பெருநாள் தினத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை வரவேற்கிறேன் | தினகரன் வாரமஞ்சரி

பெருநாள் தினத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை வரவேற்கிறேன்

கொரோனா தொற்று பிரச்சினை சற்று தணிந்து வருகிற போதும் கோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களை தகனம் செய்வது தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்ததாக இல்லை. இந்த விவகாரம் பல்வேறு மட்டங்களில் பேசப்படும் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் வேட்பாளருமான அலி சப்ரி 'அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தேன் கூட்டின் மீது கல்லெறிந்தது போன்றதாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் கருத்துக்கு சிங்கள கடும்போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இவை தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான அலி சப்ரியுடன் நடத்தப்பட்ட நேர்காணல்.

கேள்வி: அல் ஜஸீராவுக்கு நீங்கள் அளித்த நேர்காணல் தொடர்பில் சிங்கள கடும்போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: உண்மையில் நான் அல் ஜஸீராவுக்கு எந்த நேர்காணலும் வழங்கவில்லை.நான் ஏற்கெனவே வேறு ஊடகங்களுக்கு (ஏப்ரல் 3 இல்) தெரிவித்த கருத்துக்கள் தான் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதல் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். உலக நாடுகளில் கொரோனாவினால் இறப்பவர்களை புதைக்க அனுமதிக்கையில் இலங்கையில் அதற்கு மறுப்பதாக இருந்தால் அது விஞ்ஞானபூர்வமாகவோ மருத்துவ ரீதியாகவோ உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். புதைப்பதற்கு இலங்கையில் அனுமதி வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நான் புதிதாக எதுவும் அல் ஜஸீராவுக்கு கூறவில்லை. இந்த நிலையிலே இனவாதிகள் சிலர் இதனை பூதகரமாக்க முயல்கின்றனர்.

கேள்வி: அல் ஜஸீரா செய்தி தொடர்பில் ஜனாதிபதியோ, பிரதமரோ ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களோ உங்களுடன் பேசினார்களா? உங்கள் கருத்து தொடர்பில் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டனவா?

பதில்: இல்லை யாரும் அவ்வாறு குற்றஞ் சாட்டவில்லை. ஆளும் தரப்பில் பலரும் என்னுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ளனர். ஜனாதிபதியோ பிரதமரோ கூட என்னிடம் இது பற்றி வினவவில்லை.எனது சமூகத்திற்காக நான் குரல் கொடுப்பதை அவர்கள் ஒருபோதும் தடுத்தது கிடையாது.

கேள்வி. கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை தகனம் செய்வதற்கு எதிராக சிலர் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். இதில் உங்கள் பங்களிப்பும் உள்ளதா?

பதில்: மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சிறந்த சட்டத்தரணிகள் ஆஜராக இருக்கிறார்கள். நான் இதில் ஆஜராகவில்லை.ஏதோ ஒரு வகையில் இந் பிரச்சினைக்கு தீர்வு வருமாக இருந்தால் அதனை வரவேற்கிறோம். அரசியல் ரீதியில் இந்த பிரச்சினைக்கு தீர்க்க நான் முயன்றேன். என்னால் இயன்றதை மேற்கொண்டேன். அதனை வேறு தரப்பினருக்கு செய்ய முடியாது.சிலர் ஜனநாயக வழியில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வேறு சிலர் ராஜதந்திர மட்டத்தில் தீர்க்க முயல்கிறார்கள். எமது உரிமைகளுக்காக போராடுவதில் எந்த தடையும் கிடையாது.

கேள்வி: சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராவதாக கூறியுள்ளார். நீங்கள் ஆஜராகாவிட்டாலும் இந்த வழக்கு தாக்கலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பதில்: இந்த பிரச்சினைக்கு எந்த  வழியிலும் தீர்வு கிடைக்காவிடின் வழக்குத் தொடர்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது.அது சரியானதே.

கேள்வி: கொரோனா தொற்றாத பெண் ஒருவர் தகனம் செய்யப்பட்டார்.அவ்வாறான தவறு நடக்காதிருக்க ஏதும் முயற்சி செய்துள்ளீர்களா?

பதில்: எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் நடைபெறாமல் துள்ளியமாக ஆய்வுகளை செய்ய வேண்டும் என்பது தொடர்பில் பேசியுள்ளேன். பரிசோதனைகளை ஒரு தடவைக்கு இருதடவை மேற்கொண்டு நூறு வீதம் உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

கேள்வி: முஸ்லிம் ஜனாஸாக்கள் எறிக்கப்படுவது உட்பட தற்பொழுது முஸ்லிம்கள் தொடர்பான எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிரணியில் உள்ள  முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உங்களை தான் குற்றங்கூறுகிறார்கள். இதற்கு உங்கள் பதிலென்ன?

