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பொறுப்புகள் ஓப்படைக்கப்பட்டுள்ளன. பசில் ராஜபக்‌ஷ தலைமையில் அப்பணிகள் நடைபெறுவது அதற்கு சிறந்த உதாரணமாகும். அவர் அரிசி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்பவற்றிற்கு உடனடி தீர்வு வழங்கினார். இவை அனைத்தையும் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் செய்தது அவரது திறமையாகும். கொரோனாவை கட்டுபடுத்துவதில் சுகாதாரப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, மக்கள் நல அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்  தொடர்பில் அனைவரினதும் பாராட்டு நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் கிடைத்துள்ளன.

கேள்வி: அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசியல்வாதியாக என்ன எண்ணுகின்றீர்கள்?

பதில்: அவர் இந்நாட்டில் யுத்தம் நடைபெற்ற வேளையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயல்பட்டதும் நிர்வாக சேவை அதிகாரியாக அல்ல. நகராட்சி அமைச்சின் செயலாளராக கொழும்பு நகரை அனைவரும் பாராட்டும்படி அபிவிருத்தி செய்தார். அவற்றால் அவரது தூரநோக்கும் திட்டமிடலும் பற்றி உலகமே அறிந்து கொண்டது. அவர் அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் திறமை வாய்ந்த தலைவராக பிரபலமடைந்துள்ளார். அவருடன் இணைந்து செயல்பட சந்தர்ப்பம்

கிடைத்துள்ளதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

கேள்வி:  அரசின் உண்மையான தேவை நாட்டை மீள கட்டியெழுப்புவதா? அல்லது தேர்தலுக்கு தயாராவதா?

பதில்: தேர்தல் நடத்த வேண்டுமா இல்லையா என முடிவு எடுப்பது தேர்தல் ஆணைக்குழுவின் வேலையாகும். இவ்வேளையில் அரசாங்கம் சுகாதாரப் பிரிவின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலுக்கமையவே நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. மார்ச் மாதம் தொடக்கம் இது வரை நாடு பூராவும் ஊரடங்கு சட்டத்தை அமுல் நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதில் முன்னேற்றமும் அடைந்துள்ளது.

கேள்வி: ஜூன் 20ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டால்  லங்கா பொதுஜன பெரமுன அமோகமாக வெற்றியடையும் என எண்ணுகின்றீர்களா?

பதில்:  நாம் தற்போது தேர்தலில் கிடைக்கும் வெற்றி பற்றி எண்ணவில்லை.

நாம் தற்போது மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றோம். எதிர்க் கட்சியினர் இவ்வேளையில் மக்களை மறந்து பல பிரச்சினைகளை  ஏற்படுத்தி காலத்தை கடத்துகின்றார்கள். அதனால் எமக்கு இம்முறை தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளது.

கேள்வி:  நீங்கள் முன்னாள் ஊடக இராஜாங்க அமைச்சர். இந்த தொற்று நோய் நிலைமையில் ஊடகங்களின் நடத்தை குறித்து  என்ன எண்ணுகின்றீர்கள்?

பதில்: மிக சிறப்பாகவுள்ளது. குறைகள் இருந்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை குறைத்து மதிப்பிட முடியாது. ஊடகவியலாளருக்காகவும் சலுகைகளை வழங்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தமிழில்: வீ.ஆர். வயலட்

Comments