பதில்: இதற்கு சிரிக்க மட்டும் தான் என்னால் முடியும். நான் எம்.பி​​யோ  அமைச்சரோ கிடையாது. பல ஆயிரம் வாக்குகள் பெற்று வந்தவனல்ல நான். கட்சியுடன் தொடர்புபட்டிருப்பதால் என்னை தேசிய பட்டியலில் இணைத்துள்ளனர்.

என்னால் எல்லாம் செய்ய முடியாது. கடந்த தேர்தலில் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தால் இதனை விட பல விடயங்களை சாதித்திருக்க முடியும். உரிமையுடன் தலையிட்டிருக்கலாம். எமக்கு கிடைக்கும் வாக்குகளை தடுத்து விட்டு எப்படி எம்மிடம் எதிர்பார்க்க முடியும். இந்த பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது.

சகல விடயங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பின் ஆலோசனை பெற்றே ஜனாதிபதி செய்கிறார்.

எம்மால் முடிந்ததை செய்து விட்டு இறைவனிடம் பொறுப்பு கூற வேண்டும். இறுதி முடிவு அவனின் கையிலே உள்ளது.

கேள்வி: இலங்கையிலுள்ள முஸ்லிம் வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தனர்.முஸ்லிம் அமைப்புகளும் தொடர்ந்து கோரிவருகின்றன. சுகாதார காரணங்களுக்குத்தான் புதைக்க அனுமதிக்கப்படவில்லை என்பதை எப்படி ஏற்கமுடியும் ?

பதில்: இருதடவைகள் எமது உயர்மட்ட நிபுணர்கள் குழுவினர் ஜனாதிபதி நியமித்துள்ள 18 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் பேசியது. பல்வேறு வாதங்கள் இடம்பெற்றன. புதைப்பதால் நீரினூடாக பரவலாம் என சந்தேகத்தை முன்வைத்தார்கள். ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. எமது நியாயங்களை அவர்கள் ஏற்பதாக இல்லை. இந்த மருத்துவ குழுவுக்கு மாற்றமாக ஜனாதிபதியால் செயற்பட முடியாது. புதைக்க இடமளிக்காததில் விஞ்ஞானபூர்வ காரணம் எதுவும் கிடையாது என்பதே எமது நம்பிக்கை. இந்தக் குழு அனுமதித்தால் புதைக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஜனாதிபதியும் பிரதமரும் கூட கூறியுள்ளனர்.

கேள்வி:  உங்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கக் கூடாது என கடும்போக்கு அமைப்புகள் கோரியுள்ளன. உங்கள் கருத்துக்களால் பாராளுமன்றம் தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் போகுமா?

பதில்:  எனக்கு இவற்றில் பெரிய ஆசையோ எதிர்பார்ப்போ கிடையாது. சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எம்மால் முடிந்ததை செய்யவே முயல்கிறேன். இவர்கள் விமர்சிப்பதற்கவாவது ஆளும் தரப்பில் ஒருவராக நான் இருக்கிறேன்.

நான் வாய்மூடி இருப்பதை யாராவது விரும்பினால் அது நடக்காது எனது சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் பேச வேண்டிய நேரத்தில் முன்வந்து பேசுவேன். அதனால் எனக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு கிடைக்காமல் போகுமாக இருந்தால் எந்த கவலையும் கிடையாது. அவ்வாறு எதுவும் நடக்காது. ஜனாதிபதியும் பிரதமரும் என்னுடனே உள்ளனர். எனது சமூகத்திற்காக பேசுவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

கேள்வி. முஸ்லிம்கள் கோரானாவை பரப்புவதாக முன்னர் சிலர் குற்றஞ்சாட்டினார்கள். தற்பொழுது "ஊரடங்கு தளர்த்தப்படுவதோடு முஸ்லிம் பெண்கள் அதிகளவில் பெருநாள் ஆடைவாங்க செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெருநாள் தினத்திலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என முஸ்லிம் தரப்பிலிருந்தே கூறப்படுவது பற்றி..?

பதில். நானும் அந்த கருத்தை வரவேற்கிறேன்.பெருநாள் உள்ள வாரத்தில் முழு சவுதி அரேபியாவும் மூடப்படுகிறது. சகவற்றையும் இனவாதமாக பார்ப்போர் எமக்கிடையில் இருந்து குறைவரும் வரை காத்திருக்கிறார்கள்.அதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது.

கத்தோலிக்கர்களுக்கு உயிர்த்த ஞாயிறு கொண்டாட முடியவில்லை.சிங்கள தமிழ் மக்களுக்கு புத்தாண்டு கொண்டாட முடியவில்லை. அது போல நாமும் எமது பெருநாளை தியாகம் செய்வது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் நல்லது. வீடுகளில் குடும்பத்தாருடன் பெருநாளை கொண்டாடுவதே உகந்தது.

ஷம்ஸ் பாஹிம்

Comments